பாடல் #340: இரண்டாம் தந்திரம் – 2. பதிவலியில் வீரட்டம் (இறைவன் மறக்கருணையில் ஆட்கொண்ட எட்டு இடங்கள்)
கொலையிற் பிழைத்த பிரசா பதியைத்
தலையைத் தடிந்திட்டுத் தானங்கி யிட்டு
நிலையுல குக்கிவன் வேண்டுமென் றெண்ணித்
தலையைப் பரிந்திட்டுச் சந்திசெய் தானே.
விளக்கம்:
பிரம்மாவின் மூத்தகுமாரனாகிய தட்சன் தவமிருந்து வானவர்கள் தனக்கு அடிபணிய வேண்டும் என்று வரம் பெற்றான். வரம் பெற்ற ஆணவத்தால் அண்டசராசரங்களுக்கும் தலைவன் ஆனான். பார்வதி தேவியைத் தனது மகளாக அடைந்தான். பார்வதி தேவி ஈசனைக் கண்டு தனது மாயை மறைந்து அவருடன் இணைந்துவிட்டாள். தந்தையாகிய தனது சம்மதம் இல்லாமல் இறைவனுடன் இணைந்துவிட்டாள் என்ற கோபத்தில் இறைவனை அழிக்க ஒரு மாபெரும் யாகம் செய்த தட்சன் அதில் இறைவனை அழைக்காமலும் தேவர்களுக்குத் தரவேண்டிய அவிர்பாகத்தை அவருக்குத் தராமலும் கொலைக்குற்றத்திற்கு மேலான குற்றம் புரிந்தான். அவன் குற்றத்தில் கோபம் கொண்ட இறைவன் பைரவர் அவதாரம் எடுத்து அவனது தலையைத் துண்டித்து வேள்வித் தீயில் போட்டு எரித்துவிட்டார். அதன்பிறகு பார்வதி தேவியும் பிரம்ம தேரும் உலக நன்மைக்கு தட்சன் தேவை என்று வேண்டிக்கொள்ள மனமிறங்கிய இறைவன் ஒரு ஆட்டின் தலையை எடுத்து தட்சனின் உடலில் பொருத்தி அவன் வாழும்படி செய்தார். தட்சனும் தனது ஆணவம் அழிந்து இறைவனை வணங்கினான். இந்த புராணம் நிகழ்ந்த இடம் திருப்பறியலூர் தலமாகும்.
உட்கருத்து: உயிர்கள் தனது கர்மாக்களை தீர்க்க பிறந்து கர்மாக்கள் தீர்ந்ததும் இறைவனை அடைய காத்துக்கொண்டிருக்கிறது. ஆனால் உயிர்களிடம் ஆணவம் தலைவன் போல் குடிகொண்டு தான் சொல்லுவது தான் சரி. அடுத்தவர் சொல்வதை கேட்கமாட்டேன் என்று தன் சொல்படி உயிரை ஆட்டிப்படைத்துக் கொண்டு இறைவனிடம் உயிர் செல்லவிடாமல் தடுத்துக்கொண்டிருக்கிறது. உயிர் இறைவா ஆணவத்திடம் இருந்து என்னைக்காப்பாற்று என்று வேண்டிட இறைவன் ஆணவம் என்னும் தலைவனின் தலையை வெட்டி உயிர்களுக்கு அருள் செய்தான். ஆணவம் முற்றிலும் அழிந்தால் இறைவனை அடைந்து விடலாம். ஆனால் உயிர்கள் தனது கர்மாக்கள் தீர்ந்தால் மட்டுமே இறைவனை அடையமுடியும் ஆகவே கர்மாக்கள் தீரும்வரை நன்மை, தீமை என எது நடந்தாலும் எல்லாம் இறைவன் செயல் என்று எண்ணும் ஆட்டுத்தலை போன்ற எண்ணத்தை படைத்து உயிர்களுக்கு அருளினான்.