பாடல் #1728

பாடல் #1728: ஏழாம் தந்திரம் – 3. பிண்ட லிங்கம் (உயிர்களின் உடலில் இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

கோயில்கொண் டன்றே குடிகொண்ட தைவரும்
வாயில்கொண் டாங்கே வழிநின் றருளுவர்
தாயில்கொண் டாப்போற் றலைவனென் னுள்புக
வாயில்கொண் டீசனும் வாழவந் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கொயிலகொண டனறெ குடிகொணட தைவரும
வாயிலகொண டாஙகெ வழிநின றருளுவர
தாயிலகொண டாபபொற றலைவனென னுளபுக
வாயிலகொண டீசனும வாழவந தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கோ இல் கொண்ட அன்றே குடி கொண்டது ஐவரும்
வா இல் கொண்டு ஆங்கே வழி நின்று அருளுவர்
தா இல் கொண்டால் போல் தலைவன் என் உள் புக
வா இல் கொண்டு ஈசனும் வாழ வந்தானே.

பதப்பொருள்:

கோ (உயிர்கள் பிறப்பு எடுக்கும் போதே இறைவன் இருக்கின்ற கோயிலுக்கு) இல் (உயிர்களின் உடலை இடமாக) கொண்ட (கொண்ட) அன்றே (அந்த பொழுதே) குடி (உயிர்களின் உடம்புக்குள் குடி) கொண்டது (புகுந்து கொண்டது) ஐவரும் (ஐந்து தெய்வங்களும் தத்தமது தொழில்களுடன் ஐந்து பூதங்களாகவும் புலன்களாகவும் நின்று)
வா (அந்த புலன்கள் நுழைகின்ற) இல் (இடமாக) கொண்டு (கொண்டு) ஆங்கே (அந்த) வழி (வழியாகவே) நின்று (நின்று) அருளுவர் (அருளுகின்றனர்)
தா (எப்போது புலன்களை விட்டு விட்டு குழந்தை தாயை தேடி அழுவது போல இறைவனை தேடுகின்றோமோ அப்போது) இல் (குழந்தை இருக்கும் இடம் தேடி) கொண்டால் (தாய் தானாகவே வருவது) போல் (போலவே) தலைவன் (இறைவனும் தலைவனாகவே) என் (அடியவரின்) உள் (உள்ளே) புக (புகுந்து)
வா (தமது அருள் நுழைகின்ற) இல் (இடமாக) கொண்டு (அடியவரை ஆட்கொண்டு) ஈசனும் (இறைனும்) வாழ (அடியவரின் உடலையே தாம் வாழுகின்ற இடமாக கொண்டு) வந்தானே (வந்து வீற்றிருந்து அருளுவான்).

விளக்கம்:

உயிர்கள் பிறப்பு எடுக்கும் போதே அவற்றை தாம் இருக்கும் கோயிலாகவே படைக்கின்றான் இறைவன். அப்படி உயிர்கள் கோயிலாக உடலெடுத்து பிறக்கும் போதே ஐந்து தெய்வங்களும் தத்தமது தொழில்களுடன் ஐந்து பூதங்களாகவும் புலன்களாகவும் நின்று அந்த புலன்கள் நுழைகின்ற இடமாக உயிர்களின் உடலை ஏற்றுக் கொண்டு அதன் வழியாகவே நின்று அருளுகின்றனர். உயிர்கள் எப்போது புலன்களின் வழியே வாழ்வதை விட்டு விட்டு குழந்தை தாயை தேடி அழுவது போல இறைவனை தேடுகின்றார்களோ அப்போது குழந்தை இருக்கும் இடம் தேடி தாய் தானாகவே வருவது போல இறைவனும் தலைவனாகவே அந்த அடியவரின் உடலுக்கு உள்ளே இருந்து அடியவரை ஆட்கொண்டு அடியவரின் உடலையே தாம் வாழுகின்ற இடமாக கொண்டு வீற்றிருந்து அருளுவான்.

ஐவர்கள்:

ஐந்து தெய்வங்கள் – ஐந்து தொழில்கள் – பஞ்ச பூதங்கள் – ஐந்து பொறிகள் – ஐந்து புலன்கள்

  1. பிரம்மன் – படைத்தல் – நிலம் – மூக்கு – நுகர்தல்
  2. திருமால் – காத்தல் – நீர் – நாக்கு – சுவைத்தல்
  3. உருத்திரன் – அழித்தல் – நெருப்பு – கண் – பார்த்தல்
  4. மகேஸ்வரன் – மறைத்தல் – காற்று – தோல் – உணர்தல்
  5. சதாசிவன் – அருளல் – ஆகாயம் – காது – கேட்டல்

பாடல் #1729

பாடல் #1729: ஏழாம் தந்திரம் – 3. பிண்ட லிங்கம் (உயிர்களின் உடலில் இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)

கோயில்கொண் டானடி கொல்லைப் பெருமுறை
வாயில்கொண் டானடி நாடிகள் பத்துள
பூசைகொண் டானடி புனைந்தும் புற்கிட்டு
வாயில்கொண் டானெங்கள் மாநந்தி தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கொயிலகொண டானடி கொலலைப பெருமுறை
வாயிலகொண டானடி நாடிகள பததுள
பூசைகொண டானடி புனைநதும புறகிடடு
வாயிலகொண டானெஙகள மாநநதி தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கோ இல் கொண்டான் அடி கொல்லை பெரும் உறை
வா இல் கொண்டான் அடி நாடிகள் பத்து உள
பூசை கொண்டான் அடி புனைந்தும் புற்கு இட்டு
வா இல் கொண்டான் எங்கள் மா நந்தி தானே.

பதப்பொருள்:

கோ (தாம் வீற்றிருக்கும் கோயில்) இல் (இடமாக) கொண்டான் (உயிர்களின் உடலை ஆட்கொண்ட இறைவன்) அடி (தமது திருவடிகளால்) கொல்லை (அழுக்குகளை மட்டுமே கொண்ட) பெரும் (பெரிய) உறை (உறை போல் தசைகளால் மூடி இருக்கும் உடலையே)
வா (தமது அருள் நுழைகின்ற) இல் (இடமாக) கொண்டான் (ஏற்றுக் கொண்டு) அடி (தமது திருவடிகளால்) நாடிகள் (உடலுக்குள் இருக்கின்ற நாடிகள்) பத்து (பத்தும்) உள (இயங்குகின்ற இயக்கத்தையே)
பூசை (தமக்கு செய்யும் பூசையாக) கொண்டான் (ஏற்றுக் கொண்டு) அடி (தமது திருவடிகளால்) புனைந்தும் (அடியவரின் உடலை ஒழுங்கு செய்து) புற்கு (அனைத்து அழுக்குகளையும்) இட்டு (அவரை விட்டு நீக்கி விட்டு சுத்தம் செய்து)
வா (தாம் வாசம் செய்கின்ற) இல் (இடமாக) கொண்டான் (அந்த சுத்தப் படுத்திய உடலை ஏற்றுக் கொண்டான்) எங்கள் (எங்களை வழிநடத்துகின்ற) மா (மாபெரும்) நந்தி (குருநாதனாகிய) தானே (இறைவன்).

விளக்கம்:

அழுக்குகளை மட்டுமே கொண்டு தசைகளால் மூடப்பட்டு இருக்கின்ற உயிர்களின் உடலையே தாம் வீற்றிருக்கும் கோயிலாக ஆட்கொண்ட இறைவன் தமது திருவடிகளால் அந்த உடலில் இருக்கின்ற பத்து விதமான நாடிகளின் இயக்கத்தையே தமக்கு செய்கின்ற பூசையாக ஏற்றுக் கொண்டு தமது திருவடிகளின் அருளாலேயே அந்த உடலில் இருக்கின்ற அனைத்து அழுக்குகளையும் நீக்கி, ஒழுங்கு படுத்தி, சுத்தம் செய்து, அந்த உடலைக் கொண்ட அடியவரை தம்மை நோக்கி வழி நடத்திச் செல்கின்ற மாபெரும் குருநாதனாக அவரின் உடலுக்குள் வீற்றிருக்கின்றான்.

பத்து நாடிகள் – வியாபித்து இருக்கும் இடங்கள்

  1. இடகலை – இடது நாசி
  2. பிங்கலை – வலது நாசி
  3. சுழிமுனை – நடு முதுகெலும்பு
  4. புருஷன் – பிறப்பு உறுப்பு
  5. காந்தாரி – இடது கண்
  6. அத்தி – வலது கண்
  7. அலம்புடை – நாக்கு
  8. சங்கினி – தலை
  9. சிங்குவை – இடது கை
  10. குரு – வலது கை

பாடல் #1712

பாடல் #1712: ஏழாம் தந்திரம் – 2. அண்ட லிங்கம் (அண்டம் எங்கும் பரவி இருக்கும் பரம்பொருளின் வடிவம்)

இலிங்கம தாகுவ தாரு மறியா
ரிலிங்கம தாவது எண்டிசை யெல்லா
மிலிங்கம தாகுவ தெண்ணெண் கலையு
மிலிங்கம தாக வெடுத்த துலகே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

இலிஙகம தாகுவ தாரு மறியா
ரிலிஙகம தாவது எணடிசை யெலலா
மிலிஙகம தாகுவ தெணணெண கலையு
மிலிஙகம தாக வெடுதத துலகே.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

இலிங்கம் அது ஆகுவது ஆரும் அறியார்
இலிங்கம் அது ஆவது எண் திசை எல்லாம்
இலிங்கம் அது ஆகுவது எண் எண் கலையும்
இலிங்கம் அது ஆக எடுத்தது உலகே.

பதப்பொருள்:

இலிங்கம் (இலிங்கம்) அது (என்பது) ஆகுவது (எதுவாக இருக்கின்றது என்பதை) ஆரும் (யாரும்) அறியார் (அறியாமல் இருக்கின்றார்கள்)
இலிங்கம் (இலிங்கம்) அது (என்பது) ஆவது (ஆக இருப்பது) எண் (எட்டு) திசை (திசைகளில்) எல்லாம் (உள்ள அனைத்தும் ஆகும்)
இலிங்கம் (இலிங்கம்) அது (என்பது) ஆகுவது (ஆக இருப்பது) எண் (எட்டும்) எண் (எட்டும் பெருக்கி வரும் மொத்தம் அறுபத்து நான்கு) கலையும் (கலைகளும் ஆகும்)
இலிங்கம் (இலிங்கம்) அது (என்பது) ஆக (ஆகவே) எடுத்தது (இறைவன் தமது அடையாளமாக) உலகே (அனைத்து உலகங்களும் உருவாக்கினான்).

விளக்கம்:

இலிங்கம் என்பது எதுவாக இருக்கின்றது என்பதை யாரும் அறியாமல் இருக்கின்றார்கள். எட்டு திசைகளில் உள்ள அனைத்துமே இலிங்கம் ஆகும், அறுபத்து நான்கு கலைகளும் இலிங்கம் ஆகும். இறைவன் தமது அடையாளமாகிய இலிங்கமாகவே அனைத்து உலகங்களையும் உருவாக்கினான்.

பாடல் #1713

பாடல் #1713: ஏழாம் தந்திரம் – 2. அண்ட லிங்கம் (அண்டம் எங்கும் பரவி இருக்கும் பரம்பொருளின் வடிவம்)

உலகி லெடுத்தது சத்தி முதலா
யுலகி லெடுத்தது சத்தி வடிவா
யுலகி லெடுத்தது சத்தி குணமா
யுலகி லெடுத்த சதாசிவன் றானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

உலகி லெடுததது சததி முதலா
யுலகி லெடுததது சததி வடிவா
யுலகி லெடுததது சததி குணமா
யுலகி லெடுதத சதாசிவன றானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

உலகில் எடுத்தது சத்தி முதல் ஆய்
உலகில் எடுத்தது சத்தி வடிவு ஆய்
உலகில் எடுத்தது சத்தி குணம் ஆய்
உலகில் எடுத்த சதா சிவன் தானே.

பதப்பொருள்:

உலகில் (உலகத்தில்) எடுத்தது (இறைவனால் உருவாக்கப் பட்ட அனைத்தின்) சத்தி (செயலுக்கும்) முதல் (மூல காரணம்) ஆய் (ஆக இருப்பது இலிங்கமாகும்)
உலகில் (உலகத்தில்) எடுத்தது (இறைவனால் உருவாக்கப் பட்ட அனைத்தின்) சத்தி (செயலுக்கும்) வடிவு (வடிவம்) ஆய் (ஆக இருப்பது இலிங்கமாகும்)
உலகில் (உலகத்தில்) எடுத்தது (இறைவனால் உருவாக்கப் பட்ட அனைத்தின்) சத்தி (செயலுக்கும்) குணம் (தன்மை) ஆய் (ஆக இருப்பது இலிங்கமாகும்)
உலகில் (உலகத்தில்) எடுத்த (இறைவனால் உருவாக்கப் பட்ட அனைத்துமே) சதா (அசையா சக்தியாகிய) சிவன் (சிவப் பரம்பொருளின்) தானே (அடையாளமாகிய இலிங்கமே ஆகும்).

விளக்கம்:

உலகத்தில் இறைவனால் உருவாக்கப் பட்ட அனைத்தின் செயலுக்கும் மூல காரணமாக இருப்பது இலிங்கமாகும். உலகத்தில் இறைவனால் உருவாக்கப் பட்ட அனைத்தின் செயலுக்கும் வடிவமாக இருப்பது இலிங்கமாகும். உலகத்தில் இறைவனால் உருவாக்கப் பட்ட அனைத்தின் செயலுக்கும் தன்மையாக இருப்பது இலிங்கமாகும். உலகத்தில் இறைவனால் உருவாக்கப் பட்ட அனைத்துமே அசையா சக்தியாகிய சிவப் பரம்பொருளின் அடையாளமாகிய இலிங்கமே ஆகும்.

பாடல் #1714

பாடல் #1714: ஏழாம் தந்திரம் – 2. அண்ட லிங்கம் (அண்டம் எங்கும் பரவி இருக்கும் பரம்பொருளின் வடிவம்)

போகமு முத்தியும் புத்தியுஞ் சித்தியு
மாகமு மாறாறு தத்துவத் தப்பாலா
மேகமு நல்கி யிருக்குஞ் சதாசிவ
மாகம தத்துவா வாற்சிவ மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பொகமு முததியும புததியுஞ சிததியு
மாகமு மாறாறு தததுவத தபபாலா
மெகமு நலகி யிருககுஞ சதாசிவ
மாகம தததுவா வாறசிவ மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

போகமும் முத்தியும் புத்தியும் சித்தியும்
ஆகமும் ஆறு ஆறு தத்துவத்து அப்பால் ஆம்
ஏகமும் நல்கி இருக்கும் சதா சிவம்
ஆகம தத்துவா ஆல் சிவம் ஆமே.

பதப்பொருள்:

போகமும் (வினைகளை அனுபவிப்பதற்கான சூழலையும்) முத்தியும் (அந்த வினைகளை அனுபவித்து முடித்த பிறகு முக்தியையும்) புத்தியும் (இறைவனை அறிவதற்கான ஞானத்தையும்) சித்தியும் (அந்த ஞானத்தினால் கிடைக்கின்ற சித்திகளையும்)
ஆகமும் (உடலையும் மனதையும் இயக்குகின்ற) ஆறு (ஆறும்) ஆறு (ஆறும் பெருக்கி வரும் மொத்தம் முப்பத்தாறு) தத்துவத்து (தத்துவங்களையும்) அப்பால் (கடந்து) ஆம் (இருக்கின்ற)
ஏகமும் (அனைத்தும் தாம் ஒன்றே என்கின்ற நிலையையும்) நல்கி (உயிர்களுக்கு கொடுத்து அருளி) இருக்கும் (இருக்கின்ற பரம் பொருளே) சதா (சதா) சிவம் (சிவமாகும்)
ஆகம (அந்த பரம் பொருளை உணர்ந்து கொள்வதற்கு வழியாக ஆகமங்கள்) தத்துவா (அருளுகின்ற தத்துவங்களாக) ஆல் (இருக்கின்ற இலிங்கமே) சிவம் (சிவம்) ஆமே (ஆகும்).

விளக்கம்:

வினைகளை அனுபவிப்பதற்கான சூழலையும், அந்த வினைகளை அனுபவித்து முடித்த பிறகு முக்தியையும், இறைவனை அறிவதற்கான ஞானத்தையும், அந்த ஞானத்தினால் கிடைக்கின்ற சித்திகளையும், உடலையும் மனதையும் இயக்குகின்ற முப்பத்தாறு தத்துவங்களையும் (பாடல் #467 இல் உள்ளபடி) கடந்து இருக்கின்ற அனைத்தும் தாம் ஒன்றே என்கின்ற நிலையையும், உயிர்களுக்கு கொடுத்து அருளுகின்ற பரம் பொருளே சதா சிவமாகும். அந்த பரம் பொருளை உணர்ந்து கொள்வதற்கு வழியாக ஆகமங்கள் அருளுகின்ற தத்துவங்களாக இருக்கின்ற இலிங்கமே சிவம் ஆகும்.

பாடல் #1715

பாடல் #1715: ஏழாம் தந்திரம் – 2. அண்ட லிங்கம் (அண்டம் எங்கும் பரவி இருக்கும் பரம்பொருளின் வடிவம்)

ஏத்தின ரெண்ணிலி தேவரெம் மீசனை
வாழ்த்தினர் வாசப் பசுந்தெண்ணல் வள்ளலென்
றார்த்தன ரண்டங் கடந்தப்புற நின்று
காத்தன னவனின் கருத்தறி யாரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

எததின ரெணணிலி தெவரெம மீசனை
வாழததினர வாசப பசுநதெணணல வளளலென
றாரததன ரணடங கடநதபபுற நினறு
காததன னவனின கருததறி யாரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஏத்தினர் எண் இலி தேவர் எம் ஈசனை
வாழ்த்தினர் வாச பசும் தெண்ணல் வள்ளல் என்று
ஆர்த்தனர் அண்டம் கடந்து அப்புறம் நின்று
காத்தனன் அவனின் கருத்து அறியாரே.

பதப்பொருள்:

ஏத்தினர் (போற்றி வணங்குகின்றார்கள்) எண் (எண்ணிக்கை) இலி (இல்லாத) தேவர் (தேவர்கள்) எம் (எம்பெருமானாகிய) ஈசனை (இறைவனை)
வாழ்த்தினர் (வாழ்த்துகின்றார்கள்) வாச (நறுமணமாக இருப்பவன் என்றும்) பசும் (பசுமையாக இருப்பவன் என்றும்) தெண்ணல் (மாசு மருவில்லாத பேரழகோடு இருப்பவன் என்றும்) வள்ளல் (பெருங் கருணை கொண்ட வள்ளல்) என்று (என்றும்)
ஆர்த்தனர் (கூவி அழைத்து வழிபடுகின்றார்கள்) அண்டம் (ஆயினும் அண்ட சராசரங்களாகவும் அவற்றை எல்லாம்) கடந்து (கடந்து) அப்புறம் (அதற்கு அப்பாலும்) நின்று (நின்று)
காத்தனன் (அனைத்தையும் காத்து அருளுகின்றவனாகிய) அவனின் (அந்த இறைவனின்) கருத்து (உண்மையான தன்மையை) அறியாரே (அவர்கள் அறிவது இல்லை).

விளக்கம்:

எண்ணிக்கை இல்லாத தேவர்கள் எம்பெருமானாகிய இறைவனை நறுமணமாக இருப்பவன் என்றும், பசுமையாக இருப்பவன் என்றும், மாசு மருவில்லாத பேரழகோடு இருப்பவன் என்றும், பெருங் கருணை கொண்ட வள்ளல் என்றும் போற்றி வணங்கி வாழ்த்தி கூவி அழைத்து வழிபடுகின்றார்கள். ஆயினும் அண்ட சராசரங்களாகவும் அவற்றை எல்லாம் கடந்து அதற்கு அப்பாலும் நின்று அனைத்தையும் காத்து அருளுகின்றவனாகிய அந்த இறைவனின் உண்மையான தன்மையை அவர்கள் அறிவது இல்லை.

பாடல் #1716

பாடல் #1716: ஏழாம் தந்திரம் – 2. அண்ட லிங்கம் (அண்டம் எங்கும் பரவி இருக்கும் பரம்பொருளின் வடிவம்)

ஒண்சுட ரோனயன் மால்பிர சாபதி
யொண்சுட ரானவிர வியோ டிந்திரன்
கண்சுட ராகிக் கலந்தெங்குந் தேவர்கள்
தண்சுட ராயெங்குந் தாபர மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஒணசுட ரொனயன மாலபிர சாபதி
யொணசுட ரானவிர வியொ டிநதிரன
கணசுட ராகிக கலநதெஙகுந தெவரகள
தணசுட ராயெஙகுந தாபர மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஒண் சுடரோன் அயன் மால் பிரசாபதி
ஒண் சுடர் ஆன இரவியோடு இந்திரன்
கண் சுடர் ஆகி கலந்து எங்கும் தேவர்கள்
தண் சுடர் ஆய் எங்கும் தாபரம் ஆமே.

பதப்பொருள்:

ஒண் (அனைத்திலும் பொருந்தி ஒன்றாகவே இருக்கின்ற) சுடரோன் (ஜோதியான இறைவனே) அயன் (பிரம்மனாகவும்) மால் (திருமாலாகவும்) பிரசா (உயிர்களின்) பதி (தலைவனாகிய உருத்திரனாகவும்)
ஒண் (ஒன்று பட்டு இருக்கின்ற) சுடர் (ஒளி) ஆன (ஆகிய) இரவியோடு (சூரியனாகவும்) இந்திரன் (தேவர்களின் தலைவனாகிய இந்திரனாகவும்)
கண் (அனைத்து உயிர்களின் கண்களில் இருந்து) சுடர் (காண்கின்ற ஒளி) ஆகி (ஆகவே) கலந்து (கலந்து நிற்கின்றவனாகவும்) எங்கும் (அனைத்திலும் இருக்கின்ற) தேவர்கள் (தேவர்களாகவும்)
தண் (குளிர்ந்த) சுடர் (ஒளியைத் தருகின்ற சந்திரன்) ஆய் (ஆகவும்) எங்கும் (எங்கும் பரந்து இருக்கின்றான்) தாபரம் (அவனே இலிங்க வடிவம்) ஆமே (ஆகும்).

விளக்கம்:

அனைத்திலும் பொருந்தி ஒன்றாகவே இருக்கின்ற ஜோதியான இறைவனே பிரம்மனாகவும், திருமாலாகவும், உயிர்களின் தலைவனாகிய உருத்திரனாகவும், ஒன்று பட்டு இருக்கின்ற ஒளியாகிய சூரியனாகவும், தேவர்களின் தலைவனாகிய இந்திரனாகவும், அனைத்து உயிர்களின் கண்களில் இருந்து காண்கின்ற ஒளியாகவே கலந்து நிற்கின்றவனாகவும், அனைத்திலும் இருக்கின்ற தேவர்களாகவும், குளிர்ந்த ஒளியைத் தருகின்ற சந்திரனாகவும், எங்கும் பரந்து இருக்கின்றான். அவனே இலிங்க வடிவம் ஆகும்.

பாடல் #1717

பாடல் #1717: ஏழாம் தந்திரம் – 2. அண்ட லிங்கம் (அண்டம் எங்கும் பரவி இருக்கும் பரம்பொருளின் வடிவம்)

தாபரத் துள்நின் றருளவல் லான்சிவன்
மாபரத் துண்மை வழிபடு வாரில்லை
மாபரத் துண்மை வழிபடு வாளர்க்குப்
பூவகத் துண்ணின்ற பொற்கொடி யாகுமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தாபரத துளநின றருளவல லானசிவன
மாபரத துணமை வழிபடு வாரிலலை
மாபரத துணமை வழிபடு வாளரககுப
பூவகத துணணினற பொறகொடி யாகுமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தாபரத்து உள் நின்று அருள வல்லான் சிவன்
மா பரத்து உண்மை வழி படு ஆர் இல்லை
மா பரத்து உண்மை வழி படு ஆளர்க்கும்
பூ அகத்து உள் நின்ற பொன் கொடி ஆகுமே.

பதப்பொருள்:

தாபரத்து (பரம்பொருளாகிய இலிங்க வடிவத்திற்கு) உள் (உள்ளே) நின்று (நின்றும்) அருள (உயிர்களுக்கு அருளும்) வல்லான் (வல்லமை பெற்றவன்) சிவன் (அருள் வடிவான இறைவன்)
மா (அனைத்திற்கும் மேலான) பரத்து (பரம்பொருளாகிய இறைவனின்) உண்மை (உண்மையான தன்மையை உணர்ந்து) வழி (அவனை அடைவதற்கான வழியில்) படு (செல்லுகின்ற) ஆர் (உயிர்கள்) இல்லை (இல்லை)
மா (அனைத்திற்கும் மேலான) பரத்து (பரம்பொருளாகிய இறைவனின்) உண்மை (உண்மையான தன்மையை உணர்ந்து) வழி (அவனை அடைவதற்கான வழியில்) படு (செல்லுகின்ற) ஆளர்க்கும் (உயிர்களுக்கு)
பூ (அவர்களின் தலை உச்சியில் இருக்கின்ற சகஸ்ரதளத்தில் இருக்கின்ற ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மலரின்) அகத்து (நடுவுக்கு) உள் (உள்ளே) நின்ற (நிற்கின்ற) பொன் (பொன்னாலான) கொடி (கொடி போன்ற சுழுமுனை நாடியின் மூலம் தன்னை அடைவதற்கான வழியில் அவர்களை கொண்டு செல்லுகின்ற சக்தியாக) ஆகுமே (இறைவன் இருப்பான்).

விளக்கம்:

பரம்பொருளாகிய இலிங்க வடிவத்திற்கு உள்ளே நின்றும் உயிர்களுக்கு அருளும் வல்லமை பெற்றவன் அருள் வடிவான இறைவன். அனைத்திற்கும் மேலான பரம்பொருளாகிய இறைவனின் உண்மையான தன்மையை உணர்ந்து அவனை அடைவதற்கான வழியில் செல்லுவதற்கு பெரும்பாலான உயிர்கள் முயற்சி செய்வது இல்லை. அவ்வாறு முயற்சி செய்கின்ற உயிர்களுக்கு அவர்களின் தலை உச்சியில் இருக்கின்ற சகஸ்ரதளத்தில் இருக்கின்ற ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மலரின் நடுவுக்கு உள்ளே நிற்கின்ற பொன்னாலான கொடி போன்ற சுழுமுனை நாடியின் மூலம் தன்னை அடைவதற்கான வழியில் அவர்களை கொண்டு செல்லுகின்ற சக்தியாக இறைவன் இருப்பான்.

பாடல் #1718

பாடல் #1718: ஏழாம் தந்திரம் – 2. அண்ட லிங்கம் (அண்டம் எங்கும் பரவி இருக்கும் பரம்பொருளின் வடிவம்)

தூய விமானமுந் தூலம தாகுமா
லாய சதாசிவ மாகுநற் சூக்கும
மாய பெலிபீடம் பத்திர லிங்கமா
மாய வரனிலை யாய்ந்துகொள்வார் கட்கே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தூய விமானமுந தூலம தாகுமா
லாய சதாசிவ மாகுநற சூககும
மாய பெலிபீடம பததிர லிஙகமா
மாய வரனிலை யாயநதுகொளவார கடகெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தூய விமானமும் தூலம் அதாகும் ஆல்
ஆய சதா சிவம் ஆகும் நல் சூக்குமம்
ஆய பெலி பீடம் பத்திர இலிங்கம் ஆம்
ஆய அரன் நிலை ஆய்ந்து கொள் ஆர்களுக்கே.

பதப்பொருள்:

தூய (தூய்மையான) விமானமும் (விமானம் என்று அழைக்கப் படுகின்ற இலிங்கத்தின் மேல் பகுதியானது {பாணம்}) தூலம் (தீயவற்றை அழித்து உலகிற்கு நன்மையை தருகின்ற தூல வடிவமே) அதாகும் (பிரபஞ்சமாகி பிரபஞ்சத்தோடு தொடர்பு கொண்டு) ஆல் (இருக்கின்றது ஆதலால்)
ஆய (இலிங்கத்தின் அடிப் பகுதியாக இருக்கின்ற {ஆவுடையார்}) சதா (பரம் பொருளாகிய) சிவம் (சிவபெருமானின் பிரபஞ்ச சக்தி) ஆகும் (ஆகும்) நல் (அது உலகத்திற்கு நன்மையானதை கொடுக்கின்ற) சூக்குமம் (நுண்ணிய வடிவம் ஆகும்)
ஆய (இலிங்கத்தின் நடுப் பகுதியாக இருக்கின்ற) பெலி (பலி) பீடம் (பீடமானது) பத்திர (தம்மிடம் வேண்டி வருபவர்களை பாதுகாக்கின்ற) இலிங்கம் (இலிங்க) ஆம் (வடிவம் ஆகும்)
ஆய (இவ்வாறு இருக்கின்ற) அரன் (இறைவனின்) நிலை (நிலையை) ஆய்ந்து (ஆராய்ந்து) கொள் (அறிந்து கொள்ளுகின்ற) ஆர்களுக்கே (உயிர்களால் மட்டுமே இலிங்கத்தின் உண்மையை உணர முடியும்).

விளக்கம்:

விமானம் என்று அழைக்கப் படுகின்ற இலிங்கத்தின் மேல் பகுதியானது {பாணம்} தீயவற்றை அழித்து உலகிற்கு நன்மையை தருகின்ற தூல வடிவமே பிரபஞ்சமாகி பிரபஞ்சத்தோடு தொடர்பு கொண்டு இருக்கின்றது. ஆதலால் இலிங்கத்தின் அடிப் பகுதியாக இருக்கின்ற {ஆவுடையார்} பரம் பொருளாகிய சிவபெருமானின் பிரபஞ்ச சக்தியாக உலகத்திற்கு நன்மையை கொடுக்கின்ற நுண்ணிய வடிவமாக இருக்கின்றது. இலிங்கத்தின் நடுப் பகுதியாக இருக்கின்ற பலி பீடமானது தம்மிடம் வேண்டி வருபவர்களை பாதுகாக்கின்ற இலிங்க வடிவமாக இருக்கின்றது. இவ்வாறு இருக்கின்ற இறைவனின் நிலையை ஆராய்ந்து அறிந்து கொள்ளுகின்ற உயிர்களால் மட்டுமே இலிங்கத்தின் உண்மையை உணர முடியும்.

பாடல் #1719

பாடல் #1719: ஏழாம் தந்திரம் – 2. அண்ட லிங்கம் (அண்டம் எங்கும் பரவி இருக்கும் பரம்பொருளின் வடிவம்)

முத்துடன் மாணிக்க மொய்த்த பவளமுங்
கொத்து மக்கொம்பு சிலைநீறு கோமள
மத்தன்றன் னாகம மன்ன மரிசியா
முத்தத்தின் சாதனம் பூமண லிங்கமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

முததுடன மாணிகக மொயதத பவளமுங
கொதது மககொமபு சிலைநீறு கொமள
மததனறன னாகம மனன மரிசியா
முததததின சாதனம பூமண லிஙகமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

முத்துடன் மாணிக்கம் ஒய்த்த பவளமும்
கொத்தும் அக் கொம்பு சிலை நீறு கோமளம்
அத்தன் தன் ஆகமம் அன்னம் அரிசி ஆம்
உத்தத்தின் சாதனம் பூ மண இலிங்கமே.

பதப்பொருள்:

முத்துடன் (முத்துக் கல்லும்) மாணிக்கம் (மாணிக்கம் கல்லும்) ஒய்த்த (அவற்றுக்கு ஈடான) பவளமும் (பவளக் கல்லும்)
கொத்தும் (கொத்துகின்ற உளியும்) அக் (அதை தட்ட உதவுகின்ற) கொம்பு (சுத்தியும் போன்ற ஆயுதங்களால் செதுக்கப் பட்ட) சிலை (சிலையில்) நீறு (திரு நீறும்) கோமளம் (கோமேதகக் கல்லும் அணிவித்து)
அத்தன் (அனைத்திற்கும் தந்தையான இறைவன்) தன் (தனது உயிர்களுக்கு அருளிய) ஆகமம் (சிவ ஆகமத்தில் உள்ளபடி) அன்னம் (சமைக்கப் பட்ட உணவும்) அரிசி (சமைக்கப் படாத அரிசியும்) ஆம் (படையலாக வைத்து)
உத்தத்தின் (மனதை ஒருமுகப் படுத்துகின்ற) சாதனம் (கருவியாக) பூ (அணிவித்த பூமாலையில் இருந்து வருகின்ற) மண (நறுமணமும் சேர்ந்து அமைக்கப் பட்டதே) இலிங்கமே (பரிபூரணமான சிவ இலிங்கம் ஆகும்).

விளக்கம்:

முத்துக் கல்லும், மாணிக்கம் கல்லும், அவற்றுக்கு ஈடான பவளக் கல்லும், கொத்துகின்ற உளியும் அதை தட்ட உதவுகின்ற சுத்தியும் போன்ற ஆயுதங்களால் செதுக்கப் பட்ட சிலையில், திரு நீறும், கோமேதகக் கல்லும் அணிவித்து, அனைத்திற்கும் தந்தையான இறைவன் தனது உயிர்களுக்கு அருளிய சிவ ஆகமத்தில் உள்ளபடி சமைக்கப் பட்ட உணவும், சமைக்கப் படாத அரிசியும் படையலாக வைத்து, மனதை ஒருமுகப் படுத்துகின்ற கருவியாக அணிவித்த பூமாலையில் இருந்து வருகின்ற நறுமணமும் சேர்ந்து அமைக்கப் பட்டதே பரிபூரணமான சிவ இலிங்கம் ஆகும்.