பாடல் #1166 இல் உள்ளபடி ஞானத்தால் தரிசனம் செய்து கொண்டே இருக்கின்ற சாதர்களோடு எட்டு திசைகளிலும் கூடவே சேர்ந்து வருகின்ற என்றும் இளமையான இறைவியானவள் ஆதியிலிருந்தே எட்டு திசைகளிலும் இருக்கின்ற அனைத்து உலகங்களையும் இயக்கிக் கொண்டு வீற்றிருக்கின்றாள். இதை செய்து கொண்டு விண்ணகத்தில் இருக்கும் இறைவியின் நிலையை அடைந்த சாதகர்களை எட்டு திசையிலும் இருக்கின்ற உயிர்கள் நறுமணம் வீசும் மலர்கள் தூவி அர்ச்சித்து தொண்டு செய்து எட்டுத் திசையெங்கும் அவர்களை வணங்கி நிற்கும்படி அருளுகின்றாள் என்றும் இளமையான இறைவி.
பாடல் #1167 இல் உள்ளபடி அனைவரும் வணங்கும் அளவிற்கு என்றும் இளமையுடன் இருக்கும் இறைவியால் அருளப்பட்ட சாதகர் பேரொளியாக இருக்கும் இறைவியிடமிருந்தே எவ்வாறு சூரியனிடமிருந்து ஒளியைப் பெற்று இரவில் நிலா பிரகாசிக்கிறதோ அது போலவே இறைவியாகிய அருட் பேரொளியிடமிருந்து தாம் ஒளியாகிய அருளைப் பெறுவதையும் அந்த அருள் நிரப்பப்பட்டதால் மாளிகை போல இருக்கும் தமது உடல் முழுவதும் அருள் நிறைந்து இருக்கின்றார். அதன் பிறகு தமது தலை உச்சியில் உள்ள சகஸ்ரதள ஜோதியோடு உடல் முழுவதும் உள்ள பதினாறு கலைகளையும் (பாடல் #713 இல் காண்க) ஒன்று சேர்த்து தமக்குள் இருக்கும் அருளைக் கொண்டு அனைத்து உலகங்களையும் இயக்கிக் கொண்டே இருப்பதால் ஆதிப் பரம்பொருளான பராசக்தியாகவே சாதகர் ஆகிவிடுகின்றார்.
பாடல் #1168 இல் உள்ளபடி பராசக்தியாகவே ஆகிவிடுகின்ற சாதகர் அந்த பராசக்தியின் பலவித அம்சங்களில் பல வகையான உலக இயக்கங்களை செய்து கொண்டு இருக்கும் போது அவருக்கு அருளைத் தருகின்ற சக்தியாக இருப்பது அனைத்திற்கும் தலையான பிரம்மம் என்று உணரப்படும் இறைவியாகும். இந்த இறைவியே இரா சக்தி என்று யாமள ஆகமத்தில் அழைக்கப்படுகிறாள். குருவாக வந்து அருளுகின்ற இவளது பலவிதமான திருக்கோலங்களை யாம் எமக்குள்ளே தரிசித்து உணர்ந்து கொண்டோம்.
மேவிய சீவன் வடிவது சொல்லிடில் கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு மேவியது கூறது ஆயிரமானால் ஆவியின் கூறு நூறாயிரத்தொ ன்றாமே. திருமந்திரம் பாடல் # 2011
முதலில் ஒரு மாட்டின் முடியை எடுத்து அதை 100 ஆக பிரிக்க வேண்டும். அந்த 100 இல் ஒன்றை எடுத்து அதை ஆயிரமாக பிரிக்க வேண்டும். அந்த ஆயிரத்தில் ஒன்றை எடுத்து நூறாயிரம் ஆக பிரிக்க வேண்டும். கணக்கின் பாடி பார்த்தால் ஒரு மாட்டின் முடியை ஆயிரம் கோடி இழைகளாகப் பிரிக்க வேண்டும். இது அணுவைப் பிளப்பது போலத்தான். ஒரு மனிதனின் முடியானது 40-80 மைக்ரோனாக உள்ளது. பசுவின் முடியானது சிறிது அடர்த்தியாகவே இருக்கும். எனவே 100 மைக்ரோன் என்றே எடுத்துக் கொள்வோம்.
100 மைக்ரோன் = 0.1 மில்லிமீட்டர்
பசு மாட்டின் ஒரு முடியை நூறாகப் பிரித்தால் 0.1 மில்லி மீட்டர் இதனை 100 ஆக பிரித்தால் = 0.001 மில்லி மீட்டர்
0.001 மில்லி மீட்டர் இதனை ஆயிரமாகப் பிரித்தால் = 0.000001 மில்லி மீட்டர்.
0.000001 மில்லி மீட்டர் இதனை நூறாயிரமாகப் (100,000) பிரித்தால் = 0.00000000001 மில்லிமீட்டர்
திருமூலர் உயிரின் அளவாகக் குறிப்பிடுவது சராசரியாக 0.00000000001 மில்லிமீட்டர்.
தற்போதைய விஞ்ஞானம் ஒரு ஹைட்ரோஜென் அணுவின் சுற்றளவு 0.000000212 எனப் பிரித்திருக்கின்றது. திருமூலர் அதற்கும் கீழே சென்று ஜீவாத்மாவின் அளவு 0.00000000001 மில்லி மீட்டராகக் திருமூலர் கூறியிருக்கின்றார்.
அணுவிற்குள் அணுவாகவும் அதற்கு அப்பாலும் இருப்பவன்தான் இறைவன். அப்படி அணுவிற்குள் அணுவாய் உள்ளதை ஆயிரம் கூறு செய்து அந்த ஆயிரத்தில் ஒரு கூறினை நெருங்க வல்லவர்களுக்கு அணுவிற்குள் அணுவாய் இருக்கின்ற இறைவனை அணுகலாம்.
ஜீவாத்மாவுக்கு கூறப்பட்ட அணுவின் வடிவத்தை ஆயிரம் கூறுகளாக்கிக் கிடைப்பது இறைவன் வடிவம் என்று கூறுகின்றார்.
ஜீவாத்மாவின் அளவு 0.00000000001 மில்லிமீட்டர் இதனை ஆயிரமாகப் பிரித்தால் = 0.0000000000000001
மனிதனின் ஜீவாத்மா 0.00000000001 மில்லிமீட்டர் அளவு இருக்கும். இந்த ஜீவாத்மா அணுக்களுக்குள் அணுவாக இறைவன் இருப்பதாகக் கூறுகின்றார். அணுவிற்குள் மனித ஜீவாத்மா இருப்பதாகவும் அதை ஆயிரம் மடங்கிற்கும் மேல் பிளக்கும் போது அதில் இறைவன் இருக்கிறான் என்றும் திருமூலர் கூறியிருக்கின்றார்.
பாடல் #1169 இல் உள்ளபடி பலவிதமான திருக்கோலங்களில் எமக்குள்ளே உணர்ந்த பராசக்தியாகிய இறைவியே இறைவனை உணர்வதற்கு உயிர்கள் பிறவி எடுக்கும் ஏழு உலகங்களிலும் இறைவனை அறிவதற்காக செய்யும் யோகங்களுக்கெல்லாம் தலையான சக்தியாக இருக்கின்றாள். எமது உயிருக்கு உயிராக எம்மோடு கலந்து இருக்கும் உன்னதமான இறைவனை யாம் உணர்ந்து அவருடன் கலந்து பல காலம் இருந்து உச்ச நிலையை அடைந்த ஒரு சமயத்தில் பேரின்பத்தை யாம் பெற்று அனுபவித்தோம். அப்போது எம்மோடு கலந்து இருக்கும் இறைவனோடு ஏழு உலகங்களிலும் பரவி இருக்கும் பராசக்தியாகிய இறைவியும் கலந்து பரம்பொருள் ஆகி நின்று இறைவன் இறைவி யாம் என்கிற தனித்தன்மைகள் இல்லாமால் ஒரே பொருளாகி இருக்கின்றோம்.
பாடல் #1170 இல் உள்ளபடி ஒரே பொருளாக இருக்கின்ற எமக்குள் மிகவும் பெருமையை உடைய எமது தலைவனாகிய இறைவனும் யாமும் ஒன்றாகக் கலந்து இருக்கின்ற நிலையிலும் அதனால் கிடைக்கின்ற பேரின்பத்திலும் இருக்கும் போது மாயையாகிய மயக்கத்தை அளித்து தம்மை நாடும் அடியவர்களை கவர்ந்து இழுக்கும் நறுமணம் வீசுகின்ற மலர்களைச் சூடியிருக்கும் அழகிய கூந்தலையுடைய மனோன்மணியாகிய என்றும் இளமையான இறைவியும் எம்மோடு கலந்து ஒரே பொருளாக இருக்கும் விதத்தை எமக்குள் ஆராய்ந்து உணர்ந்து கொள்வது ஆயுழி எனும் மாபெரும் யோகமாகும்.
பாடல் #1171 இல் உள்ளபடி ஆயுழி எனும் மாபெரும் யோகத்தில் இருக்கும் போது அதிலிருந்து அனைத்திற்கும் நன்மை தருவதற்கு வெளிப்படும் சக்தியின் ஒளி உருவத்தை தாங்குகின்ற பீடமாக சாதகரின் உடலே இருக்கின்றது. அந்த சக்தியின் ஒளியானது தெற்குத் திசையை நோக்கி பரவிக் கொண்டிருக்கின்றது. அந்த சக்தியின் ஒளி சாதகரின் வயிற்றின் நடுப்பகுதியிலிருந்து வெளிப்படுகின்றது. இந்த சக்தியாக வெளிப்படும் இறைவியின் திருவடிகளே அனைத்திற்கும் மேலானது என்பதை உங்களுக்குள் ஆராய்ந்து அறிந்து கொள்ளுங்கள்.
பாடல் #1172 இல் உள்ளபடி சாதகர் தமக்குள் ஆராய்ந்து அறிந்து கொண்ட யோக ஓளியானது அதற்கும் மேலான அக்னியாக இருக்கும் இறைவனின் ஒளி உருவத்தோடு சேர்ந்து பரவும் போது அந்த பக்குவப்பட்ட சாதகரின் உள்ளிருந்து வெளிப்படுகின்ற அனைத்து விதமான மாயைகளையும் இறைவனின் அக்னி உருவமே சுட்டு எரித்து அழித்து விடுகின்றது. அதன் பிறகு உத்வேகத்துடன் சாதகருக்குள்ளிருந்து எழுகின்ற வெளிச்சமும் சத்தமும் மிகவும் உச்ச நிலையை அடையும் போது அதிலிருந்து மிகுதியாக வெளிப்படுகின்றாள் அடியவர்களின் எண்ணத்தை தம்மேல் இழுக்கின்ற அழகிய வளையல்களை அணிந்த இறைவி.
பாடல் #1173 இல் உள்ளபடி சாதகருக்குள்ளிருந்து மிகுதியாக வெளிப்பட்ட இறைவி எப்படி இருக்கின்றாள் என்ன செய்கின்றாள் என்பதை இந்தப் பாடலில் அறிந்து கொள்ளலாம். தனக்கென்று ஒரு ஆரம்பமும் இல்லாமல் தானாகவே இருக்கின்ற வழிமுறைப்படி இறைவியானவள் எட்டுவிதமான சக்திகளாக (பாடல் #1084 இல் காண்க) சாதகருக்குள்ளும் பதினான்கு உலகங்களிலும் சரிசமமாக உருவாக்கி செயல்படுத்துகின்றாள். அவளே உள்ளுக்குள் இருக்கும் ஒளி வடிவான இறைவியாகவும் அனைத்தையும் இயக்குகின்ற சக்தி வடிவம் என்று உணரப்படுகின்ற இறைவனாகவும் இருக்கின்றாள். இந்த இறைவியானவள் ஒரு குற்றமும் குறையும் சொல்ல முடியாத அளவு என்று அறிந்து உணர்ந்து கொள்வதற்கு ஏற்ற தூய்மையான பொருளாக இருக்கின்றாள்.
பாடல் #1174 இல் உள்ளபடி ஒரு குற்றமும் குறையும் சொல்ல முடியாத என்று அறிந்து உணர்ந்து கொள்வதற்கு ஏற்ற தூய்மையான பொருளாக இருக்கின்ற பராசக்தியின் பேரறிவைக் கொடுக்கும் தத்துவமானது தானாகவே இருபத்து ஏழு விதமான தத்துவங்களாக இருக்கின்றது. இந்த தத்துவங்களைப் பெற்று பேரறிவைப் பெறுவதற்கு ஏற்றதாக சாதகரின் உள்ளுக்குள்ளிருந்து எழுகின்ற ஒரு மந்திரத்தை அவர் திரும்பத் திரும்ப செபித்து தியானித்துக் கொண்டே இருந்தால் அவருக்குள்ளிருந்து மிகுதியாக வெளிப்பட்டு எழுகின்ற இறைவியானவள் வெள்ளை நிறத்துடனும் மூன்று கண்களுடனும் கதை ஆயுதத்தை ஏந்திக் கொண்டும் ஆதி முத்திரையைக் காட்டிக் கொண்டும் இருப்பாள்.