பாடல் #163

பாடல் #163: முதல் தந்திரம் – 2. யாக்கை நிலையாமை

முட்டை பிறந்தது முந்நூறு நாளினில்
இட்டது தானிலை ஏதேனும் ஏழைகாள்
பட்டது பார்மணம் பன்னிரண் டாண்டினில்
கெட்டது எழுபதிற் கேடறி யீரே.

விளக்கம்:

கரு முட்டையில் (சுரோணிதம்) சுக்கிலம் சேர்ந்ததால் முன்னூறு நாட்களில் (10 மாதம்) பிறந்தது மனித உடல். பிறந்த உயிர் தாமாகவே இறைவனை அறியும் அறிவை கொண்டு வரவில்லை பிறந்ததில் இருந்து இறைவனை அடையும் அறிவுச் செல்வம் இல்லாத அந்த குழந்தை 12 ஆண்டுகளில் உலக வாசனையுடன் வளர்ந்து சிறிது சிறிதாக உலகப் பற்றுக்களின் மேல் ஆசை கொண்டு அப்பற்றுகளுடன் வாழும் அந்த உயிர் எழுபது வயதில் இறைவனை அடையும் வழிகள் தெரியாமல் மனம் தெளிவை அடையாமலேயே உடல் கெட்டு அழிந்து விடுவதை யாரும் அறிந்து கொள்ளவில்லை.

பாடல் #164

பாடல் #164: முதல் தந்திரம் – 2. யாக்கை நிலையாமை

இடிஞ்சில் இருக்க விளக்கெரி கொண்டான்
முடிஞ்ச தறியார் முழங்குவர் மூடர்
விடிஞ்சிரு ளாவ தறியா உலகம்
படிஞ்சு கிடந்து பதைக்கின்ற வாறே.

விளக்கம்:

விளக்கு (மனித உடல்) இருக்கும் போதே அதிலிருக்கும் ஒளியை (உயிர்) எடுத்துக் கொண்டான் (எமன்) என்று கதறுபவர்கள் எண்ணெய் (கர்ம வினைகள்) தீர்ந்துவிட்டதால்தான் ஜோதியும் (உயிர்) நின்றுவிட்டது என்பதை அறியாத மூடர்கள். தினமும் விடியும் காலைப் பொழுது (பிறப்பு) பிறகு இரவு வர மறைந்து இருளாகும் (இறப்பு) என்பதை உணராத இந்த உலகத்தவர்கள் இறந்தவனுக்காக துக்கத்தில் புலம்புகின்றனர். பிறப்பு உண்டெனில் இறப்பும் உண்டு என்பதை அறியாமல் உலகப் பற்றுக்களில் ஆசை வைத்து நிலையற்ற உடம்பை நிலையென்று எண்ணி வருந்துகின்றனரே.

பாடல் #165

பாடல் #165: முதல் தந்திரம் – 2. யாக்கை நிலையாமை

மடல்விரிக் கொன்றையன் மாயன் படைத்த
உடலும் உயிரும் உருவந் தொழாமல்
இடர்படந் தேழா நரகிற் கிடப்பர்
குடர்பட வெந்தமர் கூப்பிடு மாறே.

விளக்கம்:

மடல் விரித்த அழகிய கொன்றை மலரை மார்பில் அணிந்த மாயவனால் (இறைவன்) மாயையில் படைக்கப்பட்ட இந்த மனித உடலும் அதிலிருக்கும் உயிரும் அந்த இறைவனின் திரு உருவத்தைத் வழிபடாமல் ஆசைகளின் வழியே வாழ்ந்து துன்பப்பட்டு இறந்தவர்களின் நெருக்கமானவர்கள் (மனைவி மக்கள் மற்றும் உறவினர்) அடிவயிற்றிலிருந்து உரக்கக் கூப்பிட்டு அழுது புலம்பிக்கொண்டிருக்க நரகிலேயே கொடியதான ஏழாவது நரகத்தில் கிடந்து அல்லல் படுவார்கள்.

கருத்து: அழியக்கூடிய இந்த உடலின் மேல் ஆசை வைத்து உலகில் ஆசையினால் பல தீய காரியங்களைச் செய்துகொண்டு தம்மைப் படைத்தவனும் என்றும் அழியாதவனும் ஆகிய இறைவனைப் போற்றி வணங்காதவர்கள் இறந்தபின் அவர்களின் உறவினர்கள் கதறி அழுது கூப்பிட்டாலும் திரும்பி வரமுடியாமல் ஏழாவது நரகத்தில் கிடந்து துன்பப்படுவார்கள்.

பாடல் #166

பாடல் #166: முதல் தந்திரம் – 2. யாக்கை நிலையாமை

குடையும் குதிரையும் கொற்றவா ளும்கொண்
டிடையுமக் காலம் இருந்து நடுவே
புடையு மனிதனார் போகும்அப் போதே
அடையும் இடம்வலம் ஆருயி ராமே.

விளக்கம்:

அரசாட்சியும் வலிமையான குதிரை படையும் உறுதியான வாளும் செங்கோலும் தரித்துக் கொண்டு வாழ வேண்டிய காலம் வரை அரசனாக வாழும் மனிதர்களும் அவர்களின் நடுவே நான்கு பக்கமும் மனிதர்களோடு புடைசூழ சென்று கொண்டிருக்கும் போதே அவர்களது உயிரானது இடகலை பிங்கலை நாசிகளின் வழியே பிரிந்து அடையவேண்டிய இடத்துக்குச் சென்று அடைந்துவிடும்.

உட்கருத்து: மக்கள் படைசூழ வலம் வரும் பாராளும் அரசன் ஆனாலும் உயிர் பிரிந்து போவதை யாராலும் தடுக்க இயலாது.

பாடல் #167

பாடல் #167: முதல் தந்திரம் – 2. யாக்கை நிலையாமை

காக்கை கவரிலென் கண்டார் பழிக்கிலென்
பாற்றுளிப் பெய்யிலென் பல்லோர் பழிச்சிலென்
தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தீட்டும்
கூத்தன் புறப்பட்டுப் போனஇக் கூட்டையே.

விளக்கம்:

உடலாகிய இந்தத் தோல் பையினுள் (தோலால் சூழ்ந்த உடல்) உயிராக இருந்து வினைகளைச் (செயல்களை) செய்து அதன் மூலம் தன்னுடைய கர்ம பலன்கள் கழிந்த பின் உடல் இயங்க காரணமான இறைவன் (உயிர்) உடலில் இருந்து பிரிந்த பிறகு வெறும் எலும்பும் தோலுமாகிய இந்த மனித உடலை, காக்கை வந்து கொத்தித் திருடிச் சென்றால் என்ன? கண்டவர்கள் பிணம் என்று பழித்தால் என்ன? உடலை சுட்டு எரித்தபின் எலும்பின் மேல் பால் ஊற்றி காரியம் செய்தால் என்ன? பலவகைப் பட்டவர்களும் வந்து உயிர் இருக்கும் போது செய்த காரியங்களைப் பற்றி பழி சொன்னால் என்ன? பலரும் புகழ்ந்து பேசினால் என்ன? அதனால் இந்த உயிருக்கோ அல்லது வெறுமெனக் கிடக்கும் உடலுக்கோ ஒரு பயனும் இல்லை.

கருத்து: வாழும்போது இந்த உடலின் மூலம் இறைவனை அடையும் வழிகளைப் பற்றி எண்ணாமல் இறந்தபிறகு அந்த வெறும் உடலை என்ன செய்தாலும் அதனால் ஒரு பயனும் இல்லை.