அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #54

8-6-2010 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

இக்காலத்தில் காரியங்கள் நல்வழியில் செல்லும் காலங்களில் இறைவனுக்கு நன்றி கூறுவது குறையாக உள்ளது. இருப்பினும் காரியங்கள் நல்வழியில் செல்லா காலங்களில் ஏன் எமக்கு இறைவன் எதுவும் செய்வதில்லை என குறை காண்பது இயல்பானாது என்கின்ற போதிலும் ஆன்மீக பாதையில் வர வேண்டுவோர் அனைத்தும் அவன் செயல் என உறுதியாக எண்ணுதல் வேண்டும். இவ்விதம் இல்லை என்றால் ஆன்மீக பாதையில் நடப்பது கடினமாகும். அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பது உண்மையானால் நடப்பது அனைத்தும் அவன் விருப்பமே ஏன் இப்பிரபஞ்சமே அவன் விருப்பத்தால் படைத்தான் என்பதே உண்மையாகின்றது. அதிலிருக்கும் ஜீவராசிகளும் அவன் விருப்பத்திற்கே இயங்குகிறது என்பதும் உண்மையானதே. இத்தகைய நிலையில் நமக்கு நடைபெறுகின்ற ஒவ்வொன்றும் அவன் விருப்பம் என்பது மட்டுமல்லாது நம் முன் ஜென்ம வினைகளை தீர்க்கும் வழிகளே என்றென மனதில் உறுதிப்படுத்த வேண்டும். இதனை யாம் மீண்டும் மீண்டும் இங்கு கூறுகிறோம். ஏன் என்றால் ஆன்மீக பாதையில் செல்லுதல் வேண்டுமென பலர் ஆர்வம் கண்டுள்ளனர். இருப்பினும் தியாகம் செய்திடும் நிலையில் இல்லை என்கின்றதே ஓர் பெரும் குறையாகின்றது. இக்குறையை தயவு செய்து நீக்கிடுவீர்களாக. அனைத்தும் அவன் செயல் என வாயால் கூறினால் போதுமானதல்ல நடைமுறையில் செயல்படுத்த வேண்டும், இதனைக் குறையாக கூறவில்லை அறிவுரையாக எடுத்துக் கொள்வீர்களாக. இல்லையென்றால் ஓர் ஆன்மீக தோற்றம் உண்டாகுமே ஒழிய முழுமையான ஆன்மீகமாகாது. இதனை ஆங்கிலத்தில் கூறினால் உறுதியாக உணர்வீர்கள் என்பதற்காக PSEUDO SPIRITUALITY என்றும் கூறுவோம். இதனை தவிர்த்தல் வேண்டும் கற்றது கைமண் அளவாக உள்ள போதிலும் அதனை முழுமையாக கற்றுக் கொண்டு செயல்படுங்கள் என்பதே எமது அறிவுரையாகும். இவ்வாழ்கையில் ஆன்மீகம் முழுமையாக அடைய இயலாது என்கின்ற போதிலும் அதற்கு வருத்தம் வேண்டாம். மீண்டும் மீண்டும் பிறவி உண்டு ஏதோ ஓர் ஜென்மத்தில் பிறவி இல்லா நிலை அடையக்கூடும். இது மனிதனின் விதி என்பதை எடுத்துரைக்கின்றோம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.