பாடல் #1105

பாடல் #1105: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

இனியதென் மூலை யிருக்குங் குமரி
தனியொரு நாயகி தானே தலைவி
தனிபடு வித்தநன் சார்பு படுத்து
நனிபடு வித்துள்ளம் நாடிநின் றாளே.

விளக்கம்:

பாடல் #1104 இல் உள்ளபடி எமது உள்ளத்தையும் தனக்கு விருப்பமான இடமாக ஏற்றுக்கொண்டு அதில் ஓர் இடத்தில் இளமையோடு எமது உள்ளத்தின் நாயகியாக தான் ஒருவளே வீற்றிருக்கும் வயிரவி தேவி பின்பு எமது உள்ளத்தின் தலைவியாகி இருக்கின்றாள். அதன் பிறகு உலகம் உடல் ஆசை பந்தம் பாசம் ஆகியவற்றின் மேலுள்ள பற்றிலிருந்து எமது உள்ளத்தை பிரித்து தனியாக்கி அதை நன்மையே உருவான இறைவனோடு சேர்ந்து இருக்க வைத்து எமது உள்ளம் முழுவதும் நன்மையே மிகுதியாக இருக்கும் படி செய்து இறைவன் வீற்றிருக்கும் எமது உள்ளத்தையே விரும்பி அங்கே வீற்றிருக்கின்றாள்.

பாடல் #1106

பாடல் #1106: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

நாடிகண் மூன்று ணடுவெழ ஞாளத்துக்
கூடி யிருந்த குமரி குலக்கன்னி
பாடகச் சீறடிப் பைம்பொற் சிலம்பொலி
ஊடக மேவி யுறங்குகின் றேனே.

விளக்கம்:

பாடல் #1105 இல் உள்ளபடி எமது உள்ளத்தையே விரும்பி வீற்றிருக்கின்ற வயிரவியானவள் எமது உடலுக்குள் இருக்கும் இடகலை பிங்கலை சுழுமுனை ஆகிய மூன்று விதமான நாடிகளில் நடுவில் உயர்ந்து இருக்கும் சுழுமுனை நாடியின் வழியே மூலாதாரத்தில் இருந்து தமது கால்களில் தண்டையை அணிந்து கொண்டு இருக்கும் இறைவனோடு சேர்ந்து நன்மைகளின் மொத்த உருவமாக இருக்கும் இறைவியும் தனது திருவடிகளில் தூய்மையான பொன்னாலான சிலம்புகளை அணிந்து கொண்டு ஆடிக்கொண்டே மேலேழுந்து வருகின்றாள். இவர்கள் இருவரின் ஆடலில் இருந்து வரும் ஓசை எமக்குள் முழுவதும் பரவி ஒலிக்க அதிலேயே லயித்து இருக்கின்றேன்.

பாடல் #1107

பாடல் #1107: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

உறங்கு மளவின் மனோன்மணி வந்து
கறங்கு வளைக்கை கழுத்தாரப் புல்லி
உறங்கொளிர் தம்பலம் வாயி லுமிழ்ந்திட்டு
உறங்கல்ஐ யாவென் றுபாயந்தந் தாளே.

விளக்கம்:

பாடல் #1106 இல் உள்ளபடி தன்னை மறந்து ஆழ்நிலையில் லயித்து இருக்கும் போது வயிரவியானவள் இறைவனும் இறைவியும் சேர்ந்து இருக்கும் மனோன்மணி எனும் அம்சமாக எமக்குள் வந்து மென்மையாக சத்தம் செய்யும் வளையல்கள் அணிந்த தமது திருக்கரங்களால் எமது கழுத்தை வளைத்துப் பிடித்துக் கொண்டு ஆழ்நிலையில் யாம் லயித்து இருக்கும் நிலையிலேயே எமது வாயில் தாம்பூலத்தை உமிழ்ந்து கொடுத்து விட்டு அனைத்தையும் மறந்த நிலையில் லயித்துக் கொண்டே இருக்காதே அடியவனே என்று கூறி எப்போதும் விழிப்பு நிலையிலேயே பேரின்பத்தில் லயித்து இருக்கும் வழிமுறையையும் தந்து அருளினாள்.

கருத்து:

பாடல் #1106 இல் அனைத்தையும் மறந்த நிலையில் இறைவனும் இறைவியும் ஆடும் ஆட்டத்திலிருந்து வரும் ஓசையிலேயே லயித்து இருக்கும் எமக்கு இறைவனும் இறைவியும் ஒன்றாக சேர்ந்து இருக்கும் அம்சமான மனோன்மணியானவள் எமது வாயில் அமிழ்தத்தை ஊட்டி அனைத்தையும் அறிந்த நிலையிலும் பேரின்பத்தில் லயித்து இருக்கும் வழிமுறையை தந்தருளினாள்.

பாடல் #1108

பாடல் #1108: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

உபாய மளிக்கு மொருத்தியென் னுள்ளத்
தபாய மறக்கெடுத் தன்பு விளைத்துச்
சுவாவை விளைக்குஞ் சுழியகத் துள்ளே
அவாவை அடக்கிவைத் தஞ்சலென் றாளே.

விளக்கம்:

பாடல் #1107 இல் உள்ளபடி விழிப்பு நிலையிலேயே பேரின்பத்தில் லயித்து இருக்கும் வழிமுறையை அருளிய இறைவி எமது உள்ளத்திற்குள் இருக்கும் பயம் பற்று ஆகிய அனைத்தையும் சுத்தமாக நீக்கி அருளி உலகப் பற்றுக்களில் சிக்கிக் கொண்டு எப்போதும் அலைந்து கொண்டே இருக்கும் எமது மனதிற்குள் இருக்கும் ஆசையை அடக்கி வைத்து எதற்கும் பயப்பட வேண்டாம் நான் இருக்கின்றேன் என்று எமக்கு அபயம் அருளினாள்.

பாடல் #1109

பாடல் #1109: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

அஞ்சொல் மொழியா ளருந்தவப் பெண்பிள்ளை
செஞ்சொல் மடமொழி சீருடைச் சேயிழை
தஞ்சமென் றெண்ணித்தன் சேவடி போற்றுவார்க்
கிஞ்சொல் லளிக்கு மிறைவியென் றாரே.

விளக்கம்:

பாடல் #1108 இல் உள்ளபடி எதற்கும் பயப்பட வேண்டாம் நான் இருக்கின்றேன் என்று எமக்கு அபயம் அருளிய இறைவியானவள் செய்வதற்கு மிகவும் அரிதான தவங்களைச் செய்தவர்களுக்கு மட்டுமே கிடைக்கின்ற ஆரம்ப நிலையில் உணருகின்ற குழந்தை போன்ற பெண் தெய்வம் ஆவாள். அவள் சிறப்பான சொல்லை சொல்லும் மழலைப் பேச்சை உடையவள். மிகவும் அழகான உடைகளையும் ஆபரணங்களையும் அணிந்தவள். அவளைத் தஞ்சம் என்று எண்ணி அவளது மேன்மையான திருவடிகளை போற்றி வணங்குபவர்களுக்கு பேரின்பத்தை வழங்கும் இனிமையான சொல்லை அளித்து அருளுவாள் என்று அவளை அறிந்தவர்கள் சொல்வார்கள்.

கருத்து:

செய்வதற்கு மிகவும் அரிதான தவங்களைச் செய்பவர்களுக்கு அவர்களை வழிநடத்துகின்ற இறைவியின் ஆரம்ப நிலையில் மென்மையான ஒலி கேட்கும். இந்த ஒலியானது தவம் செய்த சாதகர்களை அவள் அணியும் அழகிய ஆடை அணிகலன்களாக இருந்து காக்கின்றது. இந்த இறைவின் திருவடிகளை போற்றி வணங்குபவர்களுக்கு உச்ச நிலையில் அவர்களுக்கு பேரின்பத்தை அருளும் அவளின் ஒலி கேட்கும். இதை அறிந்து உணர்ந்தவர்கள் அதை தகுதியானவர்களுக்கு எடுத்துச் சொல்வார்கள்.

பாடல் #1110

பாடல் #1110: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

ஆருயி ராயு மருந்தவப் பெண்பிள்ளை
காரிய கோதையங் காரணி நாரணி
ஊரு முயிரு முலகு மொடுங்கிடுங்
கோரியென் னுள்ளம் குலாவிநின் றாளே.

விளக்கம்:

வயிரவி தேவியானவள் செய்வதற்கு மிகவும் அரியதான தவங்களை ஆராய்ந்து செய்கின்ற யோகியர்களுக்கு மட்டுமே ஆரம்ப காலத்தில் இளமையுடன் வெளிப்படுவாள். அவளே அனைத்தையும் செயல்படுத்தும் காரியமாகவும் அந்த செயல்களுக்கான காரணமாகிய இறைவனோடு சேர்ந்து இருந்து அனைத்து செயல்களுக்கும் சக்தியை கொடுப்பவளாகவும் இருக்கின்றாள். அண்ட சராசரங்களிலுள்ள அனைத்து உலகங்களும் அதில் வாழ்கின்ற அனைத்து உயிர்களும் அழிகின்ற காலத்தில் சென்று சேருகின்ற இடமாக அவளே இருக்கின்றாள். ஊழிக் காலத்தில் கோர உருவம் கொண்டு இருக்கும் அவளே எமது உள்ளத்திற்குள் சாந்த சொரூபியாய் மிகவும் மகிழ்ச்சியுடன் வீற்றிருக்கின்றாள்.

கருத்து:

அரிய தவங்களை செய்த யோகியர்களுக்கு கிடைக்கும் வயிரவி தேவியானவள் உலகத்தில் நிகழும் அனைத்து செயல்களுக்கும் காரண காரியமாக இறைவனுடன் சேர்ந்து இருக்கின்றாள். உலகங்களும் அதிலுள்ள உயிர்களும் ஊழிக்காலத்தின் சென்று சேரும் இடமாகவும் இருக்கின்றாள். இவளே எமது உள்ளத்தில் சாந்த சொரூபமாய் இருக்கின்றாள்.

பாடல் #1111

பாடல் #1111: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

குலாவிய கோலக் குமரியென் னுள்ளம்
நிலாவி யிருந்து நெடுநா ளனைத்தும்
உலாவி யிருந்துணர்ந் துச்சியி னுள்ளே
கலாவி யிருந்த கலைத்தலை யாளே.

விளக்கம்:

பாடல் #1110 இல் உள்ளபடி எமது உள்ளத்திற்குள் மகிழ்ச்சியுடன் இருந்த இறைவியானவள் எமது உள்ளம் முழுவதும் பரவி நீண்ட காலம் இருந்து குமரியாகி அதன் பிறகு எமது உடல் முழுவதும் சென்று எமக்குள் செயல்படும் கலைகள் அனைத்தையும் எமது தலை உச்சியிலுள்ள சகஸ்ரதளத்தில் ஒன்று சேர்த்து அந்த கலைகள் அனைத்திற்கும் தலைவியாக வீற்றிருந்தாள்.

கருத்து:

உயிர்களின் உடலுக்குள் இருக்கும் கலைகள் என்பது உடலுக்குள் இருக்கும் அனைத்தின் இயக்கமாக இருக்கின்றது. இவை அனைத்தையும் ஒன்று சேர்த்து இறைவனை அடைவதற்கு பயன்படும் வகையில் இயக்குகின்ற தலைவியாக இறைவி இருக்கின்றாள்.

பாடல் #1112

பாடல் #1112: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

கலைத்தலை நெற்றியோர் கண்ணுடைக் கண்ணுள்
முலைத்தலை மங்கை முயங்கி இருக்கும்
சிலைத்தலை யாய தெரிவினை நோக்கி
அலைத்தபூங் கொம்பினள் அங்கிருந் தாளே.

விளக்கம்:

பாடல் #1111 இல் உள்ளபடி எமது உடலுக்குள் இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து கலைகளுக்கும் தலைவியாக இருக்கும் வயிரவி தேவியானவள் தனது ஞானக்கண்ணைக் கொண்டு எமது நெற்றிக்குள் ஞானக் கண்ணாக வீற்றிருக்கிறாள். அவள் எமக்குள் இயங்கிக் கொண்டே இருந்து எம்மை சாதகம் செய்ய வைத்து அதன் பயனாக எமது மூலாதாரத்திலிருந்து குண்டலினியை மேலேற்றிச் சென்று சகஸ்ரதளத்தில் சேர்த்து அங்கிருந்து அமிர்தத்தை வழங்கி அருளுகின்றாள். அதன் பயனாக ஒலி ஒளியின் தலைவியான அந்த தேவியே எமது ஞானக் கண்ணைத் திறந்து அதன் மூலம் இருந்த இடத்திலேயே அனைத்தையும் பார்க்க வைத்து அருளுகின்றாள். அதன் பிறகு எமது உடலுக்குள் இருக்கும் குண்டலினி சக்தியில் அசைந்து கொண்டே இருந்து ஒரு பூங்கொடி கொம்பை சுற்றிக்கொண்டே மேலெழுவது போல எமது சுழுமுனை நாடியைச் சுற்றிக்கொண்டே எமக்குள் வீற்றிருக்கின்றாள்.

கருத்து: சாதகம் செய்யும் சாதகர்களுக்கு அவர்களின் உடலுக்குள் இருந்து அனைத்து கலைகளையும் இயக்கி அவர்களது சாதகத்தை தொடர்ந்து செய்ய வைப்பது வயிரவி தேவியே என்பதை இந்தப் பாடலில் தெரிந்து கொள்ளலாம்.

பாடல் #1113

பாடல் #1113: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

இருந்தனள் ஏந்திழை என்னுள்ளம் மேவிப்
பொருந்திய நால்விரல் புக்கனள் புல்லித்
திருந்திய தாணுவில் சேர்ந்துடன் ஒன்றி
அருந்தவம் எய்தினள் ஆதியி னாளே.

விளக்கம்:

பாடல் #1112 இல் உள்ளபடி எமக்குள் வீற்றிருந்த வயிரவி தேவியானவள் அழகிய ஆபரணங்களை சூடிய மங்கையாக எமது உள்ளம் முழுவதும் பரவி சகஸ்ரதளத்திலும் வீற்றிருந்தாள். அதன் பிறகு எமது தலைக்குள் இருக்கும் சகஸ்ரதளத்தில் வீற்றிந்தவள் அங்கிருந்து நான்கு விரற்கடை அளவு தூரத்தில் தலைக்கு மேலே உள்ள துவாதசாந்த வெளியில் வீற்றிருக்கும் இறைவனோடு சேர்ந்து பூவிதழில் வீற்றிருந்தாள். அதன் பிறகு எமக்குள் மேலும் கீழும் அலைந்து கொண்டிருந்த மூச்சுக்காற்றை சீராக்கி எமது முதுகுத் தண்டில் இருக்கும் சுழுமுனை நாடியோடு ஒன்றாகச் சேர்ந்து கலந்திருந்து எம்மை அருமையான தவங்களை செய்ய வைத்து அருளினாள் ஆதிப் பரம்பொருளாகிய இறைவி.

பாடல் #1114

பாடல் #1114: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

ஆதி யனாதி யகாரண காரணி
சோதி யசோதி சுகம்பர சுந்தரி
மாது சமாதி மனோன்மணி மங்கலி
ஓதியென் னுள்ளத்து உடனியைந் தாளே.

விளக்கம்:

பாடல் #1113 இல் உள்ளபடி ஆதிப் பரம்பொருளாகிய இறைவி அனைத்திற்கும் ஆரம்பமாகவும், தனக்கு என்று ஒரு ஆரம்பம் இல்லாமலும், அனைத்திற்கும் காரணமாகவும், தனக்கென்று ஒரு காரணம் இல்லாமலும், ஒளியாகவும் இருளாகவும், பேரின்பத்தை வழங்கும் அழகான இறைவியாகவும், துவாதசாந்த வெளியிலே சமாதி நிலையில் இறைவனுடன் சேர்ந்து மங்கையாக வீற்றிருந்து என்றும் நன்மையையே உடையவளாகவும் இருக்கின்றாள் என்பதை யாம் எப்போதும் போற்றிப் புகழ்ந்து கொண்டே இருக்கின்றோம். அவளும் எமது உள்ளத்திற்குள் எம்மோடு சேர்ந்து இருந்து அனைத்தையும் எம்மை செய்வித்தாள்.