பாடல் #552: மூன்றாம் தந்திரம் – 1. அட்டாங்க யோகம் (இயமம், நியமம், ஆதனம், பிரணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி ஆகிய எட்டு பகுதிகள் சேர்ந்தது அட்டாங்க யோகம் ஆகும்)
இயம நியமமே எண்ணிலா ஆதனம்
நயமுறு பிராணாயா மம்பிரத்தி யாகாரஞ்
சயமிகு தாரணை தியானஞ் சமாதி
அயமுறும் அட்டாங்க மாவது மாமே.
விளக்கம்:
இமயம், நியமம், மற்றும் பலவகையான ஆசனங்களும், நன்மையைத் தரும் பிராணாயாமமும், பிரத்தியாகாரம், வெற்றி மிக்க தாரணையும், தியானமும், சமாதியும், ஆகிய எட்டுவகைப் பகுதிகளைக் கொண்ட அட்டாங்க யோக வழி முறைகள் நல்வினை உள்ளவர்களுக்குக் கிடைக்கும் நல்வழியாகும்.
எட்டுப் பகுதிகளைக் கொண்ட அட்டாங்க யோகத்தின் விளக்கம்:
முதலாவது இயமம்: தீமைகளைப் போக்குவது. இதில் ஐந்து பிரிவுகள் உள்ளன:
- மனதாலும், பேச்சாலும், செயலினாலும் எந்த உயிரையும் துன்புறுத்தாமை.
- மனதாலும், பேச்சாலும், செயலினாலும் பிறர் பொருளைக் களவாடாமை.
- மனதாலும், பேச்சாலும், செயலினாலும் முழு பிரம்மச்சரியம் கடைப்பிடித்தல்.
- மனதாலும், பேச்சாலும், செயலினாலும் உண்மையைப் பின்பற்றுதல்.
- பிறர் கொடுக்கும் பரிசுகளைப் பெற்றுக் கொள்ளாமை. (ஆசைப் படாமலிருத்தல்)
இதனைக் கடைபிடித்தால் நம்மிடமுள்ள அனைத்து தீமைகளும் விலகும்.
இரண்டாவது நியமம்: நன்மைகளைப் பெறுவது. தவம், ஜபம், சந்தோஷம், தெய்வ நம்பிக்கை, தானம், சிவ விரதம், சித்தாந்தக் கேள்வி, சிவ பூசை, ஞான அறிவு, நாணம், ஆகிய பத்துக் காரியங்களையும் தவறாது மேற்கொள்ளுதல் நியமம் ஆகும். இவற்றை மேற்கொள்ளும்போது ஒளியாகிய சிவத்தையும் அந்த ஒளியின் ஆற்றலாகிய சத்தியை தியானித்தலும் நியமம் ஆகும்.
மூன்றாவது ஆசனம்: உடலை அமர்த்தும் நிலை. இடுப்பு, தோள்கள், தலை இவற்றை நேராக வைத்து, முதுகுத் தண்டுக்குத் தொந்தரவு கொடுக்காமல் அதற்கு விடுதலை அளித்தல்.
நான்காவது பிராணாயாமம்: மூச்சைச் சரிவர அடக்கியாளுதல் (பிராணன் என்னும் உயிர்ச் சக்தியை அடக்கியாள்வது)
ஐந்தாவது பிரத்தியாகாரம்: மனதை வெளியே புலன்கள் வழி செல்லாது தடுத்து (கண்கள் வழியே தவறானவற்றைப் பார்க்காமலும், காது வழியே தவறானவற்றைக் கேட்காமலும், வாய் வழியாகத் தவறான வார்த்தைகளைப் பேசாமலும், நாக்கின் மூலம் பாதகமான உணவுகளை ருசிக்காமலும், உடல் வழியே தவறானவற்றைச் செய்யாமலும்), மனதை உள்முகமாகத் திருப்பி மனதில் உள்ள அரும்பொருளை அறியச் சிந்தித்தல்.
ஆறாவது தாரணை: ஒரு பொருளின் மீது மனத்தைக் குவித்தல். தன்னைத்தானே உணர்வது.
ஏழாவது தியானம்: மனதை ஒருமுகப்படுத்தி இடைவிடாது சிந்தித்தல்.
எட்டாவது சமாதி: நமது முயற்சிகள் அனைத்திற்கும் குறிக்கோளான ஞான ஒளியைப் பெறுதல். கடவுளை அடைய விரும்புகின்றவன் உடலாலும், மனத்தாலும், அறத்தாலும் (நற்குணங்களாலும்), ஞானத்தாலும் வலிமை பெற்று இருக்க வேண்டுவது.
மிக்க அருமை