பாடல் #1678: ஆறாம் தந்திரம் – 12. சிவ வேடம் (உண்மையான அடியவரின் வேடமே சிவ வேடம் ஆதல்)
மயலற் றிருளற்று மாமன மற்றுக்
கயலுற்ற கண்ணிதன் கைப்பிணக் கற்றுத்
தயவற் றவரோடுந் தாமே தாமாகிச்
செயலற் றிருந்தார் சிவவேடத் தாரே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
மயலற றிருளறறு மாமன மறறுக
கயலுறற கணணிதன கைபபிணக கறறுத
தயவற றவரொடுந தாமெ தாமாகிச
செயலற றிருநதார சிவவெடத தாரெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
மயல் அற்று இருள் அற்று மா மனம் அற்று
கயல் உற்ற கண்ணி தன் கை பிணக்கு அற்று
தயவு அற்ற அவரோடும் தாமே தாம் ஆகி
செயல் அற்று இருந்தார் சிவ வேடத்தாரே.
பதப்பொருள்:
மயல் (மாயையாகிய மயக்கம்) அற்று (இல்லாமல்) இருள் (ஆணவம் கன்மம் ஆகிய மலங்கள்) அற்று (இல்லாமல்) மா (வலிமையான எண்ணங்களுடைய) மனம் (மனம்) அற்று (இல்லாமல்)
கயல் (எப்போதும் விழிப்போடு) உற்ற (இருக்கின்ற) கண்ணி (கண்களை பெற்று இருந்தாலும்) தன் (அந்த கண்களில் காணும் காட்சியின் தொடர்போ) கை (அந்த காட்சியினால் செயல்படும் ஆற்றலின்) பிணக்கு (தொடர்போ) அற்று (இல்லாமல்)
தயவு (எவ்வித குணங்களும்) அற்ற (இல்லாத) அவரோடும் (இறைவனோடு சேர்ந்து) தாமே (தாமும்) தாம் (இறைவனைப் போலவே) ஆகி (ஆகி)
செயல் (எந்தவிதமான செயல்களும்) அற்று (இல்லாமல்) இருந்தார் (இருப்பவர்களே) சிவ (உண்மையான சிவ) வேடத்தாரே (வேடத்தைக் கொண்ட ஞானிகள் ஆவார்கள்).
விளக்கம்:
மாயையாகிய மயக்கம் இல்லாமல், ஆணவம் கன்மம் ஆகிய மலங்கள் இல்லாமல், வலிமையான எண்ணங்களுடைய மனம் இல்லாமல், எப்போதும் விழிப்போடு இருக்கின்ற கண்களை பெற்று இருந்தாலும் அந்த கண்களில் காணும் காட்சியின் தொடர்போ அந்த காட்சியினால் செயல்படும் ஆற்றலின் தொடர்போ இல்லாமல், எவ்வித குணங்களும் இல்லாத இறைவனோடு சேர்ந்து தாமும் இறைவனைப் போலவே ஆகி எந்தவிதமான செயல்களும் இல்லாமல் இருப்பவர்களே உண்மையான சிவ வேடத்தைக் கொண்ட ஞானிகள் ஆவார்கள்.