பாடல் #75

பாடல் #75: பாயிரம் – 5. திருமூலர் வரலாறு

இருந்தவக் காரணம் கேளிந் திரனே
பொருந்திய செல்வப் புவனா பதியாம்
அருந்தவச் செல்வியைச் சேவித் தடியேன்
பரிந்துடன் வந்தனன் பத்தியி னாலே.

விளக்கம்:

யாம் தவத்தில் இருக்க முடிந்ததின் காரணத்தைக் கேட்டுக்கொள் இந்திரனே அனைத்து விதமான செல்வங்களையும் கொண்டிருக்கும் உலகங்கள் அனைத்திற்கும் தலைவனானவனும் எளிதில் செய்ய முடியாத அரிய தவம் செய்பவர்களுக்குக் கிடைக்கும் இறைவனின் திருவடிகளை தொழுதபோது எம் பக்தியைக் கண்டு கருணை கொண்டு என்னுடனே இறைவனும் வந்து இருந்ததால் தான் என்னால் ஒரு கோடி யுகம் இருக்க முடிந்தது.

பாடல் #76

பாடல் #76: பாயிரம் – 5. திருமூலர் வரலாறு

சதாசிவம் தத்துவம் முத்தமிழ் வேதம்
மிதாசனி யாதிருந் தேனின்ற காலம்
இதாசனி யாதிருந் தேன்மனம் நீங்கி
உதாசனி யாதுட னேயுணர்ந் தோமே.

விளக்கம்:

பிரம்மன், திருமால், உருத்திரன், மகேசுவரன், ஈசன் ஆகிய ஐந்து தெய்வங்களின் மூலம் படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகிய ஐந்து தொழில்களைச் செய்யும் இறைவனாகிய சதாசிவமூர்த்தி அருளிய ஆகமத் தத்துவங்களையும் இயல், இசை, நாடகம் ஆகிய மூன்று தமிழ் மொழிகளையும் நான்மறையாகிய வேதங்களையும் அளவின்றி யாம் பெற்றுக் கொண்டு அவற்றிலேயே மனம் திளைத்து கொண்டிருக்கும் காலங்களின் மேல் மனதைச் செலுத்தாமல் இருந்தபோது இனியும் சென்று கொண்டிருக்கும் காலங்களை உதாசீனப்படுத்தாமல் உடனே காலத்தின் தேவையை உணர்ந்து இவற்றை மற்றவர்களுக்கு வழங்கவேண்டும் என்பதை என்னுடன் இருந்த இறைவன் உணர்த்தினான்.

பாடல் #77

பாடல் #77: பாயிரம் – 5. திருமூலர் வரலாறு

மாலாங்க னேஇங்கு யான்வந்த காரணம்
நீலாங்க மேனியள் நேரிழை யாளொடு
மூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின்
சீலாங்க வேதத்தைச் செப்பவந் தேனே.

விளக்கம்:

எமது சீடனாகிய மாலாங்கனே இறைவனோடு இருந்த யான் இந்த உலகத்திற்கு வந்ததின் காரணத்தைக் கேட்டுக்கொள். நீல நிற மேனியைக்கொண்டு இறைவனின் திருமேனியில் சரிபாகமாக இருக்கும் சக்தி தேவியும் ஆதிமூலமாகிய இறைவனும் சேர்ந்து உயிர்கள் உய்யும் பொருட்டு புரிந்த திருநடனத்தின் தத்துவங்களையும் இறைவனை அடைய வழிவகுக்கும் அரும்பெரும் ஒழுக்கங்களையும் உள்ளடக்கிய வேதத்தை மற்றவர்களுக்கு எடுத்து உரைக்கவே யான் வந்தேன்.

பாடல் #78

பாடல் #78: பாயிரம் – 5. திருமூலர் வரலாறு

நேரிழை யாவாள் நிரதிச யானந்தப்
பேருடை யாளென் பிறப்பறுத் தாண்டவள்
சீருடை யாள்சிவன் ஆவடு தண்டுறை
சீருடை யாள்பதம் சேர்ந்திருந் தேனே.

விளக்கம்:

இறைவனின் திருமேனியில் சரிபாகம் கொண்டவளும் என்றும் நீங்காத ஆனந்தத்தின் பெயரை உடையவளும் பிறப்பை நீக்கி என்னை முழுமையாக ஆட்கொண்டவளும் சீரும் சிறப்பும் உடையவளுமாகிய உமா தேவி தம் தலைவன் சிவபெருமானின் அருள் வேண்டி பசு மாடாக இருந்து தவம்புரிந்த திரு ஆவடுதுறைத் திருத்தலத்தில் அவளை அனைத்து எழுந்த நாதராக இருவரும் சேர்ந்து வீற்றிருக்கும் சிவசக்தியின் திருவடிகளைத் தொழுதுகொண்டே நான் அத்திருத்தலத்தில் இருந்தேன்.

பாடல் #79

பாடல் #79: பாயிரம் – 5. திருமூலர் வரலாறு

சேர்ந்திருந் தேன்சிவ மங்கைதன் பங்கனைச்
சேர்ந்திருந் தேன்சிவன் ஆவடு தண்டுறை
சேர்ந்திருந் தேன்சிவ போதியின் நீழலில்
சேர்ந்திருந் தேன்சிவன் நாமங்கள் ஓதியே.

விளக்கம்:

திருமேனியில் சரிசமமான பங்கு சக்தி தேவியுடன் சிவபெருமான் வீற்றிருக்கும் திருஆவடுதுறை திருத்தலத்தில் இறைவன் ஞானம் போதித்த படர் அரசமரத்தின் நிழலில் இறைவனோடு சேர்ந்து அவன் திரு நாமங்களை ஓதிக்கொண்டே இருந்தோம்.

பாடல் #80

பாடல் #80: பாயிரம் – 5. திருமூலர் வரலாறு

இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி
இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே
இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே
இருந்தேன் என்நந்தி இணையடிக் கீழே.

விளக்கம்:

இந்த உடலில் எண்ணிலடங்காத கோடிக்கணக்கான வருடங்கள் இரவு பகல் இல்லாத இடத்தில் (சூட்சும வெளி) பல்லாயிரக்கணக்கான தேவர்களாலும் முனிவர்களாலும் சித்தர்களாலும் போற்றிப் புகழப்பெறுபவனும் எம் குருநாதனுமாகிய இறைவனின் ஈடு இணையில்லாத திருவடிகளின் கீழ் அமர்ந்து இருந்தேன்.

பாடல் #81

பாடல் #81: பாயிரம் – 5. திருமூலர் வரலாறு

பின்னைநின் றென்னே பிறவி பெறுவது
முன்னைநன் றாக முயல்தவம் செய்கிலர்
என்னைநன் றாக இறைவன் படைத்தனன்
தன்னைநன் றாகத் தமிழ்செய்யு மாறே.

விளக்கம்:

இறைவனை அடைய வேண்டும் என்ற ஆசையில் தாமாக முயன்று தவங்கள் செய்யாமல் வாழ்க்கையை வீணே கடத்துபவர்கள் மீண்டும் மீண்டும் பிறவி எடுத்துக் கொண்டே இருக்கின்றார்கள். இப்படிப் பிறவியை வீணாக்காமல் இறைவனை உயிர்கள் அடையும் வழிகள் அனைத்தையும் குருநாதராக இருந்து எனக்குப் போதித்த இறைவன் அவற்றை நன்றாகத் தமிழில் வழங்குமாறே என்னை இங்கே அனுப்பி வைத்தான்.

பாடல் #82

பாடல் #82: பாயிரம் – 5. திருமூலர் வரலாறு

ஞானத் தலைவிதன் நந்தி நகர்புக்கு
ஊனமில் ஒன்பது கோடி யுகந்தனுள்
ஞானப்பால் ஆட்டி நாதனை அர்ச்சித்து
நானும் இருந்தேன்நற் போதியின் கீழே.

விளக்கம்:

பேரறிவு ஞானத்தின் தலைவனாகிய எம் குருவாகிய இறைவன் இருக்கும் இடத்தில் ஒரு குறையும் இல்லாமல் ஒன்பது கோடி யுகங்களாக, ஞானத்தால் உருவாகும் அமிர்தப் பால் ஊற்றி இறைவனை அர்ச்சனை செய்து இறைவனின் நல்திருவடியின் கீழ் இருந்தேன்.

பாடல் #83

பாடல் #83: பாயிரம் – 5. திருமூலர் வரலாறு

செல்கின்ற வாறறி சிவமுனி சித்தசன்
வெல்கின்ற ஞானத்து மிக்கோர் முனிவராய்ப்
பல்கின்ற தேவர் அசுரர் நரர்தம்பால்
ஒல்கின்ற வான்வழி யூடுவந் தேனே.

விளக்கம்:

நல் நெறிகளின் மூலம் இறைவனை அடையும் வழிகளை அறிந்து சிவனை மனதுள் வைத்துத் துதித்து மனதை வெல்லக்கூடிய பேரறிவு ஞானத்தை மிகவும் பெற்ற ஒரு முனிவராக நான் இருந்த காலத்தில் பல்லாயிரக்கணக்கான தேவர்களும் அசுரர்களும் மனிதர்களும் மேலுலகம் செல்லும் நுண்ணிய (சூட்சும) வானத்தின் வழியே யானும் புகுந்து இந்தப் பூமியை நோக்கி வந்தேன்.

பாடல் #84

பாடல் #84: பாயிரம் – 5. திருமூலர் வரலாறு

சித்தத்தின் உள்ளே சிறக்கின்ற நூல்களில்
உத்தம மாகவே ஓதிய வேதத்தின்
ஒத்த உடலையும் உள்நின்ற உற்பத்தி
அத்தன் எனக்கிங் கருளால் அளித்ததே.

விளக்கம்:

இறைவன் கூறிய உத்தமமான வேதங்களின் பொருளை அவனது அருளால் உள்ளுணர்ந்து ஓதுவதால் சிறப்பு பெறுகின்ற மந்திரங்களை உடலும் மனமும் ஒன்று போல் லயித்திருக்கும் பொழுது உள்ளிருந்து உற்பத்தியாகும் பேரின்ப உணர்வுகளை என்மேல் கொண்ட கருணையால் எம் குருநாதனாகிய இறைவன் எமக்கு அளித்து அருளினான்.