பாடல் #749

பாடல் #749: மூன்றாம் தந்திரம் – 14. காலச்சக்கரம் (காலத்தின் சுழற்சி)

முடிந்த தறியார் முயல்கின்ற மூர்க்கர்
இடிஞ்சில் இருக்க விளக்கெரி கொண்டு
கடிந்தனல் மூளக் கதுவவல் லார்க்கு
நடந்திடும் பாரினில் நண்ணலு மாமே.

விளக்கம்:

முறையாகச் செய்யும் அகயோகப் பயிற்சினால் சாதிக்கக்கூடிய விஷயங்களை அறியாமல் வேறு பல வழிகளில் அதை சாதிக்க வேண்டி முயற்சி செய்பவர்கள் கையில் அகல் விளக்கு இருந்தாலும் அதை அறியாமல் தீப்பந்தத்தை தேடி அலையும் மூடர்களைப் போன்றவர்களே. உயிர்களின் உடலுக்குள்ளேயே குண்டலினி சக்தி எனும் நெருப்பு மூலாதாரம் எனும் அகலில் தூங்கிக் கொண்டு இருக்கின்றது. அதை எழுப்பி சுழுமுனை நாடியின் வழியே எடுத்துச் சென்று சகஸ்ரதளத்தில் இருக்கும் ஜோதியில் பொருத்தி பெரிய விளக்காகப் பற்ற வைத்து அஞ்ஞானம் எனும் இருளை அகற்றி உண்மை ஞானத்தை உணர முடிந்த சாதகர்களுக்கு காலம் சக்கரம் போல் ஓடிக் கொண்டே இருக்கும் இந்த உலகத்தில் எதனாலும் பாதிக்கப் படாமல் என்றும் நீடித்து வாழும் வல்லமை கிடைக்கும்.

கருத்து: அகயோகப் பயிற்சிகளை முறையாகக் கடைபிடித்து ஞானத்தை உணர முடிந்த சாதகர்கள் நீடித்தகாலம் வாழலாம்.

பாடல் #750

பாடல் #750: மூன்றாம் தந்திரம் – 14. காலச்சக்கரம் (காலத்தின் சுழற்சி)

நண்ணுஞ் சிறுவிர னாணாக மூன்றுக்கும்
பின்னிய மார்பிடைப் பேராமல் ஒத்திடுஞ்
சென்னியின் மூன்றுக்குஞ் சேரவே நின்றிடில்
உன்னி உணர்ந்திடும் ஓவியந் தானே.

விளக்கம்:

கட்டை விரலால் சுண்டு விரலைப் பிடித்துக் கொண்டு மற்ற மூன்று விரல்களையும் நேராக நீட்டினால் வரும் முத்திரை வில்லில் ஏற்றிய அம்புகள் போல இருக்கும் மூன்று விரல்களைப் போலவே இடகலை, பிங்கலை மற்றும் சுழுமுனை ஆகிய மூன்று நாடிகளும் மார்பில் உள்ள இதயத்தில் பின்னிப் பிணைந்து பிரியாமல் ஒன்றாகச் சேர்ந்து இருக்கின்றன. அதைப் போலவே மூன்று நாடிகளையும் தலையிலுள்ள மூன்று ஆதாரச் சக்கரங்களோடு (விசுக்தி, ஆக்ஞா, சகஸ்ரதளம்) ஒன்றாகப் பொருந்தும் படி செய்து மூச்சுக்காற்றை சகஸ்ரதளத்திற்கு மேலே இருக்கும் மூன்று மண்டலங்களோடும் (அக்கினி, சந்திர, சூரிய மண்டலங்கள் பாடல் #746 இல் உள்ளபடி) கலக்கும் படி செய்து எண்ணங்களை மொத்தமும் அதிலேயே வைத்து காகிதத்தில் வரைந்த ஓவியம் போல எந்த அசைவும் இன்றி இருந்தால் உண்மை ஞானத்தை உணர்ந்து உடல் என்றும் அழியாத அழகான ஓவியம் போல இளமையுடன் நீண்ட காலம் இருக்கும்.

கருத்து: அகயோகப் பயிற்சியின்படி ஒன்றாக இருக்கும் மூன்று நாடிகளைகளோடு மூச்சுக்காற்றையும் மூன்று மண்டலங்களோடும் கலந்து தியானித்தால் உண்மை ஞானத்தை உணர்ந்து உடல் என்றும் அழியாத ஓவியம் போல இருக்கும்.

பாடல் #751

பாடல் #751: மூன்றாம் தந்திரம் – 14. காலச்சக்கரம் (காலத்தின் சுழற்சி)

ஓவிய மான வுணர்வை அறிமின்கள்
பாவிக ளித்தின் பயனறி வாரில்லை
தீவினை யாமுடல் மண்டல மூன்றுக்கும்
பூவினில் இருந்திடும் புண்ணியத் தண்டே.

விளக்கம்:

பாடல் #750 இல் உள்ளபடி அகயோகத்தால் உண்மை ஞானத்தை உணர்ந்து ஓவியம் போல அசையாமல் நிலைபெறும் உணர்வுகளை அறிந்து கொள்ளுங்கள். ஒழுக்கத்திலிருந்து தவறி பாவத்திலேயே வாழுகின்ற உயிர்கள் இந்த யோகத்தின் பயன்களை அறிந்து கொள்வதில்லை. தீவினையால் பிறந்த இந்த உடலுக்கு இருக்கும் அனைத்து வினைகளையும் நீக்கி பிறவிச் சுழற்சியை அகயோகப்பயிற்சியால் அறுத்து அடைய வேண்டிய அக்கினி, சந்திர, சூரிய மண்டலங்களுக்கு (பாடல் #746 ல் உள்ளபடி) செல்லும் வழியாக சகஸ்ரதளத்தின் ஆயிரம் இதழ் கொண்ட தாமரைப் பூவிற்கு காம்பு போல புண்ணிய பாதையான சுழுமுனை நாடி இருக்கின்றது.

கருத்து: தீவினையால் பிறந்த உடலுக்கு புண்ணியத்தை பெற்று பிறவி இல்லா நிலையடைய ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மலரும் அதன் காம்பு போல நீண்ட சுழுமுனை நாடியும் இருக்கின்றது.

பாடல் #752

பாடல் #752: மூன்றாம் தந்திரம் – 14. காலச்சக்கரம் (காலத்தின் சுழற்சி)

தண்டுடன் ஓடித் தலைப்பெய்த யோகிக்கு
மண்டல மூன்று மகிழ்ந்துடல் ஒத்திடுங்
கண்டவர் கண்டனர் காணார் வினைப்பயன்
பிண்டம் பிரியவே பிணங்குகின் றாரே.

விளக்கம்:

சுழுமுனை நாடியின் வழியே மூச்சுக்காற்றை மேலேற்றிச் சென்று தலை உச்சியிலிருக்கும் சகஸ்ரதள ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மலரோடு கலந்து விடும் அகயோகத்தை செய்த சாதகர்கள் சகஸ்ரதளத்தையும் தாண்டிய துவாதசாந்த வெளியிலிருக்கும் அக்கினி, சந்திர, சூரிய மண்டலங்களோடு (பாடல் #746 ல் உள்ளபடி) உணர்வு ஒடுங்கி இருந்தால் பேரின்பத்தில் திளைத்து அந்த மண்டலங்களோடு கலந்து நீண்ட காலம் அழியாமல் அழகுடன் இருப்பார்கள். இந்த நிலையை அகயோகப் பயிற்சியினால் முயற்சி செய்து அடைந்தவர்கள் மட்டுமே கண்டு உணர்கின்றார்கள். தங்களின் தீவினைப் பயனால் இந்தப் பயிற்சியைப் பற்றித் தெரியாமலோ அல்லது இதைச் செய்யாமல் வேறு வழிகளில் முயன்று தோல்வியடைந்தவர்களோ தங்களின் உடலை விட்டு உயிர் பிரிந்து மீண்டும் மீண்டும் பிறக்கும் பிறவிச் சுழற்சியில் சிக்கிக் கொண்டு வருந்துகின்றார்கள்.

கருத்து: அகயோகத்தை செய்பவர்கள் அதைப் பெற்று பேரின்பத்தில் திளைத்து பிறவிச் சுழற்சியிலிருந்து விடுபடுவார்கள். மற்றவர்கள் தங்களின் தீவினைப் பயனால் பிறவித் துன்பத்திலேயே கிடந்து வருந்துகின்றார்கள்.

பாடல் #753

பாடல் #753: மூன்றாம் தந்திரம் – 14. காலச்சக்கரம் (காலத்தின் சுழற்சி)

பிணங்கி அழிந்திடும் பேறது கேள்நீ
அணங்குட னாதித்த னாறு விரியின்
வணங்குட னேவந்த வாழ்வு குலைந்து
சுணங்கனுக் காகச் சுழல்கின்ற வாறே.

விளக்கம்:

பிறவிச் சுழற்சியில் சிக்கிக்கொண்டு இறைவனை அடைய உதவும் இந்த பிறவி எப்படி அழிந்து போகின்றது என்பதைக் கேட்டுக்கொள்ளுங்கள். வினைகளைத் தீர்த்துக்கொண்டு தம்மை வந்து அடைய வேண்டும் என்பதற்காக இறைவன் கொடுத்த பிறவியை உயிர்கள் தங்களது ஆசைகளின் வழியிலேயே சென்று மேலும் மேலும் அதிகமாக வினைகளைச் சேர்த்துக் கொண்டே இருந்தால் இறைவனை உணர்ந்து அனைவரும் போற்றி வணங்கிடும் நிலை பெற வேண்டிய வாழ்க்கை சீர்குலைந்து எந்தவித இலக்கும் இல்லாமல் திரியும் நாய்களைப்போல் திரிந்து இறந்து மீண்டும் மீண்டும் பிறந்து அழிகின்ற வாழ்க்கையாக மாறிவிடும்.

கருத்து: உயிர்கள் தங்கள் ஆசைகளின் வழி செல்வதால் வினைகளை சேர்த்துக்கொண்டு மீண்டும் மீண்டும் பிறப்பெடுத்துக்கொண்டே இருக்கின்றன.

பாடல் #754

பாடல் #754: மூன்றாம் தந்திரம் – 14. காலச்சக்கரம் (காலத்தின் சுழற்சி)

சுழல்கின்ற வாறின் துணைமலர் காணான்
தழலிடைப் புக்கிடுந் தன்னு ளிலாமற்
கழல்கண்டு போம்வழி காணவல் லார்க்குக்
குழல்வழி நின்றிடுங் கூத்தனு மாமே.

விளக்கம்:

பிறவிச் சுழற்சியில் சிக்கிக்கொண்டு பிறந்து கொண்டே இருக்கின்ற உயிர்கள் தம்மோடு எப்போதும் துணையாக இருக்கும் இறைவனின் திருவடியைத் தாங்கிக் கொண்டு இருக்கின்ற மலரைக் காண்பதில்லை. இறந்த பிறகு நெருப்பில் இடப்படும் இந்த உடலை நிரந்தரம் என்று எண்ணாமல் தமக்குள்ளேயே துணையாக இருக்கும் இறைவனே என்றும் நிரந்தரம் என்பதை உணர்ந்து அவனது திருவடிகளைச் சென்று அடையும் வழியான சுழுமுனை நாடியைக் கண்டுகொண்டவர்கள் அதன் வழியே சென்று அடையும் தலை உச்சியைத் தாண்டிய துவாதசாந்த வெளியில் திருநடனம் புரிந்து கொண்டிருக்கும் இறைவனை கண்டு உணர்ந்து அவனோடு கலந்து பேரின்பத்தில் இருக்கலாம்.

கருத்து: இறந்த பிறகு நெருப்புக்கு இரையாகும் உடலை பற்றிக்கொண்டு பிறவிச் சுழற்சியில் சிக்கிக் கொள்ளாமல் உடலுக்குள் ஏழாவது சக்கரத்தில் இருக்கும் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரில் இறைவன் ஒளி உருவமாக வீற்றிருப்பதை பார்த்து இறைவனின் திருவடிகளைப் பற்றிக்கொண்டு அவனோடு கலந்து பேரின்பத்தில் எப்போதும் நிலைத்து வாழலாம்.

பாடல் #755

பாடல் #755: மூன்றாம் தந்திரம் – 14. காலச்சக்கரம் (காலத்தின் சுழற்சி)

கூத்தன் குறியிற் குணம்பல கண்டவர்
சாத்திரந் தன்னைத் தலைப்பெய்து நிற்பர்கள்
பார்த்திருந் துள்ளே அனுபோக நோக்கிடில்
ஆத்தனு மாகி யலர்ந்துவிடு மொன்றே.

விளக்கம்:

பாடல் #754 ல் உள்ளபடி தலை உச்சியைத் தாண்டிய துவாதசாந்த வெளியில் திருநடனம் புரிந்து கொண்டிருக்கும் இறைவனைத் தரிசித்து தமக்குள் இறைத்தன்மைகள் பலவற்றை கண்டவர்கள் சாஸ்திரங்கள் கூறும் தர்மங்களையே தலையானதாகக் கொண்டு அவற்றை விட்டு சிறிதும் விலகாமல் கடைபிடித்து நிற்பவர்கள். தர்மம் தவறாமல் நின்று தமக்குள்ளேயே இறைவனின் திருவடியையும் திருநடனத்தையும் தரிசித்துக்கொண்டு அவனருளால் பெற்ற பேரின்பத்தை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் தாமே சிவமாகி அவனைப் போலவே எங்கும் வியாபித்து இருப்பார்கள்.

கருத்து: இறைவனை தமக்குள்ளே தரிசித்து தர்மத்தை கடைபிடித்து அதன் படி நடப்பவர்கள் பேரின்பத்தில் திளைத்து தாமே சிவமாகி எங்கும் வியாபித்து இருப்பார்கள்.

பாடல் #756

பாடல் #756: மூன்றாம் தந்திரம் – 14. காலச்சக்கரம் (காலத்தின் சுழற்சி)

ஒன்றில் வளர்ச்சி உலப்பிலி கேளினி
நன்றென்று மூன்றுக்கு நாளது சென்றிடும்
சென்றிடு முப்பதுஞ் சேர இருந்திடிற்
குன்றிடையில் பொன்திகழ் கூத்தனு மாமே.

விளக்கம்:

பாடல் #755 ல் உள்ளபடி இறைவனோடு ஒன்றாய் இரண்டறக் கலந்து தாமே சிவமாகி இருப்பவர்கள் அளவில்லாத காலங்கள் ஆயுள் வளர்ந்து அழியாமல் இருக்கின்ற முறையை கேட்டுக் கொள்ளுங்கள். தமக்குள் இருக்கும் இறைவனை அடைய உதவுவதால் மிகவும் நல்லது என்று சாதகர்கள் உணர்ந்து கொண்ட இடகலை, பிங்கலை, சுழுமுனை ஆகிய மூன்று நாடிகள் வழியாகவும் மூச்சுக்காற்றை உள்ளிழுத்து மேலேற்றி கீழிறக்கி என்று சுழற்சி செய்து கொண்டே இருந்தால் பல காலங்கள் உடல் அழியாமல் சென்று கொண்டே இருக்கும். முப்பது நாட்களுக்கு முறையாகச் செய்த பின்பு குன்றின் மேல் ஏற்றிவைத்த தீபம் போல தலை உச்சியிலிருக்கும் சகஸ்ரதளத்தில் பொன் நிற ஜோதி உருவமாக இருக்கும் இறைவனே தாமாகி ஒளிப் பிரகாசமாக எங்கும் பரவிக்கொண்டே இருப்பார்கள்.

கருத்து: அகயோகம் செய்யும் சாதகர்கள் இறைவனோடு கலந்து அவனைப் போலவே பொன் நிற ஜோதியாகி எங்கும் பரவிக்கொண்டே இருப்பார்கள்.

பாடல் #757

பாடல் #757: மூன்றாம் தந்திரம் – 14. காலச்சக்கரம் (காலத்தின் சுழற்சி)

கூத்தவன் ஒன்றிடுங் கூர்மை அறிந்தங்கே
ஏத்துவர் பத்தினில் எண்டிசை தோன்றிடப்
பார்த்து மகிழ்ந்து பதுமரை நோக்கிடிற்
சாத்திடு நூறு தலைப்புஎய்ய லாமே.

விளக்கம்:

பாடல் #756 ல் உள்ளபடி இறைவனோடு இரண்டறக் கலந்து தாமே சிவமாகிவிடும் வழிமுறையை அறிந்து அதன்படியே அகயோகம் செய்து ஆறு ஆதாரச் சக்கரங்களையும் தாண்டி சகஸ்ரதளத்தின் ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மலரில் ஒளி உருவமாக வீற்றிருக்கும் இறைவனோடு கலந்து அதையும் தாண்டி துவாதசாந்த வெளியில் இருக்கும் மூன்று மண்டலங்களில் (அக்கினி, சூரிய, சந்திர மண்டலங்கள் பாடல் #746 இல் உள்ளபடி) இரண்டு மண்டலங்களைத் தாண்டி மூன்றாவதாக இருக்கும் சந்திர மண்டலத்தில் எட்டுத் திசைகளும் பரவி விரியும்படி இறைவனின் ஒளி உருவத்தை ஏற்றிவைத்து பேரின்பத்தில் திளைத்து அதைத் தரிசித்துக் கொண்டே இருப்பவர்கள் சாஸ்திரங்கள் கூறிய முழுமையான வயதான நூறு ஆண்டுகளையும் கடந்து நிற்பார்கள்.

கருத்து: அகயோகம் செய்து ஜோதியான இறைவனோடு கலந்தவர்கள் அந்த ஜோதியை துவாதசாந்த வெளியிலுள்ள மூன்றாவது சந்திர மண்டலத்தில் எட்டுத் திசைகளுக்கும் பரவி விரியும்படி ஏற்றி வைத்தால் நூறு ஆண்டுகளைக் கடந்தும் பேரின்பத்தில் வாழ்வார்கள்.

பாடல் #758

பாடல் #758: மூன்றாம் தந்திரம் – 14. காலச்சக்கரம் (காலத்தின் சுழற்சி)

சாற்றிடு நூறு தலைப்பெய்து நின்றவர்
காத்துடல் ஆயிரங் கட்டுறக் காண்பர்கள்
சேர்த்துடல் ஆயிரஞ் சேர இருந்தவர்
மூத்துடன் கோடியே யுகமது வாமே.

விளக்கம்:

பாடல் #757 இல் உள்ளபடி அகயோகம் செய்து சாஸ்திரங்கள் கூறிய முழுமையான வயதான நூறு ஆண்டுகளையும் கடந்து நிற்பவர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கும் உடல் கட்டுக்குலையாமல் இருப்பதைக் காண்பார்கள். இறைவனோடு கலந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் இருந்தவர்கள் பேரறிவால் முதிர்ந்து கோடி ஆண்டுகளுக்கும் உடல் அழியாமல் இருந்து பல யுகங்களையும் காண்பார்கள்.

கருத்து: அகயோகப் பயிற்சியை முழுமையாகச் செய்து இறைவனோடு இரண்டறக் கலந்து பேரின்பத்தில் இறைவனை தரிசித்துக்கொண்டே இருப்பவர்கள் பலகோடி வருடங்கள் ஆனாலும் அழியாமல் பல யுகங்களைக் கண்டு அறிவால் முதிர்ந்து உடல் அழியாமல் இருப்பார்கள்.