பாடல் #1823

பாடல் #1823: ஏழாம் தந்திரம் – 11. சிவ பூசை (அகத்திலும் புறத்திலும் சிவத்தை அறிந்து பூஜை செய்தல்)

உள்ளம் பெருங்கோயி லூனுடம் பாலையம்
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளித் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கங்
கள்ளப் புலனைந்துங் காளா விளக்கே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

உளளம பெருஙகொயி லூனுடம பாலையம
வளளற பிரானாரககு வாயகொ புரவாசல
தெளளித தெளிநதாரககுச சீவன சிவலிஙகங
களளப புலனைநதுங காளா விளககெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

உள்ளம் பெரும் கோயில் ஊன் உடம்பு ஆலையம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ளி தெளிந்தார்க்கு சீவன் சிவ லிங்கம்
கள்ள புலன் ஐந்தும் காளா விளக்கே.

பதப்பொருள்:

உள்ளம் (அடியவர்களின் உள்ளமானது) பெரும் (மிகப் பெரும்) கோ (இறைவன்) இல் (வீற்றிருக்கும் கருவறையாகும்) ஊன் (அவர்களது தசையும்) உடம்பு (எலும்புகளுமான உடலானது) ஆலையம் (இறைவனை பூஜிக்க வலம் வரும் ஆலயமாகும்)
வள்ளல் (இல்லை என்று வருபவர்களுக்கு தம்மால் இயன்றதை வழங்குகின்ற வள்ளல்) பிரானார்க்கு (தன்மை கொண்டு போற்றத் தகுந்த அடியவர்களுக்கு) வாய் (அவர்களின் வாயானது) கோபுர (இறைவனை தரிசிக்க வருகின்றவர்களை வரவேற்கும் ஆலயத்தின் கோபுர) வாசல் (வாசல் ஆகும்)
தெள்ளி (இறைவனை தமக்குள் ஆராய்ந்து) தெளிந்தார்க்கு (தெளிவாக அறிந்து கொண்டவர்களின்) சீவன் (ஆன்மாவனது) சிவ (இறைவனின்) லிங்கம் (அடையாளமான இலிங்கமாகும்)
கள்ள (தமது இயல்பிலேயே மாயையால் உண்மையை மறைக்கின்ற திருட்டுத் தனம் கொண்ட) புலன் (புலன்கள்) ஐந்தும் (கண், காது, மூக்கு, வாய், உடல் ஆகிய ஐந்தும்) காளா (தமது இயல்பு நிலை மாறி இருட்டாகிய மாயையை நீக்குகின்ற) விளக்கே (வெளிச்சத்தை தரும் விளக்குகள் ஆகும்).

விளக்கம்:

அடியவர்களின் உள்ளமானது இறைவன் வீற்றிருக்கும் மிகப் பெரும் கோயிலாகும். அவர்களது தசையும் எலும்புகளுமான உடலானது இறைவனை பூஜிக்க வலம் வரும் ஆலயமாகும். இல்லை என்று வருபவர்களுக்கு தம்மால் இயன்றதை வழங்குகின்ற வள்ளல் தன்மை கொண்டு போற்றத் தகுந்த அடியவர்களுக்கு அவர்களின் வாயானது இறைவனை தரிசிக்க வருகின்றவர்களை வரவேற்கும் ஆலயத்தின் கோபுர நுழை வாசல் ஆகும். இறைவனை தமக்குள் ஆராய்ந்து தெளிவாக அறிந்து கொண்டவர்களின் ஆன்மாவனது இறைவனின் அடையாளமான இலிங்கமாகும். அவர்களிடம் இருக்கின்ற தமது இயல்பிலேயே மாயையால் உண்மையை மறைக்கின்ற திருட்டுத் தனம் கொண்ட புலன்களாகிய கண், காது, மூக்கு, வாய், உடல் ஆகிய ஐந்தும் தமது இயல்பு நிலை மாறி இருட்டாகிய மாயையை நீக்குகின்ற வெளிச்சத்தை தரும் விளக்குகள் ஆகும்.

பாடல் #1824

பாடல் #1824: ஏழாம் தந்திரம் – 11. சிவ பூசை (அகத்திலும் புறத்திலும் சிவத்தை அறிந்து பூஜை செய்தல்)

வேட்டவி யுண்ணும் விரிசடை நந்திக்குக்
காட்டவிரு மலங் காலையு மாலையு
மூட்டவி யாவன வுள்ளங் குளிர்விக்கும்
பாட்டவி காட்டுறு பாலனு மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

வெடடவி யுணணும விரிசடை நநதிககுக
காடடவிரு மலங காலையு மாலையு
மூடடவி யாவன வுளளங குளிரவிககும
பாடடவி காடடுறு பாலனு மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

வேட்டு அவி உண்ணும் விரி சடை நந்திக்கு
காட்டு இரு மலம் காலையும் மாலையும்
ஊட்டு அவி ஆவன உள்ளம் குளிர்விக்கும்
பாட்டு அவி காட்டு உறும் பாலனும் ஆமே.

பதப்பொருள்:

வேட்டு (அடியவர்கள் தாம் விரும்பித் தருகின்ற) அவி (யாகப் பொருட்களை) உண்ணும் (பிரசாதமாக ஏற்கின்ற) விரி (விரிந்த) சடை (சடையைக் கொண்ட) நந்திக்கு (குருநாதனாகிய இறைவனுக்கு)
காட்டு (நாம் வளர்த்து சமர்ப்பிக்கின்ற யாக அக்னியானது) இரு (நமக்குள் இருக்கின்ற) மலம் (மலங்களாகிய ஆனவம், கன்மம், மாயை ஆகியவை நீங்க வேண்டி) காலையும் (காலையில் சூரியன் தோன்றும் போதும்) மாலையும் (மாலையில் சூரியன் மறையும் போதும் செய்யும் யாகமாக இருக்க வேண்டும்)
ஊட்டு (புகையை ஊட்டுகின்ற) அவி (யாகப் பொருட்களின்) ஆவன (நெருப்பானது) உள்ளம் (இறைவனின் உள்ளத்தை) குளிர்விக்கும் (குளிர்விக்கும்)
பாட்டு (மந்திரங்களை ஓதி) அவி (யாகத்தில் பொருட்களை இட்டு) காட்டு (அக்னியை வளர்த்து காட்டும் போது) உறும் (அந்த அக்னியில் ஜோதியாக வீற்றிருப்பது) பாலனும் (நம்மை ஆட்கொண்டு காத்து அருள்கின்ற) ஆமே (இறைவன் ஆகும்).

விளக்கம்:

அடியவர்கள் தாம் செய்கின்ற யாகத்தில் விருப்பத்தோடு அளிக்கின்ற யாகப் பொருட்களை பிரசாதமாக ஏற்கின்ற விரிந்த சடையைக் கொண்ட குருநாதனாகிய இறைவனுக்கு நாம் வளர்த்து சமர்ப்பிக்கின்ற யாக அக்னியானது நமக்குள் இருக்கின்ற மலங்களாகிய ஆனவம், கன்மம், மாயை ஆகியவை நீங்க வேண்டி காலையில் சூரியன் தோன்றும் போதும் மாலையில் சூரியன் மறையும் போதும் நாம் செய்கின்ற யாகமாக இருக்க வேண்டும். புகையை ஊட்டுகின்ற யாகப் பொருட்களின் நெருப்பானது இறைவனின் உள்ளத்தை குளிர்விக்கும். மந்திரங்களை ஓதி யாகத்தில் பொருட்களை இட்டு அக்னியை வளர்த்து காட்டும் போது அந்த அக்னியில் ஜோதியாக வீற்றிருப்பது நம்மை ஆட்கொண்டு காத்து அருள்கின்ற இறைவன் ஆகும்.

பாடல் #1825

பாடல் #1825: ஏழாம் தந்திரம் – 11. சிவ பூசை (அகத்திலும் புறத்திலும் சிவத்தை அறிந்து பூஜை செய்தல்)

பான்மொழி பாகன் பராபரன் றானாகு
மானசதா சிவன் றன்னை யாவாகித்து
மேன்முக மீசான மாகவே கைக்கொண்டு
சீன்முகஞ் செய்யச் சிவனவ னாகுமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பானமொழி பாகன பராபரன றானாகு
மானசதா சிவன றனனை யாவாகிதது
மெனமுக மீசான மாகவெ கைககொணடு
சீனமுகஞ செயயச சிவனவ னாகுமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பால் மொழி பாகன் பரா பரன் தான் ஆகும்
ஆன சதா சிவன் தன்னை ஆவாகித்து
மேல் முகம் ஈசானம் ஆகவே கை கொண்டு
சீல் முகம் செய்ய சிவன் அவன் ஆகுமே.

பதப்பொருள்:

பால் (அடியவர்களின் தகுதிக்கு ஏற்றபடி) மொழி (அருள் பாலிக்கும் இறைவியை) பாகன் (தமக்கு ஒரு பாகமாகக் கொண்டவன்) பரா (அசையா சக்தியாகிய) பரன் (பரம்பொருள்) தான் (தாமே) ஆகும் (ஆகும்)
ஆன (அப்படி இறைவியும் இறைவனும் சேர்ந்து அருளுகின்ற) சதா (சதா) சிவன் (சிவமூர்த்தி) தன்னை (தம்மை) ஆவாகித்து (உண்மையான அன்போடு வேண்டி தமக்குள் / இலிங்கத்திற்குள் எழுந்தருளும் படி செய்து)
மேல் (தமது தலைக்கு / இலிங்கத்தின் மேல் நோக்கிய) முகம் (முகத்தை) ஈசானம் (அனைத்திற்கும் தலையாகிய சதாசிவ மூர்த்தியின் ஈசான முகம்) ஆகவே (ஆகவே) கை (கைப் பற்றிக்) கொண்டு (கொண்டு)
சீல் (சாதகத்தின் ஒழுக்கத்தை சரியாக கடைபிடித்து) முகம் (திருமுகத்தை) செய்ய (தமக்குள் / இலிங்கத்தில் வடித்து வழிபடுகின்ற அடியவர்கள்) சிவன் (சிவமாகவே) அவன் (தாமும்) ஆகுமே (ஆகி விடுவார்).

விளக்கம்:

இறைவனை அடைய வேண்டும் என்ற உண்மையான தேடுதலோடு முயற்சி செய்கின்ற அடியவர்களுக்கு அவரவர்களின் கர்ம நிலைகள் நீங்கி இறைவனை அடைகின்ற பக்குவம் பெறுவதற்கு ஏற்றவாறு அருள் புரிகின்ற இறைவியை தமது சரிபாதி பாகமாகக் கொண்டு அடியவர்களுக்கு அருளும் தொழிலை புரிகின்ற சதாசிவமூர்த்தியாகிய இறைவனை முதலில் அருவுருவமாக வழிபடுவதற்கு ஆகம விதிகளின் படி முறைப்படி இலிங்க வடிவத்தை செய்து, அதில் எழுந்தருளும் படி இறைவனை உண்மையான அன்போடு வேண்டி வரவழைத்து, அதன் பிறகு தாம் செய்கின்ற இலிங்க வழிபாட்டை முறைப்படி சரியாக கடைபிடித்து, அதன் பயனால் இலிங்கத்தில் எழுந்தருளிய இறைவனை தமக்குள்ளும் எழுந்தருளும் படி செய்து, அதையே தலையாகப் பற்றிக் கொண்ட அடியவர்கள் சிவமாகவே ஆகிவிடுவார்கள்.

பாடல் #1826

பாடல் #1826: ஏழாம் தந்திரம் – 11. சிவ பூசை (அகத்திலும் புறத்திலும் சிவத்தை அறிந்து பூஜை செய்தல்)

நினைவது வாய்மை மொழிவது மல்லாற்
கனைகழ லீசனைக் காண வரிதாங்
கனைகழ லீசனைக் காண்குற வல்லார்
புனைமலர் நீர்கொண்டு போற்ற வல்லாரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நினைவது வாயமை மொழிவது மலலாற
கனைகழ லீசனைக காண வரிதாங
கனைகழ லீசனைக காணகுற வலலார
புனைமலர நீரகொணடு பொறற வலலாரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நினைவதும் வாய்மை மொழிவதும் அல்லால்
கனை கழல் ஈசனை காண அரிதாம்
கனை கழல் ஈசனை காண்கு உற வல்லார்
புனை மலர் நீர் கொண்டு போற்ற வல்லாரே.

பதப்பொருள்:

நினைவதும் (நல்லதையே நினைப்பதும்) வாய்மை (உண்மையையே) மொழிவதும் (பேசுவதும்) அல்லால் (செய்யாமல் வேறு எந்த விதமான செயல்களாலும்)
கனை (இசைக்கின்ற அழகிய சிலம்புகளை) கழல் (அணிந்த திருவடிகளை உடைய) ஈசனை (இறைவனை) காண (தரிசிப்பது) அரிதாம் (அரியதான காரியம் ஆகும்)
கனை (இசைக்கின்ற அழிகிய சிலம்புகளை) கழல் (அணிந்த திருவடிகளை உடைய) ஈசனை (இறைவனை) காண்கு (அவ்வாறு செய்து தமக்குள் தரிசிக்கும்) உற (அருள் பெற்று) வல்லார் (தரிசிக்கக் கூடியவர்கள்)
புனை (நறுமணம் கொண்ட அழகிய) மலர் (மலர்களையும்) நீர் (தூய்மையான நீரையும்) கொண்டு (கொண்டு) போற்ற (தாம் தரிசித்த இறைவனை போற்றி வணங்கி பூஜிக்கும்) வல்லாரே (வல்லமை பெற்றவர்கள் ஆவார்கள்).

விளக்கம்:

நல்லதை மட்டுமே நினைப்பது, உண்மையை மட்டுமே பேசுவது ஆகிய ஒழுக்கங்களை சரியாக கடை பிடிக்காமல் வேறு என்ன சாதகம் செய்தாலும் இசைக்கின்ற அழகிய சிலம்புகளை அணிந்த திருவடிகளை உடைய இறைவனை தரிசிக்க முடியாது. ஆகவே நன்மையை மட்டுமே நினைப்பதையும் உண்மையை மட்டுமே பேசுவதையும் ஒழுக்கமாகக் கொண்டு அதனோடு அனைத்து உயிர்களுக்குள்ளும் இசைகின்ற அழகிய சிலம்புகளை அணிந்த திருவடிகளை உடைய இறைவனை தரிசிக்கும் வல்லமை பெற்றவர்கள் தாம் தரிசித்த இறைவனை நேரிலேயே நறுமணம் கொண்ட அழகிய மலர்களாலும் தூய்மையான நீராலும் போற்றி வணங்கி வழிபடும் வல்லமை பெறுவார்கள்.

பாடல் #1814

பாடல் #1814: ஏழாம் தந்திரம் – 10. அருள் ஒளி (இறைவன் கொடுத்த அருள் ஞானமாக வெளிப்படுதல்)

அருளிற் றலைநின் றறிந்தழுந் தாகா
ரருளிற் றலைநில்லா ரைம்பாச நீங்கா
ரருளிற் பெருமை யறியார் செறியா
ரருளிற் பிறந்திட் டிறந்தறி வாரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அருளிற றலைநின றறிநதழுந தாகா
ரருளிற றலைநிலலா ரைமபாச நீஙகா
ரருளிற பெருமை யறியார செறியா
ரருளிற பிறநதிட டிறநதறி வாரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அருளில் தலை நின்று அறிந்து அழுந்து ஆகார்
அருளில் தலை நில்லார் ஐம் பாசம் நீங்கார்
அருளில் பெருமை அறியார் செறியார்
அருளில் பிறந்து இட்டு இறந்து அறிவாரே.

பதப்பொருள்:

அருளில் (ஒளியாகிய பேரருளில்) தலை (உறுதியாக) நின்று (நின்று) அறிந்து (அதை முழுவதுமாக அறிந்து கொண்டு) அழுந்து (அதிலேயே அமிழ்ந்து) ஆகார் (அதுவாகவே ஆகாதவர்கள்)
அருளில் (ஒளியாகிய பேரருளில்) தலை (தலையாக) நில்லார் (நிற்காதவர்கள்) ஐம் (ஐந்து விதமான புலன்களால் வருகின்ற) பாசம் (பந்த பாசங்களை) நீங்கார் (விட்டு நீங்காதவர்கள்)
அருளில் (ஒளியாகிய பேரருளில்) பெருமை (கிடைக்கின்ற பெரும் பலனை) அறியார் (அறிந்து கொள்ளாதவர்கள்) செறியார் (அதனின் பலனை அறிந்து அதன் மூலம் தம்மை மேன்மை படுத்திக் கொள்ளாதவர்கள்)
அருளில் (ஒளியாகிய பேரருளில்) பிறந்து (பிறந்து) இட்டு (இந்த உலகத்தில் உயிர்களாக வந்திருந்தாலும்) இறந்து (அந்த பேரருளில் இருக்கின்ற இறவாத பேரறிவை அறியாமல் இறந்து போகின்ற) அறிவாரே (உலக அறிவையே அறிந்தவர்களாக இருக்கின்றார்கள்).

விளக்கம்:

ஒளியாகிய பேரருளில் உறுதியாக நின்று அதை முழுவதுமாக அறிந்து கொண்டு அதிலேயே அமிழ்ந்து அதுவாகவே ஆகாதவர்கள், அந்த பேரருளை அடைவதையே வாழ்க்கையின் குறிக்கோளாக மேற்கொண்டு நிற்காதவர்கள், ஐந்து விதமான புலன்களால் வருகின்ற பந்த பாசங்களை விட்டு நீங்காதவர்கள், அந்த பேரருளில் கிடைக்கின்ற பெரும் பலனை அறிந்து கொள்ளாதவர்கள், பேரருளின் பலனை அறிந்து அதன் மூலம் தம்மை மேன்மை படுத்திக் கொள்ளாதவர்கள், பேரருளில் பிறந்து இந்த உலகத்தில் உயிர்களாக வந்திருந்தாலும் அந்த பேரருளில் இருக்கின்ற இறவாத பேரறிவை அறியாமல் இறந்து போகின்ற உலக அறிவையே அறிந்தவர்களாக இருக்கின்றார்கள்.

பாடல் #1815

பாடல் #1815: ஏழாம் தந்திரம் – 10. அருள் ஒளி (இறைவன் கொடுத்த அருள் ஞானமாக வெளிப்படுதல்)

வாரா வழிதந்த மாநந்தி பேர்நந்தி
யாரா வமுதளித் தானந்தி பேர்நந்தி
பேரா யிரமுடைப் பெம்மான் பேரொன்றில
னாரா வருட்கட லாடுகவென் றானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

வாரா வழிதநத மாநநதி பெரநநதி
யாரா வமுதளித தானநதி பெரநநதி
பெரா யிரமுடைப பெமமான பெரொனறில
னாரா வருடகட லாடுகவென றானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

வாரா வழி தந்த மா நந்தி பேர் நந்தி
ஆரா அமுது அளித்தான் நந்தி பேர் நந்தி
பேர் ஆயிரம் உடை பெம்மான் பேர் ஒன்று இலன்
ஆரா அருள் கடல் ஆடுக என்றானே.

பதப்பொருள்:

வாரா (இந்த உலகத்திற்கு திரும்பவும் வந்துவிடாத) வழி (பெரும் வழியை) தந்த (தந்து அருளிய) மா (மாபெரும்) நந்தி (குருநாதனாகிய இறைவன்) பேர் (பெருமை மிக்க) நந்தி (நந்தி ஆகும்)
ஆரா (என்றும் தெகிட்டாத) அமுது (அமிழ்தமாகிய பேரின்பத்தை) அளித்தான் (அளித்து அருளியவன்) நந்தி (குருநாதனாகிய இறைவன்) பேர் (பெருமை மிக்க) நந்தி (நந்தி ஆகும்)
பேர் (தனது திருப்பெயர்களாக அடியவர்கள் அழைக்கும்) ஆயிரம் (ஆயிரம் பெயர்களை) உடை (உடைய) பெம்மான் (பெருமானாக இருந்தாலும்) பேர் (தனக்கென்று தனிப் பெயர்) ஒன்று (ஒன்றும்) இலன் (இல்லாதவன்)
ஆரா (என்றும் தெகிட்டாத) அருள் (அமிழ்தமாகிய) கடல் (குருநாதனாகிய இறைவனின் பேரருள் பெருங்கடலில்) ஆடுக (மூழ்கி பேரின்பத்தில் திளைத்து இருங்கள்) என்றானே (என்று தமது அடியவர்களுக்கு அருளினான்).

விளக்கம்:

இந்த உலகத்திற்கு திரும்பவும் வந்துவிடாத பெரும் வழியை தந்து அருளிய மாபெரும் குருநாதனாகிய இறைவன் பெருமை மிக்க நந்தி ஆகும். என்றும் தெகிட்டாத அமிழ்தமாகிய பேரின்பத்தை அளித்து அருளியவன் குருநாதனாகிய இறைவன் பெருமை மிக்க நந்தி ஆகும். தனது திருப்பெயர்களாக அடியவர்கள் அழைக்கும் ஆயிரம் பெயர்களை உடைய பெருமானாக இருந்தாலும் தனக்கென்று தனிப் பெயர் ஒன்றும் இல்லாதவன். என்றும் தெகிட்டாத அமிழ்தமாகிய குருநாதனாகிய இறைவனின் பேரருள் பெருங்கடலில் மூழ்கி பேரின்பத்தில் திளைத்து இருங்கள் என்று தமது அடியவர்களுக்கு அருளினான்.

தத்துவ விளக்கம்:

மீண்டும் மீண்டும் பிறவி எடுக்கின்ற சுழற்சியிலிருந்து விடுபட்டு மீண்டும் பிறவி எடுக்காத மாபெரும் வழியை குருநாதனாக வந்த இறைவன் அடியவருக்கு தந்து அருளி அந்த வழியை சரியாகப் பின்பற்றுகின்ற மன வலிமையையும் கொடுத்து அதை அவர் அகங்காரம் வந்துவிடாமல் சரியாகப் பின்பற்றும் போது அதற்கு பலனாக என்றும் தெகிட்டாத அமிழ்தமாகிய பேரின்பத்தை கொடுத்து அருளுகின்றான். இறைவன் கொடுக்கின்ற வழிமுறைகள் பல ஆயிரம் வகையாக இருக்கவே அடியவர்கள் அவன் புரிகின்ற ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு பெயரைக் கொடுத்து அவனை ஆயிரம் பெயர்களில் அழைத்தாலும் தனக்கென்று ஒரு பெயரும் இல்லாதவன் இறைவன். இப்படிப்பட்ட இறைவனே தனது பேரருளாகிய பெருங்கடலில் அடியவர்கள் மூழ்கித் திளைத்து இன்புற்றிருக்குமாறு அருளுகின்றான்.

பாடல் #1816

பாடல் #1816: ஏழாம் தந்திரம் – 10. அருள் ஒளி (இறைவன் கொடுத்த அருள் ஞானமாக வெளிப்படுதல்)

ஆடியும் பாடியும் மழுது மரற்றியுந்
தேடியுங் கண்டேன் சிவன் பெருந்தன்மையைக்
கூடிய வாறே குறியாக் குறிதந்தென்
னூடு நின்றானவன் றன்னரு ளுற்றே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஆடியும பாடியும மழுது மரறறியுந
தெடியுங கணடென சிவன பெருநதனமையைக
கூடிய வாறெ குறியாக குறிதநதென
னூடு நினறானவன றனனரு ளுறறெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும்
தேடியும் கண்டேன் சிவன் பெரும் தன்மையை
கூடிய ஆறே குறியா குறி தந்து என்
ஊடு நின்றான் அவன் தன் அருள் உற்றே.

பதப்பொருள்:

ஆடியும் (இறைவனின் திருவிளையாடல்களை ஆடியும்) பாடியும் (அவனது பெருமைகளைப் போற்றிப் பாடியும்) அழுதும் (அவனது மாபெரும் கருணையை எண்ணி அழுதும்) அரற்றியும் (அவன் அருகில் செல்ல முடியவில்லையே என்று புலம்பியும்)
தேடியும் (தமக்குள்ளே தேடியும்) கண்டேன் (கண்டு கொண்டேன்) சிவன் (இறைவனின்) பெரும் (மாபெரும்) தன்மையை (தன்மையை)
கூடிய (அவனோடு ஒன்றாக சேருகின்ற) ஆறே (வழியே) குறியா (வேறு எந்த சிந்தனையும் இல்லாமல்) குறி (அவனை அடைவதை மட்டுமே குறிக்கோளாக) தந்து (கொடுத்து அருளி) என் (எமது)
ஊடு (உள்ளே கலந்து) நின்றான் (நின்றான்) அவன் (இறைவன்) தன் (தமது) அருள் (பேரருளை) உற்றே (எமக்கு கொடுத்து ஞானமாக வெளிப்பட்டான்).

விளக்கம்:

இறைவனின் திருவிளையாடல்களை ஆடியும், அவனது பெருமைகளைப் போற்றிப் பாடியும், அவனது மாபெரும் கருணையை எண்ணி அழுதும், அவன் அருகில் செல்ல முடியவில்லையே என்று புலம்பியும், தமக்குள்ளே தேடியும், இறைவனின் மாபெரும் தன்மையை கண்டு கொண்டேன். அப்படி தேடிக் கண்டு கொண்ட இறைவனோடு சேருவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு வேறு எதிலும் சிந்தனையை செலுத்தாமல் இருக்கின்ற வழியை எமக்கு கொடுத்து அருளி எம்மோடு கலந்து நின்று எம்முள்ளிருந்து ஞானமாக வெளிப்பட்டான்.

பாடல் #1817

பாடல் #1817: ஏழாம் தந்திரம் – 10. அருள் ஒளி (இறைவன் கொடுத்த அருள் ஞானமாக வெளிப்படுதல்)

உற்ற பிறப்பு முறுமல மானதும்
பற்றிய மாயா படலமெனப் பண்ணி
யற்றனை நீக்கி யடிவைத்தான் பேர்நந்தி
கற்றன விட்டேன் கழலணிந் தேனே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

உறற பிறபபு முறுமல மானதும
பறறிய மாயா படலமெனப பணணி
யறறனை நீககி யடிவைததான பெரநநதி
கறறன விடடென கழலணிந தெனெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

உற்ற பிறப்பும் உறு மலம் ஆனதும்
பற்றிய மாயா படலம் என பண்ணி
அற்றனை நீக்கி அடி வைத்தான் பேர் நந்தி
கற்றன விட்டேன் கழல் அணிந்தேனே.

பதப்பொருள்:

உற்ற (எமக்கு கொடுக்கப்பட்ட) பிறப்பும் (பிறவியும்) உறு (யாம் அனுபவிக்கின்ற) மலம் (மூன்று விதமான மலங்கள்) ஆனதும் (ஆக இருப்பதும்)
பற்றிய (எம்மை பற்றிக் கொண்ட) மாயா (மாயையின்) படலம் (இருள் கூட்டம்) என (என்று) பண்ணி (எமது ஆசைகள் தீர்ப்பதற்காக அருள் செய்து)
அற்றனை (அவனருளால் அழியக் கூடிய அனைத்தையும்) நீக்கி (எம்மை விட்டு நீக்கி விட்டு) அடி (தமது திருவடியை) வைத்தான் (எம் தலைமேல் வைத்தருளினான்) பேர் (பெருமை மிக்க) நந்தி (குருநாதனாகிய இறைவன்)
கற்றன (அவனது திருவடியின் அருளினால் இதுவரை யாம் அறிந்த உலக அறிவுகளை அனைத்தையும்) விட்டேன் (விட்டு விட்டேன்) கழல் (அவனது திருவடியை) அணிந்தேனே (எம் தலை மேல் அணிந்து கொண்டு அதனோடு பொருந்தி இருந்தேன்).

விளக்கம்:

எமக்கு கொடுக்கப்பட்ட பிறவியும், யாம் அனுபவிக்கின்ற ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று விதமான மலங்களாக இருப்பதும், எம்மை பற்றிக் கொண்ட மாயையின் இருள் கூட்டம் என்று எமது ஆசைகள் தீர்ப்பதற்காக அருள் செய்து, அவனருளால் அழியக் கூடிய அனைத்தையும் எம்மை விட்டு நீக்கி விட்டு, தமது திருவடியை எம் தலைமேல் வைத்தருளினான் பெருமை மிக்க குருநாதனாகிய இறைவன். அவனது திருவடியின் அருளினால் இதுவரை யாம் அறிந்த உலக அறிவுகளை அனைத்தையும் விட்டு விட்டு அவனது திருவடியை எம் தலை மேல் அணிந்து கொண்டு அதனோடு பொருந்தி இருந்தேன்.

பாடல் #1818

பாடல் #1818: ஏழாம் தந்திரம் – 10. அருள் ஒளி (இறைவன் கொடுத்த அருள் ஞானமாக வெளிப்படுதல்)

விளக்கினை யேற்றி வெளியை மறிமின்
விளக்கினின் முன்னே வேதினை மாறும்
விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள்
விளக்கில் விளங்கும் விளக்காவ தாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

விளககினை யெறறி வெளியை மறிமின
விளககினின முனனெ வெதினை மாறும
விளககை விளககும விளககுடை யாரகள
விளககில விளஙகும விளககாவ தாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

விளக்கினை ஏற்றி வெளியை மறிமின்
விளக்கினின் முன்னே வேதினை மாறும்
விளக்கை விளக்கும் விளக்கு உடையார்கள்
விளக்கில் விளங்கும் விளக்கு ஆவது ஆமே.

பதப்பொருள்:

விளக்கினை (தமக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி சக்தியின் விளக்கை) ஏற்றி (சுழுமுனை நாடி வழியே மேலேற்றி எடுத்துச் சென்று சகஸ்ரதளத்தில் ஜோதியாக எரியச் செய்து) வெளியை (தமக்கு வெளியில் இருக்கின்ற புற உலகின் மேல் செல்லுகின்ற புலன்களை) மறிமின் (தடுத்து நிறுத்தினால்)
விளக்கினின் (மாபெரும் ஜோதியாக இருக்கின்ற பேரறிவு ஞானத்தின்) முன்னே (முன்பே) வேதினை (உலக அறிவு எல்லாம் உண்மை அறிவாக) மாறும் (மாறும்)
விளக்கை (அப்படிப்பட்ட பேரறிவாகிய இறைவனின் ஜோதியை) விளக்கும் (உண்மையாக உணர்ந்து கொள்ளும் படி விளங்க வைக்கும்) விளக்கு (தெளிவு) உடையார்கள் (உடைய ஞானிகள்)
விளக்கில் (எடுத்துரைத்து விளக்கினால்) விளங்கும் (முழுவதும் புரிந்து கொள்ளக் கூடிய) விளக்கு (மாபெரும் ஜோதி) ஆவது (ஆக இருப்பது) ஆமே (பரம்பொருளாகிய இறைவனே ஆகும்).

விளக்கம்:

தமக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி சக்தியின் விளக்கை சாதகத்தின் மூலம் சுழுமுனை நாடி வழியே மேலேற்றி எடுத்துச் சென்று சகஸ்ரதளத்தில் ஜோதியாக எரியச் செய்து தமக்கு வெளியில் இருக்கின்ற புற உலகின் மேல் செல்லுகின்ற புலன்களை தடுத்து நிறுத்தினால் மாபெரும் ஜோதியாக இருக்கின்ற பேரறிவு ஞானத்தின் முன்பே உலக அறிவு எல்லாம் உண்மை அறிவாக மாறும். அப்படிப்பட்ட பேரறிவாகிய இறைவனின் ஜோதியை உண்மையாக உணர்ந்து கொள்ளும் படி விளங்க வைக்கும் தெளிவு உடைய ஞானிகள் எடுத்துரைத்து விளக்கினால் முழுவதும் புரிந்து கொள்ளக் கூடிய மாபெரும் ஜோதியாக இருப்பது பரம்பொருளாகிய இறைவனே ஆகும்.

கருத்து:

நமக்குள் இருக்கும் ஜோதியாகிய விளக்கை ஏற்றி மாயையாகிய இருளை அகற்றினால் இறைவனை அறியக் கூடிய தகுதி பெற்றவர்களாக மாறுவோம். அப்போது இறைவனை உணர்ந்த ஞானி நமக்கு வழிகாட்டி இறைவனை பரிபூரணமாக உணர வைப்பார்.

பாடல் #1819

பாடல் #1819: ஏழாம் தந்திரம் – 10. அருள் ஒளி (இறைவன் கொடுத்த அருள் ஞானமாக வெளிப்படுதல்)

ஒளியு மிருளு மொருக்காலுந் தீரா
வொளியுள் வோர்க்கன்றோ வொழியா தொளியு
மொளியிருள் கண்டகண் போலே வேறாயுள்
ளொளியிரு ணீங்கி யுயிர்சிவ மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஒளியு மிருளு மொருககாலுந தீரா
வொளியுள வொரககனறொ வொழியா தொளியு
மொளியிருள கணடகண பொலெ வெறாயுள
ளொளியிரு ணீஙகி யுயிரசிவ மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஒளியும் இருளும் ஒரு காலும் தீரா
ஒளி உள் ஓர்க்கு அன்றோ ஒழியாது ஒளியும்
ஒளி இருள் கண்ட கண் போலே வேறாய் உள்
ஒளி இருள் நீங்கி உயிர் சிவம் ஆமே.

பதப்பொருள்:

ஒளியும் (ஜோதியாகிய ஞானமும்) இருளும் (இருளாகிய மாயையும்) ஒரு (எந்தவொரு) காலும் (காலத்திலும்) தீரா (இல்லாமல் போகப் போவதில்லை)
ஒளி (உண்மையான ஞானமாகிய ஒளியை) உள் (தமக்குள்) ஓர்க்கு (ஆராய்ந்து தெளிவாக அறிந்து கொண்டவர்களுக்கு) அன்றோ (மட்டுமே) ஒழியாது (அந்த ஒளியானது எப்போதும் நீங்காத) ஒளியும் (ஜோதியாக வீற்றிருக்கும்)
ஒளி (வெளிச்சத்தையும்) இருள் (இருட்டையும்) கண்ட (கண்டதே உண்மை என்று நம்பிக் கொண்டு இருக்கின்ற) கண் (புறக் கண்களைப்) போலே (போல) வேறாய் (இல்லாமல் பார்க்கின்ற அனைத்தையும் மாயை என்பதை அறிந்து இறைவனின் அம்சமாகவே) உள் (உள்ளுக்குள் இருக்கின்ற)
ஒளி (ஆன்மாவின் ஜோதியை உணர்ந்து கொண்ட போது) இருள் (இருளாகிய மாயை) நீங்கி (நீங்கி) உயிர் (உயிரானது) சிவம் (சிவமாகவே) ஆமே (ஆகி விடும்).

விளக்கம்:

ஜோதியாகிய ஞானமும் இருளாகிய மாயையும் எந்தவொரு காலத்திலும் இல்லாமல் போகப் போவதில்லை. உண்மையான ஞானமாகிய ஒளியை தமக்குள் ஆராய்ந்து தெளிவாக அறிந்து கொண்டவர்களுக்கு மட்டுமே அந்த ஒளியானது எப்போதும் நீங்காத ஜோதியாக வீற்றிருக்கும். தாம் பார்க்கின்ற வெளிச்சத்தையும் இருட்டையும் மட்டுமே உண்மை என்று நம்பிக் கொண்டு இருக்கின்ற புறக் கண்களைப் போல இல்லாமல் பார்க்கின்ற அனைத்தையும் மாயை என்பதை அறிந்து இறைவனின் அம்சமாகவே உள்ளுக்குள் இருக்கின்ற ஆன்மாவின் ஜோதியை உணர்ந்து கொண்ட போது இருளாகிய மாயை நீங்கி உயிரானது சிவமாகவே ஆகி விடும்.