பாடல் #1785

பாடல் #1785: ஏழாம் தந்திரம் – 8. சம்பிரதாயம் (இறையருளால் உணர்த்தப் பட்ட தர்மத்தை முறையாக கடைபிடிப்பது)

குறிக்கின்ற தேகமுந் தேகியுங் கூடி
நெறிக்கும் பிராண னிலைபெற்ற சீவன்
பறிக்கின்ற காயத்தைப் பற்றியே நேர்மை
பிறிக்க வறியாதார் பேயோ டொப்பரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

குறிககினற தெகமுந தெகியுங கூடி
நெறிககும பிராண னிலைபெறற சீவன
பறிககினற காயததைப பறறியெ நெரமை
பிறிகக வறியாதார பெயொ டொபபரே.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

குறிக்கின்ற தேகமும் தேகியும் கூடி
நெறிக்கும் பிராணன் நிலை பெற்ற சீவன்
பறிக்கின்ற காயத்தை பற்றியே நேர்மை
பிறிக்க அறியாதார் பேயோடு ஒப்பரே.

பதப்பொருள்:

குறிக்கின்ற (ஆசைகளையும் வினைகளையும் அனுபவிப்பதற்கு ஈடாக குறிக்கப் பட்ட) தேகமும் (உடலும்) தேகியும் (உடலுக்குள் வீற்றிருக்கின்ற ஆன்மாவும்) கூடி (ஒன்றாக சேர்ந்து)
நெறிக்கும் (வாழ்நாளுக்கு ஏற்றபடி இறைவனால் வழிவகுத்து கொடுக்கப் பட்ட) பிராணன் (மூச்சுக்காற்றும்) நிலை (அந்த மூச்சுக்காற்றை நிலையாகக்) பெற்ற (கொண்டு வாழ்கின்ற) சீவன் (உயிரும்)
பறிக்கின்ற (சிறிது சிறிதாக அழிந்து கொண்டு இருக்கின்ற) காயத்தை (உடலை) பற்றியே (சார்ந்து தாம் வாழ்ந்தாலும்) நேர்மை (இந்த அனைத்திற்குள்ளும் உண்மை நெறியாக இருக்கின்ற தர்மத்தை)
பிறிக்க (உடலோடு சார்ந்த உலகப் பொருள்களிலிருந்து பிரித்து) அறியாதார் (அறிந்து உணர்ந்து கொள்ள முடியாதவர்கள்) பேயோடு (ஆசைகளை அனுபவிக்க வழியில்லாமல் அலைந்து திரிகின்ற பேய்களைப்) ஒப்பரே (போலவே இறைவனை உணர்வதே தங்களின் வாழ்க்கையின் குறிக்கோள் என்பதை உணராமல் வீணாக அலைந்து கழிக்கின்றார்கள்).

விளக்கம்:

ஆசைகளையும் வினைகளையும் அனுபவிப்பதற்கு ஈடாக குறிக்கப் பட்ட உடலும், உடலுக்குள் வீற்றிருக்கின்ற ஆன்மாவும், ஒன்றாக சேர்ந்து வாழ்நாளுக்கு ஏற்றபடி இறைவனால் வழிவகுத்து கொடுக்கப் பட்ட மூச்சுக்காற்றும், அந்த மூச்சுக்காற்றை நிலையாகக் கொண்டு வாழ்கின்ற உயிரும், ஆகிய இவை அனைத்தும் சேர்ந்து சிறிது சிறிதாக அழிந்து கொண்டு இருக்கின்ற உடலை சார்ந்து தாம் வாழ்ந்தாலும் இந்த அனைத்திற்குள்ளும் உண்மை நெறியாக இருக்கின்ற தர்மத்தை, உடலோடு சார்ந்த உலகப் பொருள்களிலிருந்து பிரித்து அறிந்து உணர்ந்து கொள்ள முடியாதவர்கள், ஆசைகளை அனுபவிக்க வழியில்லாமல் அலைந்து திரிகின்ற பேய்களைப் போலவே இறைவனை உணர்வதே தங்களின் வாழ்க்கையின் குறிக்கோள் என்பதை உணராமல் வீணாக அலைந்து கழிக்கின்றார்கள்.

பாடல் #1786

பாடல் #1786: ஏழாம் தந்திரம் – 8. சம்பிரதாயம் (இறையருளால் உணர்த்தப் பட்ட தர்மத்தை முறையாக கடைபிடிப்பது)

உணர்வுடை யார்கட் குலகமுந் தோன்று
முணர்வுடை யார்கட் குறுதுய ரில்லை
யுணர்வுடை யார்க ளுணர்ந்த வக்கால
முணர்வுடை யார்க ளுணர்ந்து கண்டாரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

உணரவுடை யாரகட குலகமுந தொனறு
முணரவுடை யாரகட குறுதுய ரிலலை
யுணரவுடை யாரக ளுணரநத வககால
முணரவுடை யாரக ளுணரநது கணடாரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

உணர்வு உடையார்களுக்கு உலகமும் தோன்றும்
உணர்வு உடையார்களுக்கு உறு துயர் இல்லை
உணர்வு உடையார்கள் உணர்ந்த அக் காலம்
உணர்வு உடையார்கள் உணர்ந்து கண்டாரே.

பதப்பொருள்:

உணர்வு (உடல், ஆன்மா, உயிர் ஆகிய இந்த மூன்றுக்குள்ளும் இருக்கின்ற தர்மத்தை உணருகின்ற) உடையார்களுக்கு (அனுபவத்தை பெற்றவர்களுக்கு) உலகமும் (அனைத்து உலகங்களிலும் இருக்கின்ற) தோன்றும் (தர்மங்களும் தெரிய வரும்)
உணர்வு (உடல், ஆன்மா, உயிர் ஆகிய இந்த மூன்றுக்குள்ளும் இருக்கின்ற தர்மத்தை உணருகின்ற) உடையார்களுக்கு (அனுபவத்தை பெற்றவர்களுக்கு) உறு (உலகத்தில் அனுபவிக்க வேண்டிய) துயர் (துன்பங்கள்) இல்லை (என்று எதுவும் இல்லை)
உணர்வு (உடல், ஆன்மா, உயிர் ஆகிய இந்த மூன்றுக்குள்ளும் இருக்கின்ற தர்மத்தை உணருகின்ற) உடையார்கள் (அனுபவத்தை பெற்றவர்கள்) உணர்ந்த (அதை உணர்ந்த) அக் (அந்த) காலம் (நொடிப் பொழுதிலேயே)
உணர்வு (உடல், ஆன்மா, உயிர் ஆகிய இந்த மூன்றுக்குள்ளும் இருக்கின்ற தர்மத்தை உணருகின்ற) உடையார்கள் (அனுபவத்தை பெற்றவர்கள்) உணர்ந்து (தமக்குள் இருக்கின்ற தர்மத்தின் வடிவமாகிய இறைவனையும் முழுவதுமாக உணர்ந்து) கண்டாரே (தரிசிப்பார்கள்).

விளக்கம்:

பாடல் #1785 இல் உள்ளபடி உடல், ஆன்மா, உயிர் ஆகிய இந்த மூன்றுக்குள்ளும் இருக்கின்ற தர்மத்தை உணருகின்ற அனுபவத்தை பெற்றவர்களுக்கு, அனைத்து உலகங்களிலும் இருக்கின்ற தர்மங்களும் தெரிய வரும். அவர்களுக்கு இந்த உலகத்தில் அனுபவிக்க வேண்டிய துன்பங்கள் என்று எதுவும் இல்லை. அவர்கள் அந்த அனுபவத்தை உணர்ந்த அந்த நொடிப் பொழுதிலேயே தமக்குள் இருக்கின்ற தர்மத்தின் வடிவமாகிய இறைவனையும் முழுவதுமாக உணர்ந்து தரிசிப்பார்கள்.

பாடல் #1787

பாடல் #1787: ஏழாம் தந்திரம் – 8. சம்பிரதாயம் (இறையருளால் உணர்த்தப் பட்ட தர்மத்தை முறையாக கடைபிடிப்பது)

காய பரத்தி லலைந்து துரியத்துச்
சாய விரிந்து குவிந்து சகலத்தி
லாய வவ்வாறே யடைந்து திரிந்தோர்குத்
தூய வருள்தந்த நந்திக்கென் சொல்வதே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

காய பரததி லலைநது துரியததுச
சாய விரிநது குவிநது சகலததி
லாய வவவாறெ யடைநது திரிநதொரகுத
தூய வருளதநத நநதிககென சொலவதெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

காய பரத்தில் அலைந்து துரியத்து
சாய விரிந்து குவிந்து சகலத்தில்
ஆய அவ்வாறே அடைந்து திரிந்தோர்கு
தூய அருள் தந்த நந்திக்கு என் சொல்வதே.

பதப்பொருள்:

காய (உடலாக இருக்கின்ற) பரத்தில் (பரம்பொருளின் அடையாளத்தில்) அலைந்து (வெளிப்புறமாக பல விதமாக அலைந்து திரிந்து அனுபவித்தலும்) துரியத்து (கனவு நிலையை)
சாய (சார்ந்து வாழ்ந்து) விரிந்து (மனதில் பல வித ஆசைகள் தோன்றி விரிந்து அனுபவித்தலும்) குவிந்து (மாயையே உண்மை என்ற ஒரு எண்ணத்திலேயே மனதை குவித்து) சகலத்தில் (வைத்து அதுவே எல்லாம் என்று நம்புதலும்)
ஆய (ஆகிய பலவிதமான வழிகளால் தமது பிறவிக்கான ஆசைகளையும் வினைகளையும் அனுபவித்துக் கொண்டு இருந்தாலும்) அவ்வாறே (அந்த ஆசைகளின் வழியிலேயே) அடைந்து (இறைவனால் உணர்த்தப் பட்ட தர்மத்தை கடை பிடித்து) திரிந்தோர்கு (திரிகின்ற அடியவர்களுக்கு)
தூய (மாயை இல்லாத தூய்மையான) அருள் (அருளை) தந்த (தந்து அனைத்தும் மாயை தாமே உண்மை என்பதை உணர்த்திய) நந்திக்கு (குருநாதனாகிய இறைவனின் மாபெரும் கருணையை) என் (என்னவென்று) சொல்வதே (யான் எடுத்து சொல்வது?).

விளக்கம்:

உடலாக இருக்கின்ற பரம்பொருளின் அடையாளத்தில் வெளிப்புறமாக பல விதமாக அலைந்து திரிந்து அனுபவித்தலும், கனவு நிலையை சார்ந்து வாழ்ந்து மனதில் பல வித ஆசைகள் தோன்றி விரிந்து அனுபவித்தலும், மாயையே உண்மை என்ற ஒரு எண்ணத்திலேயே மனதை குவித்து வைத்து அதுவே எல்லாம் என்று நம்புதலும், ஆகிய பலவிதமான வழிகளால் தமது பிறவிக்கான ஆசைகளையும் வினைகளையும் அனுபவித்துக் கொண்டு இருந்தாலும், அந்த ஆசைகளின் வழியிலேயே இறைவனால் உணர்த்தப் பட்ட தர்மத்தை கடை பிடித்து திரிகின்ற அடியவர்களுக்கு, மாயை இல்லாத தூய்மையான அருளை தந்து அனைத்தும் மாயை தாமே உண்மை என்பதை உணர்த்திய குருநாதனாகிய இறைவனின் மாபெரும் கருணையை என்னவென்று யான் எடுத்து சொல்வது?

பாடல் #1788

பாடல் #1788: ஏழாம் தந்திரம் – 8. சம்பிரதாயம் (இறையருளால் உணர்த்தப் பட்ட தர்மத்தை முறையாக கடைபிடிப்பது)

நானென நீயென வேறில்லை நண்ணுத
லூனென வுன்னுயி ரென்ன வுடல்நின்று
வானென வானவர் நின்று மனிதர்கள்
தேனென வின்பந் திளைக்கின்ற வாறே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நானென நீயென வெறிலலை நணணுத
லூனென வுனனுயி ரெனன வுடலநினறு
வானென வானவர நினறு மனிதரகள
தெனென வினபந திளைககினற வாறெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நான் என நீ என வேறு இல்லை நண்ணுதல்
ஊன் என உள் உயிர் என்ன உடல் நின்று
வான் என வானவர் நின்று மனிதர்கள்
தேன் என இன்பம் திளைக்கின்ற ஆறே.

பதப்பொருள்:

நான் (நான்) என (என்றும்) நீ (நீ) என (என்றும்) வேறு (வேறு வேறாக) இல்லை (இல்லாமல்) நண்ணுதல் (உலகத்தில் கிடைக்கின்ற அனைத்துமாகவும்)
ஊன் (தசைகள்) என (ஆகவும்) உள் (உள்ளே இருக்கின்ற) உயிர் (உயிர்) என்ன (ஆகவும் இந்த இரண்டும் சேர்ந்த) உடல் (உடலாகவும்) நின்று (நின்று)
வான் (ஆகாயம்) என (ஆகவும்) வானவர் (அதில் இருக்கின்ற தேவர்களாகவும்) நின்று (நின்று) மனிதர்கள் (மண்ணுலகில் இருக்கின்ற மனிதர்களாகவும் இறைவனே இருக்கின்றான் என்பதை அறியாமல்)
தேன் (மாயையில் மயங்கி அந்த மயக்கமே) என (உண்மை என்று நினைத்து) இன்பம் (சிற்றின்ப) திளைக்கின்ற (ஆசைகளை அனுபவிக்கின்ற இன்பத்திலேயே திளைத்து) ஆறே (இருக்கின்ற வழியிலேயே வாழ்க்கையை கழிக்கின்றார்கள்).

விளக்கம்:

நான் என்றும் நீ என்றும் வேறு வேறாக இல்லாமல் உலகத்தில் கிடைக்கின்ற அனைத்துமாகவும், தசைகளாகவும், உள்ளே இருக்கின்ற உயிராகவும், இந்த இரண்டும் சேர்ந்த உடலாகவும் நின்று, ஆகாயமாகவும், அதில் இருக்கின்ற தேவர்களாகவும் நின்று, மண்ணுலகில் இருக்கின்ற மனிதர்களாகவும் இறைவனே இருக்கின்றான் என்பதை அறியாமல், மாயையில் மயங்கி அந்த மயக்கமே உண்மை என்று நினைத்து சிற்றின்ப ஆசைகளை அனுபவிக்கின்ற இன்பத்திலேயே திளைத்து இருக்கின்ற வழியிலேயே வாழ்க்கையை கழிக்கின்றார்கள்.

பாடல் #1789

பாடல் #1789: ஏழாம் தந்திரம் – 8. சம்பிரதாயம் (இறையருளால் உணர்த்தப் பட்ட தர்மத்தை முறையாக கடைபிடிப்பது)

அவனு மவனு மவனை யறியா
ரவனை யறியி லறிவாரு மில்லை
யவனு மவனு மவனை யறியி
லவனு மவனு மவனிவ னாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அவனு மவனு மவனை யறியா
ரவனை யறியி லறிவாரு மிலலை
யவனு மவனு மவனை யறியி
லவனு மவனு மவனிவ னாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அவனும் அவனும் அவனை அறியார்
அவனை அறியில் அறிவாரும் இல்லை
அவனும் அவனும் அவனை அறியில்
அவனும் அவனும் அவன் இவன் ஆமே.

பதப்பொருள்:

அவனும் (இறைவனும்) அவனும் (அந்த இறைவனை தமக்குள் வைத்திருக்கின்ற உயிரும்) அவனை (உண்மையான பரம்பொருளை) அறியார் (அறிந்து கொள்வதில்லை)
அவனை (இறைவனை) அறியில் (மனித அறிவினால் அறிந்து கொண்டவர்களும்) அறிவாரும் (அவனை முழுவதுமாக அறிந்து கொள்வது) இல்லை (இல்லை)
அவனும் (இறைவன் உள்ளுக்குள் இருந்து உணர்த்தி அருளிய) அவனும் (தர்மத்தை முறையாக கடைபிடிப்பதன் மூலம் உயிராக இருப்பவன்) அவனை (இறைவனாக தனக்குள் இருப்பவனை) அறியில் (முழுவதுமாக அறிந்து உணர்ந்து கொண்ட பிறகு)
அவனும் (இறைவனும்) அவனும் (உயிராக இருப்பவனும்) அவன் (இறைவனே) இவன் (தான் என்பதை உணர்ந்து தானே இறைவனாக) ஆமே (வீற்றிருப்பான்).

விளக்கம்:

இறைவனும் அந்த இறைவனை தமக்குள் வைத்திருக்கின்ற உயிரும் உண்மையான பரம்பொருளை அறிந்து கொள்வதில்லை. இறைவனை மனித அறிவினால் அறிந்து கொண்டவர்களும் அவனை முழுவதுமாக அறிந்து கொள்வது இல்லை. இறைவன் உள்ளுக்குள் இருந்து உணர்த்தி அருளிய தர்மத்தை முறையாக கடைபிடிப்பதன் மூலம் உயிராக இருப்பவன் இறைவனாக தனக்குள் இருப்பவனை முழுவதுமாக அறிந்து உணர்ந்து கொண்ட பிறகு இறைவனும் உயிராக இருப்பவனும் இறைவனே தான் என்பதை உணர்ந்து தானே இறைவனாக வீற்றிருப்பான்.

பாடல் #1790

பாடல் #1790: ஏழாம் தந்திரம் – 8. சம்பிரதாயம் (இறையருளால் உணர்த்தப் பட்ட தர்மத்தை முறையாக கடைபிடிப்பது)

நானிது தானென நின்றில னாடோறு
மூனிது தானுயிர் போலுணர் வானுளன்
வானிரு மாமுகிற் போற்பொழி வானுள
னானிது வம்பர நாதனு மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நானிது தானென நினறில னாடொறு
மூனிது தானுயிர பொலுணர வானுளன
வானிரு மாமுகிற பொறபொழி வானுள
னானிது வமபர நாதனு மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நான் இது தான் என நின்று இலன் நாள் தோறும்
ஊன் இது தான் உயிர் போல் உணர்வான் உளன்
வான் இரு மா முகில் போல் பொழிவான் உளன்
நான் இது அம்பர நாதனும் ஆமே.

பதப்பொருள்:

நான் (நான்) இது (இறைவன்) தான் (தான்) என (என்று எண்ணுகின்ற எண்ணத்திலேயே) நின்று (நின்று) இலன் (இருக்காமல்) நாள் (தினந்) தோறும் (தோறும்)
ஊன் (தனது உடலாக) இது (இருப்பதே இறைவன்) தான் (தான் என்று எண்ணுகின்றான். அவன் இறைவன் அருளால் தனக்குள் உணர்த்தப் பட்ட இறை தர்மத்தை முறைப்படி கடைபிடிக்கும் போது) உயிர் (தனது உயிர்) போல் (போல் இருக்கின்றவன் இறைவனே) உணர்வான் (என்பதை உணர்ந்து) உளன் (கொள்கின்றான்)
வான் (அப்போது வானத்தில்) இரு (இருக்கின்ற) மா (மாபெரும்) முகில் (மேகக் கூட்டம்) போல் (மழையாகப் பொழிவதைப் போல) பொழிவான் (தமது பேரருளை மழையாகப் பொழிபவன்) உளன் (தனக்குள்ளே இருக்கின்றான் என்பதை உணர்ந்து கொள்கின்றான்)
நான் (அதன் பிறகு தாமாக இருக்கின்ற) இது (இறைவனே) அம்பர (ஆகாயத்தில்) நாதனும் (அனைத்திற்கும் தலைவனாகவும்) ஆமே (இருக்கின்றான் என்கின்ற நிலையை அடைந்து விடுகின்றான்).

விளக்கம்:

பாடல் #1789 இல் உள்ளபடி நான் இறைவன் என்று எண்ணுகின்ற எண்ணத்திலேயே இருக்காமல் தினந் தோறும் தனது உடலாக இருப்பதே இறைவன் தான் என்று எண்ணுகின்றான். அவன் இறைவன் அருளால் தனக்குள் உணர்த்தப் பட்ட இறை தர்மத்தை முறைப்படி கடைபிடிக்கும் போது, தனது உயிர் போல் இருக்கின்றவன் இறைவனே என்பதை உணர்ந்து கொள்கின்றான். அப்போது வானத்தில் இருக்கின்ற மாபெரும் மேகக் கூட்டம் மழையாகப் பொழிவதைப் போல தமது பேரருளை மழையாகப் பொழிபவன் தனக்குள்ளே இருக்கின்றான் என்பதை உணர்ந்து கொள்கின்றான். அதன் பிறகு தாமாக இருக்கின்ற இறைவனே ஆகாயத்தில் அனைத்திற்கும் தலைவனாகவும் இருக்கின்றான் என்கின்ற நிலையை அடைந்து விடுகின்றான்.

பாடல் #1791

பாடல் #1791: ஏழாம் தந்திரம் – 8. சம்பிரதாயம் (இறையருளால் உணர்த்தப் பட்ட தர்மத்தை முறையாக கடைபிடிப்பது)

பெருந்தண்மை தானென யானென வேறா
யிருந்தது மில்லை யதீச னறியும்
பொருந்து முடலுயிர் போலுண்மை மெய்யே
திருந்துமுன் செய்கின்ற தேவர் பிரானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பெருநதணமை தானென யானென வெறா
யிருநதது மிலலை யதீச னறியும
பொருநது முடலுயிர பொலுணமை மெயயெ
திருநதுமுன செயகினற தெவர பிரானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பெரும் தண்மை தான் என யான் என வேறு ஆய்
இருந்ததும் இல்லை அது ஈசன் அறியும்
பொருந்தும் உடல் உயிர் போல் உண்மை மெய்யே
திருந்தும் முன் செய்கின்ற தேவர் பிரானே.

பதப்பொருள்:

பெரும் (மிகப் பெரிய) தண்மை (சாந்த நிலையில்) தான் (இறைவன்) என (என்றும்) யான் (அடியவர்) என (என்றும்) வேறு (வேறு வேறு) ஆய் (ஆக பிரிந்து)
இருந்ததும் (இருக்கின்ற நிலை) இல்லை (இல்லாமல் எப்போதும் ஒன்றாகவே சேர்ந்து இருக்கின்ற) அது (அந்த நிலையை) ஈசன் (இறைவனே) அறியும் (அறிவான்)
பொருந்தும் (ஒன்றாக பொருந்தி இருக்கின்ற) உடல் (உடலும்) உயிர் (உயிரும்) போல் (போலவே) உண்மை (பேருண்மையாகிய தர்மத்தை) மெய்யே (எப்போதும் பொருந்தி இருக்கின்ற உடலாகவே)
திருந்தும் (அடியவரின் உடல் அழிந்து போவதற்கு) முன் (முன்) செய்கின்ற (மாற்றி அருளுவதை செய்கின்றவன்) தேவர் (தேவர்களுக்கெல்லாம்) பிரானே (தலைவனாகிய இறைவனே ஆகும்).

விளக்கம்:

மிகப் பெரிய சாந்த நிலையில் இறைவன் என்றும் அடியவர் என்றும் வேறு வேறாக பிரிந்து இருக்கின்ற நிலை இல்லாமல் எப்போதும் ஒன்றாகவே சேர்ந்து இருக்கின்ற அந்த நிலையை இறைவனே அறிவான். அடியவரின் உடல் அழிந்து போவதற்கு முன் உடலும் உயிரும் ஒன்றாக பொருந்தி இருப்பதை போலவே பேருண்மையாகிய தர்மத்தை எப்போதும் பொருந்தி இருக்கின்ற உடலாகவே இறையருளால் உணர்த்தப் பட்ட தர்மத்தை முறைப்படி கடைபிடிக்கின்ற அடியவரின் உடலை மாற்றி அருளுகின்றான் தேவர்களுக்கெல்லாம் தலைவனாகிய இறைவன்.

பாடல் #1773

பாடல் #1773: ஏழாம் தந்திரம் – 7. சிவ லிங்கம் (பேரருளாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

குரைக்கின்ற வாறிற் குவலைய நீரும்
பரக்கின்ற காற்றும் பயில்கின்ற தீயும்
நிரைக்கின்ற வாறிவை நீண்டகன் றானை
வரைத்து வலம்செய்யு மாறறி யேனே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

குரைககினற வாறிற குவலைய நீரும
பரககினற காறறும பயிலகினற தீயும
நிரைககினற வாறிவை நீணடகன றானை
வரைதது வலஞசெயயு மாறறி யெனெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

குரைக்கின்ற ஆறில் குவலைய நீரும்
பரக்கின்ற காற்றும் பயில்கின்ற தீயும்
நிரைக்கின்ற ஆறு இவை நீண்டு அகன்ற ஆனை
வரைத்து வலம் செய்யும் ஆறு அறியேனே.

பதப்பொருள்:

குரைக்கின்ற (சத்தம் இருக்கின்ற ஆகாயத்தின்) ஆறில் (வழியில்) குவலைய (உலகமும் [நிலம்]) நீரும் (உலகத்தில் இருக்கின்ற நீரும்)
பரக்கின்ற (அலைந்து திரிகின்ற) காற்றும் (காற்றும்) பயில்கின்ற (பொருளின் தன்மைக்கு ஏற்ப பழகுகின்ற) தீயும் (நெருப்பும்)
நிரைக்கின்ற (கூட்டமாக இருக்கின்ற) ஆறு (வழியில்) இவை (இந்த ஐந்து பூதங்களாகிய) நீண்டு (அனைத்திலும் நீண்டு விரிந்தும்) அகன்ற (இவை அனைத்தையும் தாண்டியும்) ஆனை (இருக்கின்ற பரம் பொருளாகிய இறைவனை)
வரைத்து (ஒரு எல்லைக்குள் வரையறுத்து) வலம் (அவனை வணங்குவதை) செய்யும் (செய்கின்ற) ஆறு (வழியை) அறியேனே (யாம் அறியாமல் இருக்கின்றோம்).

விளக்கம்:

சத்தம் இருக்கின்ற ஆகாயத்தின் வழியில் உலகமும் [நிலம்], உலகத்தில் இருக்கின்ற நீரும், அலைந்து திரிகின்ற காற்றும், பொருளின் தன்மைக்கு ஏற்ப பழகுகின்ற நெருப்பும், இப்படி ஐந்து பூதங்களின் கூட்டமாக இருக்கின்ற வழியில் அனைத்திலும் நீண்டு விரிந்தும், இவை அனைத்தையும் தாண்டியும் இருக்கின்ற பரம் பொருளாகிய இறைவனை ஒரு எல்லைக்குள் வரையறுத்து அவனை வணங்குவதற்கான வழியை யாம் அறியாமல் இருக்கின்றோம்.

பாடல் #1774

பாடல் #1774: ஏழாம் தந்திரம் – 7. சிவ லிங்கம் (பேரருளாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

வரைத்து வலஞ்செய்யு மாறுமிங் கொன்றுண்டு
நிரைத்து வருங்கங்கை நீர்மல ரேந்தி
யுரைத்த வனாம முணர வல்லார்க்குப்
புரைத் தெங்கும்போகான் புரிசடை யோனே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

வரைதது வலஞசெயயு மாறுமிங கொனறுணடு
நிரைதது வருஙகஙகை நீரமல ரெநதி
யுரைதத வனாம முணர வலலாரககுப
புரைத தெஙகுமபொகான புரிசடை யொனெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

வரைத்து வலம் செய்யும் ஆறு இங்கு ஒன்று உண்டு
நிரைத்து வரும் கங்கை நீர் மலர் ஏந்தி
உரைத்த அவன் நாமம் உணர வல்லார்க்கு
புரைத்து எங்கும் போகான் புரி சடையோனே.

பதப்பொருள்:

வரைத்து (அளவில்லாத இறைவனை ஒரு எல்லைக்குள் வரையறுத்து) வலம் (வழிபாடு) செய்யும் (செய்கின்ற) ஆறு (முறை) இங்கு (தாம் இருக்கின்ற இடத்திலேயே) ஒன்று (ஒன்று) உண்டு (இருக்கின்றது)
நிரைத்து (எப்போதும் எப்போதும் அசைந்து ஓடி) வரும் (வருகின்ற) கங்கை (கங்கையாக பாவித்த) நீர் (தூய்மையான நீரையும்) மலர் (வாசனை மிக்க தூய்மையான மலரையும்) ஏந்தி (கைகளில் ஏந்திக் கொண்டு)
உரைத்த (மனதிற்குள் ஜெபிக்கின்ற) அவன் (இறைவனின்) நாமம் (திருநாமத்தின் மூலம்) உணர (இறைவனை தமக்குள்ளேயே உணர) வல்லார்க்கு (முடிந்தவர்களுக்கு)
புரைத்து (பொய்யாக) எங்கும் (எங்கும்) போகான் (போகாமல் மாறாத சத்தியமாக எப்போதும் உடன் இருப்பான்) புரி (கயிறு போல் திரிந்த) சடையோனே (சடை முடியை தலையில் அணிந்து கொண்டு இருக்கின்ற அருள் வடிவான இறைவன்).

விளக்கம்:

பாடல் #1773 இல் உள்ளபடி பஞ்ச பூதங்களால் ஆகிய அனைத்துமாகவும் அவை அனைத்தையும் தாண்டியும் அளவில்லாமல் இருக்கின்ற இறைவனை ஒரு எல்லைக்குள் வரையறுத்து தாம் இருக்கின்ற இடத்திலேயே வழிபாடு செய்கின்ற முறை ஒன்று இருக்கின்றது. எப்போதும் அசைந்து ஓடி வருகின்ற கங்கையாக பாவித்த தூய்மையான நீரையும், வாசனை மிக்க தூய்மையான மலரையும் கைகளில் ஏந்திக் கொண்டு, மனதிற்குள் ஜெபிக்கின்ற இறைவனின் திருநாமத்தின் மூலம் இறைவனை தமக்குள்ளேயே உணர முடிந்தவர்களுக்கு, எங்கும் பொய்த்து போகாமல் மாறாத சத்தியமாக எப்போதும் உடன் இருப்பான் கயிறு போல் திரிந்த சடை முடியை தலையில் அணிந்து கொண்டு இருக்கின்ற அருள் வடிவான இறைவன்.

பாடல் #1775

பாடல் #1775: ஏழாம் தந்திரம் – 7. சிவ லிங்கம் (பேரருளாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

ஒன்றெனக் கண்டே னெம்மீச னொருவனை
நன்றென் றடியிணை நானவனைத் தொழ
வென்றைம் புலனு மிகக்கிடந் தின்புற
வன்றென் றருள்செய்யு மாதிப் பிரானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஒனறெனக கணடெ னெமமீச னொருவனை
நனறென றடியிணை நானவனைத தொழ
வெனறைம புலனு மிகககிடந தினபுற
வனறென றருளசெயயு மாதிப பிரானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஒன்று என கண்டேன் எம் ஈசன் ஒருவனை
நன்று என்று அடி இணை நான் அவனை தொழ
வென்று ஐம் புலனும் மிக கிடந்து இன்பு உற
அன்று என்று அருள் செய்யும் ஆதி பிரானே.

பதப்பொருள்:

ஒன்று (ஐந்து விதமான பூதங்களால் உருவாகிய அசையும் பொருள் அசையா பொருள் ஆகிய அனைத்தும் ஒன்றே) என (என்று) கண்டேன் (கண்டு தரிசித்து) எம் (எம்) ஈசன் (பரம்பொருளாகிய இறைவன்) ஒருவனை (ஒருவனே அவை அனைத்துமாக இருப்பதை உணர்ந்து கொண்டோம்)
நன்று (ஆகவே அவை அனைத்தும் நன்மையானது) என்று (என்றும்) அடி (இறைவனின் திருவடிகளுக்கு) இணை (சரிசமமானது என்றும்) நான் (யாம் அறிந்து கொண்டு) அவனை (அவனை ஐந்து பூதங்களால் ஆகிய அனைத்திலும் கண்டு) தொழ (வணங்கினோம்)
வென்று (அதன் பயனால் உலக ஆசைகளிலிருந்து வெற்றி பெற்ற) ஐம் (எமது ஐந்து) புலனும் (புலன்களும்) மிக (இறைவனுடனே மிகவும்) கிடந்து (சேர்ந்து கிடந்து) இன்பு (பேரின்பத்தில்) உற (திளைத்திருக்கும் படி)
அன்று (அப்பொழுதில் இருந்து) என்று (என்றும்) அருள் (அருள்) செய்யும் (செய்கின்றான்) ஆதி (ஆதி மூல) பிரானே (தலைவனாகிய இறைவன்).

விளக்கம்:

ஐந்து விதமான பூதங்களால் உருவாகிய அசையும் பொருள் அசையா பொருள் ஆகிய அனைத்தும் ஒன்றே என்று கண்டு தரிசித்து எம் பரம்பொருளாகிய இறைவன் ஒருவனே அவை அனைத்துமாக இருப்பதை உணர்ந்து கொண்டோம். ஆகவே அவை அனைத்தும் நன்மையானது என்றும் இறைவனின் திருவடிகளுக்கு சரிசமமானது என்றும் யாம் அறிந்து கொண்டு, அவனை ஐந்து பூதங்களால் ஆகிய அனைத்திலும் கண்டு வணங்கினோம். அதன் பயனால் உலக ஆசைகளிலிருந்து வெற்றி பெற்ற எமது ஐந்து புலன்களும் இறைவனுடனே மிகவும் சேர்ந்து கிடந்து பேரின்பத்தில் திளைத்திருக்கும் படி அப்பொழுதில் இருந்து என்றும் அருள் செய்கின்றான் ஆதி மூல தலைவனாகிய இறைவன்.