பாடல் #861

பாடல் #861: மூன்றாம் தந்திரம் – 21. சந்திர யோகம் (சந்திரனை உடலில் விளங்கச் செய்யும் யோகம்)

முற்பதி னைஞ்சின் முளைத்துப் பெருத்திடும்
பிற்பதி னைஞ்சிற் பெருத்துச் சிறுத்திடும்
அப்பதி னைஞ்சும் அறியவல் லார்கட்குச்
செப்பரி யானின்கழல் சேர்தலு மாமே.

விளக்கம் :

சந்திரன் முதல் பதினைந்து நாட்கள் சிறிது சிறிதாக வளர்ந்து பெளர்ணமியில் முழுமை அடையும். அதன்பிறகு பதினைந்து நாட்கள் சிறிது சிறிதாகத் தேய்ந்து அமாவாசையில் முழுமையாக மறைந்துவிடும். அதுபோலவே சந்திர யோகம் செய்யும் யோகியருக்கு குண்டலினியில் ஒளிக்கீற்றுக்கள் தோன்றி பெரிய நட்சத்திரமாக வளர்ந்து பின்பு சகஸ்ரதளத்தில் சென்று முழுமையாக மறைந்துவிடும். இந்த பதினைந்து நிலைகளையும் உணர்ந்து அறிந்துகொள்ளக்கூடிய யோகியர்கள் வார்த்தைகளில் கூறிவிடமுடியாத மகத்துவத்தைக் கொண்ட இறைவனின் திருவடிகளை தமக்குள் கண்டு அடைவார்கள்.

பாடல் #862

பாடல் #862: மூன்றாம் தந்திரம் – 21. சந்திர யோகம் (சந்திரனை உடலில் விளங்கச் செய்யும் யோகம்)

அங்கி எழுப்பி அருங்கதிர் வட்டத்துத்
தங்குஞ் சசியினால் தாமம்ஐந் தைந்தாகிப்
பொங்கிய தாரகை யாம்புலன் போக்கறத்
திங்கள் கதிரங்கி சேர்கின்ற யோகமே.

விளக்கம்:

அகயோகம் மூலம் மூலாதாரத்திலுள்ள குண்டலினியை எழுப்பிய பிறகு அந்த அக்கினியை அருமையான சூரிய மண்டலத்தில் தங்குகின்ற சந்திர கலையாகிய வாயுவோடு சேர்த்து நட்சத்திர ஒளியாக மாறுவதற்கு பத்து நாட்களும் அதன் பிறகு நட்சத்திரமாக மாறிய ஒளிக்கீற்றுக்களை சந்திர சூரிய அக்கினி மண்டலங்களோடு சேர்த்து மனதை ஒருமுகப்படுத்தி ஐந்து புலன்களையும் அதனதன் வழியில் செல்ல விடாமல் தடுத்து இறைவனின் மேல் எண்ணங்களை வைத்து சகஸ்ரதளத்தை அடைவதற்கு ஐந்து நாட்களும் ஆக மொத்தம் பதினைந்து நாட்கள் பாடல் #861 இல் கூறியுள்ளபடி உணர்ந்து அறிந்து கொண்டு செய்வதே சந்திர யோகமாகும்.

பாடல் #863

பாடல் #863: மூன்றாம் தந்திரம் – 21. சந்திர யோகம் (சந்திரனை உடலில் விளங்கச் செய்யும் யோகம்)

ஒன்றிய ஈரெண் கலையும் உடலுற
நின்றது கண்டும் நினைக்கிலர் நீசர்கள்
கன்றிய காலன் கருக்குழி வைத்தபின்
சென்று அதில்வீழ்வர் திகைப்பொழி யாரே.

விளக்கம்:

வானத்திலிருக்கின்ற வளர் பிறை தேய் பிறை சந்திர மாற்றங்களின் பதினாறு கலைகளும் உயிர்களின் உடலுக்குள்ளேயும் இருப்பதைக் கண்டுகொண்ட பிறகும் அதை வைத்துக்கொண்டு இறைவனை நினைத்து சந்திரயோகம் செய்து பிறவி இல்லாத பெருவாழ்வை அடைய முயற்சி செய்யாத கீழான குணமுடையவர்களை கண்ட எமன் இனி இவர்கள் வாழ்ந்து என்ன பயன் என்று அவர்கள் இறந்து அடுத்த பிறவி எடுக்கும்படி மரணப்பிடியில் சிக்க வைக்கிறார். கீழான குணமுடையவர்களும் அதில் சென்று வீழ்ந்து மீண்டும் பிறவிச் சுழற்சியில் மாட்டிக்கொண்டு எப்படி தப்பிப்பது என்று திகைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

பாடல் #864

பாடல் #864: மூன்றாம் தந்திரம் – 21. சந்திர யோகம் (சந்திரனை உடலில் விளங்கச் செய்யும் யோகம்)

அங்கி மதிகூட ஆகும் கதிரொளி
அங்கி கதிர்கூட ஆகும் மதியொளி
அங்கி சசிகதிர் கூடஅத் தாரகை
தங்கிய அதுவே சகலமு மாமே.

விளக்கம்:

குண்டலினியாகிய மூலாக்கினியில் சந்திர கலையாகிய இடகலை மூச்சுக்காற்று இணையும்போது அது சூரிய ஒளிக்கீற்றைப் பெறுகிறது. மூலாக்கினியில் சூரிய கலையாகிய பிங்கலை மூச்சுக்காற்று இணையும் போது அது சந்திர ஒளிக்கீற்றைப் பெறுகிறது. இப்படி மாறிப் பெற்ற இரண்டு ஒளிக்கீற்றுக்களும் சுழுமுனையில் ஒன்றாக இணையும் போது அது நட்சத்திர மண்டலங்களாக மாறுகின்றது. இந்த நட்சத்திர மண்டலங்கள் உயிர்களின் உடலிலுள்ள ஒன்பது மண்டலங்களையும் தாண்டி பரவெளியில் இறை சக்தியோடு ஒன்றினையும் போது அனைத்துமாகிய இறைவனாகவே யோகியர்கள் ஆகிவிடுகின்றனர்.

பாடல் #865

பாடல் #865: மூன்றாம் தந்திரம் – 21. சந்திர யோகம் (சந்திரனை உடலில் விளங்கச் செய்யும் யோகம்)

ஈராறு பெண்கலை எண்ணிரண் டாண்கலை
பேராமற் புக்குப் பிடித்துக் கொடுவந்து
நேராகத் தோன்றும் நெருப்புற வேபெய்யில்
ஆராத ஆனந்தம் ஆனந்த மானதே.

விளக்கம் :

பன்னிரண்டு கலைகள் கொண்ட சூரியக்கலை பெண் கலை ஆகும். பதினாறு கலைகள் கொண்ட சந்திரக்கலை ஆண் கலை ஆகும், இரண்டு கலைகளையும் பயிற்சியினால் மூலாக்னியில் ஒரு நிலைப்படுத்தினால் அங்கு தெவிட்டாத திருவடி இன்பம் கிடைக்கும்.

பாடல் #866

பாடல் #866: மூன்றாம் தந்திரம் – 21. சந்திர யோகம் (சந்திரனை உடலில் விளங்கச் செய்யும் யோகம்)

காணும் பரிதியின் காலை இடத்திட்டு
மாணும் மதியதன் காலை வலத்திட்டுப்
பேணியே யிவ்வாறு பிழையாமற் செய்வீரேல்
ஆணி கலங்காதவ் வாயிரத் தாண்டே.

விளக்கம் :

குரு கற்பித்த வழியில் தவறில்லாமல் சூரியக் கலையில் வலது பக்க மூக்கு வழியாக இயங்கும் மூச்சுக்காற்றை இடது பக்கம் இயங்கச் செய்தும் சந்திரக் கலையில் இடது பக்க மூக்கு வழியாக இயங்கும் மூச்சுக்காற்றை வலது பக்கம் இயங்கச் செய்து வந்தால் ஆயிரம் ஆண்டுகள் சென்றாலும் உடல் தளர்ச்சி அடையாமல் இருக்கும்.

பாடல் #867

பாடல் #867: மூன்றாம் தந்திரம் – 21. சந்திர யோகம் (சந்திரனை உடலில் விளங்கச் செய்யும் யோகம்)

பாலிக்கும் நெஞ்சம் பறையோசை ஒன்பதில்
ஆலிக்கும் அங்கே அமரர் பராபரன்
மேலைக்கு முன்னே விளக்கொளி யாய்நிற்குங்
காலைக்குச் சங்கொளி கதிரவன் தானே.

விளக்கம்:

சந்திர யோகம் செய்யும் யோகியர்கள் தமது குண்டலினி சக்தியை ஆறு ஆதார சக்கரங்கள் ஏழாவது சகஸ்ரதளம் எட்டாவது துவாதசாந்த வெளியைத் தாண்டிய ஒன்பதாவதான பரவெளியில் வீற்றிருக்கும் இறை சக்தியோடு கலக்கும்போது அந்த இறை சக்தியைத் தமக்குள் தேவ நாதமாக கேட்டு உணர்ந்து அந்த இறை சக்தியிலேயே மனதை ஒருமுகப்படுத்தி தியானத்தைத் தொடர்ந்தால் விரைவில் பரவெளியையும் தாண்டிய அண்டசராசரங்களில் இருந்து கொண்டு அனைத்து உலகங்களுக்கும் தினமும் காலையில் தோன்றி ஒளியைக் கொடுக்கின்ற மாபெரும் சூரியனைப் போன்ற இறைவனின் பேரொளி உருவத்தை தூய்மையான சங்கைப் போன்ற வெண்மை நிற ஜோதியாகத் தமக்குள் தரிசனம் செய்வார்கள்.

பாடல் #868

பாடல் #868: மூன்றாம் தந்திரம் – 21. சந்திர யோகம் (சந்திரனை உடலில் விளங்கச் செய்யும் யோகம்)

கதிரவன் சந்திரன் காலம் அளக்கும்
பொதிரவ னுள்ளே பொழிமழை நிற்கும்
அதிரவ னண்டப் புறஞ்சென் றடர்ப்ப
எதிரவ னீசன் இடமது தானே.

விளக்கம்:

சூரிய கலை சந்திர கலை ஆகிய இரண்டு நாடிகளும் உயிர்களின் உடலுக்கான காலத்தை அளக்கும் கருவிகளாகும். சூரிய கலை சந்திர கலை இரண்டும் தனித் தனியாக இருக்கும் வரை உயிர்கள் காலத்துக்கு கட்டுப் பட்டவையாகும். சந்திர யோகத்தால் இரு நாடிகளையும் மாற்றி சுழுமுனை வழியே மேலே கொண்டு செல்கிற யோகியின் உடலில் சூரிய கலையும் சந்திர கலையும் சகஸ்ரதளத்தில் ஒன்று சேரும் போது அங்கே அமுதம் விளையும். அங்கிருந்து தலைக்கு மேல் உள்ள துவாதசாந்த வெளியில் இறை சக்தியை ஒலியாக கேட்டு அதையும் தாண்டிய பரவெளியில் இறை சக்தியை ஒளியாக தரிசித்து அதையும் தாண்டிய அண்ட வெளியே சிவனது இருப்பிடம் என்பதை உணரலாம்.

பாடல் #869

பாடல் #869: மூன்றாம் தந்திரம் – 21. சந்திர யோகம் (சந்திரனை உடலில் விளங்கச் செய்யும் யோகம்)

உந்திக் கமலத் துதித்தெழுஞ் சோதியை
அந்திக்கு மந்திர மாரும் அறிகிலார்
அந்திக்கு மந்திர மாரும் அறிந்தபின்
தந்தைக்கு முன்பாக மகன்பிறந் தானே.

விளக்கம்:

மூலாதாரத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் குண்டலினியை எழுப்பி ஜோதியாக மணிப்பூரக சக்கரத்தில் செயல்பட வைத்து ஒவ்வொரு சக்கரங்களாக மேலே எழுப்பிச் சென்று சகஸ்ரதளத்தில் சேர்க்கும் சந்திரயோகப் பயிற்சிக்கு உறுதுணையாக இருக்கும் பிரணவ மந்திரத்தை யாரும் அறிந்திருக்கவில்லை. அந்த மந்திரத்தை குருவின் மூலம் அறிந்து உணர்ந்த யோகியர்கள் அனைத்துலகிற்கும் தந்தையான இறைவனுக்கு முன்பு மகனாக இருக்கும் தங்களின் ஆத்ம ஜோதியை தரிசிப்பார்கள்.

பாடல் #870

பாடல் #870: மூன்றாம் தந்திரம் – 21. சந்திர யோகம் (சந்திரனை உடலில் விளங்கச் செய்யும் யோகம்)

ஊதியம் ஏதும் அறியார் உரைப்பினும்
ஓதியும் ஏதும் அறியாத ஊமர்கள்
ஆதியும் அந்தமும் அந்திக்க வல்லிரேல்
வேதியன் அங்கே வெளிப்படுவன் தானே.

விளக்கம்:

நூல்களைக் கற்றாலும் அவற்றின் பயனை சிறிதும் உணராத அறிவிலிகள் நூல்களின் பயனை மற்றவர்கள் கூறினாலும் உணரமாட்டார்கள். குண்டலி சத்தியை அது தோன்றுகின்ற மணிபூரகத்தில் உணர்தலோடு மட்டுமில்லாது அதன் முடிவாகிய சந்திர மண்டலத்தில் சேர்த்தால் அங்கு சிவன் வெளிபடுவான்.