பாடல் #197

பாடல் #197: முதல் தந்திரம் – 6. கொல்லாமை

பற்றாய நற்குரு பூசைக்கும் பன்மலர்
மற்றோர் அணுக்களைக் கொல்லாமை ஒண்மலர்
நற்றார் நடுக்கற்ற தீபமும் சித்தமும்
உற்றாரும் ஆவி அமர்ந்திடம் உச்சியே.

விளக்கம்:

இறைவனின் திருவடிகளைப் பற்றிக் கொள்வதற்கு வழிகாட்டியாக இருக்கும் குருவான இறைவனுக்கு செய்யும் பூஜைக்குப் பலவித மலர்கள் உள்ளது. உயிர்களின் உள்ளத்தால் கிடைக்கும் மலர்களும் உள்ளன. பிற உயிர்களைக் கொல்லாமை ஐந்து புலன்களையும் அடக்கிய பொறியடக்கம் பொறுமை இறைவனை அடைய சிந்திக்கும் அறிவு உண்மையை மட்டுமே பேசும் வாய்மை உண்மையான தவம் அன்பு ஆகியவை இதில் மிகவும் சிறந்த மலர் கொல்லாமையே ஆகும். இறைவனைப் பற்றிய எண்ணத்திலிருந்து சிறிதும் கூட மாறிவிடாத எண்ணங்களே இறைவனின் பூஜைக்கு மிகவும் சிறந்த தீபமாகும். இவை அனைத்தையும் உணர்ந்து செயல்படும் உயிர் சென்று அமரும் இடம் தலை உச்சியிலுள்ள சகஸ்ரரதளமாகும். அவ்வாறு அமர்ந்த உயிர் இறைவனையே அடைந்து பேரின்பம் பெறுகின்றது.

கருத்து : இறைவனை அடைய உலகத்தில் கிடைக்கும் மலர்களில் இறைவனுக்கு செய்யும் பூஜைகளை விட புலனடக்கம் அன்பு தியானம் அறிவு கொல்லாமை பொறுமை வாய்மை ஆகிய நல்ஒழுக்க மலர்களால் இறைவனை பூஜிப்பதால் விரைவில் இறைவனையே அடைந்து பேரின்பம் அடையலாம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.