பாடல் #1700

பாடல் #1700: ஆறாம் தந்திரம் – 14. பக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சியை பெற்றவர்கள்)

உணர்த்து மதிபக்கு வற்கே உணர்த்தி
யிணக்கில் பராபரத் தெல்லை யுன்னிட்டுக்
குணக்கோடு தெற்குத் தரபச்சி மங்கொண்
டுணர்த்து மின்னாவுடை யான்றன்னை யுன்னியே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

உணரதது மதிபககு வறகெ உணரததி
யிணககில பராபரத தெலலை யுனனிடடுக
குணககொடு தெறகுத தரபசசி மஙகொண
டுணரதது மினனாவுடை யானறனனை யுனனியெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

உணர்த்தும் அதி பக்குவற்கே உணர்த்தி
இணக்கு இல் பரா பரத்து எல்லை உள் இட்டு
குணக்கோடு தெற்கு உத்தர பச்சிமம் கொண்டு
உணர்த்துமின் ஆவுடையான் தன்னை உன்னியே.

பதப்பொருள்:

உணர்த்தும் (பரம்பொருளின் பேருண்மைகளை உணர்த்துகின்ற ஞான குருவானவர்) அதி (மிகவும்) பக்குவற்கே (பக்குவம் பெற்ற சீடனுக்கே) உணர்த்தி (அவற்றை உணர்த்தி)
இணக்கு (அனைத்துமாக இருந்தாலும் அதனோடு சேர்ந்து) இல் (இல்லாமல் விட்டு விலகி நிற்கின்ற) பரா (அசையா சக்தியாகிய) பரத்து (பரம்பொருளின்) எல்லை (எல்லைக்கு) உள் (உள்ளே) இட்டு (சீடனை கொண்டு சென்று)
குணக்கோடு (கிழக்கோடு) தெற்கு (தெற்கு) உத்தர (வடக்கு) பச்சிமம் (மேற்கு ஆகிய நான்கு திசைகளையும்) கொண்டு (கொண்டு இருக்கின்ற அனைத்து பொருள்களிலும் மறைந்து இருக்கின்ற பேருண்மையாகிய பரம்பொருளை)
உணர்த்துமின் (உணர்த்துவார்கள்) ஆவுடையான் (ஆன்மாக்களுக்கெல்லாம் அதிபதியாகிய) தன்னை (ஆண்டவனை) உன்னியே (தமது மனதிற்குள் தியானித்தே இவை அனைத்தையும் அவர்கள் செய்வார்கள்).

விளக்கம்:

பரம்பொருளின் பேருண்மைகளை உணர்த்துகின்ற ஞான குருவானவர் மிகவும் பக்குவம் பெற்ற சீடனுக்கே அவற்றை உணர்த்தி, அனைத்துமாக இருந்தாலும் அதனோடு சேர்ந்து இல்லாமல் விட்டு விலகி நிற்கின்ற அசையா சக்தியாகிய பரம்பொருளின் எல்லைக்கு உள்ளே சீடனை கொண்டு சென்று, கிழக்கோடு தெற்கு வடக்கு மேற்கு ஆகிய நான்கு திசைகளையும் கொண்டு இருக்கின்ற அனைத்து பொருள்களிலும் மறைந்து இருக்கின்ற பேருண்மையாகிய பரம்பொருளை உணர்த்துவார்கள். ஆன்மாக்களுக்கெல்லாம் அதிபதியாகிய ஆண்டவனை தமது மனதிற்குள் தியானித்தே இவை அனைத்தையும் அவர்கள் செய்வார்கள்.

பாடல் #1687

பாடல் #1687: ஆறாம் தந்திரம் – 13. அபக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சி இல்லாதவர்கள்)

விடிவ தறியார் வெளிகாண மாட்டார்
விடியில் வெளியில் விழிக்கவு மாட்டார்
கடியதோ ருன்னிமை கட்டுமின் காண்மின்
விடியாமைக் காக்கும் விளக்கது வாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

விடிவ தறியார வெளிகாண மாடடார
விடியில வெளியில விழிககவு மாடடார
கடியதொ ருனனிமை கடடுமின காணமின
விடியாமைக காககும விளககது வாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

விடிவது அறியார் வெளி காண மாட்டார்
விடியில் வெளியில் விழிக்கவும் மாட்டார்
கடியது ஓர் உன்னி மை கட்டுமின் காண்மின்
விடியாமைக்கு ஆக்கும் விளக்கு அது ஆமே.

பதப்பொருள்:

விடிவது (மாயையாகிய இருள் நீங்கி ஜோதியாகிய வெளிச்சம் கிடைப்பதை) அறியார் (அறிய மாட்டார்கள்) வெளி (அந்த வெளிச்சம் காட்டுகின்ற பரவெளியை) காண (பார்க்க) மாட்டார் (மாட்டார்கள்)
விடியில் (மாயையாகிய இருள் நீங்கி ஜோதியாகிய வெளிச்சத்தில்) வெளியில் (தம்மை சுற்றி உள்ள அனைத்திலும் மாயையாகிய இருள் நீங்கிய உண்மை ஞானத்தை) விழிக்கவும் (காணவும்) மாட்டார் (மாட்டார்கள் அபக்குவர்கள்)
கடியது (அவர்களைப் போல இல்லாமல் தமக்குள் கிடைப்பதற்கு மிகவும் அரியதாக இருக்கின்ற) ஓர் (ஒரு இறை சக்தியில்) உன்னி (மனதை வைத்து தியானித்து) மை (மாயையை) கட்டுமின் (கட்டுங்கள்) காண்மின் (அப்போது இருள் நீங்கி தெரியும் ஜோதியாகிய இறைவனை காணுங்கள்)
விடியாமைக்கு (இனி எப்போதும் மாயையாகிய பிறவியை எடுக்காத நிலைக்கு) ஆக்கும் (உங்களை கொண்டு செல்லும்) விளக்கு (ஜோதி) அது (அதுவே) ஆமே (ஆகும்).

விளக்கம்:

மாயையாகிய இருள் நீங்கி ஜோதியாகிய வெளிச்சம் கிடைப்பதை அறிய மாட்டார்கள். அந்த வெளிச்சம் காட்டுகின்ற பரவெளியை பார்க்க மாட்டார்கள். மாயையாகிய இருள் நீங்கி ஜோதியாகிய வெளிச்சத்தில் தம்மை சுற்றி உள்ள அனைத்திலும் மாயையாகிய இருள் நீங்கிய உண்மை ஞானத்தை காணவும் மாட்டார்கள் அபக்குவர்கள். அவர்களைப் போல இல்லாமல் தமக்குள் கிடைப்பதற்கு மிகவும் அரியதாக இருக்கின்ற ஒரு இறை சக்தியில் மனதை வைத்து தியானித்து மாயையை கட்டுங்கள். அப்போது இருள் நீங்கி தெரியும் ஜோதியாகிய இறைவனை காணுங்கள். இனி எப்போதும் மாயையாகிய பிறவியை எடுக்காத நிலைக்கு உங்களை கொண்டு செல்லும் ஜோதி அதுவே ஆகும்.

பாடல் #1688

பாடல் #1688: ஆறாம் தந்திரம் – 13. அபக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சி இல்லாதவர்கள்)

வைத்த பசுபாச மாற்று நெறிவைகிப்
பெத்த மறமுத்த னாகிப் பிறழ்வுற்றுத்
தத்துவ முன்னித் தலைப்படா தவ்வாறு
பித்தான சீடனுக் கீயப் பெறாதானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

வைதத பசுபாச மாறறு நெறிவைகிப
பெதத மறமுதத னாகிப பிறழவுறறுத
தததுவ முனனித தலைபபடா தவவாறு
பிததான சீடனுக கீயப பெறாதானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

வைத்த பசு பாச மாற்று நெறி வைகி
பெத்தம் அற முத்தன் ஆகி பிறழ் உற்று
தத்துவம் உன்னி தலை படாது அவ்வாறு
பித்து ஆன சீடனுக்கு ஈய பெறாது ஆனே.

பதப்பொருள்:

வைத்த (பிறக்கும் போதே உடலுக்குள் வைத்த) பசு (இருளுக்குள் இருக்கின்ற ஆன்மாவையும்) பாச (அதை கட்டி இருக்கின்ற மலங்களையும்) மாற்று (நீக்கி வெளிச்சத்திற்கு மாற்றுவதற்கான) நெறி (வழி முறையையும்) வைகி (வைத்து அருளி இருப்பதை உணர்ந்து)
பெத்தம் (அந்த வழி முறைகளின் மூலம் பாசமாகிய கட்டுக்களை) அற (இல்லாமல் செய்து) முத்தன் (முக்தி நிலையை பெற்றவன்) ஆகி (ஆகி இல்லாமல்) பிறழ் (தாம் செல்ல வேண்டிய வழி முறையில் இருந்து மாறுதல்) உற்று (அடைந்து)
தத்துவம் (உலக பற்றுக்களுக்கான தத்துவங்களையே) உன்னி (நினைத்துக் கொண்டு) தலை (இறைவனை அடைவதை மட்டுமே குறிக்கோளாக) படாது (எடுத்துக் கொள்ளாமல்) அவ்வாறு (உலக ஆசைகளுக்கு ஏற்றபடியே நடந்து)
பித்து (உலக ஆசைகளில் மயங்கி) ஆன (இருக்கின்ற) சீடனுக்கு (பக்குவமில்லாத சீடனுக்கு) ஈய (உண்மையான ஞானத்தை கொடுக்க) பெறாது (மாட்டார்கள்) ஆனே (குருவானவர்கள்).

விளக்கம்:

பிறக்கும் போதே உடலுக்குள் வைத்த இருளுக்குள் இருக்கின்ற ஆன்மாவையும் அதை கட்டி இருக்கின்ற மலங்களையும் நீக்கி வெளிச்சத்திற்கு மாற்றுவதற்கான வழி முறையையும் வைத்து அருளி இருப்பதை உணர்ந்து, அந்த வழி முறைகளின் மூலம் பாசமாகிய கட்டுக்களை இல்லாமல் செய்து, முக்தி நிலையை பெற்றவன் ஆகி இல்லாமல், தாம் செல்ல வேண்டிய வழி முறையில் இருந்து மாறுதல் அடைந்து, உலக பற்றுக்களுக்கான தத்துவங்களையே நினைத்துக் கொண்டு, இறைவனை அடைவதை மட்டுமே குறிக்கோளாக எடுத்துக் கொள்ளாமல், உலக ஆசைகளுக்கு ஏற்றபடியே நடந்து, உலக ஆசைகளில் மயங்கி இருக்கின்ற பக்குவமில்லாத சீடனுக்கு உண்மையான ஞானத்தை கொடுக்க மாட்டார்கள் குருவானவர்கள்.

பாடல் #1689

பாடல் #1689: ஆறாம் தந்திரம் – 13. அபக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சி இல்லாதவர்கள்)

மன்னு மலமைந்தும் மாற்றும் வகையோரான்
துன்னிய காமாதி தோயுந் தொழில்நீங்கான்
பின்னிய பொய்யன் பிறப்பிறப் பஞ்சாதா
னன்னிய னாவா னசற்சீட னாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

மனனு மலமைநது மாறறும வகையொரான
துனனிய காமாதி தொயுந தொழிலநீஙகான
பினனிய பொயயன பிறபபிறப பஞசாதா
னனனிய னாவா னசறசீட னாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

மன்னும் மலம் ஐந்தும் மாற்றும் வகை ஓரான்
துன்னிய காம ஆதி தோயும் தொழில் நீங்கான்
பின்னிய பொய்யன் பிறப்பு இறப்பு அஞ்சாதான்
அன்னியன் ஆவான் அசற் சீடன் ஆமே.

பதப்பொருள்:

மன்னும் (உலக பற்றுக்களிலேயே நிலை பெற்று இருக்கின்ற) மலம் (மலங்களாகிய) ஐந்தும் (ஐந்து புலன்களையும்) மாற்றும் (மாற்றுகின்ற) வகை (வழி முறையை) ஓரான் (ஆராய்ந்து அறிந்து கொள்ளாதவன்)
துன்னிய (தன்னைப் பெருந்தி இருக்கின்ற) காம (காமம்) ஆதி (முதலாகிய ஆசைகளில்) தோயும் (தோய்ந்து இருக்கின்ற) தொழில் (செயல்களை) நீங்கான் (விட்டு நீங்காமல் இருக்கின்றவன்)
பின்னிய (ஒன்றன் பின் ஒன்றாக பின்னிக் கொண்டே) பொய்யன் (இருக்கின்ற பொய்களை கூறுபவன்) பிறப்பு (மீண்டும் மீண்டும் வருகின்ற பிறவிகளுக்கோ) இறப்பு (மீண்டும் மீண்டும் வருகின்ற இறப்பிற்கோ) அஞ்சாதான் (தன் மூடத்தனத்தால் அச்சப் படமால் இருக்கின்றவன் ஆகிய தன்மைகளைக் கொண்டவன்)
அன்னியன் (குருவுக்கு நெருக்கம் இல்லாதவன்) ஆவான் (ஆகி) அசற் (உண்மையில்லாத) சீடன் (சீடனாகவே) ஆமே (இருப்பான்).

விளக்கம்:

உலக பற்றுக்களிலேயே நிலை பெற்று இருக்கின்ற மலங்களாகிய ஐந்து புலன்களையும் மாற்றுகின்ற வழி முறையை ஆராய்ந்து அறிந்து கொள்ளாதவன், தன்னைப் பெருந்தி இருக்கின்ற காமம் முதலாகிய ஆசைகளில் தோய்ந்து இருக்கின்ற செயல்களை விட்டு நீங்காமல் இருக்கின்றவன், ஒன்றன் பின் ஒன்றாக பின்னிக் கொண்டே இருக்கின்ற பொய்களை கூறுபவன், மீண்டும் மீண்டும் வருகின்ற பிறவிகளுக்கோ அல்லது மீண்டும் மீண்டும் வருகின்ற இறப்பிற்கோ தன் மூடத்தனத்தால் அச்சப் படமால் இருக்கின்றவன் ஆகிய தன்மைகளைக் கொண்டவன் குருவுக்கு நெருக்கம் இல்லாதவனாகி உண்மையில்லாத சீடனாகவே இருப்பான்.