பாடல் #1195

பாடல் #1195: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

மேவிய மண்டல மூன்றுடன் கீழெரி
தாவிய நற்பதத் தண்மதி யங்கதிர்
மூவருங் கூடி முதல்வியாய் முன்நிற்பார்
ஓவினு மேவிடு முள்ளொளி யாமே.

விளக்கம்:

பாடல் #1194 இல் உள்ளபடி சாதகரின் உள்ளத்திற்கும் பரவி வீற்றிருக்கும் இறைவியானவள் அவருக்குள் இருக்கும் மூன்று மண்டலங்களிலும் பேரொளி உருவமாக இருப்பதை இந்தப் பாடலில் அறிந்து கொள்ளலாம். சாதகருக்குள் இருக்கும் மூன்று மண்டலங்களில் அடியில் இருக்கும் அக்னி மண்டலமாகிய மூலாக்னியே இறைவியின் நன்மை தரும் திருவடிகளாகவும், சூரிய மண்டலமே இறைவியின் திருமேனியாகவும், தலை உச்சிக்கு மேலே இருக்கும் துவாதசாந்த வெளியையும் தாண்டி இருக்கும் சந்திர மண்டலமே (பாடல் #1187 இல் உள்ளபடி) இறைவியின் திருமுடியாகவும் கொண்ட பேரொளி உருவமாக இறைவி இருக்கின்றாள். சாதகர் கண்மூடி தியானத்தில் இருந்தாலும் தமக்குள் பேரொளி உருவமாக இறைவி வீற்றிருப்பதை உணர்ந்து தரிசிக்க முடியும்.

பாடல் #1196

பாடல் #1196: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

உள்ளொளி மூவிரண் டோங்கிய வங்கங்கள்
வெள்ளொளி யங்கியின் மேவி யவரொடுங்
கள்ளவிழ் கோனைக் கலந்துட னேநிற்கும்
கொள்ள விசுத்திக் கொடியமு தாமே.

விளக்கம்:

பாடல் #1195 இல் உள்ளபடி சாதகருக்குள் பேரொளியாக வீற்றிருக்கும் இறைவியானவள் தனது சக்தியின் மூலம் சாதகருக்குள் இருக்கும் ஆறு ஆதாரச் சக்கரங்களுக்கும் உயர்ந்த நிலையை அருளி அவருக்குள் இருக்கும் குண்டலினி சக்தியாகிய அக்னியில் பரவி அதனோடு சேர்ந்து நிற்கின்றாள். தேன் நிறைந்து இருக்கும் கொன்றை மலர்களை மாலையாகச் சூடியிருக்கும் அரசனாகிய இறைவனுடன் ஒன்றாகக் கலந்து இறை சக்தியுடனே சாதகருக்குள் வீற்றிருக்கும் இறைவியானவள் சாதகர் தம்மை உணர்ந்து அனுபவித்துக் கொள்ளும்படி தொண்டைக்கு அருகில் இருக்கும் விசுத்திச் சக்கரத்தில் இருந்து கொடி போல மேலேறிச் சென்று தலை உச்சியில் இருக்கும் சகஸ்ரதளத்திலிருந்து அமிழ்தமாகப் பொழிகின்றாள்.

பாடல் #1197

பாடல் #1197: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

கொடியதி ரேகை குறியுள் இருப்பப்
படியது வாருணைப் பைங்கழ லீசன்
வடிவது வானந்தம் வந்து முறையே
இடுமுத லாறங்க மேந்திழை யாளே.

விளக்கம்:

பாடல் #1196 இல் உள்ளபடி விசுத்திச் சக்கரத்திலிருந்து கொடி போல மேலேறிச் சென்று சகஸ்ரதளத்தில் உச்ச நிலையில் மின்னல் போன்ற ஒளியையும் சக்தியையும் கொண்டு இருக்கும் இறைவியானவள் அங்கிருக்கும் இறை சக்தியையே முதன்மையாகக் கொண்டு அதனுள் வீற்றிருக்கும் போது அங்கிருந்து கங்கையைப் போன்ற அமிழ்தம் கீழிறங்கும் படி இறை சக்தியானது ஊற்றாகப் பொழிகின்றது. இதுவே பசுமையான பொன் போன்ற திருவடிகளைக் கொண்ட இறைவனின் உருவமாக இருப்பது பேரின்பமாகும். இந்தப் பேரின்பத்தை அருளும் அமிழ்தத்தை சாதகரின் பக்குவத்திற்கு ஏற்றபடி அவருக்குள் இருக்கும் ஆறு ஆதார சக்கரங்களுக்கும் முறையாக அருளுகின்ற தலைவியாக அழகிய ஆபரணங்களை அணிந்திருக்கும் இறைவி இருக்கின்றாள்.

கருத்து: இறைவன் சகஸ்ரதளத்திலிருந்து அமிழ்தத்தின் மூலம் பேரின்பத்தை அருளும் உருவமாக இருக்கின்றார். இறைவி அதை ஆறு சக்கரங்களுக்கு கொடுக்கும் சக்தியாக இருக்கின்றாள்.

பாடல் #1198

பாடல் #1198: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

ஏந்திழை யாளு மிறைவர்கள் மூவரும்
காந்தார மாறுங் கலைமுத லீரெட்டும்
ஆந்த குளத்தியு மந்திர ராயுவுஞ்
சார்ந்தன ரேத்த விருந்தனள் சத்தியே.

விளக்கம்:

பாடல் #1197 இல் உள்ளபடி அழகிய ஆபரணங்களை அணிந்து ஆறு ஆதார சக்கரங்களுக்கும் சக்தியளிக்கின்ற இறைவியானவள் மும்மூர்த்திகளாகிய பிரம்மன் திருமால் உருத்திரன் ஆகியோருடைய சக்தியாகவும் ஆறு ஆதாரச் சக்கரங்களிலும் வீசுகின்ற ஒளியாகவும் பதினாறு கலைகளின் மூலம் பதினாறு விதமான செயல்களைப் புரிந்து கொண்டு இருப்பவளுமாகிய இறைவியை தமது எண்ணங்கள் முழுவதும் வைத்து தியானிப்பவர்களும் வேத மந்திரங்களை ஆராய்ந்து இறைவியைத் தெரிந்து கொள்ள முயல்கின்றவர்களும் இறைவியே சரணம் என்று அவளை மட்டுமே சார்ந்து போற்றி வழிபடுபவர்களும் ஆகிய அடியவர்களுக்குள் அவள் வீற்றிருக்கின்றாள்.

பாடல் #1199

பாடல் #1199: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

சத்தியென் பாளொரு சாதகப் பெண்பிள்ளை
முத்திக்கு நாயகி யென்ப தறிகிலர்
பத்தியைப் பாழி லுகுத்தஅப் பாவிகள்
கத்திய நாய்போல் கதறுகின் றாரே.

விளக்கம்:

பாடல் #1198 இல் உள்ளபடி சாதகம் செய்பவர்களின் உள்ளுக்குள் வீற்றிருக்கும் இறைவியானவள் சாதகம் செய்வதன் மூலமே அறிந்து கொள்ளக் கூடிய ஆரம்ப நிலையில் பெண் தெய்வமாக இருக்கின்றாள். இவளே முக்தியை அருளுகின்ற தலைவி என்பதை அறியாமல் பலர் இருக்கின்றனர். இப்படி இருப்பவர்களே அடியவர்கள் இறைவியின் மேல் வைக்கும் பக்தியை அறிந்து கொள்ளாமல் இழிவாகப் பேசி ஏளனம் செய்து பாவிகளாக இருக்கின்றனர். இந்தப் பாவிகள் தன்னால் புரிந்து கொள்ள முடியாததைப் பார்த்து குரைக்கின்ற நாயைப் போலவே இறைவியை அறிந்து கொள்ளாமல் பிதற்றிக் கொண்டு இருக்கின்றார்கள்.