பாடல் #1777: ஏழாம் தந்திரம் – 7. சிவ லிங்கம் (பேரருளாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)
மேவி யெழுகின்ற செஞ்சுட ரூடுசென்
றாவி யெழுமள வன்றே யுடலுற
மேவப் படுவதும் விட்டு நிகழ்வதும்
பாவித் தடக்கிற் பரகெதி தானே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
மெவி யெழுகினற செஞசுட ரூடுசென
றாவி யெழுமள வனறெ யுடலுற
மெவப படுவதும விடடு நிகழவதும
பாவித தடககிற பரகெதி தானெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
மேவி எழுகின்ற செம் சுடர் ஊடு சென்று
ஆவி எழும் அளவு அன்றே உடல் உற
மேவ படுவதும் விட்டு நிகழ்வதும்
பாவித்து அடக்கில் பர கெதி தானே.
பதப்பொருள்:
மேவி (அசையா சக்திக்குள் கலந்து இருக்கின்ற ஆசைகளாகிய அசையும் சக்தியும் சேர்ந்து) எழுகின்ற (எழுகின்ற) செம் (சிகப்பான) சுடர் (சுடராகிய பேரொளியை) ஊடு (ஊடுருவிச்) சென்று (சென்று)
ஆவி (ஆசைகளை அனுபவிப்பதற்கு ஏற்ற வலிமை பெற்ற ஆன்மாவாக பலவாறாக பிரிந்து) எழும் (எழுந்து) அளவு (அதனதன் ஆசைகளின் அளவுக்கு ஏற்ப) அன்றே (அப்போதே) உடல் (அவற்றுக்கு ஏற்ற உடலை) உற (தமது அருளால் உருவாக்கி கொடுத்து)
மேவ (அதற்குள் பொருந்தி இருந்து) படுவதும் (செயல் படுவதும்) விட்டு (அந்த ஆன்மாக்களை விட்டு அனைத்திற்கும் மேலாக இருந்து) நிகழ்வதும் (தமது பேரருளால் அனைத்தையும் இயக்குவதையும் செய்கின்ற பரம்பொருளாகிய இறைவனின்)
பாவித்து (தன்மைகளை தமக்குள்ளே உணர்ந்து தாமும் அவராகவே பாவனை செய்து) அடக்கில் (தமது ஐந்து புலன்களை அடக்கி எண்ணங்கள் அற்ற நிலையை அடைந்தால்) பர (அனைத்திற்கும் மேலான) கெதி (இறை நிலையை) தானே (தாமும் அடைய முடியும்).
விளக்கம்:
அசையா சக்திக்குள் கலந்து இருக்கின்ற ஆசைகளாகிய அசையும் சக்தியும் சேர்ந்து எழுகின்ற சிகப்பான சுடராகிய பேரொளியை ஊடுருவிச் சென்று, ஆசைகளை அனுபவிப்பதற்கு ஏற்ற வலிமை பெற்ற ஆன்மாவாக பலவாறாக பிரிந்து எழுந்து, அதனதன் ஆசைகளின் அளவுக்கு ஏற்ப அப்போதே அவற்றுக்கு ஏற்ற உடலை தமது அருளால் உருவாக்கி கொடுத்து, அதற்குள் பொருந்தி இருந்து செயல் படுவதும், அந்த ஆன்மாக்களை விட்டு அனைத்திற்கும் மேலாக இருந்து தமது பேரருளால் அனைத்தையும் இயக்குவதையும் செய்கின்ற பரம்பொருளாகிய இறைவனின் தன்மைகளை தமக்குள்ளே உணர்ந்து தாமும் அவராகவே பாவனை செய்து, தமது ஐந்து புலன்களை அடக்கி எண்ணங்கள் அற்ற நிலையை அடைந்தால், அனைத்திற்கும் மேலான இறை நிலையை தாமும் அடைய முடியும்.
கருத்து:
இறைவனோடு எப்போதும் சேர்ந்தே இருந்த ஆன்மாவானது தமது ஆசைகளால் பிறவி எடுப்பதும், அதனதன் ஆசைகளுக்கு ஏற்ற வலிமை பெற்ற உடலும் உயிருமாக பிறப்பதும், வாழ்வில் பல வித செயல்களை புரிந்து ஆசைகளை தீர்த்துக் கொள்வதும், பின்பு இறைவனை தமக்குள் உணர்வதும், அதன் பயனால் ஆசைகளற்ற நிலைக்கு செல்வதும், எண்ணங்கள் அற்ற அந்த நிலையில் தாமே சிவமாக ஆகி விடுவதும், ஆகிய இவை அனைத்தும் சிவ இலிங்க வடிவமாக இருக்கின்ற இறைவனின் பேரருளால் ஆகும்.