பாடல் #947

பாடல் #947: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

நின்ற எழுத்துக்கள் நேர்தரு பூதமும்
நின்ற எழுத்துக்கள் நேர்தரு வண்ணமும்
நின்ற எழுத்துக்கள் நேர்தர நின்றிடில்
நின்ற எழுத்துள்ளும் நின்றனன் தானே.

விளக்கம்:

பாடல் #946 இல் உள்ள ‘சிவயநம’ எனும் மந்திரத்தில் இருக்கும் ‘சி’ எழுத்து ஆகாயத்தையும் ‘வ’ எழுத்து நீரையும், ‘ய’ எழுத்து நிலத்தையும் ‘ந’ எழுத்து நெருப்பையும் ‘ம’ எழுத்து வாயுவையும் குறிக்கின்றது. அவை முறையே நிலம் – செம்மை, நீர் – வெண்மை, நெருப்பு – பொன்மை, வாயு – புகைமை, ஆகாயம் – கருமை ஆகிய நிறங்களில் பஞ்ச பூதங்களை இயக்குகின்றது. பஞ்சபூதங்களுடன் ‘சிவயநம’ எனும் பஞ்சாக்கர மந்திரத்தை பாடல் #946 இல் உள்ளபடி முறையாக வரைந்த சக்கரத்தில் இறைவன் வீற்றிருப்பான்.

குறிப்பு: பாடல் #929 இல் சிவயநம எழுத்துக்களுக்கான பஞ்ச பூதங்களின் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

பாடல் #948

பாடல் #948: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

நின்றது சக்கரம் நீளும் புவியெல்லாம்
மன்றது வாய்நின்ற மாயநன் னாடனைக்
கன்றது வாகக் கறந்தனன் நந்தியுங்
குன்றிடை நின்றிடுங் கொள்கைய னாமே.

விளக்கம்:

பாடல் #947 இல் உள்ளபடி பஞ்சபூதங்களுடன் அமைக்கப்பட்ட சக்கரத்தைப் போலவே சாதகரின் உடலில் இருக்கும் பஞ்ச பூதங்களும் இறைவன் ஆடுகின்ற மன்றங்களாகவும் சாதகரின் ஆன்மா இறைவனோடு இணைந்து இருக்கின்றது. ஆனால் மாயையால் இறைவனோடு கலந்திருக்கின்றோம் என்பதை அறியாமல் தனித்திருப்பதைப் போன்ற பிரம்மையிலும் இருக்கின்றது. இந்த சக்கரத்தை முறைப்படி செபிக்கும் சாதகர்களின் ஆன்மா கன்றாக இருந்து பசுவாக இருக்கும் இறைவனிடம் ஞானப்பாலை அருந்துகின்றது. அதன் பிறகு சாதகரின் தலை உச்சியில் இருக்கும் சகஸ்ரதளத்தில் இறைவன் ஜோதி உருவமாக தரிசனம் கொடுத்து சாதகரின் ஆன்மாவும் தாமும் ஒன்றே எனும் கொள்கையை உணர வைப்பார்.

பாடல் #949

பாடல் #949: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

கொண்டஇச் சக்கரத் துள்ளே குணம்பல
கொண்டஇச் சக்கரத் துள்ளே குறியைந்து
கொண்டஇச் சக்கரங் கூத்தன் எழுத்தைந்துங்
கொண்டஇச் சக்கரத் துள்நின்ற கூத்தே.

விளக்கம்:

பாடல் #946 இல் உள்ள முறைப்படி வரையப்பட்ட சக்கரத்திற்குள் பாடல் #929 இல் உள்ளபடி பஞ்சபூதங்களின் குறிகளும் அதன் குணங்களும் இருக்கின்றது. இந்த சக்கரத்திலுள்ள ‘சிவயநம’ எனும் ஐந்தெழுத்து மந்திரமாக இருக்கும் இறைவன் இச்சக்கரத்துள்ளே ஆனந்த நடனம் புரிகின்றான்.

குறிப்பு: பஞ்ச பூதங்களின் குறிகளும் அதன் குணங்களும்:

  1. நிலம் = சதுரம் – வாசனை (முகர்வது)
  2. நீர் = பிறைவட்டம் – சுவை (கிரகித்தல்)
  3. நெருப்பு = முக்கோணம் – ஒளி (வெளிச்சம்)
  4. வாயு = அறுகோணம் – ஸ்பரிசம் (தொடுதல்)
  5. ஆகாயம் = வட்டம் – ஒலி (சத்தம்)

பாடல் #950

பாடல் #950: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

வெளியி லிரேகை யிரேகையி லத்தலை
சுளியில் உகாரமாஞ் சுற்றிய வன்னி
நெளிதரு கால்கொம்பு நேர்விந்து நாதந்
தெளியும் பிரசாதஞ் சிவமந் திரமே.

விளக்கம்:

இடமிருந்து வலமாக ஒரு நேர் கோடு வரைந்து அதன் தலையில் ஒரு சுழி வட்டம் வரைந்து அந்த வட்டத்தையும் கோட்டையும் இணைக்கும் படி ஒரு வளைந்த கொம்பு வரைந்தால் ‘உ’ எனும் எழுத்து வரும். இந்த ‘உ’ எழுத்தின் வடிவத்தை மனதிற்குள் வைத்து தியானித்தால் அந்த எழுத்தைச் சுற்றியிருக்கும் அக்னியில் இருந்து ஒளியும் ஒலியும் வெளிப்படுவதை உணரலாம். இந்த ஒளி ஒலியின் பொருளை உணர்ந்தால் கிடைக்கும் பிராசாதம் சிவமந்திரமாகும்.

பாடல் #951

பாடல் #951: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

அகார உகார சிகார நடுவாய்
வகாரமோ டாறும் வளியுடன் கூடிச்
சிகார முடனே சிவன்சிந்தை செய்ய
ஒகார முதல்வன் உவந்துநின் றானே.

விளக்கம்:

‘அ’ ‘உ’ எழுத்துக்கள் அடங்கியுள்ள ‘ஓம்’ எழுத்தோடு ‘சி’ நடுவாக இருக்கும் ‘நமசிவய’ எழுத்தையும் சேர்த்து ‘ஓம் நமசிவய’ எனும் மந்திரத்தையும், ‘வ’ முதலாக இருக்கும் ‘வசியநம’ சேர்த்து ‘ஓம் வசியநம’ எனும் மந்திரத்தையும், ‘சி’ முதலாக இருக்கும் ‘சிவயநம’ சேர்த்து ‘ஓம் சிவயநம’ எனும் மந்திரத்தையும் மானசீகமாக வெளியில் இருக்கும் காற்றோடு சேர்த்து செபித்துக் கொண்டே இறைவன் மேல் சிந்தனையை வைத்திருந்தால் ஓங்காரத்தின் முதல்வனாகிய இறைவன் சாதகருக்குள் அன்போடு எழுந்தருளுவான்.

பாடல் #952

பாடல் #952: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

அற்ற விடத்தே அகாரம தாவது
உற்ற விடத்தே யுறுபொருள் கண்டிடச்
செற்றம் அறுத்த செழுஞ்சுடர் மெய்ப்பொருள்
குற்றம் அறுத்த பொன்போலுங் குளிகையே.

விளக்கம்:

பாடல் #951 இல் உள்ளபடி சாதகருக்குள் அன்போடு எழுந்தருளிய இறைவனை ‘அ’ வடிவில் உணரலாம். ‘அ’ வடிவிற்குள் இருக்கும் மும்மலங்களும் நீங்கிய செழுமையான சுடர் போன்ற உண்மை பொருளை கண்டால் அது மாசில்லாத தூய்மையான தங்கத்தை போல் இருக்கும்.

பாடல் #953

பாடல் #953: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

அவ்வென்ற போதினில் உவ்வெழுத் தாலித்தால்
உவ்வென்ற முத்தி யுருகிக் கலந்திடும்
மவ்வென் றென்னுள்ளே வழிபட்ட நந்தியை
எவ்வணஞ் சொல்லுகேன் எந்தை இயற்கையே.

விளக்கம்:

பாடல் #952 இல் உள்ளபடி ‘அ’ வடிவில் மாசில்லாத தூய்மையான தங்கத்தை போல் இருக்கும் இறைவனை ‘உ’ எழுத்தால் ஆராதித்தால் ‘உ’ எழுத்தின் உச்சகட்ட பரிபூரண நிலையில் ‘அ’ எழுத்தோடு ஒன்றாகக் கலந்து ‘ம’ எழுத்தாக மாறி நிற்பான். ‘ம’ வடிவில் இருக்கும் இறைவன் குருவாக நின்று வழிகாட்டும் முறைப்படி செயல்பட்டால் ஓங்காரத்தின் உச்சகட்ட பரிபூரண நிலையை அடைந்து அதனால் கிடைக்கும் பேரின்பமானது வார்த்தைகளால் விவரிக்க இயலாத அளவு இருக்கும்.

குறிப்பு: பாடல் #950, #951, #952, #953 இல் ஓங்காரத்தில் அடங்கியிருக்கும் ‘அ’ ‘உ’ ‘ம’ எழுத்துக்களின் தன்மைகளை அருளுகின்றார்.

பாடல் #954

பாடல் #954: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

நீரில் எழுத்திவ் வுலக ரறிவது
வானில் எழுத்தொன்று கண்டறி வாரில்லை
யாரிவ் வெழுத்தை அறிவா ரவர்கள்
ஊனில் எழுத்தை உணர்கிலர் தாமே.

விளக்கம்:

உலகத்து உயிர்கள் தம்மால் எழுதப்படும் எழுத்துக்களை மட்டுமே அறிந்து கொண்டுள்ளார்கள். ஆனால் எழுதப்படாத எழுத்து ஒன்று வானத்தில் இருக்கின்றது அதைத் தேடிக் கண்டு அறிந்தவர்கள் யாரும் இல்லை. வானத்தில் இருக்கும் எழுதப்படாத ‘ஓம்’ எனும் எழுத்தைத் தேடி அறிந்தவர்கள் கூட அந்த எழுத்துத்தான் தமது உடலுக்குள்ளும் இருக்கின்றது என்பதை உணர்ந்து கொள்ளாமல் இருக்கின்றார்கள்.

பாடல் #955

பாடல் #955: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

காலை நடுவுறக் காயத்தில் அக்கரம்
மாலை நடுவுற ஐம்பது மாவன
மேலை நடுவுற வேதம் விளம்பிய
மூலன் நடுவுற முத்தியும்தந் தானே.

விளக்கம்:

பாடல் #954 இல் உள்ளபடி தமது உடலுக்கு நடுவில் இருக்கும் ஓங்கார எழுத்தை உணர்ந்த சாதகர்கள் தினமும் காலையிலும் மாலையிலும் அதைத் தியானித்தால் அதிலிருந்து ஐம்பது அட்சரங்களும் (பாடல் #924 இல் உள்ளபடி) வெளிப்படுவதை உணரலாம். இந்த ஐம்பது அட்சரங்களுடன் ஓங்கார எழுத்தைச் சேர்த்து மொத்தம் ஐம்பத்தோரு அட்சரங்களின் பரிபூரண உச்ச நிலையை சாதகர்கள் தியானத்தின் மூலம் அடைந்தால் வேதம் சொல்லுகின்ற மூலப் பொருளாகிய இறைவன் அவர்களுக்கு முக்தியை அருளுவான்.

பாடல் #956

பாடல் #956: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

நாவியின் கீழது நல்ல எழுத்தொன்று
பாவிக ளத்தின் பயனறி வாரில்லை
ஓவிய ராலும் அறியவொண் ணாதது
தேவியுந் தானுந் திகழ்ந்துஇருந் தானே.

விளக்கம்:

தொப்புளுக்கு கீழே இருக்கும் மூலாதாரத்தில் ஓம் என்னும் நன்மை தரும் பிரணவ எழுத்து ஒன்று உள்ளது. தீவினையாளர்கள் அந்த பிரணவ எழுத்தின் பயன்களை அறியாமல் இருக்கின்றார்கள். ஓம் பிரணவ எழுத்தின் பொருளை பிரம்மன் முதலான தேவர்களும் கூட அறிந்து கொள்ள முடியாது. ஓம் என்னும் அந்த எழுத்தில் இறைவியோடு தானும் சேர்ந்து இறைவனும் இருக்கின்றான்.