பாடல் #1640

பாடல் #1640: ஆறாம் தந்திரம் – 6. தவ நிந்தை (இறைவன் உள்ளுக்குள் இருப்பதை அறியாமல் வெளியில் தேடுவது பயனற்றது என்பதை கூறுவது)

இலைதொட்டுப் பூப்பறித் தெந்தைக் கென்றெண்ணி
மலர்தொட்டுக் கண்டேன் வரும்பலன் காணென்
றலைகெட்ட நூல்கண்டு தாழ்ந்தேனென் னுள்ளந்
தலைதொட்டுக் கண்டேன் றவங்கண்ட வாறே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

இலைதொடடுப பூபபறித தெநதைக கெனறெணணி
மலரதொடடுக கணடென வருமபலன காணென
றலைகெடட நூலகணடு தாழநதெனென னுளளந
தலைதொடடுக கணடென றவஙகணட வாறெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

இலை தொட்டு பூ பறித்து எந்தைக்கு என்று எண்ணி
மலர் தொட்டு கண்டேன் வரும் பலன் காண் என்று
தலை கெட்ட நூல் கண்டு தாழ்ந்தேன் என் உள்ளம்
தலை தொட்டு கண்டேன் தவம் கண்ட ஆறே.

பதப்பொருள்:

இலை (பூச்செடிகளில் உள்ள இலைகளை) தொட்டு (தொட்டு) பூ (அதில் மலர்ந்து இருக்கின்ற பூக்களை) பறித்து (பறித்து எடுத்து) எந்தைக்கு (எமது தந்தையாகிய இறைவனுக்கு சாற்ற வேண்டும்) என்று (என்று) எண்ணி (எண்ணிக் கொண்டு)
மலர் (மலர்களை) தொட்டு (கோர்த்து மாலையாக்கி சாற்றி) கண்டேன் (பார்த்துக் கொண்டு இருந்தேன்) வரும் (அதனால் கிடைக்கின்ற) பலன் (பலனை) காண் (பார்க்கலாம்) என்று (என்று)
தலை (உண்மை இல்லாத) கெட்ட (தவறான கருத்துக்களை சொல்லுகின்ற) நூல் (நூல்களில்) கண்டு (உள்ளதை கண்டு) தாழ்ந்தேன் (தாழ்ந்து விட்டேன் என்று உணர்ந்து கொண்டேன்) என் (அப்போது எனது) உள்ளம் (உள்ளத்திற்குள்ளே)
தலை (வீற்றிருக்கின்ற இறைவனின் அருளால் தலை உச்சியில் இருக்கின்ற) தொட்டு (பேரொளியாகிய இறை சக்தியை தொட்டு அடைந்து) கண்டேன் (கண்டு கொண்டேன்) தவம் (தவத்தை) கண்ட (காணுக்கின்ற) ஆறே (வழி முறை இதுவே என்று கண்டு உணர்ந்தேன்).

விளக்கம்:

பூச்செடிகளில் உள்ள இலைகளை தொட்டு அதில் மலர்ந்து இருக்கின்ற பூக்களை பறித்து எடுத்து எமது தந்தையாகிய இறைவனுக்கு சாற்ற வேண்டும் என்று எண்ணிக் கொண்டு மலர்களை கோர்த்து மாலையாக்கி சாற்றி அதனால் கிடைக்கின்ற பலனை பார்க்கலாம் என்று எதிர் பார்த்துக் கொண்டு இருந்தேன். எந்த பலனும் கிடைக்காத போது ஏன் என்று ஆராய்ந்து பார்த்தால் உண்மை இல்லாத தவறான கருத்துக்களை சொல்லுகின்ற நூல்களில் உள்ளதை கண்டு அதன் படி செய்து இப்படி தாழ்ந்து விட்டேன் என்று உணர்ந்து கொண்டேன். அப்போது எனது உள்ளத்திற்குள்ளே வீற்றிருக்கின்ற இறைவனின் அருளால் தலை உச்சியில் இருக்கின்ற பேரொளியாகிய இறை சக்தியை தொட்டு அடைந்து தவத்தை காணுக்கின்ற வழி முறை இதுவே என்று கண்டு உணர்ந்து கொண்டேன்.

பாடல் #1641

பாடல் #1641: ஆறாம் தந்திரம் – 6. தவ நிந்தை (இறைவன் உள்ளுக்குள் இருப்பதை அறியாமல் வெளியில் தேடுவது பயனற்றது என்பதை கூறுவது)

படர்சடை மாதவம் பற்றிய பத்தர்க்
கிடரடை யாவண்ண மீச னருளும்
விடரடை செய்தவர் மெய்த்தவ நோக்கி
லுடரடை செய்வ தொருன்மத்த மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

படரசடை மாதவம பறறிய பததரக
கிடரடை யாவணண மீச னருளும
விடரடை செயதவர மெயததவ நொககி
லுடரடை செயவ தொருனமதத மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

படர் சடை மா தவம் பற்றிய பத்தர்க்கு
இடர் அடையா வண்ணம் ஈசன் அருளும்
விடர் அடை செய்தவர் மெய் தவம் நோக்கில்
உடர் அடை செய்வது ஒரு உன்மத்தம் ஆமே.

பதப்பொருள்:

படர் (படர்ந்து விரிந்த) சடை (சடையைக் கொண்டு) மா (மாபெரும்) தவம் (தவத்தைக் கொண்டவனாக இருக்கின்ற இறைவனை) பற்றிய (உறுதியாக பற்றிக் கொண்ட) பத்தர்க்கு (பக்தர்களுக்கு)
இடர் (அவர்களது வாழ்வில் எந்த விதமான துன்பங்களும்) அடையா (வந்து சேராத) வண்ணம் (படி) ஈசன் (இறைவன்) அருளும் (அருளுவான்)
விடர் (தாம் செய்ய வேண்டிய கடமைகளைத் துறந்து காட்டிற்குள்) அடை (வீற்றிருந்து) செய்தவர் (தவம் செய்கின்றோம் என்று முயற்சி செய்கின்றவர்களின்) மெய் (உண்மையான) தவம் (தவத் தன்மை என்னவென்று) நோக்கில் (பார்த்தால்)
உடர் (தவத்திற்கான உடல்) அடை (அடையாளங்களை மட்டுமே கடை பிடித்துக் கொண்டு) செய்வது (செய்வது தவம் ஆகாது) ஒரு (ஒரு விதமான) உன்மத்தம் (பித்துத் தன்மையே) ஆமே (ஆகும்).

விளக்கம்:

படர்ந்து விரிந்த சடையைக் கொண்டு மாபெரும் தவத்தைக் கொண்டவனாக இருக்கின்ற இறைவனை உறுதியாக பற்றிக் கொண்ட பக்தர்களுக்கு அவர்களது வாழ்வில் எந்த விதமான துன்பங்களும் வந்து சேராத படி இறைவன் அருளுவான். அப்படி இல்லாமல் தாம் செய்ய வேண்டிய கடமைகளைத் துறந்து தவம் செய்கின்றோம் என்று காட்டிற்குள் வீற்றிருந்து முயற்சி செய்கின்றவர்களின் உண்மையான தவத் தன்மை என்னவென்று பார்த்தால் அவர்கள் தவத்திற்கான உடல் அடையாளங்களை மட்டுமே கடை பிடித்துக் கொண்டு செய்வதால் அது தவம் ஆகாது. அது ஒரு விதமான பித்துத் (புத்தி கெட்ட) தன்மையே ஆகும்.

கருத்து:

தவம் செய்கின்றோம் என்ற பெயரில் காட்டிற்குள் செல்வதும் தாடி வளர்த்துக் கொள்வதும் ஜடாமுடி வைத்துக் கொள்வதும் புலித் தோலில் அமர்வதும் போன்ற உடல் சம்பந்தமான செயல்களை மட்டுமே கவனத்தில் கொண்டு செய்வது தவம் ஆகாது. உள்ளுக்குள்ளே இருக்கின்ற இறைவனை உறுதியாக பற்றிக் கொண்டு பக்தி செய்வதே உண்மையான தவம் ஆகும்.

பாடல் #1642

பாடல் #1642: ஆறாம் தந்திரம் – 6. தவ நிந்தை (இறைவன் உள்ளுக்குள் இருப்பதை அறியாமல் வெளியில் தேடுவது பயனற்றது என்பதை கூறுவது)

ஆற்றிற் கிடந்த முதலைகண் டஞ்சிப்போ
யீற்றுக் கரடிக் கெதிர்ப்பட்ட தனொக்கும்
நோற்றுத் தவஞ்செய்யார் நூலறி யாதவர்
சோற்றுக்கு நின்று சுழல்கின்ற வாறே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஆறறிற கிடநத முதலைகண டஞசிபபொ
யீறறுக கரடிக கெதிரபபடட தனொககும
நொறறுத தவஞசெயயார நூலறி யாதவர
சொறறுககு நினறு சுழலகினற வாறெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஆற்றில் கிடந்த முதலை கண்டு அஞ்சி போய்
ஈற்று கரடிக்கு எதிர் பட்ட தன் ஒக்கும்
நோற்று தவம் செய்யார் நூல் அறியாதவர்
சோற்றுக்கு நின்று சுழல்கின்ற ஆறே.

பதப்பொருள்:

ஆற்றில் (ஆற்றில் / ஆறு போன்ற வாழ்க்கையில்) கிடந்த (அசையாமல் கிடக்கும் / ஒன்றும் இல்லாததாகிய) முதலை (முதலையை / துன்பங்களை) கண்டு (கண்டு / எதிர்காலத்தை நினைத்து கற்பனை செய்து) அஞ்சி (பயந்து) போய் (போய்)
ஈற்று (குட்டிகளை ஈன்ற / உலகப் பற்றுக்கள்) கரடிக்கு (கரடியின் / எனும் பெரிய மாயையில்) எதிர் (எதிரில் சென்று) பட்ட (அகப்பட்டுக் / மாட்டிக்) தன் (கொண்டதை) ஒக்கும் (ஒத்து இருக்கின்றது)
நோற்று (இறைவனை அடைய வேண்டும் என்று முறைப் படி) தவம் (தவம்) செய்யார் (செய்யாமல் இருக்கின்றார்கள்) நூல் (ஏனெனில் அதற்கு என்று அருளப்பட்டிருக்கும் ஆகமங்களை) அறியாதவர் (படித்து அறியாதவர்களாக இருக்கின்றார்கள்)
சோற்றுக்கு (இவர்கள் காட்டிற்கு சென்று தவம் செய்கின்றேன் என்று தினம் தோறும் பசிக்கு உணவு) நின்று (வேண்டி நின்று) சுழல்கின்ற (காட்டை சுற்றி வருவது) ஆறே (இருக்கின்றது).

விளக்கம்:

இறைவனை அடைய வேண்டும் என்று முறைப் படி தவம் செய்யாமல் இருக்கின்றார்கள் ஏனெனில் அதற்கு என்று அருளப்பட்டிருக்கும் ஆகமங்களை படித்து அறியாதவர்களாக இருக்கின்றார்கள். இவர்கள் காட்டிற்கு சென்று தவம் செய்கின்றேன் என்று தினம் தோறும் பசிக்கு உணவு வேண்டி நின்று காட்டை சுற்றி வருவது எப்படி இருக்கின்றது என்றால் ஆற்றில் அசையாமல் கிடக்கும் முதலையை கண்டு பயந்து போய் குட்டிகளை ஈன்ற கரடியின் எதிரில் சென்று அகப்பட்டுக் கொண்டதை ஒத்து இருக்கின்றது.

தத்துவ விளக்கம்:

ஆறு என்கின்ற வாழ்க்கையில் நடப்பவற்றை மிகப் பெரிய துன்பம் என்று நினைத்தும் வரப்போகின்ற எதிர்காலத்தை நினைத்து பயந்தும் குடும்பத்தை விட்டு காட்டிற்கு சென்று தவம் செய்கின்றேன் என்று காட்டிற்கு சென்றாலும் வீட்டில் விட்டு வந்த உற்றார் உறவினர்களையும் சொத்துக்களையும் நினைத்துக் கொண்டே பசிக்கு உணவு தேடி அலைவது சிறிய துன்பத்திற்கு பயந்து மிகப் பெரிய துன்பத்தில் சிக்கிக் கொண்டது போல் ஆகும்.

பாடல் #1643

பாடல் #1643: ஆறாம் தந்திரம் – 6. தவ நிந்தை (இறைவன் உள்ளுக்குள் இருப்பதை அறியாமல் வெளியில் தேடுவது பயனற்றது என்பதை கூறுவது)

பழுக்கின்ற வாறும் பழமுண்ணு மாறுங்
குழக்கன்று துள்ளியக் கோணியைப் புக்காற்
குழக்கன்று கொட்டிலிற் கட்டவல் லார்க்குள்
ளிழுக்காது நெஞ்சத் திடவொன்று மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பழுககினற வாறும பழமுணணு மாறுங
குழககனறு துளளியக கொணியைப புககாற
குழககனறு கொடடிலிற கடடவல லாரககுள
ளிழுககாது நெஞசத திடவொனறு மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பழுக்கின்ற ஆறும் பழம் உண்ணும் ஆறும்
குழ கன்று துள்ளி அக் கோணியை புக்கு ஆல்
குழ கன்று கொட்டிலில் கட்ட வல்லார்க்கு உள்
இழுக்காது நெஞ்சத்து இட ஒன்றும் ஆமே.

பதப்பொருள்:

பழுக்கின்ற (தவத்தில் மேன்மை நிலையை அடைகின்ற) ஆறும் (வழி முறையும்) பழம் (அந்த தவத்தின் பலன்களை) உண்ணும் (அனுபவிக்கின்ற) ஆறும் (வழி முறையும்)
குழ (இளங்) கன்று (கன்று போல) துள்ளி (ஆசைகளின் வழியே துள்ளி குதிக்கின்ற மனதை) அக் (தமது) கோணியை (உடலாகிய கோணிப் பைக்குள்) புக்கு (உள்ளே புகுந்து) ஆல் (இருக்கும் படி வைத்து)
குழ (இளங்) கன்று (கன்று போல இருக்கின்ற மனதை) கொட்டிலில் (ஆசைகள் இல்லாமல் இறைவனை மட்டுமே நினைக்கும் படி) கட்ட (கட்டி வைக்க) வல்லார்க்கு (முடிந்தவர்களுக்கு) உள் (தமக்கு உள்ளே அடங்கி இருக்கின்ற மனது)
இழுக்காது (மறுபடியும் ஆசைகள் பற்றுக்களின் வழியே இழுத்துக் கொண்டு போகாமல்) நெஞ்சத்து (தமது நெஞ்சத்திற்குள் இறைவன் இருக்கின்ற) இட (இடத்திலேயே) ஒன்றும் (அவனோடு சேர்ந்து) ஆமே (இருக்கும்).

விளக்கம்:

தவத்தில் மேன்மை நிலையை அடைகின்ற வழி முறையும் அந்த தவத்தின் பலன்களை அனுபவிக்கின்ற வழி முறையும் இளங் கன்று போல ஆசைகளின் வழியே துள்ளி குதிக்கின்ற மனதை உடலாகிய கோணிப் பைக்குள் உள்ளே புகுந்து இருக்கும் படி வைத்து ஆசைகள் இல்லாமல் இறைவனை மட்டுமே நினைக்கும் படி கட்டி வைக்க முடிந்தவர்களுக்கு, தமக்கு உள்ளே அடங்கி இருக்கின்ற மனது மறுபடியும் ஆசைகள் பற்றுக்களின் வழியே இழுத்துக் கொண்டு போகாமல், தமது நெஞ்சத்திற்குள் இறைவன் இருக்கின்ற இடத்திலேயே அவனோடு சேர்ந்து இருக்கும்.

யோக விளக்கம்:

யோக வழி முறையில் யோகியானவர் தமது குண்டலினி சக்தியை துள்ளிக் குதிக்கின்ற மூச்சுக் காற்றாகிய கன்றின் மூலம் எழுப்பி ஆறு ஆதார சக்கரங்களாகிய பழங்களை பழுக்கும் படி செய்து குண்டலினி சக்தியை ஏழாவது சக்கரமாகிய சகஸ்ரதளம் எனும் கோணிப் பைக்குள் எடுத்துச் சென்று கட்டி வைத்து அதன் பலனால் ஊறுகின்ற அமிழ்தத்தை உண்டு அங்கே வீற்றிருக்கும் இறை சக்தியோடு ஒன்றாக சேர்ந்து விடும் படி செய்து இறைவனை அடையலாம்.

பாடல் #1644

பாடல் #1644: ஆறாம் தந்திரம் – 6. தவ நிந்தை (இறைவன் உள்ளுக்குள் இருப்பதை அறியாமல் வெளியில் தேடுவது பயனற்றது என்பதை கூறுவது)

சித்தஞ் சிவமாகச் செய்தவம் வேண்டாவாற்
சித்தஞ் சிவானந்தஞ் சேர்ந்தோ ரறவுண்டாற்
சித்தஞ் சிவமாகவே சித்தி முத்தியாஞ்
சித்தஞ் சிவமாதல் செய்தவப் பேறே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சிததஞ சிவமாகச செயதவம வெணடாவாற
சிததஞ சிவானநதஞ செரநதொ ரறவுணடாற
சிததஞ சிவமாகவெ சிததி முததியாஞ
சிததஞ சிவமாதல செயதவப பெறெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சித்தம் சிவம் ஆக செய் தவம் வேண்டா ஆல்
சித்தம் சிவ ஆனந்தம் சேர்ந்தோர் அற உண்டால்
சித்தம் சிவம் ஆகவே சித்தி முத்தி ஆம்
சித்தம் சிவம் ஆதல் செய் தவ பேறே.

பதப்பொருள்:

சித்தம் (அறிவு) சிவம் (சிவமாகவே) ஆக (ஆகுவதற்கு) செய் (உடலால் செய்கின்ற) தவம் (தவ வழி முறைகள் எதுவும்) வேண்டா (வேண்டாம்) ஆல் (ஆதலால் அறிவினால் இறைவனை எண்ணிக்கொண்டு இருந்தாலே போதும்)
சித்தம் (இது போல இறைவனை எண்ணிக் கொண்டு இருப்பதனால் அறிவு) சிவ (சிவமாகி) ஆனந்தம் (பேரின்பத்தை) சேர்ந்தோர் (அடைந்தவர்கள்) அற (அனைத்தையும் விட்டு விலகி) உண்டு (இருப்பதனாலேயே அடைந்தார்கள்) ஆல் (அதன் விளைவாக)
சித்தம் (அறிவு) சிவம் (சிவமாகவே) ஆகவே (ஆகி விடும் போது) சித்தி (அதனால் கிடைக்கின்ற இறை அருளே) முத்தி (முக்தியாகவும்) ஆம் (இருக்கின்றது)
சித்தம் (இவ்வாறு அறிவு) சிவம் (சிவமாகவே) ஆதல் (ஆகுவது) செய் (இறைவனை பற்றி மட்டுமே எண்ணிக்கொண்டே இருக்கின்ற) தவ (தவத்தின்) பேறே (பலனால் ஆகும்).

விளக்கம்:

அறிவு சிவமாகவே ஆகுவதற்கு உடலால் செய்கின்ற தவ வழி முறைகள் எதுவும் வேண்டாம் ஆதலால் அறிவினால் இறைவனை எண்ணிக்கொண்டு இருந்தாலே போதும். இது போல இறைவனை எண்ணிக் கொண்டு இருப்பதனால் அறிவு சிவமாகி பேரின்பத்தை அடைந்தவர்கள் அனைத்தையும் விட்டு விலகி இருப்பதனாலேயே அடைந்தார்கள். அதன் விளைவாக அறிவு சிவமாகவே ஆகி விடும் போது அதனால் கிடைக்கின்ற இறை அருளே முக்தியாகவும் இருக்கின்றது. இவ்வாறு அறிவு சிவமாகவே ஆகுவது இறைவனை பற்றி மட்டுமே எண்ணிக் கொண்டே இருக்கின்ற தவத்தின் பலனால் ஆகும்.