மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #32

13-11-2007 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

பொதுவாக அனைத்தும் கர்மவிதிப்படி நடைபெறும் என்பது அனைவரும் அறிந்ததே இத்தகைய கர்ம விதிகளை இறைவனால் மாற்றிவிட முடியுமா?

உறுதியாக மாற்றிவிட முடியும். ஏன் என்றால் கர்ம விதிகள் இறைவனால் மாற்ற முடியாவிட்டால் இறைவனை விட கர்மவிதி பெரிதாகும் அல்லவா? இறைவனே பெரியவன். ஆகையால் கர்ம விதிகளை இறைவனால் மாற்றிவிட முடியும். இத்தகைய நிலையில் சில விஷேச நாட்களில் உலக நன்மைக்காக இறைவன் கர்ம நிலைகளை மாற்றிவிட இயலும். மேலும் பொதுவாக அவரவர் தன் கர்ம விதிகளை தீர்த்தல் வேண்டும் என விதியும் உண்டு. இது மனதினால், உடலால், துயரத்தால், தவத்தால், வழிபாட்டால் எனப் பல வகையில் தீர்த்திட முடியும். நல் எண்ணம் படைத்தோர் இதனை தியானவழி, பூஜை வழிகளில் தீர்த்திடுகின்றனர். இவ்விதம் இருந்த போதிலும் அவரவர் செய்த கர்மத்திற்கு ஏற்றார் போல் மன வேதனைகளும் உடல் வேதனைகளும் அவர்களைத் தொடரும். காரணம் அவரவர் தம் சுமைகளை பிறக்கும் பொழுது கொண்டு வருவதே. இது மட்டுமல்லாது அக்குறைகளை தீர்த்திட முயற்சிக்காமல் மேலும் சில கர்ம வினைகளை சேர்ப்பதே மனிதனின் நிலைக்குக் காரணம். தீவிரமான வழிபாடு தியான முறைகள் சகிப்புத்தன்மை ஆகியவற்றை வளர்ப்பதோடு எதிர்பார்ப்பற்ற நிலையில் வாழ்வதும் எளிதாக கர்ம நிலைகளை மாற்றி இறைவனின் பாதம் அடைய வழி வகுக்கும்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #31

17-10-2007 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

ஆன்மீக பாதையில் தடைகள் பல வருகின்றதே இறைவனை நாடத் தடைகள் ஏன் வருகின்றது? தடைகள் என்பது பொதுவாக அனைத்திலும் வரக்கூடியது என்பதை அறிதல் வேண்டும். தடை என்றால் அத்தடைகளை மீற வேண்டும் என்பதே பொருள். தடை ஒன்று இருந்தால் அதைச் சுற்றிச் செல்லலாம். அதன் மீது தாவிச் செல்லலாம் இல்லை மாற்று வழியாகச் செல்லலாம். தடைகளை நாம் தாண்டிச் செல்ல நம் ஆன்மீக வளர்ச்சி பெருமளவில் வளரும் என்பது இதற்குப் பொருள். தடைகள் இல்லையேல் ஆன்மீகப் பாதையில் சாதனை புரியும் வாய்ப்புக்கள் கிடைக்காது என்ற ஓர் நிலையும் உள்ளது. போராடிச் செல்வதே எப்பொழுதும் நலம். அவ்விதம் போராட்டம் நடத்தும் காலங்களில் நாம் நம்முடைய குறைகளையும் நிறைகளையும் தானாக அறிவோம். அதற்கு ஏற்றாற் போல் நாம் செல்வதும் உண்டு. இது மட்டும் இல்லாமல் தடைகளை வெல்ல பெரியோர்களை நாடுவோம். இவ்வழியில் பெரியோர்களின் ஆசிகளும் கிடைக்கும். இதற்காகத்தான் தடைகளை நம் வாழ்க்கையில் பலவகைகளாக அனைவரும் காண்கிறோம். குறிப்பாக ஆன்மீகப் பாதையில் தடைகள் ஓர் தடையல்ல ஓர் பிரசாதமாக காணுதல் வேண்டும். ஏனெனில் நாம் அத்தடைகளைத் தாண்டி மேலே செல்லும் போது ஆண்டவன் ஆனந்தம் கொள்கிறான். ஆனந்தத்தின் பூரிப்பால் அவன் அருள் புரிகின்றான். அந்த அருளை நாமும் பெற மேலும் மேலும் மேன்மைகள் உண்டாகும் என்பதே பொருளாகும்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #30

20-9-2007 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

நாம் வியர்வை சிந்தி உழைப்பால் கிடைக்கும் பொருளை உணவாக எடுத்துக் கொண்டால் அனைத்து தீயவைகளும் நல்வழியில் செல்லும். மற்றவர்கள் உழைப்பில் வாழ எண்ணுபவன் பெரும் மடங்கு கர்மாக்களை ஏற்றுக் கொள்கிறான். இக்காலத்தில் மற்றவர்கள் உழைப்பில் வாழ்வது ஓர் சாதாரண நிலை ஆகி விட்டது. அலுவலகங்களில் சம்பளம் கிடைக்கும் அளவிற்கு எந்த அளவிற்கு குறைவாக வேலை செய்ய முடியுமோ அந்த அளவிற்கு குறைவாக வேலை செய்கின்றனர். அது மட்டுமில்லாது வேகமாக வேலை செய்தால் அதிக சம்பளம் எப்படி பெறுவது என்று எண்ணுகின்றனர். பொதுவாக அவரவர் பணிகள் அவரவர்கள் செய்திட நலமாகும். இக்கால நிலையில் தன்னுடைய துணிகளைத் தானாகவே சுத்தம் செய்து தேய்த்து வைப்பது என்பது ஆகாத நிலையாக இருக்கிறது. இருப்பினும் உணவு சாப்பிட்ட பின்பு நாம் உண்ட பாத்திரத்தை நாமாகவே சுத்தம் செய்து வைக்கலாமே? இதில் தடை ஏதும் இல்லையே?

இவ்விதம் சிறு சிறு பணிகள் நாம் இயன்ற அளவிற்கு செய்து மற்றவர்களுக்குத் துன்பம் கொடுக்காமல் வாழ்ந்தால் சர்வ நலமும் உண்டாகும். மேலும் நாம் உழைப்பால் தான் வளர முடியும் என்பதையும் இங்கு கூறுகிறோம். உழைப்பு இல்லையென்றால் வளர்ச்சி இல்லை என்பது பொது விதியாகின்றது. உழைக்காமல் இப்பொழுது வரை நன்றாகவே வாழ்ந்து வருகின்றேன் எனப் பலரும் கூறக்கூடும் இது சீராகாது. ஏனெனில் உழைப்பை உடல் உழைப்பு என்றும் மன உழைப்பு என்றும் பிரித்திட முடியும். மன உழைப்பின் காரணமாகப் பலர் தூக்கமில்லாமல் அவதிப்படுகின்றனர். பின்பு மருத்துவரைப் பார்த்து மாத்திரைகள் சாப்பிடுவதும் இல்லையென்றால் இரவு முழுவதும் தூங்காமல் மறுநாள் கோபத்தில் ஆடுவதையும் காண்கின்றோம். தாமதமாகத் தூங்காமல் உணவு உண்ட பின் ஒரு மணி நேரம் கழித்துத் தூங்கி அதிகாலை எழுந்து காரியங்கள் செய்தால் ஆரோக்கியம் தானாக உண்டாகும். அனைவரும் பிராணாயாமம் செய்து வர உடல் நோய்கள் நீங்கி அனைவருக்கும் நலம் என்று கூறுகிறோம். இவ்வார்த்தையின் பொருளில் இருந்து நீங்கள் அனைத்தும் உணரலாம். பிராணாயாமம் என்பது பிராணத்தை உள் சேகரிக்கும் முறை என்று அர்த்தம் ஆகின்றது. இப்பூத உடலுக்கும் ஆத்மாவுக்கும் உள்ள தொடர்பே இந்தப் பிராணன்தான் என அறிந்து கொள்ள வேண்டும். இத்தகைய நிலையில் பிராணத்துடன் பிராணன் உள் செல்வதையும் வெளி செல்வதையும் கூர்ந்து கவனித்துத் தியான முறையாக மாற்றிக் கொண்டால் விரைவில் நலன்கள் அனைத்தும் காணலாம்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #29

23-8-2007 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

நாமஸ்மரணனம் (மந்திரங்கள் கூறுவது) என்பது எக்காலத்திலும் செய்யக்கூடியதா? நாமஸ்மரணனத்திற்கு எவ்வித கால ஒதுக்கீடும் இல்லை என்றும் சதா நாமமாகவும் சதா மந்திரமாகவும் (எப்பொழுதும்) கூறக்கூடியது. இது எங்கும் எந்த வேலை செய்யும் காலத்திலும் கூறக்கூடியது என்றும் இங்கு எடுத்துரைப்போம். இதற்கு எவ்வித விதி விலக்கும் இல்லை.

நாம் ஆலயத்திற்கு இறைவனிடம் செல்லும் காலத்தில் நம்மை மனதாலும், உடம்பாலும், தூய்மையாக்கிக் கொண்டு செல்லுதல் வேண்டுமா? இது கட்டாயமா?

பொதுவாக இறை நாட்டம் செல்லும் போது, ஆலயம், பூஜை அறை செல்லும் போது உடலை சுத்தப் படுத்துவதோடு மன நிலையையும் சுத்தமாக வைத்துக் கொண்டு செல்லுதல் வேண்டும் என்பது நலம் தருவதாகும். இருப்பினும் இறை பாதையில் செல்ல நாம் முதன்மையில் உடலை தூய்மையாக்கிச் செல்லுதல் வேண்டும் என்பது விதியில்லை. ஏனெனில் நாம் எவ்விதம் இருக்கின்றோமோ அந்நிலையில் சரணடைவதே முக்கியமாகும். இவ்விதம் தாயே அப்பனே என்று சரணடைந்து விட்டால் அவர்கள் நம்மை சுத்தப்படுத்தி அனுப்புவார்கள். ஓர் குழந்தையை தாய் சுத்தப் படுத்துவது கடமை என்கின்றபோது, இறைவன் உலகத்திலுள்ள எல்லா தாயையும் விட மேன்மையானவன் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு செயல்படுவீர்களாக.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #28

27-7-2007 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

முற்பிறவியில் சென்றது இப்பிறவியில் பாதிப்பது ஏன்? முற்பிறவியில் சென்றதை மறந்துவிட வேண்டும் என்று கூறுகிறார்களே அவ்வாறு மறந்தால் முற்பிறவியில் நாம் செய்த கர்மா குறையும் என்று எடுத்துக் கொள்ளலாமா? இது உண்மையா?

அன்பரே நன்றாக சிந்திக்க வேண்டும். அன்று விதைத்தது இன்று பயிராக நிற்கின்றது. விதைத்தது மறந்து நின்றால் பயிரானது இறையருள் இருந்தால் வளர்ந்து நிற்கும் இறையருள் இல்லையேல் காய்ந்து போகும். சென்ற பிறவியே இப்பிறவியையும் வரும் பிறவியையும் முடிவு செய்யும். வினையைத் தாங்கும் சக்தி நம்முடன் இருத்தல் வேண்டும். அந்த வினையைத் தாங்கும் சக்தியைப் பெற இறைவன் காட்டிய வழியைப் பின்பற்ற வேண்டும். இப்பிறவியில் முன்பிறவியை நாம் மறந்து விடுகின்றோம். இப்போது நடப்பது முற்பிறவியின் வினையாலே என உணர்ந்தால் இறைவன் அருளால் அனைத்தும் சமமாகும். இறப்பதும் பிறப்பதும் இறைவன் விதியே கர்மவிதியால் அவ்விதிப்படி நம் வாழ்வு முறை அமைகிறது. கர்மத்தை இறைவன் மாற்ற முடியாது என்பது பொது விதி. இருப்பினும் இறைவனின் அருளை முழுமையாகப் பெற்றால் இறைவன் அவ்வாறு நினைத்தால் உங்கள் விதியை மாற்ற முடியும். இந்த உணர்வோடு இறைவன் திருவடியை நாடுங்கள் இந்த உணர்வோடு சரணடையுங்கள். இந்த உணர்வோடு திருவடி பணிந்திட நல்வழி நல்மார்க்கம் நல்மாற்றம் உண்டு.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #27

2-6-2007 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

பிறவிதனை அறுக்கும் திறனை அளிக்க வல்லான் ஒருவனே அவனும் எம்பிரான் ஒருவனே என்றும் அனைவருக்கும் எடுத்துரைத்தோமே. இதற்குரிய வழிகளை எம்பிரான் அருளால் திருமந்திரத்தில் உரைத்துள்ளோம். இதனைக் கைப்பற்றியோர் இஜ்ஜென்மத்திற்குள்ளாகவே பிறவி இல்லா நிலை அடையக்கூடும். சீவன் (உயிர்) முக்தர்களாக நிலவக்கூடும் என்றும் கூறுவோமே.

நாகரீக காலங்களில் இவையாவும் இயலுமோ? என ஓர் வினாவும் கேட்டோம். உறுதியாக இயலும் என்பது மட்டுமல்லாது இந்நகரில் பலப்பல ஜீவன் முக்தர்கள் நடமாடுகின்றனர் என்பதும் மட்டுமல்லாது பலர் அவதாரம் எடுத்தும் நடமாடுகின்றனர். இவையாவும் கலி முடியும் முன்னதாக வாசியை கைப்பற்றுகின்றோரையும் சிவநெறியைக் கடைபிடிக்கின்றோரையும் கலிதனின் கொடுமையிலிருந்து மீட்கவே பிரளயத்திலிருந்து காக்கவே என்றும் இங்கு எடுத்துரைத்தோமே.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #26

6-5-2007 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

மலை போல் நம்பினோம் என அனைவரும் உரைக்க இதற்கு விஷேச விளக்கம் யாதும் உண்டா?

மலை போல் என்பது உயரத்துக்கல்ல. மலை போல் என்பது வஜனத்துக்கு என்பேனே. வஜனம் என்றால் கனம் என்பது பொருளாகும். அதாவது அசைக்க முடியாத நம்பிக்கை என்பது பொருளாகும். மேலும் மற்றோர் விளக்கமும் உண்டு அதுவும் இறைவன் போல் நம்பினோம் என்கின்ற பொருளும் உண்டு. ஏனெனில் மலை மேல் நின்றிட யாம் சிறியதாக உணர்வு பெறுவோம். இத்தகைய நிலையில் அப்பெரும் நம்பிக்கை இறைவன் போல் உம்மையும் நம்பினோமே என்பதோடு மலை போல் நம்பினோம் என்றும் கூறுவார்களே.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #25

9-4-2007 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

இன்று மாவிலைத் தோரணம், வாழைக்கால் பந்தல், அரசமரம் சுற்றுதல் என்பதெல்லாம் கண்டோம். விழா நாளில் இது அவசியமா?

உண்மையில் இக்கால நிலையில் இவை அனைத்தும் தேவையற்றதே என்றும் விளக்கிடுவோம். இக்காலமதில் பெரிதாக தோரணங்களும், நவீன மின்சார வர்ண விளக்குகளும் போதுமானது என்கின்ற நிலையும் கண்டோம். அக்காலங்களில் திருமணங்கள் என்பது விசேஷங்களாகப் பல நாட்கள் தொடர்ந்து நடந்தன. இவ்விதமிருக்க அவரவருக்கும் அஜீரண நிலைகள் காண்பது சாதாரண நிலை என்றும் விளக்கிடுவோம். இதனை நீக்கி வைக்கும் வகையில் கொழுந்தான மாவிலை உபயோகம் கண்டது. இதற்கெனவே தோரணம் என்று விளக்கிட்டோமே.

மேலும் வெட்ட வெளியில் பந்தல்கள் நட்டும் அங்கு திருமணம் விசேஷங்கள் நடைபெற அரவம்தனின் (பாம்பு முதலான ஜந்துக்கள்) தீண்டுதலும் பலரும் கண்டனர். இதற்குத் தக்க மருந்தாக நஞ்சை இழுக்கும் வகையில் உபயோகிக்கப்பெறும் வாழைப் பட்டைகள் என்றும் விளக்கிட்டோமே. இத்தகைய வாழைத் தண்டுகளைப் பிளந்து அவை பாம்பு கடித்த இடத்தின் மேல் வைத்து முதலுதவியாக அக்காலத்தில் கண்டனர் என்று இங்கு எடுத்துரைத்தோமே. மேலும் அரச மரத்தின் தன்மையைக் குறித்தால் அன்று திருமணங்களில் பந்தலின் நடுவாக அரசக்கொம்பு ஒன்றை நட்டு இதனை மணமக்கள் சுற்றி வர வேண்டும் என்ற சம்பிரதாய விதியும் இருந்தது. இது சம்பிரதாயமாக குழந்தையின்மையை நீக்க வல்லது என்பதே பொருளாகின்றது. பல சம்பிரதாயங்கள் இவ்விதம் உண்டு. இன்று இங்கு ஏற்றும் சூடத்தின் (கற்பூரம்) தரம் குறைந்து விட்டது. அக்காலத்தில் நல் கற்பூரம் என அழைக்கப்படும் வஸ்துவை எரித்தும் அதனைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொள்வதும் கிருமி நாசினியாக உதவியது என்றும் சாம்பிராணி என்னும் தூபங்களைப் புகைப்பதால் அத்தலமதிலிருந்து கடிக்கும் பிராணிகள் ஜந்துக்கள் விலகி விடுகிறது. இவையாவும் கூறினால் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்கின்ற நிலையில் தெய்வத்தின் பெயரில் இதனைக் கூறிட பலரும் ஒப்புக்கொண்டு செய்கின்றனர் என்பதே நிஜமான நிலை.

மேலும் வெள்ளி, சனி அன்று பொதுவாக மாமிச வகைகள் யாவரும் உண்பதில்லை. இதற்குக் காரணம் இவ்விரண்டு நாட்களிலும் பொதுவாக உடம்பில் உஷ்ணம் அதிகரிக்கக் கூடிய நாட்களாகிறது. இதனால் உடம்புக்கு ஏற்படும் பாதிப்புகள் தவிர்க்க அந்நாள் தெய்வீகநாள் எவரும் புலால் உண்ணக்கூடாது என்கின்ற விதியை வகுத்தனர். இறைவனுக்கு எந்நாளும் நீ என்ன உண்ட போதிலும் அக்கறை இல்லை என்பதை இங்கு உணர்தல் வேண்டும். மனிதனாக சுய திருத்தங்களை வகுத்துக் கொள்ள வேண்டும். நல்வழியை நாட வேண்டும். என்பதற்கென இறைவன் சுயபுத்தியை அளித்தான் என்பதை நாம் மறக்கலாகாது. நம் புத்திக் கூர்மையை உபயோகித்துப் பல காரியங்கள் சாதிக்க இயலும் என்றும் சிறு சிறு காரியங்களுக்கு விடை தெரிய தெய்வத்தை நாடுவது சிலாக்கியமற்றது என்றும் இங்கு உரைத்தோமே. ஏனெனில் கோடிக்கணக்கான மக்களுக்குத் தனித்தனியாக விடை அளிக்க இயலாது என்பதால் பிரதானமான சித்தர்கள், முனிவர்கள், ரிஷிகள் மூலமாக சில விதிகளை வகுத்து இதனை பின்பற்ற ஏற்படுத்தினர் என்பதே உண்மை நிலையாகின்றது. பொதுவாக இதனை மனிதர்கள் ஒப்புக்கொள்வதில்லை. ஆகவே அனைத்திற்கும் தெய்வீகம் என்கின்ற ஓர் போர்வையை போர்த்தி அநுசரிக்க வைத்தனர். இது தான் நிலை.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #24

12-3-2007 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

தெளிவு குருவின் திருமேனி கான்டல் எனத் துவங்கும் அந்நான்கு வரிகள் படித்து நன்றென அவ்வரிகளின் எளிமையை இரசித்தோரும் உண்டு. இருப்பினும் இதன் முழுமையான அர்த்தமும் எவ்விதம் செய்தல் வேண்டும் என்கின்றதும் அறியா நிலையில் உள்ளனர். இதனை யாம் இங்கு எடுத்துரைப்போமாக.

குருவும் தெய்வமும் வேறில்லை என்கின்றதை முதலில் உணர்தல் வேண்டும். நாம் வணங்கும் தெய்வமே குருவின் வடிவில் நம் முன் நிற்கின்றார் என்பதையும் மறப்பது நல்லதல்ல. யாம் வணங்கும் சிவன், கிருஷ்ணன், விஷ்ணு, அம்பிகை என்ற அனைத்தும் குருவுக்குள் அடக்கம் என்பதையும் மறவாது செயல்படுத்துதல் வேண்டும்.

மேலும் குருவை எவ்விதம் வணங்குவது? என்கின்ற ஓர் வினாவும் இங்கு எழும்பிடக் கண்டோம். குருவின் ஆத்மா அவருடய ஆன்மிக சக்தியை நாம் நேசிக்க வேண்டும் என்பதில் எவ்வித குழப்பமும் இல்லை. இவ்விதமிருக்க நாம் குருவாக வேண்டும் குரு நாமாக வேண்டும் என்கின்ற ஐக்கிய மனப்பான்மையை வளர்த்தல் வேண்டும். இதனைச் செய்யும் முன் குரு எவ்விதம் இருக்கின்றாரோ அவ்விதம் நாமும் மாற முயற்சித்தல் வேண்டும். இந்நிலையை எவ்விதம் அடைவது என்றால் குருவை எண்ணித் தியானம் செய்தல் வேண்டும். செய்திடும் முன்னதாக கால் தொட்டு சிரசு வரை அங்கங்களை நாம் தொட்டு அவை குருவின் அங்கங்களாக கருதி வணங்கிட்ட பின் குருவின் செய்கைகள் குருவின் தன்மைகள் அனைத்தும் நன்கென தியானித்து மனமதில் நிறுத்தல் வேண்டும். இவ்விதம் சில மாதங்கள் செய்கின்ற போது நமக்கு மகத்தான முன்னேற்றங்கள் குருவழி கிட்டக்கூடும் என்றும் விளக்கிட்டோமே.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #23

20-12-2006 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

இன்று கூறிட விசேஷங்கள் இல்லை. இல்லை என்கின்ற போதிலும் பலதும் உண்டே? இருக்கும் என்பது இல்லாது போகும். இல்லாது என்பது எங்கும் நிறைந்திட இதுவே சத்தியம் என்று கூறுவோம். இப்போது எது நிஜம் என்று நாம் நினைப்பது நிஜமில்லை. அனைத்தும் மாயை என்றாவது ஒரு நாள் இல்லாமல் போகும். எது நம் கண்ணுக்குத் தெரியவில்லையோ ஒன்றுமில்லாமல் இருக்கிறதோ அதுவே தான் இருக்கின்றது. இறைவன் நம் கண்ணுக்குத் தெரியவில்லை ஆனால் அவரே எப்போதும் எங்கும் இருக்கின்றார். இதுவே சத்தியம்.

மறுபிறவி உண்மையா இல்லையா?

எண்ணற்ற பிறவிகள் மனிதனுக்கு உண்டு. ஒன்று இரண்டு மறுபிறவிகள் உண்டா? என்று கேட்டால் எண்ணற்ற பிறவிகள் உண்டு. இப்பிறவிகள் நம்முடைய கர்மாக்களின் விளைவுகளே. நல்ல கர்மாவானது நம்மைத் தொடர்ந்து வரும். தீயவை அனைத்தும் நல்ல பள்ளத்தில் விடும். எந்த நிலை வேண்டும் என்று நன்கு சிந்திப்பீர். ஏனெனில் சிந்திக்கும் தன்மை மனிதப் பிறவியில் மட்டுமே உள்ளது. மானிடன் சிந்திக்கும் தன்மையை நன்றாகப் பெற்றுக் கொண்டான். வினையின் விளைவுகளை நல் செய்கையால் நீக்கினால் வினையின் தீமைகளை தியானத்தால் நீக்கினால் வினையின் தீமைகளை பக்தியால் நீக்கினால் வினைகளின் தீமைகள் நீங்கிடும். சொர்க்கமும் நரகமும் இங்கேதானப்பா. நல் வினைகள் அது ஆனந்தம் கொடுக்கும். அந்த ஆனந்தமே சொர்க்கம் ஆகும். தீயவை நமக்கு கடினத்தை அளித்திட இக்கடினமே நரகம் ஆகும் என்று கூறுவோமே.