பாடல் #1820: ஏழாம் தந்திரம் – 10. அருள் ஒளி (இறைவன் கொடுத்த அருள் ஞானமாக வெளிப்படுதல்)
புறமே திரிந்தேனைப் பொற்கழல் சூட்டி
நிறமே புகுந்தேனை நின்மல னாக்கி
யறமே புரிந்தெனக் காரமு தீய்ந்த
திறமே யதெண்ணித் திகைத்திருந் தேனே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
புறமெ திரிநதெனைப பொறகழல சூடடி
நிறமெ புகுநதெனை நினமல னாககி
யறமெ புரிநதெனக காரமு தீயநத
திறமெ யதெணணித திகைததிருந தெனெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
புறமே திரிந்தேனை பொன் கழல் சூட்டி
நிறமே புகுந்தேனை நின் மலன் ஆக்கி
அறமே புரிந்து எனக்கு ஆர் அமுது ஈய்ந்த
திறமே அது எண்ணி திகைத்து இருந்தேனே.
பதப்பொருள்:
புறமே (இறைவனை உள்ளுக்குள் தேடாமல் வெளியில் தேடி கோயில் குளம் என்று) திரிந்தேனை (அலைந்து திரிந்த எமது தலை மேல்) பொன் (தூய்மையான தங்கத்தைப் போல் பிரகாசிக்கின்ற) கழல் (திருவடிகளை) சூட்டி (அணிவித்து)
நிறமே (இதுவரை உண்மை என்று நம்பிக் கொண்டிருந்த எமது) புகுந்தேனை (உடலுக்குள் புகுந்து அந்த நிலையை மாற்றி) நின் (எந்தவொரு) மலன் (மலங்களும் இல்லாதவனாக) ஆக்கி (ஆக்கிவிட்டு)
அறமே (பேரருளாகிய தர்மத்தின்) புரிந்து (வழியாக வந்து) எனக்கு (எமக்கு) ஆர் (எப்போதும் தெகிட்டாத) அமுது (அமிழ்தத்தை) ஈய்ந்த (கொடுத்து அருளிய)
திறமே (பரம்பொருளாகிய இறைவனின் மாபெரும் கருணை) அது (அதை) எண்ணி (நினைத்துப் பார்த்து) திகைத்து (அதனால் ஏற்பட்ட வியப்பிலேயே) இருந்தேனே (ஆழ்ந்து இருந்தேன்).
விளக்கம்:
இறைவனை உள்ளுக்குள் தேடாமல் வெளியில் தேடி கோயில் குளம் என்று அலைந்து திரிந்த யாம் பாடல் #1819 இல் உள்ளபடி எமக்குள் இருக்கின்ற ஆன்மாவை உணர்ந்து கொண்ட பிறகு எமது தலை மேல் தூய்மையான தங்கத்தைப் போல் பிரகாசிக்கின்ற திருவடிகளை அணிவித்து, இதுவரை உண்மை என்று நம்பிக் கொண்டிருந்த எமது உடலுக்குள் புகுந்து அந்த நிலையை மாற்றி எந்தவொரு மலங்களும் இல்லாதவனாக ஆக்கிவிட்டு, பேரருளாகிய தர்மத்தின் வழியாக வந்து எமக்கு எப்போதும் தெகிட்டாத அமிழ்தத்தை கொடுத்து அருளிய பரம்பொருளாகிய இறைவனின் மாபெரும் கருணையை நினைத்துப் பார்த்து அதனால் ஏற்பட்ட வியப்பிலேயே ஆழ்ந்து இருந்தேன்.