பாடல் #1306

பாடல் #1306: நான்காம் தந்திரம் – 11. சாம்பவி மண்டலச் சக்கரம் (சிவசக்தி சேர்ந்திருக்கும் சிவலிங்கத் திருமேனி சக்கரம்)

உணர்ந்தெழு மந்திர மோமெனு முள்ளே
யணைந்தெழு மாங்கதி யாதிய தாகுங்
குணர்ந்தெழு சூதனுஞ் சூதியுங் கூடிக்
கணந்தெழுங் காணு மக்காமுகை யாமே.

விளக்கம்:

பாடல் #1305 இல் உள்ளபடி சாதகர் தமக்குள் சாம்பவி மண்டலச் சக்கரத்தை பேரின்ப உருவமாக உணரும் பொழுது அவருக்குள்ளிருந்து எழுகின்ற மந்திரமானது ஓம் என்று நீட்டி உச்சரிக்கும் ஓங்காரத்தின் ஓரெழுத்திலேயே அடங்கி விடும். அப்போது சாதகரோடு சேர்ந்து எழுகின்ற ஓங்காரமே சாதகர் சென்று அடையும் கதி மோட்சமாகவும் அவர் ஆரம்பித்த ஆதி மூலமாகவும் இருக்கின்றது. இதை சாதகர் முழுவதுமாக உணரும் போது இதுவரை அவருக்குள் மாயையால் மறைந்து விளையாடிக் கொண்டு இருந்த இறைவனும் இறைவியும் மாயை நீங்கி வெளிப்பட்டு சாதகரோடு ஒன்றாகக் கலந்து சாம்பவி மண்டலச் சக்கரத்தின் பேரின்ப வடிவமாகவே இருப்பார்கள். அதன் பிறகு சாதகரும் அந்த பேரின்பத்திலேயே இறைவனோடும் இறைவியோடும் என்றும் இலயித்து இருப்பார்.

கருத்து:

சாம்பவி மண்டலச் சக்கரத்தில் உள்ள மந்திரத்தின் ஐந்து எழுத்துக்களும் அவருக்குள் ஓங்காரத்தின் ஓரெழுத்தாகவே சேர்ந்து எழும் போது சாதகர் சாம்பவி மண்டலச் சக்கரமாகவே ஆகி அதில் இருக்கும் இறைவனோடும் இறைவியோடும் கலந்து அதிலேயே இலயித்து இருப்பார்.