மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #11

30-12-2005 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்

நமக்குள் இறைவன் குடிகொண்டிருக்கிறான் எனில், நாம் எதற்கு ஆலயங்களிலிலும் உருவங்களிலிலும் இறைவனை நாட வேண்டும்?

இறைவன் அனைவருக்குள்ளும் உள்ளான் என்பது உறுதியானது. எந்த அளவிற்கு உள்ளான் என்பதே வினாவாகும். இதனை யாம் நன்கு ஆராய்ந்த பின் இவ்விடையையும் இங்கு அளிக்க சித்தம் கண்டோம். தூய்மை வேண்டும் நல்வழியில் பல ரூபங்கள் வேண்டும் என்கிறது மானிடனின் நிலை. ஏனெனில் அகக்கண் திறக்கும் வரை புறக்கண்ணே மேலானது என்கின்ற நிலைதான். தமது கண்களில் காண்பதே உண்மை என எண்ணுகின்றான் மானிடன். இவ்விதமே வேள்விகள் ஹோமங்கள் என்பதெல்லாம் துவங்கின. கண்ணால் காணும் சூரிய பகவானைத் தெய்வமாகக் கண்டு அவன் உண்ணும் வகைகளை அவனுக்கும் படைத்தான். சிறிது நேரம் சென்ற பின் பார்க்கும் போது படைத்தது அங்கேயே இருக்கக்கண்டு திகைத்தனர்.

அச்சூரிய பகவானின் அனல் தரும் வடிவத்திற்கு இங்கு ஈடானது அக்னி எனக் கண்டு அக்கினியை வளர்த்து அதில் படைத்ததை இட்டனர். இதன் வழியாக தெய்வம் ஏற்றுக் கொண்டது என ஓர் கணக்கு கண்டு வேள்விகள் துவங்கின. இதுவே உண்மை நிலையாகும். இதற்குப் பிறகு பலப்பல வடிவங்கள் மனதில் தோன்ற அவ்வித வடிவங்களை உருவாக்கிப் பிரதிஷ்டை என்கின்ற ஒரு சக்தியையும் அளித்து வணங்கத் துவங்கினர். இவ்விதம் இருக்க மனதில் பலப்பல உருவங்களைக் குறைத்து ஒன்று அல்லது இரு உருவமாக்கிப் பின் அதுவும் மறைந்து மனிதன் தனக்குள் சென்று அவன் ஆத்மாவுடன் கலந்து ஆனந்தம் காணுதல் வேண்டும். இதுவே இறைநிலை என்பது உண்மை நிலையாகும். அந்த உண்மை நிலை வர பல காலங்கள் பல ஜென்மங்கள் வேண்டும் என்கின்ற விதியும் உண்டு. அக்காலம் வரும் வரை உறுதியாக மனிதனும் மூர்த்திகளை வணங்கிப் படிப்படியாக அம்மூர்த்திகளை விட்டு விலகுதல் வேண்டும்.

இது பாசம் கொடுத்து பின்பு பாசத்தை அறுத்தல் வேண்டும் என்கின்ற தத்துவமாகின்றது. அதாவது மனிதன் பிறக்கும் பொழுதே சிறு நாட்களிலேயே பாசமதன் உணர்வை அறிகின்றான். பிறவியில் அன்னையின் நாமத்தைக் கூறுகின்றான் பின்பு அன்னையுடன் ஒட்டுகின்றான் பின்பு பெற்றவரை அறிகின்றான் பின்பு சகோதரர்கள் பெற்றவர்களின் தாய் தந்தையர் என அனைவரையும் அறிந்து அப்பாசத்தில் தழுவுகின்றான். சிறிது காலம் செல்ல தெய்வம் என்கின்ற ஓர் நிலையை அறிந்து தெய்வத்துடன் பாசத்தைக் காட்டுகின்றான். இப்பாசமதை அறுத்து வெளி பூசைகள் அனைத்தையும் அகற்றி உள் செல்லுதல் வேண்டும் என்பது எளிதான காரியம் அல்ல. அந்நிலை அடைந்தோர்க்கு சீராகும் அனைத்தும் அந்நிலை அடையும் வரை வெளி பூஜைகள் அவசியம் என்றும் இங்கு செப்புவோம். ஆலயங்கள் என்பது முன்பு கூறியது போல் குருடர்களுக்கு உள்ள கொம்பைப் போல ஆன்மீகத்தில் சில குருடு நிலை உள்ளோர்க்கு ஆலயங்கள் அவசியம் என்றும் இங்கு யாம் உறுதியாகக் கூறிக் கொண்டோமே.

மேலாக முன்பு ஒன்று கூறியுள்ளோம் ஆலயங்கள் ஆகமவிதியில் கட்டப்படுவதால் அங்கு சில விசேஷமான கதிர் ஒளிகள் பரவும் இதில் அமர்ந்தால் பல வகையில் நமக்கு ரோக மாற்றங்கள் மனநிலை மாற்றங்கள் ஏற்படுகின்றது. இதை மறுக்க இயலாது. இதன் காரணமாகவே கிராமத்தில் அனைவரும் ஆலயத்தில் சிறிது நேரம் போய் அமர்ந்து கொண்டு வருவது உண்டு. இக்காலத்தில் இதை யாம் காணவில்லை இருப்பினும் விசித்திரமாக இக்கால இளைஞர்கள் படிப்படியாக மீண்டும் இறைவனை நாடத் துவங்கி உள்ளனர். இவர்களுக்கு யாம் கூறுவது மெதுவாக படிப்படியாக முதலில் ஓர் மூர்த்தி என்கின்றதை அடையச் செய்து அதனை ஆராதனை புரிந்து அதற்குரியதை அளித்துச் சிறப்பாக பூசித்து வர நன்மைகள் உண்டாகும் என்றும் இங்கு விளக்கினோம். அதனை விட்டு விட்டு இது ஏன்? எதற்கு? என வினா கேட்டுக் கொண்டிருந்தால் காலங்கள் செல்லுமே தவிர ஞானம் கிட்டாது என்கின்ற ஓர் நிலையும் உண்டு.

சாஸ்திரங்கள் கூறுவது போல ரூபத்திலிருந்து அரூபம் செல்லுதல் வேண்டும். ஸ்தூலத்தை முதலில் அறிந்து, பின்பு சூட்சுமத்தை அறிதல் வேண்டும். முதலில் உன் உடலை அறிந்து பின்பு உள்ளிருக்கும் இறைவனை அறிதல் வேண்டும். மண்ணை அறிந்து அதனுள் உள்ள சத்தை அறிதல் வேண்டும். இந்த தத்துவம் விளக்கிடவே மசானம் என்பது நம் புராணங்களிலும் இக்காலத்திலும் மகத்துவம் காண்கிறது. மண்ணால் படைக்கப்பட்டது மீண்டும் மண்ணாகிறது என்கின்றது ஒரு தத்துவம். இதில் எதுவும் நித்யம் இல்லை அவ்விதம் இருக்கும் போது அம் மண் கல் என்கின்றதால் தீட்டப்பட்ட மூர்த்திகள் எவ்விதம் நித்யமாக இருத்தல் கூடும்? மனிதன் பூசிக்கும் வரை நித்யம் பின்பு அநித்யம். இதை நிரூபிக்கும் வகையில் பல பாழடைந்த ஆலயங்கள் நம் நாட்டில் உள்ளன. இது இத்தத்துவத்திற்கு எடுத்துக் காட்டாக உள்ளது. இந்நிலையில் யாம் கூறும் பூஜைகள் வீணாகுவதில்லை இவை அனைத்தும் நம் மனம் ஒருநிலைப்படுத்த உபயோகிக்கப்படும் பல வழிகள் முழுமையான நம்பிக்கையுடன் செய்தவர்களுக்கு எவ்வித குறைகளும் நேரிடாது நன்மைகள் பெரிதாகும் என்றும் இங்கு எடுத்துரைத்தோம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.