பாடல் #346: இரண்டாம் தந்திரம் – 2. பதிவலியில் வீரட்டம் (இறைவன் மறக்கருணையில் ஆட்கொண்ட எட்டு இடங்கள்)
இருந்த மனத்தை இசைய இருத்திப்
பொருந்தி இலிங்க வழியது போக்கித்
திருந்திய காமன் செயலழித் தங்கண்
அருந்தவ யோகங் கொறுக்கை அமர்ந்தே.
விளக்கம்:
உலக நன்மைக்காக இன்னொரு உயிரை உருவாக்க தனது துணையுடன் சேரும் உயிர்கள் இறைவனை அடைய தடையாய் இருக்கும் காமம் என்னும் நோயில் சிக்காமல் இருக்க இறைவனை அடைய வேண்டும் என்ற குறிக்கோளுடன் ஒரு நிலைப்பட்ட மனமுடன் இறைவனை வேண்ட இறைவன் காமம் என்னும் நோயிலிருந்து உயிரை காப்பாற்றி உலக நன்மைக்காக இன்னொரு உடலுடன் கூடிய உயிரை உருவாக்க மட்டுமே இறை எண்ணத்துடன் தன்னுடைய துணையுடன் சேரும் உயிருக்கு அருந்தவ யோகத்தை அருளுவார்.
இந்த புராண நிகழ்வு நடந்த இடம் திருக்கொறுக்கை தலமாகும். சிவபெருமான் தியானத்தில் இருக்கும்போது உலக நன்மைக்காக அவர் தியானத்தை கலைக்க வேண்டும் என்று இந்திரன் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மன்மதன் இறைவனின் மீது மலர்க்கணைகளைத் தொடுத்தான். அப்போதும் இறைவன் தமது நெற்றிக் கண்ணைத் திறந்து மன்மதனைப் பார்க்க அந்த நெற்றிக்கண்ணிலிருந்து வெளிப்பட்ட நெருப்பில் மன்மதன் எரிந்து சாம்பலானான். பிறகு மன்மதனின் மனைவியான ரதி தேவி இறைவனை வேண்டிக்கொள்ள உருவமில்லாத அருவமாக மன்மதனை மறுபடியும் உயிர்ப்பித்துக் கொடுத்தார்.