மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #41

27-12-2008 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

ஆசைகளையும் பாசத்தையும் முழுமையாக ஒழிக்க முடியவில்லையே அது ஏன்?

ஆசைகளை முழுமையாக ஒழிப்பது மிகவும் கடினம். ஆசைகளை அடக்கினாலும் மீண்டும் சில நேரங்களில் அந்த ஆசைகள் திரும்ப வரும். இதற்கு உதாரணமாக ஊசி என்பது மனம் போலவும் நூலானது ஆசைகள் போலவும் எடுத்துக்கொண்டால் ஊசியில் நூலைக் கோர்த்துவிட்டு நூலின் இரண்டு முனைகளையும் பிடித்துக் கொண்டால் ஊசியானது இரண்டு பக்கமும் அலைந்து கொண்டிருக்கும். ஆனால் ஊசியிலிருந்து நூலை எடுத்து விட்டால் ஊசியானது அலையாமல் தனியாக நிற்கும். ஆகவே ஆசைகளை முழுமையாக நீக்க வேண்டும் என்பது மிகக் கடினம் என்பதை அறிய வேண்டும். இதற்கு என்ன வழி என்று சிந்தித்தால் ஊசியிலிருந்து நூலைத் தூக்கி எறிவதே சரியான வழி. அதாவது ஆசைகளை நீக்கும் முன்பு அந்த ஆசைகளை உண்டாக்கும் காரணங்களை நீக்க வேண்டும். உதாரணமாக லகரி வஸ்துக்களை (சிகரெட் பாக்கு சாராயம் முதலிய போதைப் பொருட்கள்) உபயோகிப்பவர்கள் அதை எப்போதும் தன்னோடு வைத்திருக்கக் கூடாது. எப்பொழுதும் அவற்றைத் தன்னுடனே வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தை முதலில் மனதில் இருந்து நீக்க வேண்டும். அத்தகைய லகரி வஸ்துக்களை உபயோகிக்கும் நபர்களுடன் சேரக்கூடாது என்பதை ஒரு விதியாக எடுத்துக் கொண்டால் முழுமையாக அந்த ஆசைகளில் இருந்து விடுபடலாம். சிறுது கடினம் என்கின்ற போதிலும் ஒவ்வொரு ஆசையாக இவ்வாறு நீக்கிவிட முடியும்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #40

16-7-2008 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

எவ்வாறு நாம் இறைவனைத் தொடர்பு கொள்வது?

இறைவனைத் தொடர்பு கொள்வதற்குப் பாவனைகள் மிகவும் முக்கியமானவை. ஆனால் பல வகையான பாவனைகள் இருக்கின்றது. நமக்கு எளிதான பாவனைகள் எவையோ அவைகளை உணர்ந்து ஏற்றுக் கொண்டு அதன் வழியாக செல்லுதல் வேண்டும். மற்றவர்கள் செல்லும் பாவனைகளை நாமும் ஏற்றுக்கொண்டு செல்வது தவறாகும். நமக்கு எந்த பாவனை எளிமையானது என்று சிந்தித்து அந்த பாவனையின் வழி தடுமாறாமல் செல்ல வேண்டும். இதற்கும் மேலாக தெய்வத்தின் பெயரை எப்பொழுதும் கூறிக்கொண்டு இருந்தால் ஓர் தொடர்பு உண்டாகி இறைவனின் சிந்தனை எப்பொழுதும் மனதில் இருக்கும். இவ்வாறு இறைவனின் பெயரைக் கூறிக்கொண்டு இருந்தால் என்னைப் பலர் கேலி செய்கின்றனர் என்று சிலர் கூறுகின்றனர். மற்றவர்கள் கேலி செய்கின்றதை பொருட்படுத்தாமல் எப்பொழுதும் இறைவன் பெயரை மனதில் கூறிட தெய்வ சிந்தனை எப்பொழுதும் மனதை விட்டு நீங்காமல் செய்கின்ற எந்தக் காரியமும் தெய்வீகக் காரியமாகவே தோன்றும்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #39

19-6-2008 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

மனித வாழ்க்கையின் பொருள் என்ன? நோக்கம் என்ன?

இதற்கான விடை மிகவும் எளியது. ஆனால் அடையும் முயற்சிகள் மிகப் பெரியவை ஆகும். ஒவ்வொருவரின் பிறவியும் வாழ்கையில் தமக்குள் உள்ளிருக்கும் தெய்வ சக்தியை உணர்வது. நம் அனைவருக்குள்ளும் இறைவன் குடிகொண்டு இருக்கின்றான் என்பதை யாரும் உணர்வதில்லை. தெய்வீக சக்திக்கு மனிதன் ஒரு வீடாக இருக்கின்றான். அந்த வீட்டில் இறைவன் தங்கி உள்ளான். ஆனால் நாம் அதனை உணராமல் வெளியே தேடி அலைகின்றோம். இதற்குக் காரணம் என்ன என்று கேட்டால் நமது இந்திரியங்களும் ஐம்புலன்களும் ஆகும். இவை இரண்டும் நம்மைத் திசை திருப்பி மாயையின் பிடியில் தள்ளுவதால் மீண்டும் நம்மால் வெளியே வர முடியவில்லை. அனைவரும் தியானத்தின் மூலம் நமக்கு உள்ளே சென்று பார்த்தல் வேண்டும். தினந்தோறும் குறைந்த அளவில் ஒரு அரைமணி நேரமாவது தியானம் செய்ய வேண்டும். இதனைத் தொடர்ந்து செய்பவர்களும் மந்திரஜபம் தொடர்சியாக செய்து வருபவர்களும் உறுதியாக தமக்குள் உள்ள இறைவனை உணர்வது மட்டும் இல்லாமல் உயர்ந்த நிலையும் அடையவார்கள்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #38

23-5-2008 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

நான் என்றால் என்ன?

நான் என்பது என்ன இதனைத் தேடி நாடிப் பல காலங்களில் தவம் இருந்தவர்களுள் யாமும் ஒருவனே. நான் என்பதைத் தேடுவதில் தீவிர முயற்சிகள் வேண்டும். நான் என்கின்றது அகங்காரம் ஆகும். நான் என்பது சரியானது இல்லை. நாம் என்பதே சரியானது ஆகும். ஏன் என்றால் ஒவ்வொரு செயலிலும் முயற்சியிலும் இறைவன் நம்முடன் இருக்கின்றான் என்பதை மறக்கக்கூடாது.

இறைவன் உடன் இருக்கும் இந்த நிலையை அடைவதற்காகவே ஞானிகளும் துறவிகளும் யாம் செய்கின்றோம் யாம் பார்க்கின்றோம் என இறைவனையும் சேர்த்துக் கூறுகின்றனர். இவ்விதம் யாம் என்பதை வார்த்தைகளில் மட்டும் சேர்த்துக் கூறினால் போதாது. உண்மையாகவே இறைவன் நம்முடன் இருந்து ஒவ்வொரு செயல்களிலும் ஈடுபடுகின்றான் என்பதைப் பரிபூரணமாக நம்புதல் வேண்டும். என் செயலால் இனி ஆவது ஒன்றும் இல்லை என்பதைப் பரிபூரணமாக ஏற்றுக் கொண்டால் அனைத்தும் நல்வழியில் நடப்பது மட்டுமல்லாமல் அமைதியையும் காண இயலும். இக்காலத்தின் கலியுகத் தன்மையில் எவ்வளவு செலவு செய்தாலும் கிடைக்காதது அமைதியே. அந்த அமைதி வேண்டும் எனில் அனைத்தையும் இறைவனின் பாதத்தில் சமர்ப்பித்துவிட்டு இனி அனைத்தும் உமது செயலே என ஒப்புக்கொண்டு எதிர்பார்ப்பின்றி செயல்படுவீர்களாக.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #37

25-4-2008 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

ஞானிகள் எவ்வாறு இருப்பார்கள்?

பற்று இல்லாத நிலையுடன் பேரன்பு கூடியும் எதனிடமும் பற்று இல்லாத போதும் தன்னுடைய அன்பானது உலகிற்குக் கிடைக்கட்டும் என்கின்ற நிலையுடனும் விசேஷ ஆடைகள் இல்லாமல் விசேஷ அறிகுறிகள் இல்லாமல் ஒன்றும் இல்லாமல் இருந்தாலும் அனைவரையும் சமமாக பார்க்கும் மனநிலையுடனும் இருப்பார்கள். ஆசைகள் வெறுப்புகள் விருப்பங்கள் ஆகிய அனைத்தையும் நீக்கி ஒழித்து விட்டு இறைவன் ஒருவனே தம்முடைய சொத்து இறைவன் மட்டுமே தம்முடைய ஆனந்தம் இறைவன் ஒருவனே தமக்கு அனைத்தும் என்கின்ற மனநிலையை வளர்த்துக் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இந்த நிலையை நீங்கள் எப்படி அடைய முடியும் என்கின்ற கேள்விக்கு விடை எளிதானது. அவர்கள் செய்வது போல நீங்களும் செய்ய வேண்டும். ஆனால் அதை செயல்படுத்துவது மிகவும் கடினம். இந்நிலையில் சிறிது சிறிதாக நாம் விரும்பும் உணவிலிருந்தும் பழக்கவழக்கங்களிலிருந்தும் நம்முடைய ஆசைகள் வெறுப்புகள் மற்றும் விருப்பங்கள் ஆகியவற்றை நீக்கினால் அந்த உணவிற்கும், பழக்கவழக்கத்திற்கும் நாம் அடிமையாக இருப்பதிலிருந்து விடுபடலாம். அவ்வாறு விடுபட்டால் மற்ற அனைத்தும் எளிதாக விடுபட்டுச் சென்று விடும். மேலும் துறவு சென்றவன் சிவனே என அமர்வான். அவன் தன்னுடைய அடுத்தத் தேவைகளைப் பற்றிச் சிந்திப்பது இல்லை. ஏனெனில் அனைத்தும் இறைவன் அளிப்பான் என்கின்ற பூரண நம்பிக்கை விசுவாசம் சரணாகதி ஆகிய அனைத்தும் அவனுக்கு உண்டு. இதில் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் முழுமையாகச் சரணடைந்து விட்டோம் என்றால் நமக்கு வேண்டியது அனைத்தும் நாம் இருக்கும் இடத்தைத் தேடி வரும் என்பது அதன் தத்துவம் ஆகின்றது. அவ்விதம் நாம் இருக்கும் இடம் தேடி வருமா? என்று சிறிது சந்தேகம் ஏற்பட்டாலும் நாம் ஞானியின் நிலையை அடைவது கடினமாகும்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #36

29-3-2008 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

ஆன்மீகப் பாதையில் இறைவன் திருவடி அடைய நம்முள் இருக்கும் இறைவனின் குரல் எவ்விதம் ஓர் வழிகாட்டியாக உள்ளது?

ஆன்மீகப் பாதையில் செல்லும் போது சிந்தனை அதாவது நமது அறிவை உபயோகித்துச் சிந்தித்து அப்பாதையில் செல்ல ஓர் அளவிற்கே இயலும். நமது அறிவினைக் கொண்டு சிந்தித்துச் செல்வது நல்லது தான். ஆனால் அது ஓர் அளவிற்குத்தான் பயன்படும். அதற்கு மேலும் செல்ல வேண்டுமானால் நமக்குள் தோன்றக்கூடிய யுக்தி (Intuition) என்பது தான் கொண்டு போக முடியும். அதாவது யுத்தி என்பது என்னவென்றால் நமக்கு உள்ளே வாழும் தெய்வத்தின் வழிகாட்டுதலே ஆகும். அந்தத் தெய்வத்தின் குரலினைக் கேட்டு அவ்வழியாக இறைவனை அடைய முடியும். அந்தத் தெய்வம் நமக்குள் எப்படிக் குரல் கொடுக்கக்கூடும் என்றால் நாம் இறைவன் மீது வைக்கும் உண்மையான முழுமையான அன்பினாலே ஆகும். ஆகவே இறைவனை அடைய நம் அறிவாற்றலால் ஓரளவிற்கு முடியும் என்றால் நமக்குள் இருக்கும் இறைவனின் வழிகாட்டுதலால் முழுமையாக அடைய முடியும்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #35

01-3-2008 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

சுகம் ஏன் நிலைப்பதில்லை?

சுகம் எது துயரம் எது என நாம் சிந்தித்தல் வேண்டும். சுகமது வந்து விட்டால் பின் துயரமும் வரும் என்பது உறுதி. ஏனெனில் இரண்டும் நம் சிருஷ்டியின் (உருவாக்கியது) விளைவே. சத்யத்தின் நிலையில் பார்த்திட்டால் சுகமும் இல்லை துயரமும் இல்லை துயரமது நமது தோற்றத்தின் விளைவால் மேல் ஓங்கிட அதுவும் நம் தீமையை நீக்கிடவே வந்துள்ளது என கண்டு கொண்டால் துயரமும் சுக நிலையாகும். துயரம் என்பது நமது கர்ம விதிகளை நீக்கிட என்றென நன்கும் உணர்ந்திட அதிலும் சுகம் காணக்கூடும். இதற்கு உதாரணமாக குழந்தைகளின் சேஷ்டைகள் அனைத்தும் தாயவள் துயரமாக காண்பதுண்டா? அனைத்தும் அக்குழந்தைக்காக தியாகம் செய்து எவ்வித துயரமும் தாங்கி கொள்வதை எண்ணி பாருங்கள். இதுவே துயரத்தை சுகமாக ஏற்றுக் கொள்ளும் நிலை இவ்விதமே இறைவன் என அழைக்கும் தாய் நாம் அப்அப்பொழுது கேட்கும் வினாவிற்கும் சேஷ்டைகள் அனைத்தும் ஆனந்தமாகவே பொறுத்துக் கொள்கின்றாள். ஆண்டவன் என் மேல் கோபம் கொள்கின்றார் என கூறுவது தவறாகின்றது. ஆண்டவன் தண்டிப்பதில்லை என மீண்டும் மீண்டும் கூறுகின்றோம். அனைத்தும் நம்மை நாமே தண்டிக்கும் நிலையாகும். ஏனெனில் நாம் பயிரிட்டது நாம் உறுதியாக அறுவடை செய்திடல் வேண்டும் என்பதே இயற்கையின் விதி. சுகம் வரும் காலங்களில் உறுதியாக பின்பு துயரம் வரும் என உறுதி காண்பீர். அத்துயரத்தை நல்வழியில் ஸ்விகரித்தல் (எடுத்துக்கொள்ள) வேண்டும். அதையே வாய்ப்பாக ஏற்று நம்முடைய கர்மவிதிகளை மாற்றிட ஓர் மார்க்கமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #34

7-1-2008 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

ஆன்மீகப் பாதையில் செல்லும் போது சுய உடமைகள் (பொருட்கள்) இருப்பது தேவையற்றதா? அவ்வாறு சுய உடமைகள் இருப்பது தவறாகுமா?

கலிகாலத்தில் உடமைகள் இல்லாமல் வாழ்வது கடினம். இருப்பினும் நாம் ஒரு பொருளை நம் தேவைக்காக என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால் அப்பொருள் இருந்தால்தான் நம்மால் இருக்க முடியும் என்று இருக்கக்கூடாது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். சொத்துக்கள் இருந்தால் தவறாகாது. சொத்துக்கள் தான் அனைத்தும் என்கின்ற மனப்பான்மை இருக்கக்கூடாது. ஏனெனில் எவ்வளவு சொத்துக்கள் இருந்தாலும் உடம்பை விட்டுச் செல்லும் போது அனைத்தையும் விட்டு விட்டே செல்ல வேண்டும். ஆத்மாவின் விடுதலைக்கும் ஆத்மாவின் முக்திக்கும் சொத்துக்கள் தேவையற்றது. இந்நிலையில் சொத்துக்களை அனுபவித்துச் செல்ல வேண்டும் என்கின்ற எண்ணமே இருக்க வேண்டும். பிற்காலத்தில் இதை விட்டுச் செல்ல வேண்டுமே என்று வருத்தமாக இருக்கக்கூடாது. உடமைகள் இருப்பது தவறில்லை. ஆனால் உடமைகள் இல்லாமல் வாழ முடியும் என்பதை மனதில் வைத்து ஆன்மீகப் பாதையில் சென்றால் எவ்விதத் தவறும் இல்லை. உதாரணமாக ஆன்மீகப் பாதையில் செல்வோர் தொலைபேசி உபயோகிப்பது தொலைக்காட்சி காண்பது தவறாகாது. இருப்பினும் அதனை அனுபவித்து விட்டு அது இல்லாமல் இருக்கும் போது அதனை நினைத்துக் கவலைப்படக்கூடாது என்பதே எமது அறிவுரை.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #33

11-12-2007 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

இறைவனின் அருளானது ஏன் அனைவரின் மீதும் விழவில்லை?

இறையருள் அனைவரின் மீதும் சமமாக விழுகிறது. இதை பலர் உணர்வதில்லை. வெளிச்சம் விழும் காலத்தில் நல்ல கண்ணாடி வழியாக சிறப்பாக வெளிச்சம் உண்டாகும். அழுக்காக உள்ள கண்ணாடியில் வெளிச்சம் சிறிது குறைவாக விழும். கறுப்பாக உள்ள கண்ணாடியில் வெளிச்சமே வராது. இவ்விதமே மனிதரின் நிலைமை ஆத்மா எந்த அளவிற்கு சுத்தமாக உள்ளதோ அந்த அளவிற்கே இறைவன் அருளை அவர்களால் உணர முடியும். இறைவனுக்குப் பேதங்கள் இல்லை என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். இறைவன் படைத்தது என்கின்ற போது அனைவரும் அவரின் குழந்தைகள். இத்தகைய நிலையில் ஒருவருக்கு நலம் தருவதும் மற்றவருக்குத் துன்பம் தருவதும் இல்லை. பின் ஏன் சிலருக்கு கடினம் என்றால் அவரவர் கொண்டு வந்த கர்ம மூட்டைகளின் நிலைகளே ஆகும். இந்நிலையில் ஒன்றை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். நம்மை நாம் தியானத்தின் வழியாகவும் வழிபாட்டின் வழியாகவும் தயார் செய்து கொண்டால் அருளைப் பெறுவதை உணர்வதையும் உணராமல் இருப்பதையும் பெரும் அளவில் அறிந்து கொள்ள முடியும்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #32

13-11-2007 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

பொதுவாக அனைத்தும் கர்மவிதிப்படி நடைபெறும் என்பது அனைவரும் அறிந்ததே இத்தகைய கர்ம விதிகளை இறைவனால் மாற்றிவிட முடியுமா?

உறுதியாக மாற்றிவிட முடியும். ஏன் என்றால் கர்ம விதிகள் இறைவனால் மாற்ற முடியாவிட்டால் இறைவனை விட கர்மவிதி பெரிதாகும் அல்லவா? இறைவனே பெரியவன். ஆகையால் கர்ம விதிகளை இறைவனால் மாற்றிவிட முடியும். இத்தகைய நிலையில் சில விஷேச நாட்களில் உலக நன்மைக்காக இறைவன் கர்ம நிலைகளை மாற்றிவிட இயலும். மேலும் பொதுவாக அவரவர் தன் கர்ம விதிகளை தீர்த்தல் வேண்டும் என விதியும் உண்டு. இது மனதினால், உடலால், துயரத்தால், தவத்தால், வழிபாட்டால் எனப் பல வகையில் தீர்த்திட முடியும். நல் எண்ணம் படைத்தோர் இதனை தியானவழி, பூஜை வழிகளில் தீர்த்திடுகின்றனர். இவ்விதம் இருந்த போதிலும் அவரவர் செய்த கர்மத்திற்கு ஏற்றார் போல் மன வேதனைகளும் உடல் வேதனைகளும் அவர்களைத் தொடரும். காரணம் அவரவர் தம் சுமைகளை பிறக்கும் பொழுது கொண்டு வருவதே. இது மட்டுமல்லாது அக்குறைகளை தீர்த்திட முயற்சிக்காமல் மேலும் சில கர்ம வினைகளை சேர்ப்பதே மனிதனின் நிலைக்குக் காரணம். தீவிரமான வழிபாடு தியான முறைகள் சகிப்புத்தன்மை ஆகியவற்றை வளர்ப்பதோடு எதிர்பார்ப்பற்ற நிலையில் வாழ்வதும் எளிதாக கர்ம நிலைகளை மாற்றி இறைவனின் பாதம் அடைய வழி வகுக்கும்.