பாடல் #789

பாடல் #789 : மூன்றாம் தந்திரம் – 15. ஆயுள் பரிட்சை

பிறப்பது சூழ்ந்த பெருந்தகை நந்தி
குறிப்பது கூடிய கோலக் குரம்பைப்
பழப்பதி யாவது பற்றறும் பாசம்
அழப்படி செய்வார்க் ககலும் மதியே.

விளக்கம் :

உயிர்கள் பிறத்தல் வேண்டும் என நந்தி திருவுள்ளக் குறிப்புக் கொண்டருளினன். அக்குறிப்பினால் மாயையால் இவ்வுடம்பு உயிர்களுக்கு அமைந்தது. இவ்வுடல் தொன்று தொட்டு தொடர்ந்து வருவது பாசம் என்னும் பற்று அறுப்பதற்க்கான கருவியாக உள்ளது. இந்த அழகிய உடல் பிஞ்சு, காய், செங்காய் என்று ஆகி முடிவில் பழமாய்ப் பழுத்து விழுந்து அழிந்து விடும். விழுவதற்குள் பாசங்களில் ஆழ்ந்து போகாமல் பாசங்களை விலகும்படி செய்து அதற்குரிய முறைகளில் பழகினால் பாசம் விலகி மெய்யுணர்வு பெருகி ஞானம் மிகும்.

பாடல் #740

பாடல் #740: மூன்றாம் தந்திரம் – 14. காலச்சக்கரம் (காலத்தின் சுழற்சி)

மதிவட்ட மாக வரையைந்து நாடி
இதுவிட்டிங் கீரா றமர்ந்த அதனாற்
பதிவட்டத் துள்நின்று பாலிக்கு மாறும்
அதுவிட்டுப் போமாறு மாயலுற் றேனே.

விளக்கம்:

பூமியை நிலா சுற்றி வருகின்ற ஒரு நாளிலிருந்து பதினைந்து நாட்களுக்கு ஐந்து ஐந்து நாளாக சூரியனின் வட்டத்திலிருந்து விலகி கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சம் பெற்று பெளர்ணமியாகும் விதமும் பின்பு ஐந்து ஐந்து நாளாக சூரியனின் வட்டத்தை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சம் இழந்து பின்பு அமாவாசையாகும் விதமும் சந்திரன் சூரியனின் வட்டத்தில் இருக்கும் பன்னிரண்டு இராசிகளில் ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை நாட்கள் அமர்ந்து பின் அடுத்த ராசிக்கு மாறுகின்ற விதமும் இவை அனைத்தும் இறைவனின் திருவருளாலே உயிர்களின் கர்ம வினைகளுக்கேற்ப காத்து அருளுகின்ற விதமும் உடலை விட்டு உயிர் பிரியும்போது அதனை விட்டுப் பிரிந்து செல்லுகின்ற விதமும் ஆராய்ந்து அருளுகின்றேன்.

கருத்து: சந்திரன் பூமியைச் சுற்றும்போது சூரியவட்டத்தில் வரும் பன்னிரண்டு இராசிகளிலும் 30 நாட்களில் அமர்ந்து மாறும்போது இறையருளால் உயிர்களைக் காக்கின்ற தன்மையையும் பின்பு உயிர் உடலை விட்டுப் பிரியும் விதமும் ஆராய்ந்து இந்தத் தலைப்பிலுள்ள பாடல்கள் அருளப்பட்டுள்ளன.

பாடல் #741

பாடல் #741: மூன்றாம் தந்திரம் – 14. காலச்சக்கரம் (காலத்தின் சுழற்சி)

உற்றறி வைந்தும் உணர்ந்தறி வாறேழுங்
கற்றறி வெட்டுங் கலந்தறி வொன்பதும்
பற்றிய பத்தும் பலவகை நாழிகை
அற்ற தறியாது அழிகின்ற வாறே.

விளக்கம்:

முதல் நிலையில் ஐந்து புலன்களைச் சார்ந்து இருக்கும் உணர்வுகளில் பெற்ற ஐந்து அறிவுகளும் இரண்டாவது நிலையில் ஐந்தறிவோடு நன்மை தீமையை உணரும் பகுத்தறிவு சேர்ந்து பெற்ற ஆறு அறிவுகளும் மூன்றாவது நிலையில் பகுத்தறிவோடு மனம் சேர்ந்து பெற்ற ஏழு அறிவுகளும் நான்காவது நிலையில் மனதோடு கல்வி சேர்ந்து பெற்ற எட்டு அறிவுகளும் ஐந்தாவது நிலையில் கல்வியோடு அனுபவம் சேர்ந்து பெற்ற ஒன்பது அறிவுகளும் ஆறாவது நிலையில் அனைத்தும் இறையருளாலே என்பதை உணர்ந்து அவனது திருவடிகளை விடாமல் பற்றிக்கொண்டு பெற்ற பத்து அறிவுகளைக் கொண்டு அழிந்து போகும் உடலை விட்டு அழியாத ஞானத்தைப் பெறுவது எப்படி என்பதை அறியாமலேயே பல உயிர்கள் வீணாக அழிந்து போகின்றன.

கருத்து: உயிர்களின் வளர்ச்சியில் ஆறு வகை அறிவு நிலைகளையும் அறிந்து அதன்மூலம் இறைவனின் திருவடிகளைப் பற்றிக்கொண்டு காலச் சுழற்சியாகிய பிறவியிலிருந்து நீங்கும் வழியை அறியாமலேயே பல உயிர்கள் வீணாகிவிடுகின்றன.

பாடல் #742

பாடல் #742: மூன்றாம் தந்திரம் – 14. காலச்சக்கரம் (காலத்தின் சுழற்சி)

அழிகின்ற ஆண்டவை ஐயைஞ்சு மூன்று
மொழிகின்ற முப்பத்து மூன்றென்ப தாகுங்
கழிகின்ற காலறு பத்திரண் டென்ப
தெழுகின்ற ஈரைம்ப தெண்ணற் றிருந்தே.

விளக்கம்:

உயிர்களின் வாழ்நாளில் அழியக்கூடிய நான்கு பகுதிகள் இருக்கின்றன. முதலாவது எதற்கும் பயனின்றி அழிகின்ற பகுதி பதிமூன்று வயது வரையான குழந்தை பருவம். இரண்டாவது பலராலும் சொல்லப்படுகின்ற அளவிற்கு வாழ்ந்து முடியும் பகுதி முப்பத்து மூன்று வயது வரையான வாலிப பருவம். மூன்றாவது பலருக்கும் பயனுள்ளதாக வாழ்ந்து முடியும் பகுதி அறுபத்தி இரண்டு வயது வரையான முதிர்வு பருவம். நான்காவது முழுவதும் வாழ்ந்து பரிபூரணம் என்று சொல்லப்படுகின்ற நிலையில் முடியும் பகுதி நூறு வயது வரையான வயோதிக பருவம். பதிமூன்று வயதிலிருந்து எப்போது வேண்டுமானாலும் இறைவனை அடையக்கூடிய வழிகளில் முயன்று இறைவனை உணர்ந்து விட்டால் எல்லைகள் இல்லாமல் எண்ணிலடங்காத ஆண்டுகள் ஆனாலும் அழியாமல் இருக்கலாம்

கருத்து: உயிர்களின் வாழ்நாளில் நான்கு விதமான பகுதிகள் இருகின்றன. இந்தக் பகுதிகளுக்குள் வாழ்க்கையை முடித்துக் கொள்வதும் அதைத் தாண்டி இறையருளால் யோகப் பயிற்சிகள் செய்து நீண்ட காலம் வாழ்வதும் ஒவ்வொரு உயிரின் நோக்கத்தைப் பொறுத்தது.

பாடல் #743

பாடல் #743: மூன்றாம் தந்திரம் – 14. காலச்சக்கரம் (காலத்தின் சுழற்சி)

திருந்து தினமத் தினத்தி னொடுநின்
றிருந்தறி நாளொன் றிரண்டெட்டு மூன்று
பொருந்திய நாளொடு புக்கறிந் தோங்கி
வருந்துத லின்றி மனைபுக லாமே.

விளக்கம்:

உயிர்கள் பிறந்த தினத்தின் நட்சத்திரத்தை அறிந்து கொண்டு அதிலிருந்து ஒரு நாள், இரண்டு நாள், மூன்று நாள், எட்டு நாள் ஆகிய நாட்களைக் கூட்டி வருகின்ற நாட்களில் அமையும் நட்சத்திரங்களை அறிந்து அந்த நட்சத்திரங்கள் அமையும் நாட்களில் இறைவனை அறிந்துகொள்ளும் அகயோகப் பயிற்சிகளை எதைப்பற்றியும் கவலைப் படாமல் ஆரம்பிக்கலாம்.

கருத்து: அகயோகப் பயிற்சியை ஆரம்பிப்பதற்கு ஏதுவான நாட்களை பிறந்த நாள் நட்சத்திரத்திலிருந்து எடுத்துக்கொண்டு எந்தத் தயக்கமும் இன்றி ஆரம்பிக்கலாம்.

பாடல் #744

பாடல் #744: மூன்றாம் தந்திரம் – 14. காலச்சக்கரம் (காலத்தின் சுழற்சி)

மனைபுகு வீரும் அகத்திடை நாடி
எனவிரு பத்தஞ்சும் ஈரா றதனால்
தனையறிந் தேறட்டுத் தற்குறி யாறு
வினையறி யாறு விளங்கிய நாலே.

விளக்கம்:

அகயோகம் செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தில் பாடல் #748 இல் உள்ளபடி நட்சத்திரம் பார்த்து சாதனைகளை ஆரம்பிக்கும் சாதகர்கள் பாடல் #451 இல் உள்ளபடி தமக்குள் இருபத்தைந்து தத்துவங்களாக இருக்கும் இறைவனை அறிய வேண்டி மூச்சுக்காற்றை பாடல் #728 இல் உள்ளபடி சுழுமுனை நாடியின் 12 அங்குல அளவிற்கும் இறைவனின் மேல் சிந்தனையை வைத்து ஏற்றி இறக்கி தமது மூலாதாரத்திலுள்ள குண்டலினி சக்தியை எழுப்பி ஒவ்வொரு சக்கரமாக ஏறி ஏழாவது சக்கரமாகிய சகஸ்ரதளம் சென்றடைந்தவுடன் பாடல் #709 இல் உள்ளபடி அதையும் தாண்டிய துவாதசாந்த வெளியில் இறைவனோடு கலந்து அவன் நான்கு உயர் தத்துவங்களாக இருப்பதை உணர்ந்து கொள்வார்கள்.

கருத்து: முறைப்படி அகயோகம் செய்யும் சாதகர்கள் இறைவனோடு கலந்து உண்மை ஞானத்தை அடைவார்கள்.

இருபத்தைந்து தத்துவங்கள்:

5 பூதங்கள்: நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம். 5 புலன்கள்: கண்களால் பார்த்தல், காதுகளால் கேட்டல், வாயால் சுவைத்தல், மூக்கால் நுகருதல், தோலால் தொடுதல். 5 ஞானேந்திரியங்கள்: ஓசை – கேட்பது, ஊறு – உணர்தல், ஒளி – பார்ப்பது, சுவை – உண்பது, நாற்றம் – முகர்வது. 5 கன்மேந்திரியங்கள்: வாய் – பேச்சு, கைகள் – செயல், கால்கள் – போக்குவரவு, எருவாய் – கழிவு நீக்கம் பகுதி, கருவாய் – இன்பமும் பிறப்பும். 4 அந்தக்கரணங்கள்: மனம் – எண்ணங்கள், புத்தி – அறிவு, சித்தம் – சிந்தனை, அகங்காரம் – நான் எனும் நினைப்பு. 1 புருடன்: ஆன்மா.

நான்கு உயர் தத்துவங்கள்:

  1. சிவம் (அசையாசக்தி) 2. சக்தி (அசையும் சக்தி) 3. நாதம் (ஒலி), 4. விந்து (ஒளி)

பாடல் #745

பாடல் #745: மூன்றாம் தந்திரம் – 14. காலச்சக்கரம் (காலத்தின் சுழற்சி)

நாலுங் கடந்தது நால்வரும் நாலைந்து
பாலங் கடந்தது பத்துப் பதினைந்து
கோலங் கடந்த குணத்தாண்டு மூவிரண்
டாலங் கடந்ததுஒன் றாரறி வாரே.

விளக்கம்:

பாடல் #744 இல் உள்ளபடி துவாதசாந்த வெளியில் இறைவன் நான்கு உயர் தத்துவங்களாக இருப்பதை உணர்ந்த யோகியர்கள் அதையும் தாண்டிய நிலையில் பாடல் #467 இல் உள்ளபடி ஒன்பது துவாரங்கள் இருபத்தைந்து தத்துவங்களால் ஆன உருவத்தைத் தாண்டி அதைச் சுற்றியிருக்கும் குணங்களைக் கொண்ட ஐந்துவித கோசங்களையும் தாண்டி அண்டசராசரங்கள் அனைத்தையும் தாண்டிய ஒரே பொருளாக இருப்பதை அறிந்துகொள்வதில்லை.

கருத்து: இறைவனை நான்கு உயர் தத்துவங்களாக உணர்ந்த யோகியர்களாலும் இறைவன் அனைத்தையும் கடந்த ஒரே பொருளாக இருப்பதை உணர்ந்துகொள்வதில்லை.

ஐந்து கோசங்கள்:

  1. அன்னமயம் – உணவினால் உருவாகும் உடல்.
  2. பிராணமயம் – மூச்சுக்காற்றால் உருவாகும் உயிர்.
  3. மனோமயம் – மனதினால் உருவாகும் எண்ணங்கள்.
  4. விஞ்ஞானமயம் – அறிவினால் உருவாகும் ஞானம்.
  5. ஆனந்தமயம் – உண்மை ஞானமாகிய பேரறிவால் உருவாகும் பேரின்பம்.

பாடல் #746

பாடல் #746: மூன்றாம் தந்திரம் – 14. காலச்சக்கரம் (காலத்தின் சுழற்சி)

ஆறும் இருபதுக் கையஞ்சு மூன்றுக்குந்
தேறு மிரண்டு மிருபத்தொ டாறிவை
கூறு மதியொன் றினுக்கிரு பத்தேழு
வேறு பதியங்கணன் நாள்விதித் தானே.

விளக்கம்:

பாடல் #743 ல் உள்ள முறைப்படி நட்சத்திரம் பார்த்து அகயோகப் பயிற்சியை குருநாதரின் வழிகாட்டுதலின் வழியில் மேற்கொள்ளும் சாதகர்களுக்கு இருபதாவது நாளில் மூச்சுக்காற்று ஆறு ஆதார சக்கரங்களையும் செல்வதை உணரலாம். இருபத்தி ஐந்தாவது நாளில் சகஸ்ரதளத்தைத் தாண்டிய துவாதசாந்த வெளியில் இருக்கும் மூன்று மண்டலங்களில் முதலாவதான அக்கினி மண்டலத்திலும் இருபத்தி ஆறாவது நாளில் இரண்டாவதான சூரிய மண்டலத்திலும் இருபத்தி ஏழாவது நாளில் மூன்றாவதான சந்திர மண்டலத்திலும் மூச்சுக்காற்றை வைத்து பயிற்சி செய்தால் இருபத்தி எட்டாவது நாளில் அனைத்தையும் தாண்டி இருக்கும் இறைவனை அறியலாம் என்று யோகத்தின் தலைவனாகிய இறைவன் விதித்து வைத்தான்.

கருத்து: அகயோகப் பயிற்சியை குருநாதரின் வழிகாட்டுதலின் வழியில் முறையாக ஆரம்பிக்கும் சாதகர்கர்கள் தமது இருபத்தி எட்டாவது நாளில் அனைத்தையும் தாண்டி இருக்கும் இறைவனை அறியலாம்.

பாடல் #747

பாடல் #747: மூன்றாம் தந்திரம் – 14. காலச்சக்கரம் (காலத்தின் சுழற்சி)

விதித்த இருபத்தெட் டொடுமூன் றாகத்
தொகுத்தறி முப்பத்து மூன்று தொகுமின்
பதித்தறி பத்தெட்டும் பாரா திகணால்
உதித்தறி மூன்றிரண் டொன்றின் முறையே.

விளக்கம்:

பாடல் #746 இல் உள்ளபடி அகயோகத்தில் இறைவன் விதித்த இருபத்தி எட்டு நாட்கள் முடிந்த பின் அனைத்தையும் தாண்டி இருக்கும் இறைவனை அறிய முயலும் சாதகர்கள் பாடல் # 467 ல் உள்ளபடி தமக்குள் இருக்கும் முப்பத்தாறு தத்துவங்களையும் ஒன்றாகத் தொகுத்து தமது மூச்சுக்காற்றை சுழுமுனை நாடியிலிருந்து 18 அங்குலம் தாண்டியிருக்கும் (புருவ மத்தியிலிருந்து தலை உச்சி 6 அங்குலம், தலை உச்சியிலிருந்து துவாதசாந்த வெளி 12 அங்குலம்) துவாதசாந்த வெளியில் பதித்து பாடல் #744 இல் உள்ளபடி உணர்ந்த நான்கு உயர் தத்துவங்களிலேயே மனதைச் செலுத்தி அகயோகம் பயின்றால் ஐந்து சிவதத்துவங்களாக இருக்கும் இறைவன் ஒருவனே என்பதை அறிந்து கொள்ளலாம்.

கருத்து: ஐந்து சிவதத்துவங்களாக இருக்கும் இறைவன் ஒருவனே சதாசிவமூர்த்தி என்பதை இருபத்தி எட்டு நாட்களுக்குப் பின் முயலும் அகயோகப் பயிற்சியால் அறிந்து கொள்ளலாம்.

பாடல் #748

பாடல் #748: மூன்றாம் தந்திரம் – 14. காலச்சக்கரம் (காலத்தின் சுழற்சி)

முறைமுறை யாய்ந்து முயன்றில ராகில்
இறையிறை யார்க்கும் இருக்க அரிது
மறையது காரண மற்றொன்று மில்லை
பறைபறை யாது பணிந்து முடியே.

விளக்கம்:

பாடல் #743 ல் இருந்து #747 வரை உள்ள அகயோகப் பயிற்சி முறைகளை முறையாக குருவின் மூலம் கற்று பகுத்து அறிந்துகொண்டு முயற்சிக்க வேண்டும். குருவருள் இல்லாமல் முறையில்லாமல் செய்யும் யோகப் பயிற்சியால் நீண்ட காலம் நிலைத்து நிற்கவும் முடியாமல் இறையருளும் அவர்களுக்கு கிடைக்காது. குருவின் மூலம் முறையாக கற்றுக்கொண்டதும் அதை வேறு எவருக்கும் சொல்லாமல் பணிவோடு முயற்சி செய்து முடியுங்கள். யாருக்கும் சொல்லாமல் பணிவோடு செய்யுங்கள் என்று அருளியதன் காரணம் இறையருள் கிடைக்காது இதுவே காரணம் அன்றி வேறொன்றும் இல்லை.

கருத்து: குருவின் மூலம் முறையாகக் கற்று அதன்படி அகயோகப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.