பாடல் #719

பாடல் #719: மூன்றாம் தந்திரம் – 12. கலை நிலை (நாடிகளில் இறைவன் நிற்கும் முறை)

தானே எழுந்தஅத் தத்துவ நாயகி
ஊனே வழிசெய்தெம் உள்ளே யிருந்திடும்
வானோர் உலகீன்ற அம்மை மதித்திடத்
தேனே பருகிச் சிவாலய மாகுமே.

விளக்கம்:

இறைவனை அடைவதற்கு வழியாக பிறக்கும் போதே அனைத்து உயிர்களுக்கும் உள்ளே இருக்கும் குண்டலினி சக்தியானது பாடல் #717 ல் உள்ளபடி அகயோகத்தால் தம் உடலைத் தங்கமாக மாற்றிக்கொண்ட யோகியர்களுக்குள் தானாக எழுந்துவிடும். தேவர்களையும் உலகத்தையும் படைத்த அசையும் சக்தியாகவும் அசையா சக்தியாகவும் இருக்கின்ற இறைவனை சுழுமுனை நாடி வழியாக சகஸ்ரதளத்தை சென்று அடைந்து அங்கிருக்கும் அமிர்தத்தை பருகிவிட்டால் அந்த யோகியரின் உடல் இறைவனை வீற்றிருக்கும் ஆலயமாகும்.

கருத்து: அகயோகம் செய்து குண்டலினி சக்தியை மேலெழுப்பி அமிர்தத்தை பருகும் யோகியர்களின் உடல் இறைவனை வீற்றிருக்கும் ஆலயமாகும்.

பாடல் #720

பாடல் #720: மூன்றாம் தந்திரம் – 12. கலை நிலை (நாடிகளில் இறைவன் நிற்கும் முறை)

திகழும் படியே செறிதரு வாயு
அழியும் படியை அறிகில ராரும்
அழியும் படியை அறிந்தபின் நந்தி
திகழ்கின்ற வாயுவைச் சேர்தலு மாமே.

விளக்கம்:

உயிர்கள் வாழ்வதற்கு மட்டுமன்றி தம்மை வந்தடைந்து மேன்மையடையவும் மூச்சுக்காற்றை படைத்து அருளியிருக்கின்றான் இறைவன். ஆனால் உயிர்கள் சுவாசிக்கும் 540 பங்குகளில் (பாடல் #700 இல் காண்க) ஒரு பங்கைத் தவிர மீதி அனைத்தும் இறைவனை அடையாமலேயே வீணாகிவிடுவதை யாரும் அறிந்திருக்கவில்லை. வீணாகும் மூச்சுக்காற்றின் உண்மைப் பயனை அறிந்து கொண்டு அகயோகம் செய்யும் யோகியர்களுக்கு இறைவனே குருவாக இருந்து அவர்களின் வெளிப்புற மூச்சுக்காற்றை நிறுத்தி உட்புறமாக மூலாதாரத்தில் இருந்து சுழுமுனை நாடிவழியே சுவாசிக்க வைத்து அந்த சுவாசத்தோடு கலந்து நின்று அருளுகின்றான்

கருத்து: உடலின் செயல்களில் வீணாகிவிடும் மூச்சுக்காற்றை அகயோகம் செய்து மாற்றி முழுமையாக பயன்படுத்தும் யோகியர்களின் சுவாசத்தோடு கலந்து குருவாக நின்று இறைவன் அருளுகின்றான்.

பாடல் #721

பாடல் #721: மூன்றாம் தந்திரம் – 12. கலை நிலை (நாடிகளில் இறைவன் நிற்கும் முறை)

சோதனை தன்னில் துரிசறக் காணலாம்
நாதனும் நாயகி தன்னிற் பிரியுநாள்
சாதன மாகுங் குருவை வழிபட்டு
மாதன மாகவே மதித்துக்கொள் ளீரே.

விளக்கம்:

யோகியர் தாம் விடும் மூச்சுக்காற்றின் அளவைக் கொண்டே தமக்குள் இறைவன் வீற்றிருக்கும் உடலும் இறைவி வீற்றிருக்கும் உயிரும் எப்போது பிரியும் என்பதை ஒரு சில சோதனைகளால் சிறிதும் பிழையின்றி மிகச் சரியாக அறிந்து கொள்ளலாம். அந்த சோதனைகள் என்ன என்பதை யோக குருவை வழிபட்டு அவர் அருளுகின்ற சாதனைகளை அரிய மாபெரும் செல்வமாக மதித்து சிரத்தையாக செய்வதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

கருத்து: உடலை விட்டு உயிர் பிரிந்து விடும் ஆயுளை மிகச் சரியாகக் கணக்கிடும் சாதனைகளை யோக குருவின் அருள் கொண்டு அறிந்து கொண்டு சிரத்தையுடன் செய்யும் சாதகர்களுக்கு இறப்பிலிருந்து தப்பிக்கும் வழி கிடைக்கும்.

யோக குருவை வழிபட்டு அவர் அருளுகின்ற சாதனைகளைச் சிரத்தையாக செய்வதன் மூலம் கிடைக்கும் பலனை அடுத்த பாடல் #722ல் காணலாம்.

பாடல் #722

பாடல் #722: மூன்றாம் தந்திரம் – 12. கலை நிலை (நாடிகளில் இறைவன் நிற்கும் முறை)

ஈராறு கால்கொண் டெழுந்த புரவியைப்
பேராமற் கட்டிப் பெரிதுண்ண வல்லிரேல்
நீரா யிரமும் நிலமாயி ரத்தாண்டும்
பேராது காயம் பிரான்நந்தி ஆணையே.

விளக்கம்:

பாடல் #721 இல் கூறியுள்ளபடி யோக குருவை வழிபட்டு அவரது அருளால் கிடைத்த சாதனைகளின் மூலம் ஆறுகளைப் போன்ற இடகலை பிங்கலை நாடிகளின் வழியே குதிரையைப் போல குதித்துவரும் மூச்சுக்காற்றை வீணாக்காமல் கட்டி வைத்து சுழுமுனை நாடி வழியே மேலேற்றிச் சென்று சகஸ்ரதளத்தில் சேர்த்து அங்கே சுரக்கும் அமிர்தத்தைப் பருக முடிந்த யோகியர்களின் உடல் கடலுக்கு அடியில் ஆயிரம் ஆண்டுகள் இருந்தாலும் நிலத்திற்கு அடியில் ஆயிரம் ஆண்டுகள் இருந்தாலும் அழியவே அழியாமல் என்றும் உயிர்ப்புடன் இருக்கும் என்பது குருவிற்கெல்லாம் மேலான மஹா குருவான இறைவனின் மேல் ஆணையே.

கருத்து: யோக குருவின் அருளால் கிடைத்த சாதனைகளின் மூலம் தங்களின் உடலும் உயிரும் பிரியும் ஆயுட் காலத்தை துல்லியமாக அறிந்து கொள்ளும் யோகியர்கள் அதை மாற்றுவதற்கு அகயோகம் செய்தால் அவர்களின் உடலும் உயிரும் எவ்வளவு ஆயிரம் வருடங்களானாலும் பிரியாமல் இருக்கும் இது குருவிற்கெல்லாம் மேலான மஹா குருவான இறைவனின் மேல் ஆணை.

பாடல் #723

பாடல் #723: மூன்றாம் தந்திரம் – 12. கலை நிலை (நாடிகளில் இறைவன் நிற்கும் முறை)

ஓசையினில் ஏழும் ஒளியின்கண் ஐந்தும்
நாசியினில் மூன்றும் நாவினில் இரண்டும்
தேசியுந் தேசனுந் தன்னிற் பிரியுநாள்
மாசுஅறு சோதி வகுத்துவைத் தானே.

விளக்கம்:

ஏழு விதமான ஒலிகளை உணரும் காதுகளும் ஐந்து விதமான ஒளிகளைக் காணும் கண்களும் மூன்று விதமான சுவாசங்களை முகரும் நாசிகளும் இரண்டு விதமானதைச் செய்யும் நாக்கும் தொடுவதை உணரும் உடலும் உயிரான ஆன்மாவை விட்டுப் பிரியும் நாள் எதுவென்பதை மிகவும் துல்லியமாக மூச்சுக்காற்றை வைத்தே அளந்து வைத்திருக்கின்றான் அனைத்துவித மலங்களையும் அறுத்து அருளும் சோதிமயமான இறைவன்.

கருத்து: உயிர்கள் தம்மிடம் அடையும் வழியை வைத்தருளிய இறைவன் அதன்படி செய்யாத உயிர்கள் அழிந்து மறுபடியும் பிறவி எடுப்பதற்கான ஆயுளையும் துல்லியமாக அளந்து வைத்திருக்கின்றான்.

காதுகள் உணரும் ஏழு விதமான ஒலிகள்:

  1. சத்தம் – இயற்கையான ஓசைகள்
  2. பரிசம் – கருவிகளினால் எழுப்பப்படும் இசை
  3. உருவம் – பிம்பங்களின் அசைவைக் காட்டும் சலசலப்பு
  4. இரசம் – நீர் எழுப்பும் ஓசை
  5. கந்தம் – காற்று எழுப்பும் ஓசை
  6. சரித்தல் – உலகத்தோடு இயங்கும் நுண்ணிய ஓசைகள்
  7. சேர்த்தல் – உடலுக்குள் இயங்கும் நுண்ணிய ஓசைகள்

கண்கள் காணும் ஐந்து விதமான ஒளிகள்:

  1. உருவம் – நிலம் (பிம்பங்கள்)
  2. இரசம் – நீர் (திரவங்கள்)
  3. கந்தம் – காற்று (புகைகள்)
  4. தகித்தல் – நெருப்பு (தீக்கள்)
  5. வெம்மை – ஆகாயம் (வெற்றிடம்)

நாசிகள் முகரும் மூன்று விதமான சுவாசங்கள்:

  1. வாசனை
  2. இடகலை மூச்சு குளிர்ச்சியான காற்று
  3. பிங்கலை மூச்சு வெப்பமான காற்று

நாக்கு செய்யும் இரண்டு விதமான செயல்கள்:

  1. சுவைத்தல்
  2. பேசுதல்

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #41

27-12-2008 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

ஆசைகளையும் பாசத்தையும் முழுமையாக ஒழிக்க முடியவில்லையே அது ஏன்?

ஆசைகளை முழுமையாக ஒழிப்பது மிகவும் கடினம். ஆசைகளை அடக்கினாலும் மீண்டும் சில நேரங்களில் அந்த ஆசைகள் திரும்ப வரும். இதற்கு உதாரணமாக ஊசி என்பது மனம் போலவும் நூலானது ஆசைகள் போலவும் எடுத்துக்கொண்டால் ஊசியில் நூலைக் கோர்த்துவிட்டு நூலின் இரண்டு முனைகளையும் பிடித்துக் கொண்டால் ஊசியானது இரண்டு பக்கமும் அலைந்து கொண்டிருக்கும். ஆனால் ஊசியிலிருந்து நூலை எடுத்து விட்டால் ஊசியானது அலையாமல் தனியாக நிற்கும். ஆகவே ஆசைகளை முழுமையாக நீக்க வேண்டும் என்பது மிகக் கடினம் என்பதை அறிய வேண்டும். இதற்கு என்ன வழி என்று சிந்தித்தால் ஊசியிலிருந்து நூலைத் தூக்கி எறிவதே சரியான வழி. அதாவது ஆசைகளை நீக்கும் முன்பு அந்த ஆசைகளை உண்டாக்கும் காரணங்களை நீக்க வேண்டும். உதாரணமாக லகரி வஸ்துக்களை (சிகரெட் பாக்கு சாராயம் முதலிய போதைப் பொருட்கள்) உபயோகிப்பவர்கள் அதை எப்போதும் தன்னோடு வைத்திருக்கக் கூடாது. எப்பொழுதும் அவற்றைத் தன்னுடனே வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தை முதலில் மனதில் இருந்து நீக்க வேண்டும். அத்தகைய லகரி வஸ்துக்களை உபயோகிக்கும் நபர்களுடன் சேரக்கூடாது என்பதை ஒரு விதியாக எடுத்துக் கொண்டால் முழுமையாக அந்த ஆசைகளில் இருந்து விடுபடலாம். சிறுது கடினம் என்கின்ற போதிலும் ஒவ்வொரு ஆசையாக இவ்வாறு நீக்கிவிட முடியும்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #40

16-7-2008 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

எவ்வாறு நாம் இறைவனைத் தொடர்பு கொள்வது?

இறைவனைத் தொடர்பு கொள்வதற்குப் பாவனைகள் மிகவும் முக்கியமானவை. ஆனால் பல வகையான பாவனைகள் இருக்கின்றது. நமக்கு எளிதான பாவனைகள் எவையோ அவைகளை உணர்ந்து ஏற்றுக் கொண்டு அதன் வழியாக செல்லுதல் வேண்டும். மற்றவர்கள் செல்லும் பாவனைகளை நாமும் ஏற்றுக்கொண்டு செல்வது தவறாகும். நமக்கு எந்த பாவனை எளிமையானது என்று சிந்தித்து அந்த பாவனையின் வழி தடுமாறாமல் செல்ல வேண்டும். இதற்கும் மேலாக தெய்வத்தின் பெயரை எப்பொழுதும் கூறிக்கொண்டு இருந்தால் ஓர் தொடர்பு உண்டாகி இறைவனின் சிந்தனை எப்பொழுதும் மனதில் இருக்கும். இவ்வாறு இறைவனின் பெயரைக் கூறிக்கொண்டு இருந்தால் என்னைப் பலர் கேலி செய்கின்றனர் என்று சிலர் கூறுகின்றனர். மற்றவர்கள் கேலி செய்கின்றதை பொருட்படுத்தாமல் எப்பொழுதும் இறைவன் பெயரை மனதில் கூறிட தெய்வ சிந்தனை எப்பொழுதும் மனதை விட்டு நீங்காமல் செய்கின்ற எந்தக் காரியமும் தெய்வீகக் காரியமாகவே தோன்றும்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #39

19-6-2008 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

மனித வாழ்க்கையின் பொருள் என்ன? நோக்கம் என்ன?

இதற்கான விடை மிகவும் எளியது. ஆனால் அடையும் முயற்சிகள் மிகப் பெரியவை ஆகும். ஒவ்வொருவரின் பிறவியும் வாழ்கையில் தமக்குள் உள்ளிருக்கும் தெய்வ சக்தியை உணர்வது. நம் அனைவருக்குள்ளும் இறைவன் குடிகொண்டு இருக்கின்றான் என்பதை யாரும் உணர்வதில்லை. தெய்வீக சக்திக்கு மனிதன் ஒரு வீடாக இருக்கின்றான். அந்த வீட்டில் இறைவன் தங்கி உள்ளான். ஆனால் நாம் அதனை உணராமல் வெளியே தேடி அலைகின்றோம். இதற்குக் காரணம் என்ன என்று கேட்டால் நமது இந்திரியங்களும் ஐம்புலன்களும் ஆகும். இவை இரண்டும் நம்மைத் திசை திருப்பி மாயையின் பிடியில் தள்ளுவதால் மீண்டும் நம்மால் வெளியே வர முடியவில்லை. அனைவரும் தியானத்தின் மூலம் நமக்கு உள்ளே சென்று பார்த்தல் வேண்டும். தினந்தோறும் குறைந்த அளவில் ஒரு அரைமணி நேரமாவது தியானம் செய்ய வேண்டும். இதனைத் தொடர்ந்து செய்பவர்களும் மந்திரஜபம் தொடர்சியாக செய்து வருபவர்களும் உறுதியாக தமக்குள் உள்ள இறைவனை உணர்வது மட்டும் இல்லாமல் உயர்ந்த நிலையும் அடையவார்கள்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #38

23-5-2008 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

நான் என்றால் என்ன?

நான் என்பது என்ன இதனைத் தேடி நாடிப் பல காலங்களில் தவம் இருந்தவர்களுள் யாமும் ஒருவனே. நான் என்பதைத் தேடுவதில் தீவிர முயற்சிகள் வேண்டும். நான் என்கின்றது அகங்காரம் ஆகும். நான் என்பது சரியானது இல்லை. நாம் என்பதே சரியானது ஆகும். ஏன் என்றால் ஒவ்வொரு செயலிலும் முயற்சியிலும் இறைவன் நம்முடன் இருக்கின்றான் என்பதை மறக்கக்கூடாது.

இறைவன் உடன் இருக்கும் இந்த நிலையை அடைவதற்காகவே ஞானிகளும் துறவிகளும் யாம் செய்கின்றோம் யாம் பார்க்கின்றோம் என இறைவனையும் சேர்த்துக் கூறுகின்றனர். இவ்விதம் யாம் என்பதை வார்த்தைகளில் மட்டும் சேர்த்துக் கூறினால் போதாது. உண்மையாகவே இறைவன் நம்முடன் இருந்து ஒவ்வொரு செயல்களிலும் ஈடுபடுகின்றான் என்பதைப் பரிபூரணமாக நம்புதல் வேண்டும். என் செயலால் இனி ஆவது ஒன்றும் இல்லை என்பதைப் பரிபூரணமாக ஏற்றுக் கொண்டால் அனைத்தும் நல்வழியில் நடப்பது மட்டுமல்லாமல் அமைதியையும் காண இயலும். இக்காலத்தின் கலியுகத் தன்மையில் எவ்வளவு செலவு செய்தாலும் கிடைக்காதது அமைதியே. அந்த அமைதி வேண்டும் எனில் அனைத்தையும் இறைவனின் பாதத்தில் சமர்ப்பித்துவிட்டு இனி அனைத்தும் உமது செயலே என ஒப்புக்கொண்டு எதிர்பார்ப்பின்றி செயல்படுவீர்களாக.

பாடல் #677

பாடல் #677: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

ஆகின்ற காலொளி யாவது கண்டபின்
போகின்ற காலங்கள் போவது மில்லையாம்
மேனின்ற காலம் வெளியுற நின்றபின்
தானின்ற காலங்கள் தன்வழி யாகுமே.

விளக்கம்:

பிராணாயாம முறைப்படி மூச்சுக்காற்றை சுழுமுனை நாடி வழியே மேலேற்றிச் சென்று அது சகஸ்ரதளத்தோடு கலந்து ஜோதியானதை அகக் கண்ணால் கண்டபின் மகிமா எனும் சித்தி கிடைக்கும். அதன்பின் வரும் காலங்கள் நமது ஆயுள் காலத்தை அழிப்பது இல்லை. உலகத்திலுள்ள அனைத்தையும் விட பெரியதாகிய காலத்தை மகிமா எனும் சித்தியால் வென்று காலத்தால் நாம் பாதிக்கப்படாமல் இருக்கலாம். அவ்வாறு இருக்கும் காலங்களை நமது எண்ணப்படி அமைக்கலாம்.

கருத்து: சகஸ்ரதளத்தில் ஜோதி தரிசனம் கண்டபின் மகிமா எனும் சித்தி கைவரப்பெற்று காலத்தை வெல்லலாம்.