பாடல் #1679: ஆறாம் தந்திரம் – 12. சிவ வேடம் (உண்மையான அடியவரின் வேடமே சிவ வேடம் ஆதல்)
ஒடுங் குதிரைக் குசைதிண்ணம் பற்றுமின்
வேடங்கொண் டென்செய்வீர் வேண்டா மனிதரே
நாடுமி னந்தியை நம்பெருமான் றன்னைத்
தேடுமி னின்பபொருள் சென்றெய்த லாமே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
ஓடுங குதிரைக குசைதிணணம பறறுமின
வெடஙகொண டெனசெயவீர வெணடா மனிதரெ
நாடுமி னநதியை நமபெருமான றனனைத
தெடுமி னினபபொருள செனறெயத லாமெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
ஓடும் குதிரை குசை திண்ணம் பற்றுமின்
வேடம் கொண்டு என் செய்வீர் வேண்டா மனிதரே
நாடுமின் நந்தியை நம் பெருமான் தன்னை
தேடுமின் இன்ப பொருள் சென்று எய்தல் ஆமே.
பதப்பொருள்:
ஓடும் (கடிவாளம் கட்டாமல் அங்கும் இங்கும் அலைந்து ஓடுகின்ற) குதிரை (குதிரையைப் போல அலைகின்ற மனதை) குசை (கடிவாளத்தை கட்டி குதிரையை அடக்குவது போல மனதை தியானத்தின் மூலம்) திண்ணம் (உறுதியாக) பற்றுமின் (பற்றிக் கொண்டு மனதை அடக்குங்கள்)
வேடம் (ஞானியைப் போல வெறும் வேடம்) கொண்டு (மட்டும் போட்டுக் கொண்டு) என் (என்ன) செய்வீர் (செய்வீர்கள்?) வேண்டா (இந்த வீணான வேலை வேண்டாம்) மனிதரே (மனிதர்களே)
நாடுமின் (உங்களுக்குள் வீற்றிருக்கும்) நந்தியை (குருநாதனாகிய இறைவன்) நம் (நமக்கெல்லாம்) பெருமான் (தலைவனாக) தன்னை (இருக்கின்ற அவனை)
தேடுமின் (தேடி அடைந்தால்) இன்ப (பேரின்ப) பொருள் (பொருளாகிய இறைவனை) சென்று (சென்று) எய்தல் (பேரின்பத்தை அடைய) ஆமே (முடியும்).
விளக்கம்:
கடிவாளம் கட்டாமல் அங்கும் இங்கும் அலைந்து ஓடுகின்ற குதிரையைப் போல அலைகின்ற மனதை கடிவாளத்தை கட்டி குதிரையை அடக்குவது போல மனதை தியானத்தின் மூலம் உறுதியாக பற்றிக் கொண்டு மனதை அடக்குங்கள். ஞானியைப் போல வெறும் வேடம் மட்டும் போட்டுக் கொண்டு என்ன செய்வீர்கள்? இந்த வீணான வேலை வேண்டாம் மனிதர்களே. உங்களுக்குள் வீற்றிருக்கும் குருநாதனாகிய இறைவன் நமக்கெல்லாம் தலைவனாக இருக்கின்ற அவனை தேடி அடைந்தால் பேரின்ப பொருளாகிய இறைவனை சென்று பேரின்பத்தை அடைய முடியும்.