பாடல் #739

பாடல் #739: மூன்றாம் தந்திரம் – 13. சரீர சித்தி உபாயம் (உடலை பாதுகாத்து இறைவனை அடையும் வழிமுறை)

ஆகுஞ் சனவேத சக்தியை அன்புற
நீர்கொள நெல்லின் வளர்கின்ற நேர்மையைப்
பாகு படுத்திப் பல்கோடி களத்தினால்
ஊழ்கொண்ட மந்திரந் தான்கொண்டு ஒடுங்கே.

விளக்கம்:

ஒரு நெல்லை பயிர் செய்தால் அதிலிருந்து பல நெல் வரும் அந்த பல நெல்லை மீண்டும் பயிர் செய்தால் பல ஆயிரம் வரும் அதனையும் பயிர் செய்தால் பல கோடி வரும். அது போல பாடல் #737 ல் உள்ளபடி சரீர நெற்றியில் இருக்கும் நீலநிற ஜோதியில் இருக்கும் வெப்பத்தில் இருந்து வரும் மந்திரமான ஒலியை மீண்டும் மீண்டும் சரீரத்திற்குள்ளேயே எந்தவித எதிர்பார்ப்பின்றி மனனம் செய்யும் சாதகனின் உடல் அழியாமல் இருந்து ஒரு மந்திரம் பல மந்திரமாக பெருகி வேதமந்திரமாக இருக்கும் இறைவனுடனேயே ஒடுங்கிவிடுவார்.

கருத்து: சரீரத்திற்குள்ளேயே எந்தவித எதிர்பார்ப்பின்றி மனனம் செய்யும் சாதகனின் உடல் அழியாமல் இருந்து வேதமந்திரமாக இருக்கும் இறைவனுடனேயே ஒடுங்கிவிடுவார்.

பாடல் #712

பாடல் #712: மூன்றாம் தந்திரம் – 12. கலை நிலை (நாடிகளில் இறைவன் நிற்கும் முறை)

காதல் வழிசெய்த கண்ணுதல் அண்ணலைக்
காதல் வழிசெய்து கண்ணுற நோக்கிடிற்
காதல் வழிசெய்து கங்கை வழிதருங்
காதல் வழிசெய்து காக்குவது மாமே.

விளக்கம்:

தன்னை அடைவதற்கு உண்மையான அன்பை வழியாக வைத்த நெற்றிக்கண்ணையுடைய இறைவனை உண்மையான அன்போடு இருகண்களுக்கு நடுவே இருக்கும் சுழுமுணை நாடியின் உச்சியை நோக்கி தியானத்தில் இருந்தால் தலை உச்சியிலுள்ள சகஸ்ரதளத்தில் ஒளிப்பிரவாகமாக வீற்றிருக்கும் இறைவனைச் சென்றடையும் வழி கிடைக்கும். அந்த வழியை அன்போடு பின்பற்றி அடைந்து விட்டால் எப்போதும் பேரின்பத்தில் திளைத்து என்றும் அழியாமல் இறையருள் காத்து நிற்கும்.

கருத்து: நாடிகளின் வழியே இறைவனை அடைவதற்கு உண்மையான அன்பு ஒன்றே வழியாகும்.

பாடல் #713

பாடல் #713: மூன்றாம் தந்திரம் – 12. கலை நிலை (நாடிகளில் இறைவன் நிற்கும் முறை)

காக்கலு மாகுங் கரணங்கள் நான்கையுங்
காக்கலு மாகுங் கலைபதி னாறையுங்
காக்கலு மாகுங் கலந்தநல் வாயுவுங்
காக்கலு மாகுங் கருத்துற நிற்றலே.

விளக்கம்:

உலக விஷயங்களை எண்ணாமல் ஒளி உருவமான இறைவனின் மேல் எப்போதும் எண்ணத்தை வைத்திருந்தால் இறைவனின் திருவருள் நமது நான்கு அந்தக்கரணங்களையும், பதினாறு கலைகளையும், மூச்சுக்காற்றோடு என்றும் கலந்து நின்று காத்தருளும்.

கருத்து: இறைவனின் மேல் எண்ணம் வைத்து தியானிப்பவர்களை இறையருள் அனைத்திலிருந்தும் காத்து அருளும்.

நான்கு அந்தக்கரணங்கள்:

  1. மனம்
  2. புத்தி
  3. சித்தம்
  4. அகங்காரம்

பதினாறு கலைகள் (நாடிகள்):

  1. மேதைக்கலை
  2. அருக்கீசக்கலை
  3. விடக்கலை
  4. விந்துக்கலை
  5. அர்த்தசந்திரன் கலை
  6. நிரோதினிக்கலை
  7. நாதக்கலை
  8. நாதாந்தக்கலை
  9. சக்திக்கலை
  10. வியாபினிக்கலை
  11. சமனைக்கலை
  12. உன்மனைக்கலை
  13. வியோமரூபினிக்கலை
  14. அனந்தைக்கலை
  15. அனாதைக்கலை
  16. அனாசிருதைக்கலை

1. மேதைக்கலை தொப்புள் முதல் மார்பு நடு இதயம் வரை இருக்கும்

2. அருக்கீசக்கலை இதயம் முதல் தொண்டைக்குழிவரை இருக்கும்.

3. விடக்கலை தொண்டை முதல் நாக்கின் அடிவரை இருக்கும்.

4. விந்துக்கலை நாக்கினடி முதல் புருவ நடுவரை இருக்கும்.

5. அர்த்தசந்திரக்கலை புருவநடு முதல் உச்சித்துளைவரை இருக்கும்.

6. நிரோதினிக்கலை,

7. நாதக்கலை,

8. நாதாந்தகலை ஆகிய மூன்றும் சம அளவில் பரவியிருக்கும்.

9. சக்திக்கலை,

10. வியாபினிக்கலை,

11. சமனைக்கலை,

12. உன்மனைக்கலை, ஆகிய  நான்கும் 12 விரல் அளவில் பரவியிருக்கும்.

13. வியோமரூபிணிக் கலை

14. அனந்தைக் கலை

15. அனாதைக் கலை,

16. அனாசிருதைக் கலை சமனைக்கும் வியாபினிக்கும் நடுவே இருக்கும்.

திருமூலர் ஆரத்தி

ஜய ஜய திருமூலா சுவாமி ஜய ஜய திருமூலா
மக்களைக் காப்பவன் நீயே மன பலம் தருபவன் நீயே
மலர்ந்த முகத்தவனே ஓம் ஜய ஜய திருமூலா

சிவனின் அருள் பெற்றவனே சிவனை சிந்தையில் கொண்டவனே
எமக்கு சிந்தனை தந்து சிவ போதனையும் செய்து
சிக்கலை தீர்த்திடுவாய் ஓம் ஜய ஜய திருமூலா

நந்தீசன் சீடரே நீர் எமக்கு வளங்களை தந்திடுவாய்
விழிக்கு வழியாய் நின்று வழிக்குத் துணையாய் வந்து
வாழ வழி சொல்வாய் ஓம் ஜய ஜய திருமூலா

ஆசைக்கு அணையிட்டு எங்கள் ஆற்றலை வளர்த்திடுவாய்
அழியாப் புகழை சேர்த்து அருகிலிருந்து காத்து
அருள் மழை பொழிந்திடுவாய் ஓம் ஜய ஜய திருமூலா

நிலைபெற்ற நிலைபெறவே நினை தினந்தோறும் வணங்கிடுவோம்
நில்லாமல் உனைப்பாட கலையுணர்வும் மேலோங்கிட
நீயே துணை புரிவாய் ஓம் ஜய ஜய திருமூலா

பக்தியுடன் உனைப்பாடும் பக்தன் குறைகளைத் தீர்த்திடுவாய்
பக்தி மார்க்கமும் சொல்வாய் பாவ மன்னிப்பும் அளிப்பாய்
பாரில் மாந்தரைக் காப்பாய் ஓம் ஜய ஜய திருமூலா

பொறுமையின் பொன்மனமே திருமூலா பொய் விதி மாற்றிடுவாய்
பராசக்தி அருள் பெற்றவனே பரிவுடன் எங்களைக் காப்பாய்
காத்து ரட்சிப்பாய் ஓம் ஜய ஜய திருமூலா

ஒன்றே குலமென்றும் உலகில் ஒருவனே தேவன் என்றும்
செப்பிய மாமணியே எங்கள் சத்குருவானவன் நீயே
ஞான வடிவுடயாய் ஓம் ஜய ஜய திருமூலா

அகத்தியன் நண்பனும் நீயே எங்கள் பக்தியை ஏற்றிடுவாய்
குறைகளை எல்லாம் களைவாய் நிறைகளை எல்லாம் ஏற்பாய்
வாழ்த்தி அருள் புரிவாய் ஓம் ஜய ஜய திருமூலா.

திருமூலர் போற்றி

ஓம் திவ்ய ஈசனடியே போற்றி
ஓம் இறையன்பே போற்றி
ஓம் த்யானத் திருவுருவே போற்றி
ஓம் திரு மந்திர மூலரே போற்றி
ஓம் தியாகச் சுடரே போற்றி
ஓம் மரபு மாறாதோனே போற்றி
ஓம் மலர்ந்த முகத்தவனே போற்றி
ஓம் மகேசன் அருள் பெற்றவனே போற்றி
ஓம் மக்களைக் காப்பவனே போற்றி
ஓம் மனபலம் தரும் ஞானியே போற்றி
ஓம் மன உறுதி தந்திடுவாய் போற்றி
ஓம் நினைத்தும் வருபவனே போற்றி
ஓம் உயிர் கொடுத்தவனே போற்றி
ஓம் உன் விளைவிக்கும் நினைவே போற்றி
ஓம் உனை என்றும் போற்றுவேன் போற்றி
ஓம் உன்னருள் பெற்றிடுவேன் போற்றி
ஓம் சிவனை சிந்தையில் கொண்டவனே போற்றி
ஓம் சிவ சீடனாய் இருந்தவனே போற்றி
ஓம் சிவ தீட்சை பெற்றவனே போற்றி
ஓம் சிவ உருவை கண்டவனே போற்றி
ஓம் சீடனைக் காப்பவனே போற்றி
ஓம் சிவ போதனை கொடுப்பாய் போற்றி
ஓம் சிந்தனை தந்தனையே போற்றி
ஓம் சிக்கலை தீர்த்தவனே போற்றி
ஓம் சிவனைக் காணச் செய்வாய் போற்றி
ஓம் அகத்திய முனிவரின் நண்பரே போற்றி
ஓம் சிவநெறி காண உன்னருள் வேண்டும் போற்றி
ஓம் வினையை அளிப்பாய் போற்றி
ஓம் விநாயகனை போற்றிட்டாய் போற்றி
ஓம் வினை தீர்க்கும் வழி சொல்வாய் போற்றி
ஓம் விழிக்கு வழியானவனே போற்றி
ஓம் வழிக்கு துணையானவனே போற்றி
ஓம் வாழ நெறி சொன்னாய் போற்றி
ஓம் வாழ்ந்து வழி சொன்னாய் போற்றி
ஓம் வாடாத உருவே போற்றி
ஓம் வளையாத மனமே போற்றி
ஓம் வளத்தை அளிப்பாய் போற்றி
ஓம் வறுமையை ஒழிப்பாய் போற்றி
ஓம் வற்றாத அருட்கடலே போற்றி
ஓம் அறிவு விளக்கின் ஒளியே போற்றி
ஓம் அகம் மலரச் செய்வாய் போற்றி
ஓம் ஆற்றலை வளர்ப்பவனே போற்றி
ஓம் ஆசைக்கு அணையிடுவாய் போற்றி
ஓம் அருள் மழை பொழிவாய் போற்றி
ஓம் அறுபத்து மூவருள் ஒருவனே போற்றி
ஓம் அறத்தைக் காப்பவனே போற்றி
ஓம் அழியாத புகழுக்கு புகழ் சேர்ப்பாய் போற்றி
ஓம் மெய்ஞானம் வளர்ப்பாய் போற்றி
ஓம் அருகிலிருந்து காப்பாய் போற்றி
ஓம் தவ உருவே மூலனே போற்றி
ஓம் தன்னடக்க தவமணியே போற்றி
ஓம் தந்திடுவாய் தவ மனமே போற்றி
ஓம் தழைத்தோங்கும் மரம் காப்பாய் போற்றி
ஓம் தனித்திடும் பாலகனைக் காப்பாய் போற்றி
ஓம் தவமிருப்பின் புகழளிப்பாய் போற்றி
ஓம் திருவில் உருவான பெருந்தகையே போற்றி
ஓம் தவச் சூத்திரம் சொல்லிடுவாய் போற்றி
ஓம் தர்ம நலனைக் காக்கும் யோகியே போற்றி
ஓம் பக்தி மார்கமே போற்றி
ஓம் பாடப்பாட வந்திடுவாய் போற்றி
ஓம் பாவங்களைப் போக்கிடுவாய் போற்றி
ஓம் பக்தியுடன் உனைப் பாடுகிறேன் போற்றி
ஓம் பாவ மன்னிப்பைத் தந்திடுவாய் போற்றி
ஓம் பணி செய்ய அருள்வாய் போற்றி
ஓம் பிள்ளைப் பிணி தீர்ப்பாய் போற்றி
ஓம் பவ்யமாய் வணங்குவோம் திருமூலரே போற்றி
ஓம் பக்கத் துணையிருப்பாய் திருமூலரே போற்றி
ஓம் நிலை பெற்ற நிலையளிப்பாய் போற்றி
ஓம் நின்னை தினந்தோறும் வணங்கிடவே போற்றி
ஓம் நில நீர் வற்றாத வழி தருவாய் போற்றி
ஓம் நில்லாத உனைப்பாட போற்றி
ஓம் நீங்காத நினைவளிப்பாய் போற்றி
ஓம் கலையுணர்வு தந்திடுவாய் போற்றி
ஓம் கருணைக் கடலே போற்றி
ஓம் சாதனை செய்விப்பாய் போற்றி
ஓம் பேதங்கள் ஒழிப்பாய் போற்றி
ஓம் ஊக்கத்தை தந்திடுவாய் போற்றி
ஓம் ஏற்றத் தாழ்வுதனை நீக்கிடுவாய் போற்றி
ஓம் மாதர் தன்னை காத்திடுவாய் போற்றி
ஓம் மாசற்ற நிலை தருபவனே போற்றி
ஓம் தேசங்களை காப்பாய் போற்றி
ஓம் உன்னால் உழைப்பை அறிவேன் போற்றி
ஓம் சொல் வளமளிப்பாய் போற்றி
ஓம் செல்வ வளமளிப்பாய் போற்றி
ஓம் பொய் விதிகளை மாற்றிடுவாய் போற்றி
ஓம் முருகனை வழிபட்டோனே போற்றி
ஓம் துயர் நீக்கும் வழி சொல்வாய் போற்றி
ஓம் இரக்க மனமுள்ளவனே போற்றி
ஓம் இரங்கி வந்து அருள் கொடுப்பாய் போற்றி
ஓம் பொறுமையின் பொன்மனமே போற்றி
ஓம் சிறுமை அழிக்கும் சிற்றம்பலமே போற்றி
ஓம் ஜென்மத்தின் விளக்கே போற்றி
ஓம் ஜென்ம நிலை செப்பிடுவாய் போற்றி
ஓம் பராசக்தியின் அருள் பெற்றவனே போற்றி
ஓம் நந்திசன் சீடரே போற்றி
ஓம் இந்திரனின் குருவே போற்றி
ஓம் சூட்சுமந்தனை சொல்லிடுவாய் போற்றி
ஓம் பாவச் சுழியிலிருந்து காப்பாய் போற்றி
ஓம் நட்சத்திரமானவனே போற்றி
ஓம் நடுநிலை நின்றருள்வாய் போற்றி
ஓம் இனம் பிரியாதிருக்கச் செய்வாய் போற்றி
ஓம் அடைக்கலத் திருத்தகையே போற்றி
ஓம் எங்கள் பக்தியை ஏற்பாய் திருமூலரே போற்றி
ஓம் உள்ளம் உருக வேண்டுகிறோம் திருமூலரே போற்றி
ஓம் பரவசத்துடன் வாழ்த்துவாய் திருமூலரே போற்றி
ஓம் நாடு நலம்பெறச் செய்வாய் போற்றி
ஓம் குறைகளை களைந்து நிறைதனை ஏற்பாய் திருமூலரே போற்றி
ஓம் சிவசக்தி அருள் பெற்றவரே அனைவரையும் வாழ்த்துவாய் போற்றி போற்றி.

பாடல் #714

பாடல் #714: மூன்றாம் தந்திரம் – 12. கலை நிலை (நாடிகளில் இறைவன் நிற்கும் முறை)

நிலைபெற நின்றது நேர்தரு வாயு
சிலைபெற நின்றது தீபமும் ஒத்துக்
கலைவழி நின்ற கலப்பை அறியில்
மலைவற வாகும் வழியது வாமே.

விளக்கம்:

இடகலை பிங்கலை நாடிகளின் வழியே உள்ளிழுத்த மூச்சுக்காற்றை நடுவில் உள்ள சுழுமுனை நாடி வழியே நேராக மேலேற்றிச் சென்று சகஸ்ரதளத்தில் ஒளி வடிவமாக இருக்கின்ற இறைவனோடு கலந்து அசைவில்லாமல் சிலை போல ஒன்றாக நின்றால் வெளிப்படும் அமிர்தத்தின் மூலம் ஒளி வடிவமாக இருக்கின்ற இறைவனின் அருள் வடிவம் பதினாறு கலைகளிலும் (பாடல் #713 இல் கொடுக்கப்பட்டுள்ளபடி 16 நாடிகள்) கலந்து நிற்பதை அறிந்து கொள்ளலாம். யோகியர்கள் மாயையினால் உருவாகும் மயக்கத்திலிருந்து விலகி உண்மை ஞானத்தில் எப்போதும் இருப்பதற்கான வழி இதை அறிந்து கொள்வதே ஆகும்.

கருத்து: சுழுமுனை நாடி வழியே மூச்சுக்காற்றை கொண்டு சென்று சக்ஸ்ரதளத்தில் சேர்க்கும் யோகியர்கள் தங்களின் 16 நாடிகளிலும் இறைவனது திருவருள் கலந்து இருப்பதை அறிந்து எப்போதும் மாயை இல்லாத உண்மை ஞானத்தில் இருப்பார்கள்.

பாடல் #715

பாடல் #715: மூன்றாம் தந்திரம் – 12. கலை நிலை (நாடிகளில் இறைவன் நிற்கும் முறை)

புடையொன்றி நின்றிடும் பூதப் பிரானை
மடையொன்றி நின்றிட வாய்த்த வழியுஞ்
சடையொன்றி நின்றஅச் சங்கர நாதன்
விடையொன்றி லேறியே வீற்றிருந் தானே.

விளக்கம்:

மூச்சுக்காற்றோடு கலந்து உயிர்களின் உயிர்த்துடிப்பின் நாதமாக நிற்கின்ற பஞ்ச பூதங்களின் தலைவனாகிய இறைவனை அந்த மூச்சுக்காற்று மற்ற நாடிகளின் வழியே சென்று வீணாகிவிடாமல் சுழுமுனை நாடியின் வழியே மேலேற்றிச் சென்று தலை உச்சியில் சடையணிந்த கோலத்தில் நின்ற சங்கரனின் தலைவனாகிய இறைவனோடு கலந்து விட்டால் அந்த இறைவன் உயிர்களின் உடலையே தனக்கு ஏற்ற காளை வாகனமாக்கி அதிலேயே அழியாமல் என்றும் வீற்றிருந்து அருளுவான்.

கருத்து: மூச்சுக்காற்றை மற்ற நாடிகளின் வழியே செலுத்தி வீணாக்காமல் சுழுமுனை நாடி வழியே எடுத்துச் சென்று இறைவனோடு கலந்துவிடும் யோகியர்களின் உடல் என்றும் அழியாமல் இறைவனின் திருவருளோடு நிலைத்து நிற்கின்றது.

பாடல் #716

பாடல் #716: மூன்றாம் தந்திரம் – 12. கலை நிலை (நாடிகளில் இறைவன் நிற்கும் முறை)

இருக்கின்ற காலங்கள் ஏதும் அறியார்
பெருக்கின்ற காலப் பெருமையை நோக்கி
ஒருக்கின்ற வாயு வொளிபெற நிற்கத்
தருக்கொன்றி நின்றிடுஞ் சாதக னாமே.

விளக்கம்:

உயிர்களுக்கு தாம் வாழுகின்ற காலம் எவ்வளவு என்பது தெரியாது. தமது வாழ்நாளை அதிகப்படுத்திக் கொடுக்கும் அகயோகத்தின் பெருமையை உணர்ந்து அதனை நோக்கிச்சென்று தங்களின் மூச்சுக்காற்றை சுழுமுனை நாடி வழியே மேலேற்றிச் சென்று சகஸ்ரதளத்தில் ஒளியாக வீற்றிருக்கும் இறைவனோடு கலந்து அதனால் கிடைக்கும் பேரின்பத்தில் திளைத்து எப்போதும் நிலையாக நிற்பவர்கள் சாதகர்கள் ஆகின்றார்கள்.

கருத்து: அழிகின்ற வாழ்நாளை நீட்டிக்க அகயோகம் செய்து இறைவனோடு கலந்து பேரின்பத்தில் திளைத்து நிற்பவர்கள் சாதகர்கள் ஆவார்கள்.

பாடல் #717

பாடல் #717: மூன்றாம் தந்திரம் – 12. கலை நிலை (நாடிகளில் இறைவன் நிற்கும் முறை)

சாதக மானஅத் தன்மையை நோக்கியே
மாதவ மான வழிபாடு செய்திடும்
போதக மாகப் புகலுறப் பாய்ச்சினால்
வேதக மாக விளைந்து கிடக்குமே.

விளக்கம்:

பாடல் #716 ல் உள்ளபடி அகயோகம் செய்வதன் பெருமையை உணர்ந்து மாபெரும் தவமாகிய அந்த யோகத்தை செய்து மூச்சுக்காற்றை சுழுமுனை நாடி வழியே தலை உச்சியிலுள்ள சகஸ்ரதளத்தில் போய்ச் சேரும்படி மேல் நோக்கிப் பாய்ச்சினால் இரும்பை தங்கமாக்கிவிடும் இரசவாத குளிகையைப் போலவே யோகம் செய்பவரின் உடல் பொன்னொளி வீசும் தங்கத்தாலான உடலாக மாறிவிடும்.

கருத்து: அகயோகம் செய்யும் யோகியரின் உடல் பொன்னொளி வீசும் தங்கமாக மாறிவிடும்.

பாடல் #718

பாடல் #718: மூன்றாம் தந்திரம் – 12. கலை நிலை (நாடிகளில் இறைவன் நிற்கும் முறை)

கிடந்தது தானே கிளர்பயன் மூன்று
நடந்தது தானேஉள் நாடியுள் நோக்கிப்
படர்ந்தது தானேஅப் பங்கய மாகத்
தொடர்ந்தது தானேஅச் சோதியுள் நின்றே.

விளக்கம்:

பாடல் #717 ல் உள்ளபடி அகயோகத்தால் தம் உடலைத் தங்கமாக மாற்றிக்கொண்ட யோகியர்களுக்குள் உருவாகும் பயன்கள் மூன்றுவிதமாகும். முதலாவதாக மூலாதாரத்தில் இருந்து வெளிவரும் காற்று சுழுமுனை நாடி வழியாக உள்ளுக்குள் சென்று சகஸ்ரதளத்திற்கும் மூலாதாரத்திற்கும் இடையே உள்ளுக்குள் நோக்கி சுழன்று கொண்டு இருப்பதால் வெளிக்காற்றை சுவாசிக்க வேண்டியது இல்லை. இரண்டாவதாக அவர்களின் உள்ளுக்குள்ளே சுழன்று கொண்டு இருக்கும் காற்று சகஸ்ரதளத்தில் உள்ள ஆயிரம் தாமரை இதழ்களிலும் பரவி அதை மலரச் செய்து எப்போதும் இயக்கத்திலேயே வைத்திருக்கும். மூன்றாவதாக அவர்களின் உடல் இறைவனின் ஜோதிமயத்திலேயே மூழ்கி பேரின்பத்தில் எப்போதும் அழியாமல் நிற்கும்.

கருத்து: அகயோகம் செய்கின்ற யோகியர்கள் உடலுக்கு தேவையான மூச்சுக்காற்றை தனக்குள்ளேயே பெற்றுக்கொண்டு தனக்குள் ஜோதியாய் இருக்கும் இறைவனுடன் பேரின்பத்தில் மூழ்கி இருப்பார்கள்.