பாடல் #591: மூன்றாம் தந்திரம் – 7. தாரணை (பிரத்தியாகாரம் மூலம் உள்ளே ஒருநிலைப்படுத்திய மனதை நிலைத்திருக்க வைத்தல்)
கடைவாச லைக்கட்டிக் காலை எழுப்பி
இடைவாசல் நோக்கி இனிதுள் இருத்தி
மடைவாயிற் கொக்குப்போல் வந்தித் திருப்பார்க்
குடையாமல் ஊழி இருக்கலு மாமே.
விளக்கம்:
மூலாதாரத்திலிருக்கும் துவாரமாகிய மலத்துவாரத்தை இறுக்கி வைத்து உள்ளே இழுத்த மூச்சுக்காற்றை முதுகெலும்பின் வழியே செல்லும் சுழுமுனை வழியே செலுத்தி தொப்புளுக்குக் கீழே இருக்கும் மூன்று சக்கரங்களின் நடுவில் மனதை வைத்து இறையருளால் கிடைக்கும் ஒளியை அடையும் வரை இறைவனை வணங்கி இருப்பவர்களுக்கு உலகம் அழியும் காலம் வரை உடல் அழிவின்றி இருக்க முடியும்.