பாடல் #1822

பாடல் #1822: ஏழாம் தந்திரம் – 10. அருள் ஒளி (இறைவன் கொடுத்த அருள் ஞானமாக வெளிப்படுதல்)

கூறுமின் னீர்முன் பிறந்தங் கிறந்தமை
வேறொரு தெய்வத்தின் மெய்பொரு ணீங்கிடும்
பாரணி யும்முடல் வீழவிட் டாருயிர்
தேரணி வோமிது செப்பவல் லீரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கூறுமின னீரமுன பிறநதங கிறநதமை
வெறொரு தெயவததின மெயபொரு ணீஙகிடும
பாரணி யுமமுடல வீழவிட டாருயிர
தெரணி வொமிது செபபவல லீரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கூறுமின் நீர் முன் பிறந்து அங்கு இறந்தமை
வேறு ஒரு தெய்வத்தின் மெய் பொருள் நீங்கிடும்
பார் அணியும் உடல் வீழ விட்டு ஆர் உயிர்
தேர் அணிவோம் இது செப்ப வல்லீரே.

பதப்பொருள்:

கூறுமின் (உங்களால் முடிந்தால் விளக்கி சொல்லுங்கள்) நீர் (நீங்கள்) முன் (முன் ஜென்மத்தில்) பிறந்து (எங்கு பிறந்து) அங்கு (அங்கேயே) இறந்தமை (இறந்த விதத்தை)
வேறு (உள்ளிருக்கும் சிவத்தை தவிர வெளியில் வேறு) ஒரு (ஒரு) தெய்வத்தின் (தெய்வம் இருக்கின்றது என்று உலகோர் சொல்லுவது) மெய் (உண்மை போல் தெரியும்) பொருள் (அந்த பொய்யான பொருள்) நீங்கிடும் (உடல் அழியும் போது நீங்கிப் போய் விடும்)
பார் (உலகத்தில் பிறக்கும் போது) அணியும் (நீங்கள் அணிந்து வந்த) உடல் (உடல் எனும் சட்டையை) வீழ (இந்த உலகத்திலேயே விழுந்து கிடக்கும் படி) விட்டு (விட்டு விட்டு) ஆர் (அந்த உடலுக்குள் இருந்த அருமையான) உயிர் (உயிர் எனும்)
தேர் (தேராக செயல்புரிகின்ற சிவத்தை) அணிவோம் (அணிந்து கொள்ளுவோம்) இது (இதை) செப்ப (மற்றவர்களுக்கும் எடுத்து சொல்ல) வல்லீரே (முடிந்தவர்கள் சொல்லுங்கள்).

விளக்கம்:

உலகத்தில் கற்றதே உண்மை என்று நீங்கள் நம்புவது உண்மை என்றால் இதற்கு முன் ஜென்மத்தில் நீங்கள் எங்கு பிறந்து அங்கு எப்படி இறந்தீர்கள் என்பதை உங்களால் சொல்ல முடியுமா? அது போலவே உள்ளிருக்கும் சிவத்தை தவிர வெளியில் வேறு ஒரு தெய்வம் இருக்கின்றது என்று உலகோர் சொல்லுவது உண்மை போல் தெரியும். அப்படி உண்மை போல் தெரிகின்ற பொருளானது உங்களின் உடல் அழியும் போது உங்களை விட்டு நீங்கிப் போய் விடும். ஆகவே உலகத்தில் பிறக்கும் போது நீங்கள் அணிந்து வந்த உடல் எனும் சட்டையை இந்த உலகத்திலேயே விழுந்து கிடக்கும் படி விட்டு விட்டு அந்த உடலுக்குள் இருந்த அருமையான உயிர் எனும் தேராக செயல்புரிகின்ற சிவத்தை அணிந்து கொள்ளுங்கள். வாழ்க்கைக்கு முக்கியமான இந்த உண்மையை மற்றவர்களுக்கும் எடுத்து சொல்ல முடிந்தவர்கள் சொல்லுங்கள்.

பாடல் #1821

பாடல் #1821: ஏழாம் தந்திரம் – 10. அருள் ஒளி (இறைவன் கொடுத்த அருள் ஞானமாக வெளிப்படுதல்)

அருளது வென்ற வகலிட மொன்றும்
பொருளது வென்ற புகலிட மொன்றும்
மருளது நீங்க மனம்புகுந் தானைத்
தெருளுறும் பின்னைச் சிவகதி யாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அருளது வெனற வகலிட மொனறும
பொருளது வெனற புகலிட மொனறும
மருளது நீஙக மனமபுகுந தானைத
தெருளுறும பினனைச சிவகதி யாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அருள் அது என்ற அகல் இடம் ஒன்றும்
பொருள் அது என்ற புகல் இடம் ஒன்றும்
மருள் அது நீங்க மனம் புகுந்தானை
தெருள் உறும் பின்னை சிவ கதி ஆமே.

பதப்பொருள்:

அருள் (இறையருள்) அது (அது) என்ற (என்று அழைக்கப்படும் பரம்பொருள்) அகல் (அண்ட சராசரங்களிலும் அதை தாண்டியும் இருக்கின்ற) இடம் (பரவெளியில்) ஒன்றும் (பொருந்தி இருக்கும்)
பொருள் (உயிர்கள்) அது (அது) என்ற (என்று அழைக்கப்படும் பரம்பொருளின் அம்சமான ஆன்மாக்கள்) புகல் (தாம் பிறவி எடுத்து வந்து சேர்ந்த) இடம் (இந்த உலகத்தை) ஒன்றும் (பொருந்தி இருக்கும்)
மருள் (உலகத்தில் பந்தம் பாசங்கள் ஆகிய மாயையின் மயக்கம்) அது (அது) நீங்க (நீங்கும் படி செய்து) மனம் (அனைத்திலும் இருக்கின்ற பரம்பொருள் வந்து அடியவர்களின் உள்ளத்திற்குள்) புகுந்தானை (புகுந்தான்)
தெருள் (அப்படி தமது உள்ளத்திற்குள் புகுந்த இறைவனை தெளிவாக அறிந்து உணர்ந்து கொண்டு) உறும் (அவனையே உறுதியாக பற்றிக் கொண்டு இருந்தால்) பின்னை (பிறகு வரும் காலத்தில்) சிவ (இறைவனிடம்) கதி (சென்று அடையும்) ஆமே (நிலை அதுவே ஆகும்).

விளக்கம்:

இறையருள் என்று அழைக்கப்படும் பரம்பொருள் அண்ட சராசரங்களிலும் அதை தாண்டியும் இருக்கின்ற பரவெளியில் பொருந்தி இருக்கும். உயிர்கள் என்று அழைக்கப்படும் பரம்பொருளின் அம்சமான ஆன்மாக்கள் தாம் பிறவி எடுத்து வந்து சேர்ந்த இந்த உலகத்தை பொருந்தி இருக்கும். தாம் பொருந்தி இருக்கின்ற இந்த உலகத்தில் பந்தம் பாசங்கள் ஆகிய மாயையின் மயக்கம் நீங்கும் படி செய்து அனைத்திலும் இருக்கின்ற பரம்பொருள் வந்து அடியவர்களின் உள்ளத்திற்குள் புகுந்தான். அப்படி தமது உள்ளத்திற்குள் புகுந்த இறைவனை தெளிவாக அறிந்து உணர்ந்து கொண்டு அவனையே உறுதியாக பற்றிக் கொண்டு இருந்தால் பிறகு வரும் காலத்தில் இறைவனிடம் சென்று அடையும் நிலை அதுவே ஆகும்.

பாடல் #1820

பாடல் #1820: ஏழாம் தந்திரம் – 10. அருள் ஒளி (இறைவன் கொடுத்த அருள் ஞானமாக வெளிப்படுதல்)

புறமே திரிந்தேனைப் பொற்கழல் சூட்டி
நிறமே புகுந்தேனை நின்மல னாக்கி
யறமே புரிந்தெனக் காரமு தீய்ந்த
திறமே யதெண்ணித் திகைத்திருந் தேனே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

புறமெ திரிநதெனைப பொறகழல சூடடி
நிறமெ புகுநதெனை நினமல னாககி
யறமெ புரிநதெனக காரமு தீயநத
திறமெ யதெணணித திகைததிருந தெனெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

புறமே திரிந்தேனை பொன் கழல் சூட்டி
நிறமே புகுந்தேனை நின் மலன் ஆக்கி
அறமே புரிந்து எனக்கு ஆர் அமுது ஈய்ந்த
திறமே அது எண்ணி திகைத்து இருந்தேனே.

பதப்பொருள்:

புறமே (இறைவனை உள்ளுக்குள் தேடாமல் வெளியில் தேடி கோயில் குளம் என்று) திரிந்தேனை (அலைந்து திரிந்த எமது தலை மேல்) பொன் (தூய்மையான தங்கத்தைப் போல் பிரகாசிக்கின்ற) கழல் (திருவடிகளை) சூட்டி (அணிவித்து)
நிறமே (இதுவரை உண்மை என்று நம்பிக் கொண்டிருந்த எமது) புகுந்தேனை (உடலுக்குள் புகுந்து அந்த நிலையை மாற்றி) நின் (எந்தவொரு) மலன் (மலங்களும் இல்லாதவனாக) ஆக்கி (ஆக்கிவிட்டு)
அறமே (பேரருளாகிய தர்மத்தின்) புரிந்து (வழியாக வந்து) எனக்கு (எமக்கு) ஆர் (எப்போதும் தெகிட்டாத) அமுது (அமிழ்தத்தை) ஈய்ந்த (கொடுத்து அருளிய)
திறமே (பரம்பொருளாகிய இறைவனின் மாபெரும் கருணை) அது (அதை) எண்ணி (நினைத்துப் பார்த்து) திகைத்து (அதனால் ஏற்பட்ட வியப்பிலேயே) இருந்தேனே (ஆழ்ந்து இருந்தேன்).

விளக்கம்:

இறைவனை உள்ளுக்குள் தேடாமல் வெளியில் தேடி கோயில் குளம் என்று அலைந்து திரிந்த யாம் பாடல் #1819 இல் உள்ளபடி எமக்குள் இருக்கின்ற ஆன்மாவை உணர்ந்து கொண்ட பிறகு எமது தலை மேல் தூய்மையான தங்கத்தைப் போல் பிரகாசிக்கின்ற திருவடிகளை அணிவித்து, இதுவரை உண்மை என்று நம்பிக் கொண்டிருந்த எமது உடலுக்குள் புகுந்து அந்த நிலையை மாற்றி எந்தவொரு மலங்களும் இல்லாதவனாக ஆக்கிவிட்டு, பேரருளாகிய தர்மத்தின் வழியாக வந்து எமக்கு எப்போதும் தெகிட்டாத அமிழ்தத்தை கொடுத்து அருளிய பரம்பொருளாகிய இறைவனின் மாபெரும் கருணையை நினைத்துப் பார்த்து அதனால் ஏற்பட்ட வியப்பிலேயே ஆழ்ந்து இருந்தேன்.

பாடல் #1819

பாடல் #1819: ஏழாம் தந்திரம் – 10. அருள் ஒளி (இறைவன் கொடுத்த அருள் ஞானமாக வெளிப்படுதல்)

ஒளியு மிருளு மொருக்காலுந் தீரா
வொளியுள் வோர்க்கன்றோ வொழியா தொளியு
மொளியிருள் கண்டகண் போலே வேறாயுள்
ளொளியிரு ணீங்கி யுயிர்சிவ மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஒளியு மிருளு மொருககாலுந தீரா
வொளியுள வொரககனறொ வொழியா தொளியு
மொளியிருள கணடகண பொலெ வெறாயுள
ளொளியிரு ணீஙகி யுயிரசிவ மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஒளியும் இருளும் ஒரு காலும் தீரா
ஒளி உள் ஓர்க்கு அன்றோ ஒழியாது ஒளியும்
ஒளி இருள் கண்ட கண் போலே வேறாய் உள்
ஒளி இருள் நீங்கி உயிர் சிவம் ஆமே.

பதப்பொருள்:

ஒளியும் (ஜோதியாகிய ஞானமும்) இருளும் (இருளாகிய மாயையும்) ஒரு (எந்தவொரு) காலும் (காலத்திலும்) தீரா (இல்லாமல் போகப் போவதில்லை)
ஒளி (உண்மையான ஞானமாகிய ஒளியை) உள் (தமக்குள்) ஓர்க்கு (ஆராய்ந்து தெளிவாக அறிந்து கொண்டவர்களுக்கு) அன்றோ (மட்டுமே) ஒழியாது (அந்த ஒளியானது எப்போதும் நீங்காத) ஒளியும் (ஜோதியாக வீற்றிருக்கும்)
ஒளி (வெளிச்சத்தையும்) இருள் (இருட்டையும்) கண்ட (கண்டதே உண்மை என்று நம்பிக் கொண்டு இருக்கின்ற) கண் (புறக் கண்களைப்) போலே (போல) வேறாய் (இல்லாமல் பார்க்கின்ற அனைத்தையும் மாயை என்பதை அறிந்து இறைவனின் அம்சமாகவே) உள் (உள்ளுக்குள் இருக்கின்ற)
ஒளி (ஆன்மாவின் ஜோதியை உணர்ந்து கொண்ட போது) இருள் (இருளாகிய மாயை) நீங்கி (நீங்கி) உயிர் (உயிரானது) சிவம் (சிவமாகவே) ஆமே (ஆகி விடும்).

விளக்கம்:

ஜோதியாகிய ஞானமும் இருளாகிய மாயையும் எந்தவொரு காலத்திலும் இல்லாமல் போகப் போவதில்லை. உண்மையான ஞானமாகிய ஒளியை தமக்குள் ஆராய்ந்து தெளிவாக அறிந்து கொண்டவர்களுக்கு மட்டுமே அந்த ஒளியானது எப்போதும் நீங்காத ஜோதியாக வீற்றிருக்கும். தாம் பார்க்கின்ற வெளிச்சத்தையும் இருட்டையும் மட்டுமே உண்மை என்று நம்பிக் கொண்டு இருக்கின்ற புறக் கண்களைப் போல இல்லாமல் பார்க்கின்ற அனைத்தையும் மாயை என்பதை அறிந்து இறைவனின் அம்சமாகவே உள்ளுக்குள் இருக்கின்ற ஆன்மாவின் ஜோதியை உணர்ந்து கொண்ட போது இருளாகிய மாயை நீங்கி உயிரானது சிவமாகவே ஆகி விடும்.

பாடல் #1818

பாடல் #1818: ஏழாம் தந்திரம் – 10. அருள் ஒளி (இறைவன் கொடுத்த அருள் ஞானமாக வெளிப்படுதல்)

விளக்கினை யேற்றி வெளியை மறிமின்
விளக்கினின் முன்னே வேதினை மாறும்
விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள்
விளக்கில் விளங்கும் விளக்காவ தாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

விளககினை யெறறி வெளியை மறிமின
விளககினின முனனெ வெதினை மாறும
விளககை விளககும விளககுடை யாரகள
விளககில விளஙகும விளககாவ தாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

விளக்கினை ஏற்றி வெளியை மறிமின்
விளக்கினின் முன்னே வேதினை மாறும்
விளக்கை விளக்கும் விளக்கு உடையார்கள்
விளக்கில் விளங்கும் விளக்கு ஆவது ஆமே.

பதப்பொருள்:

விளக்கினை (தமக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி சக்தியின் விளக்கை) ஏற்றி (சுழுமுனை நாடி வழியே மேலேற்றி எடுத்துச் சென்று சகஸ்ரதளத்தில் ஜோதியாக எரியச் செய்து) வெளியை (தமக்கு வெளியில் இருக்கின்ற புற உலகின் மேல் செல்லுகின்ற புலன்களை) மறிமின் (தடுத்து நிறுத்தினால்)
விளக்கினின் (மாபெரும் ஜோதியாக இருக்கின்ற பேரறிவு ஞானத்தின்) முன்னே (முன்பே) வேதினை (உலக அறிவு எல்லாம் உண்மை அறிவாக) மாறும் (மாறும்)
விளக்கை (அப்படிப்பட்ட பேரறிவாகிய இறைவனின் ஜோதியை) விளக்கும் (உண்மையாக உணர்ந்து கொள்ளும் படி விளங்க வைக்கும்) விளக்கு (தெளிவு) உடையார்கள் (உடைய ஞானிகள்)
விளக்கில் (எடுத்துரைத்து விளக்கினால்) விளங்கும் (முழுவதும் புரிந்து கொள்ளக் கூடிய) விளக்கு (மாபெரும் ஜோதி) ஆவது (ஆக இருப்பது) ஆமே (பரம்பொருளாகிய இறைவனே ஆகும்).

விளக்கம்:

தமக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி சக்தியின் விளக்கை சாதகத்தின் மூலம் சுழுமுனை நாடி வழியே மேலேற்றி எடுத்துச் சென்று சகஸ்ரதளத்தில் ஜோதியாக எரியச் செய்து தமக்கு வெளியில் இருக்கின்ற புற உலகின் மேல் செல்லுகின்ற புலன்களை தடுத்து நிறுத்தினால் மாபெரும் ஜோதியாக இருக்கின்ற பேரறிவு ஞானத்தின் முன்பே உலக அறிவு எல்லாம் உண்மை அறிவாக மாறும். அப்படிப்பட்ட பேரறிவாகிய இறைவனின் ஜோதியை உண்மையாக உணர்ந்து கொள்ளும் படி விளங்க வைக்கும் தெளிவு உடைய ஞானிகள் எடுத்துரைத்து விளக்கினால் முழுவதும் புரிந்து கொள்ளக் கூடிய மாபெரும் ஜோதியாக இருப்பது பரம்பொருளாகிய இறைவனே ஆகும்.

கருத்து:

நமக்குள் இருக்கும் ஜோதியாகிய விளக்கை ஏற்றி மாயையாகிய இருளை அகற்றினால் இறைவனை அறியக் கூடிய தகுதி பெற்றவர்களாக மாறுவோம். அப்போது இறைவனை உணர்ந்த ஞானி நமக்கு வழிகாட்டி இறைவனை பரிபூரணமாக உணர வைப்பார்.

பாடல் #1817

பாடல் #1817: ஏழாம் தந்திரம் – 10. அருள் ஒளி (இறைவன் கொடுத்த அருள் ஞானமாக வெளிப்படுதல்)

உற்ற பிறப்பு முறுமல மானதும்
பற்றிய மாயா படலமெனப் பண்ணி
யற்றனை நீக்கி யடிவைத்தான் பேர்நந்தி
கற்றன விட்டேன் கழலணிந் தேனே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

உறற பிறபபு முறுமல மானதும
பறறிய மாயா படலமெனப பணணி
யறறனை நீககி யடிவைததான பெரநநதி
கறறன விடடென கழலணிந தெனெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

உற்ற பிறப்பும் உறு மலம் ஆனதும்
பற்றிய மாயா படலம் என பண்ணி
அற்றனை நீக்கி அடி வைத்தான் பேர் நந்தி
கற்றன விட்டேன் கழல் அணிந்தேனே.

பதப்பொருள்:

உற்ற (எமக்கு கொடுக்கப்பட்ட) பிறப்பும் (பிறவியும்) உறு (யாம் அனுபவிக்கின்ற) மலம் (மூன்று விதமான மலங்கள்) ஆனதும் (ஆக இருப்பதும்)
பற்றிய (எம்மை பற்றிக் கொண்ட) மாயா (மாயையின்) படலம் (இருள் கூட்டம்) என (என்று) பண்ணி (எமது ஆசைகள் தீர்ப்பதற்காக அருள் செய்து)
அற்றனை (அவனருளால் அழியக் கூடிய அனைத்தையும்) நீக்கி (எம்மை விட்டு நீக்கி விட்டு) அடி (தமது திருவடியை) வைத்தான் (எம் தலைமேல் வைத்தருளினான்) பேர் (பெருமை மிக்க) நந்தி (குருநாதனாகிய இறைவன்)
கற்றன (அவனது திருவடியின் அருளினால் இதுவரை யாம் அறிந்த உலக அறிவுகளை அனைத்தையும்) விட்டேன் (விட்டு விட்டேன்) கழல் (அவனது திருவடியை) அணிந்தேனே (எம் தலை மேல் அணிந்து கொண்டு அதனோடு பொருந்தி இருந்தேன்).

விளக்கம்:

எமக்கு கொடுக்கப்பட்ட பிறவியும், யாம் அனுபவிக்கின்ற ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று விதமான மலங்களாக இருப்பதும், எம்மை பற்றிக் கொண்ட மாயையின் இருள் கூட்டம் என்று எமது ஆசைகள் தீர்ப்பதற்காக அருள் செய்து, அவனருளால் அழியக் கூடிய அனைத்தையும் எம்மை விட்டு நீக்கி விட்டு, தமது திருவடியை எம் தலைமேல் வைத்தருளினான் பெருமை மிக்க குருநாதனாகிய இறைவன். அவனது திருவடியின் அருளினால் இதுவரை யாம் அறிந்த உலக அறிவுகளை அனைத்தையும் விட்டு விட்டு அவனது திருவடியை எம் தலை மேல் அணிந்து கொண்டு அதனோடு பொருந்தி இருந்தேன்.

பாடல் #1816

பாடல் #1816: ஏழாம் தந்திரம் – 10. அருள் ஒளி (இறைவன் கொடுத்த அருள் ஞானமாக வெளிப்படுதல்)

ஆடியும் பாடியும் மழுது மரற்றியுந்
தேடியுங் கண்டேன் சிவன் பெருந்தன்மையைக்
கூடிய வாறே குறியாக் குறிதந்தென்
னூடு நின்றானவன் றன்னரு ளுற்றே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஆடியும பாடியும மழுது மரறறியுந
தெடியுங கணடென சிவன பெருநதனமையைக
கூடிய வாறெ குறியாக குறிதநதென
னூடு நினறானவன றனனரு ளுறறெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும்
தேடியும் கண்டேன் சிவன் பெரும் தன்மையை
கூடிய ஆறே குறியா குறி தந்து என்
ஊடு நின்றான் அவன் தன் அருள் உற்றே.

பதப்பொருள்:

ஆடியும் (இறைவனின் திருவிளையாடல்களை ஆடியும்) பாடியும் (அவனது பெருமைகளைப் போற்றிப் பாடியும்) அழுதும் (அவனது மாபெரும் கருணையை எண்ணி அழுதும்) அரற்றியும் (அவன் அருகில் செல்ல முடியவில்லையே என்று புலம்பியும்)
தேடியும் (தமக்குள்ளே தேடியும்) கண்டேன் (கண்டு கொண்டேன்) சிவன் (இறைவனின்) பெரும் (மாபெரும்) தன்மையை (தன்மையை)
கூடிய (அவனோடு ஒன்றாக சேருகின்ற) ஆறே (வழியே) குறியா (வேறு எந்த சிந்தனையும் இல்லாமல்) குறி (அவனை அடைவதை மட்டுமே குறிக்கோளாக) தந்து (கொடுத்து அருளி) என் (எமது)
ஊடு (உள்ளே கலந்து) நின்றான் (நின்றான்) அவன் (இறைவன்) தன் (தமது) அருள் (பேரருளை) உற்றே (எமக்கு கொடுத்து ஞானமாக வெளிப்பட்டான்).

விளக்கம்:

இறைவனின் திருவிளையாடல்களை ஆடியும், அவனது பெருமைகளைப் போற்றிப் பாடியும், அவனது மாபெரும் கருணையை எண்ணி அழுதும், அவன் அருகில் செல்ல முடியவில்லையே என்று புலம்பியும், தமக்குள்ளே தேடியும், இறைவனின் மாபெரும் தன்மையை கண்டு கொண்டேன். அப்படி தேடிக் கண்டு கொண்ட இறைவனோடு சேருவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு வேறு எதிலும் சிந்தனையை செலுத்தாமல் இருக்கின்ற வழியை எமக்கு கொடுத்து அருளி எம்மோடு கலந்து நின்று எம்முள்ளிருந்து ஞானமாக வெளிப்பட்டான்.

பாடல் #1815

பாடல் #1815: ஏழாம் தந்திரம் – 10. அருள் ஒளி (இறைவன் கொடுத்த அருள் ஞானமாக வெளிப்படுதல்)

வாரா வழிதந்த மாநந்தி பேர்நந்தி
யாரா வமுதளித் தானந்தி பேர்நந்தி
பேரா யிரமுடைப் பெம்மான் பேரொன்றில
னாரா வருட்கட லாடுகவென் றானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

வாரா வழிதநத மாநநதி பெரநநதி
யாரா வமுதளித தானநதி பெரநநதி
பெரா யிரமுடைப பெமமான பெரொனறில
னாரா வருடகட லாடுகவென றானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

வாரா வழி தந்த மா நந்தி பேர் நந்தி
ஆரா அமுது அளித்தான் நந்தி பேர் நந்தி
பேர் ஆயிரம் உடை பெம்மான் பேர் ஒன்று இலன்
ஆரா அருள் கடல் ஆடுக என்றானே.

பதப்பொருள்:

வாரா (இந்த உலகத்திற்கு திரும்பவும் வந்துவிடாத) வழி (பெரும் வழியை) தந்த (தந்து அருளிய) மா (மாபெரும்) நந்தி (குருநாதனாகிய இறைவன்) பேர் (பெருமை மிக்க) நந்தி (நந்தி ஆகும்)
ஆரா (என்றும் தெகிட்டாத) அமுது (அமிழ்தமாகிய பேரின்பத்தை) அளித்தான் (அளித்து அருளியவன்) நந்தி (குருநாதனாகிய இறைவன்) பேர் (பெருமை மிக்க) நந்தி (நந்தி ஆகும்)
பேர் (தனது திருப்பெயர்களாக அடியவர்கள் அழைக்கும்) ஆயிரம் (ஆயிரம் பெயர்களை) உடை (உடைய) பெம்மான் (பெருமானாக இருந்தாலும்) பேர் (தனக்கென்று தனிப் பெயர்) ஒன்று (ஒன்றும்) இலன் (இல்லாதவன்)
ஆரா (என்றும் தெகிட்டாத) அருள் (அமிழ்தமாகிய) கடல் (குருநாதனாகிய இறைவனின் பேரருள் பெருங்கடலில்) ஆடுக (மூழ்கி பேரின்பத்தில் திளைத்து இருங்கள்) என்றானே (என்று தமது அடியவர்களுக்கு அருளினான்).

விளக்கம்:

இந்த உலகத்திற்கு திரும்பவும் வந்துவிடாத பெரும் வழியை தந்து அருளிய மாபெரும் குருநாதனாகிய இறைவன் பெருமை மிக்க நந்தி ஆகும். என்றும் தெகிட்டாத அமிழ்தமாகிய பேரின்பத்தை அளித்து அருளியவன் குருநாதனாகிய இறைவன் பெருமை மிக்க நந்தி ஆகும். தனது திருப்பெயர்களாக அடியவர்கள் அழைக்கும் ஆயிரம் பெயர்களை உடைய பெருமானாக இருந்தாலும் தனக்கென்று தனிப் பெயர் ஒன்றும் இல்லாதவன். என்றும் தெகிட்டாத அமிழ்தமாகிய குருநாதனாகிய இறைவனின் பேரருள் பெருங்கடலில் மூழ்கி பேரின்பத்தில் திளைத்து இருங்கள் என்று தமது அடியவர்களுக்கு அருளினான்.

தத்துவ விளக்கம்:

மீண்டும் மீண்டும் பிறவி எடுக்கின்ற சுழற்சியிலிருந்து விடுபட்டு மீண்டும் பிறவி எடுக்காத மாபெரும் வழியை குருநாதனாக வந்த இறைவன் அடியவருக்கு தந்து அருளி அந்த வழியை சரியாகப் பின்பற்றுகின்ற மன வலிமையையும் கொடுத்து அதை அவர் அகங்காரம் வந்துவிடாமல் சரியாகப் பின்பற்றும் போது அதற்கு பலனாக என்றும் தெகிட்டாத அமிழ்தமாகிய பேரின்பத்தை கொடுத்து அருளுகின்றான். இறைவன் கொடுக்கின்ற வழிமுறைகள் பல ஆயிரம் வகையாக இருக்கவே அடியவர்கள் அவன் புரிகின்ற ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு பெயரைக் கொடுத்து அவனை ஆயிரம் பெயர்களில் அழைத்தாலும் தனக்கென்று ஒரு பெயரும் இல்லாதவன் இறைவன். இப்படிப்பட்ட இறைவனே தனது பேரருளாகிய பெருங்கடலில் அடியவர்கள் மூழ்கித் திளைத்து இன்புற்றிருக்குமாறு அருளுகின்றான்.

பாடல் #1814

பாடல் #1814: ஏழாம் தந்திரம் – 10. அருள் ஒளி (இறைவன் கொடுத்த அருள் ஞானமாக வெளிப்படுதல்)

அருளிற் றலைநின் றறிந்தழுந் தாகா
ரருளிற் றலைநில்லா ரைம்பாச நீங்கா
ரருளிற் பெருமை யறியார் செறியா
ரருளிற் பிறந்திட் டிறந்தறி வாரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அருளிற றலைநின றறிநதழுந தாகா
ரருளிற றலைநிலலா ரைமபாச நீஙகா
ரருளிற பெருமை யறியார செறியா
ரருளிற பிறநதிட டிறநதறி வாரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அருளில் தலை நின்று அறிந்து அழுந்து ஆகார்
அருளில் தலை நில்லார் ஐம் பாசம் நீங்கார்
அருளில் பெருமை அறியார் செறியார்
அருளில் பிறந்து இட்டு இறந்து அறிவாரே.

பதப்பொருள்:

அருளில் (ஒளியாகிய பேரருளில்) தலை (உறுதியாக) நின்று (நின்று) அறிந்து (அதை முழுவதுமாக அறிந்து கொண்டு) அழுந்து (அதிலேயே அமிழ்ந்து) ஆகார் (அதுவாகவே ஆகாதவர்கள்)
அருளில் (ஒளியாகிய பேரருளில்) தலை (தலையாக) நில்லார் (நிற்காதவர்கள்) ஐம் (ஐந்து விதமான புலன்களால் வருகின்ற) பாசம் (பந்த பாசங்களை) நீங்கார் (விட்டு நீங்காதவர்கள்)
அருளில் (ஒளியாகிய பேரருளில்) பெருமை (கிடைக்கின்ற பெரும் பலனை) அறியார் (அறிந்து கொள்ளாதவர்கள்) செறியார் (அதனின் பலனை அறிந்து அதன் மூலம் தம்மை மேன்மை படுத்திக் கொள்ளாதவர்கள்)
அருளில் (ஒளியாகிய பேரருளில்) பிறந்து (பிறந்து) இட்டு (இந்த உலகத்தில் உயிர்களாக வந்திருந்தாலும்) இறந்து (அந்த பேரருளில் இருக்கின்ற இறவாத பேரறிவை அறியாமல் இறந்து போகின்ற) அறிவாரே (உலக அறிவையே அறிந்தவர்களாக இருக்கின்றார்கள்).

விளக்கம்:

ஒளியாகிய பேரருளில் உறுதியாக நின்று அதை முழுவதுமாக அறிந்து கொண்டு அதிலேயே அமிழ்ந்து அதுவாகவே ஆகாதவர்கள், அந்த பேரருளை அடைவதையே வாழ்க்கையின் குறிக்கோளாக மேற்கொண்டு நிற்காதவர்கள், ஐந்து விதமான புலன்களால் வருகின்ற பந்த பாசங்களை விட்டு நீங்காதவர்கள், அந்த பேரருளில் கிடைக்கின்ற பெரும் பலனை அறிந்து கொள்ளாதவர்கள், பேரருளின் பலனை அறிந்து அதன் மூலம் தம்மை மேன்மை படுத்திக் கொள்ளாதவர்கள், பேரருளில் பிறந்து இந்த உலகத்தில் உயிர்களாக வந்திருந்தாலும் அந்த பேரருளில் இருக்கின்ற இறவாத பேரறிவை அறியாமல் இறந்து போகின்ற உலக அறிவையே அறிந்தவர்களாக இருக்கின்றார்கள்.