3-12-2005 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:
குடிக்க நீர் அல்லவா கேட்டோம், ஏன் இவ்விதம் வெள்ளப் பெருக்கு உண்டாகிறது?குடிக்க நீர் கேட்டது உண்மை, இதை யாம் மறுக்க வில்லை. இருப்பினும், மானிடர்கள் இயற்கையிடம் பெருமளவில் விளையாட்டு காட்டுகின்றனர். காரணமின்றி மரங்களை அழிப்பது, பூமியிலிருக்கும் கால்வாய்கள், நீர் செல்லும் வழிகள், அடைத்து வீடுகள் கட்டுவது, இவையாவும் பூமிக்கும், அதாவது பஞ்ச பூதங்களுக்கும் பொறுக்கவில்லை என அறிந்து கொள்ளுங்கள். இக்காலம் வரை பொறுமை கண்ட அவர்கள், திருப்பி அவர்களின் வலிமையை காட்டத் துவங்கினர். இதன்வழி உலகெங்கும், இந்நாட்டில் மட்டுமல்ல, பூமியால், அக்கினியால், வெள்ளத்தால், ஏன், இனி வருங் காலங்களில் ஆகாயம், வாயு, வழியாகவும் பல தீமைகள் உண்டாக உள்ளது இயற்கையின் விதி என்பதை அறிந்து கொள்ளுதல் வேண்டும்.
அனைவரும் பிரார்த்தனை செய்திருந்தால் இயற்கையின் வலிமையை குறைத்திருக்கலாம். இதன் முக்கியத்துவத்தை எவரும் அறியாது, இதற்கென பிரார்த்தனை செய்ததாக யாம் காணவில்லை. மக்களை காக்குங்கள் என்கின்ற ஓர் அலறலோ யாம் இன்று வரை கேட்கவில்லை. இது வருந்துதலுக்குரிய ஒர் காரியமாகிறது. ஏனெனில், நாம் மிருகங்களை பார்த்துக் கொண்டாலும், பூச்சிகளை பார்த்துக் கொண்டாலும், இவை மற்றொன்றுக்கு ஆபத்து என்றால் உடனடியாக சேர்ந்து காக்க முயற்சிக்கின்றது. தீனி கிடைத்திட, அனைவரையும் அழைத்து பங்கிடுகிறது. இறைவன் படைப்பில் மானிடன் மட்டும் மாறிவிட்டான். இவன் பங்கிடுவதில்லை, ஏனெனில், இன்று பங்கிட்டால் மீண்டும் பங்கிற்கு வருவானோ என்கின்ற அச்சம். இதுவும் உண்மை தான், கலிகால தன்மை, அவ்விதமே உதவி செய்தால், உதவி செய்கின்றவன் ஏமாளி எனக்கருதி அவனிடம் எவ்வளவிற்கு வசூல் செய்யலாம் என பார்க்கின்றனர். இத்தகைய நிலையில், எவரை யாம் குற்றம் சூட்டுவது என எமக்கே அறியவில்லை. எல்லாம் இறைவனின் விளையாட்டு என்றே எடுத்துக் கொண்டோம்.