பாடல் #1212 இல் உள்ளபடி சாதகருக்கு அமிழ்தத்தை கொடுக்கின்ற இறைவியானவள் அதனால் கிடைக்கும் பேரின்பமாகவும் சாதகர் உண்ணும் உணவாகவும் இருந்து அந்த உணவைச் செரிக்க வைக்கின்ற நெருப்பாகவும் குண்டலினி சக்தியின் அக்னியாகவும் சாதகரோடு எப்போதும் சேர்ந்து இருக்கின்றாள். அவளது திருநாமமாகிய ‘நமசிவ’ எனும் மந்திரத்தை எண்ணி தியானத்தில் இருப்பவர்களுக்கு அவர்கள் தினந்தோறும் தவறாமல் கடைபிடிக்கும் நியமங்களுக்கு (பாடல் #556 இல் காண்க) துணையாகவும் இருந்து அவர்களுக்குள் முழுவதும் பரவி வீற்றிருக்கின்றாள்.
பாடல் #1213 இல் உள்ளபடி சாதகருக்குள் முழுவதும் பரவி வீற்றிருக்கும் இறைவியானவள் நிலவைப் போன்ற குளிர்ந்த ஒளியை வீசும் நீண்ட படிகக் கல்லைப் போன்ற வெண்மையை உடையவள். கல்லால் செதுக்கப்பட்ட சிலையைப் போன்ற அழகிய வடிவத்துடன் சிறந்த முத்துப் போன்ற இயல்பிலேயே பிரகாசிக்கும் தன்மையை உடையவள். சுருண்டு இருக்கும் அழகிய கூந்தலில் வாசனை மிக்க மலர்களை சூடியிருப்பவள். அவள் சாதகருக்குள்ளிருந்து பாடல் #1189 இல் உள்ளபடி உடலின் இயக்கத்திற்கு உதவும் பதினாறு கலைகளாகக் கலந்து நிற்கின்றாள்.
பாடல் #1214 இல் உள்ளபடி சாதகருக்குள் கலந்து நிற்கின்ற இறைவியானவள் தாமாகத் தனித்து இல்லாமல் என்றும் இளமையுடன் இறைவனுடன் சேர்ந்தே இருக்கின்றாள். அவள் உயிர்கள் அனைத்தும் கற்கின்ற கல்விகளாகவும் அந்த கல்வியைக் கொண்டு செய்கின்ற அனைத்து செயல்களுக்கான அறிவாகவும் இருக்கின்றாள். அவளே என்றும் இளமையுடன் அனைத்து விதமான காலங்களாகவும் இருக்கின்றாள்.
பாடல் #1216: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)
காலவி யெங்குங் கருத்து மருத்தியுங் கூலவி யொன்றாகுங் கூட லிழைத்தனள் மாலினி மாகுலி மந்திர சண்டிகை பாலினி பாலவன் பாகம தாமே.
விளக்கம்:
பாடல் #1215 இல் உள்ளபடி அனைத்து விதமான காலங்களாகவும் இருக்கின்ற இறைவியே உயிர்களின் எண்ணத்தையும் அதிலிருந்து வரும் ஆசைகளையும் அவரவர்களின் கர்ம நிலைகளுக்கு ஏற்ப கைகூட வைக்கின்றவள். சாதகரோடு ஒன்றாகச் சேர்ந்து இருந்து என்றும் பிரியாமல் இருக்கும் தன்மையை அவருக்கு அருளியவள். அந்த இறைவியே திருமாலின் தங்கையாகிய பார்வதியாகவும் அனைத்திற்கும் மேலானவளாகவும் மந்திரங்களின் சக்தியாகவும் தீய சக்திகளை புயல் போல் அடித்து விரட்டுகின்ற சண்டிகையாகவும் அருள் பாலிக்கின்றவளாகவும் அருள் பாலிக்கின்ற இறைவனோடு சரிசமமான பாகமாகவும் இருக்கின்றாள்.
பாடல் #1216 இல் உள்ளபடி அருள் பாலிக்கின்ற இறைவனோடு சரிசமமான பாகமாக இருக்கின்ற பராசக்தியான இறைவியின் சரிபாதியாக இருக்கின்ற இறைவன் பசும் பொன்னால் பின்னப்பட்டது போல பொன் நிறத்தில் மின்னும் சடையை அணிந்த முடியை உடையவர். இறைவியும் தாமும் ஒன்றாகவே இருக்கின்ற மனதைக் கொண்டு பத்து திசைகளையும் தாங்கி நிற்கும் வலிமையான பத்து தோள்களைக் கொண்டவர். அடியவர்களைத் தம்பால் ஈர்க்கின்ற ஐந்து திருமுகங்களைக் கொண்டு அந்த ஐந்து முகத்திலும் மூன்று திருக் கண்களை உடையவர். காட்டு யானையின் தோலை உரித்து தமக்கு ஆடையாக அணிந்து போர்த்திக் கொண்டு முயலகனின் மேல் நின்று திருநடனம் ஆடுகின்ற நடராஜராக இறைவியின் சரிபாகமாக இருக்கின்றார்.
பாடல் #1217 இல் உள்ளபடி இறைவியின் சரிபாகமாக இருக்கின்ற இறைவனின் அம்சமாக இருக்கும் சாதகரின் ஆன்மாவோடு 36 தத்துவங்களும் இனிமையுடன் பெருகி ஒன்றாகக் கூடி சாதகருக்குள் வீற்றிருந்து இறைவனை வணங்குவதற்கு உதவுகின்ற ஐந்து புலன்களாகவும் உடலாகவும் இருக்கின்றன. அதன் பிறகு சாதகரின் உடலே பிரம்மனாகவும் 18 விதமான தேவ கணங்களாகவும் இனிமையுடன் பெருகிப் பரவி வீற்றிருந்து இறைவியைத் துதிக்கும் போது அவள் சாதகருக்குள் முதலாகவும் முடிவாகவும் வீற்றிருந்து அருளுவாள்.
கருத்து: சாதகருக்குள்ளிருக்கும் 36 தத்துவங்களாகவும் ஐந்து புலன்களாகவும் பிரம்மனாகிய உடலாகவும் 18 விதமான தேவ கணங்களாகவும் இறைவியே இருப்பதை இந்தப் பாடலில் அறிந்து கொள்ளலாம்.
திருமந்திரம் – பாடல் #467 ல் முப்பத்தாறு தத்துவங்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்.
18 விதமான தேவ கணங்கள்:
சுரர் – உலக இயக்கத்திற்கு உதவும் தேவ லோகத்து தேவர்கள்.
சித்தர் – இறை நிலையில் இருப்பவர்கள்.
அசுரர் – அசுரர்கள்.
தைத்தியர் – அரசுரர்களில் ஒரு பிரிவினரான தானவர்கள்.
கருடர் – கருடர்கள்.
கின்னரர் – நடனம் ஆடுவதில் வல்லவர்கள்.
நிருதர் – அரக்கர்கள்.
கிம்புருடர் – யாளி என்று அழைக்கப்படும் சிங்க முகமும் மனித உருவமும் கொண்ட கணங்கள்.
காந்தர்வர் – கந்தவர்கள் (தேவர்களுக்கு அடுத்த நிலை).
இயக்கர் – யட்சர்கள்.
விஞ்சையர் – கலைகளில் பெரும் ஞானம் உடையவர்கள்.
பூதர் – சிவனுக்கு சேவர்களாக இருக்கும் பூத கணங்கள்.
பாடல் #1218 இல் உள்ளபடி ஆதியும் அந்தமுமாக சாதகருக்குள் வீற்றிருக்கும் இறைவியாகவே மாறி விடுகின்ற சாதகர்கள் காலமாகவும் கலைகளாக இருக்கின்ற ஐம்பத்தொரு தத்துவங்களாகவும் ஆகி நிற்கின்ற போது அவருடைய ஆருயிராக இறைவியே இருக்கின்றாள். இவ்வாறு இறைவியாகவே ஆகி நிற்கின்ற சாதகருடன் இறைவியும் சேர்ந்து நின்று சக்தி மயங்களாக வீற்றிருக்கும் போது இறைவனும் அழகிய ஆபரணங்களை அணிந்திருக்கும் இறைவியுடன் சரிபாகமாக சேர்ந்து வீற்றிருக்கின்றார்.
கருத்து: சாதகருடைய ஆருயிராகவே இறைவி வீற்றிருக்கும் விதத்தை இந்தப் பாடலில் அறிந்து கொள்ளலாம்.
பாடல் #1219 இல் உள்ளபடி சக்திமயமாக மாறிய சாதகரின் உடலுக்குள் வந்து வீற்றிருக்கும் அழகிய ஆபரணங்களை அணிந்த இறைவியோடு ஆதிப் பரம்பொருளாகிய இறைவனும் சேர்ந்து வீற்றிருக்கின்றார். அப்போது சாதகர் தமது எண்ணத்தால் அவர்களை நோக்கி நெருங்கிச் செல்லும் போது அவர்கள் இருவரும் சேர்ந்த அம்சமானது சாதகரின் உடலுக்குள் இருக்கின்ற ஆறு ஆதாரச் சக்கரங்களும் அவரது தலை உச்சியில் இருக்கின்ற சகஸ்ரதளமும் தலை உச்சியைத் தாண்டி இருக்கின்ற துவாதசாந்த வெளியும் ஆகிய எட்டு இடங்களிலும் வந்து வீற்றிருக்கும். அதன் விளைவால் புனிதமாக மாறிய சாதகரின் மனமும் அவருக்குள் இருக்கின்ற ஆறு ஆதாரச் சக்கரங்களும் இறைவியின் திருமுகமாக மாறி அதில் நறுமணம் வீசுகின்ற நீண்ட கூந்தலையுடைய இறைவி இனிமையாக வீற்றிருக்கின்றாள்.
கருத்து: சாதகருக்குள் வீற்றிருக்கின்ற இறைவனும் இறைவியும் சாதரின் எண்ணத்தால் நெருங்கும் பொழுது அவருக்குள் இருக்கின்ற எட்டு இடங்களிலும் வீற்றிருந்து அதன் விளைவால் அவரது மனதை இறைவியின் தூய்மையான மனமாகவே மாற்றுகின்ற விதத்தை இந்தப் பாடலில் அறிந்து கொள்ளலாம்.
பாடல் #1220 இல் உள்ளபடி சாதகருக்குள் இனிமையாக வீற்றிருக்கும் இறைவியானவள் தமது மேலான நிலைக்கு ஏற்ற அழகிய அணிகலன்களை அணிந்து கொண்டு சாதகரோடு சேர்ந்து அவருக்குள் நீண்டு பரவி இருக்கும் ஒரு பொழுதிலேயே சாதகருக்குள் இருக்கும் ஏழு சக்கரங்களும் மேன்மையான நிலையில் சக்தியூட்டம் பெறுகிறது. அதன் பிறகு சாதகருக்குள் இருக்கும் பத்து வாயுக்களும் (பாடல் #595 இல் காண்க) ஒன்றாகச் சேர்ந்து உயர்ந்த நிலையில் பிராணனாக மாறி அதில் இறைவியின் நாமம் எப்போதும் இயல்பிலேயே இடைவிடாமல் ஓதிக் கொண்டே இருக்கும் போது இறைவனும் இறைவியும் சேர்ந்து இருக்கும் உண்மை நிலையை சாதகர் பரிபூரணமாக உணர்ந்து கொள்ளும்படி இறைவி அவருக்குள் நின்று அருள்புரிகின்றாள்.
கருத்து: சாதகரின் உடலுக்குள் இருக்கின்ற பத்து வாயுக்களும் ஒன்றாகச் சேர்ந்து உயர்ந்த நிலையில் பிராணனாக மாறும் பொழுது அதில் இறைவியின் நாமம் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும் போது சாதகரால் இறைவனும் இறைவியும் சேர்ந்து இருக்கின்ற உண்மை நிலையை பரிபூரணமாக உணர்ந்து கொள்ள முடியும் என்பதை இந்தப் பாடலில் அறிந்து கொள்ளலாம்.
பாடல் #1221 இல் உள்ளபடி இறைவனும் இறைவியும் சேர்ந்து இருக்கும் உண்மை நிலையை சாதகர் பரிபூரணமாக உணர்ந்து கொள்ளும் பொழுது அவருக்குள்ளிருந்து எழுகின்ற மந்திரமானது ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் உட்பொருளாகும். சாதகர் அந்த உட்பொருளை உணர்ந்து கொள்ளும் பொழுது அவருக்குள்ளிருந்து நறுமணத்துடன் எழுகின்ற உட்பொருளே அவர் சென்று சேருகின்ற இறுதியான இடமாகவும் ஆதிப் பரம்பொருளாகவும் இருக்கின்றது. அந்த ஆதிப் பரம்பொருளான உட்பொருளின் இரண்டு தன்மைகளாக இதுவரை ஒளிந்து கொண்டிருக்கும் கள்வனாகிய இறைவனும் கள்வியாகிய இறைவியும் வெளிப்பட்டு ஒன்றாகச் சேர்ந்து இறைவனின் மேல் பேரன்பு கொண்ட இறைவியின் திருவுருவமாக சாதகருக்கு காட்சி கொடுப்பார்கள்.
கருத்து:
உண்மையை அறிந்து கொண்டால் உயிர்களால் தங்களின் கர்மங்களை அனுபவத்து கழிக்க முடியாது என்பதால் மறக்கருணையால் அனைத்தையும் மாயையால் மறைந்து சூதானமாக ஓங்கார மந்திரத்தின் உட்பொருள் தத்துவமாக உயிர்களுக்குள்ளேயே மறைந்து இருக்கின்ற இறைவனும் இறைவியும் எப்படி இருக்கின்றார்கள் என்பதை இந்தப் பாடலில் அறிந்து கொள்ளலாம்.