பாடல் #364: இரண்டாம் தந்திரம் -5 பிரளயம்
தண்கடல் விட்ட தமரருந் தேவரும்
எண்கடல் சூழெம் பிரானென் றிறைஞ்சுவர்
விண்கடல் செய்தவர் மேலெழுந் தப்புறங்
கண்கடல் செய்யுங் கருத்துஅறி யாரே.
விளக்கம்
உலகம் முழுவதும் நிறைந்து இருந்த குளிர்ந்த பிரளய கடல் நீர் வடிந்தது. வானகத்தவர்களும் தேவர்களும் கடல் போன்ற எங்கள் எண்ணங்களில் சிவத்தைப் பற்றிய நினைவே வெள்ளம் போல சூழ்ந்து இருக்க வேண்டும் என்று வேண்டினார்கள். கடல்நீரை விண்ணகம் வரை பரவச் செய்த இறைவனும் கடைக்கண் பார்வையால் அருள் புரிந்து பேரொளியாய் எழுந்தருளினன். இத்தகைய பிரளயத்தை ஏற்படுத்தி பின்பு அனைவருக்கும் அருள் செய்த இறைவன் திருவுள்ளத்தை யாரும் அறியவில்லை.