பாடல் #557

பாடல் #557: மூன்றாம் தந்திரம் – 3. நியமம் (நன்மைகளைப் பெறுதல்)

தவஞ்செபஞ் சந்தோடம் ஆத்திகந் தானஞ்
சிவன்றன் விரதமே சித்தாந்தக் கேள்வி
மகஞ்சிவ பூசையொண் மதிசொல்லீ ரைந்து
நிவம்பல செய்யின் நியமத்த னாமே.

விளக்கம்:

  1. தவம் செய்தல், 2. ஜெபித்தல், 3. பேரின்பம் அடைதல், 4. தெய்வ நம்பிக்கையோடிருத்தல், 5. தானம் செய்தல், 6. சிவ விரதம் கடைபிடித்தல், 7. ஞானத்தைப் பற்றிய உண்மையைக் கேட்டறிதல், 8. யாகம் செய்தல், 9. சிவ பூஜை செய்தல், 10. எண்ணத்தையும் இறைவனையும் இரண்டறக் கலத்தல் ஆகிய பத்தையும் உணர்ந்து பிறருக்குக் அறியக் கூறவும் செய்பவனே நியமத்தின் வழி நடப்பவனாவான்.

பாடல் #553

பாடல் #553: மூன்றாம் தந்திரம் – 2. இயமம் (தீயவற்றிலிருந்து விலகி இருப்பது)

எழுந்துநீர் பெய்யினும் எட்டுத் திசையுஞ்
செழுந்த ணியமங்கள் செய்மினென் றண்ணல்
கொழுந்தண் பவளக் குளிர்சடை யோடே
அழுந்திய நால்வர்க் கருள்புரிந் தானே.

விளக்கம்:

பவளம் போல் ஜொலிக்கும் குளிர்ந்த சடையுடைய இறைவனை முழுமையாக உணர்ந்த சனகர், சதானந்தர், சனாநந்தர் மற்றும் சனத்குமாரர் ஆகிய நால்வர்களுக்கும் எட்டுத்திசையிலும் சூழ்ந்து மூழ்கும் அளவிற்கு பெருமழை பெய்தாலும் செழுமையான குளிர்ந்த இயமங்களை (பாடல் #552 இல் இயமத்தின் விளக்கம் காண்க) தவறாமல் செய்யுங்கள் என்று இறைவன் கூறினார்.

பாடல் #554

பாடல் #554: மூன்றாம் தந்திரம் – 2. இயமம் (தீயவற்றிலிருந்து விலகி இருப்பது)

கொல்லான் பொய்கூறான் களவிலான் எண்குணன்
நல்லான் அடக்க முடையான் நடுச்செய்ய
வல்லான் பகுந்துண்பான் மாசிலான் கட்காமம்
இல்லா னியமத் திடைநின் றானே.

விளக்கம்:

எவருக்கும் மனதளவிலும் தீங்கு நினைக்காதவன், பொய் கூறாதவன், களவு (திருடு) செய்யாதவன், எட்டு குணங்களை கொண்டவன் (1. அன்பு, 2. அமைதி, 3. பொறாமையின்மை, 4. சுத்தமாக இருத்தல், 5. மனதினால் சிரமப்படாமல் எதையும் சுலபமாக எடுத்துக் கொள்ளுதல், 6. ஆனந்தத்தைக் கொடுப்பது, 7. தர்ம சிந்தனை, 8. ஆசையின்மை), நன்மை மட்டுமே நினைப்பவன், பணிவுடையவன், நீதி தவறாமல் இருக்கக் கூடியவன், பகிர்ந்து கொடுத்து உண்பவன், குற்றம் இல்லாதவன், கள், காமம் இல்லாத தன்மையுடையவன், ஆகிய இவர்கள் இயம ஒழுக்கத்தின்படி இருப்பவர்கள் ஆவார்கள்.

பாடல் #549

பாடல் #549: மூன்றாம் தந்திரம் – 1. அட்டாங்க யோகம் (இயமம், நியமம், ஆதனம், பிரணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி ஆகிய எட்டு பகுதிகள் சேர்ந்தது அட்டாங்க யோகம் ஆகும்)

உரைத்தன வற்கரி ஒன்று மூடிய
நிரைத்த இராசி நிரைமுறை எண்ணிப்
பிரைச்சதம் எட்டையும் பேசியே நந்தி
நிரைத்த இயமம் நியமஞ்செய் தானே.

விளக்கம்:

குருநாதராகிய சிவபெருமான் அட்டங்க யோகத்தை அருளத் திருவுள்ளங் கொண்டு தீமையைப் போக்குவதற்கும் (இயமம்) நன்மையைப் பெறுவதற்கும் (நியமம்) வழிவகை செய்தருளி பிராணாயாமம் மூலம் மூச்சுக் காற்றை இழுக்கவும் அடக்கி வைக்கவும் விடவும் வேண்டிய அளவு பன்னிரண்டங்குலம் முதலான பலவகைகளை முறைப்படுத்தி அவற்றை எட்டு அங்கங்களைக் கொண்ட யோகங்களாக அமைத்து அருளினான்.

பாடல் #550

பாடல் #550: மூன்றாம் தந்திரம் – 1. அட்டாங்க யோகம் (இயமம், நியமம், ஆதனம், பிரணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி ஆகிய எட்டு பகுதிகள் சேர்ந்தது அட்டாங்க யோகம் ஆகும்)

செய்த இயம நியமஞ் சமாதிசென்
றுய்யப் பராசத்தி உத்தர பூருவ
மெய்த கவச நியாசங்கள் முத்திரை
எய்தவே உரைசெய்வன் இந்நிலை தானே.

விளக்கம்:

உயிர்கள் தீயவற்றை போக்கி நன்மை தரக்கூடியவற்றே செய்து இறை நினைப்பில் தன்னையே மறந்து சமாதி நிலையை அடைந்து ஆதியிலிருந்தே பரம்பொருளாக இருக்கும் இறைவனை அடைவதற்கு துணையாக கவசம், நியாசம், முத்திரை ஆகிய மூன்று யோகங்கள் முன்னும் பின்னும் பாதுகாப்பாக உடன் வரும். இந்த உயர்ந்த நிலையை உயிர்கள் அடைய வேண்டும் என்பதற்காக இந்த யோக வழிகளைப் பற்றி யாம் கூறுவோம்.

கவசம் – சமாதி நிலையில் உயிர்களுக்குப் பாதுகாப்பாக உடலை மூடியிருக்கும் கோசங்களை மந்திர ஜபம் செய்து அடக்கியாள்வது.

நியாசம் – தமது உடல் உறுப்புகளையே இறைவனது உறுப்புகளாக பாவனை செய்வது.

முத்திரை – கை விரல்கள் மூலம் முத்திரைகளை (யோக நிலை எண்ணங்களை கை விரல்கள் மூலம் அபிநயம் செய்து காட்டுதல்) செய்யும் யோக நிலை.

பாடல் #551

பாடல் #551: மூன்றாம் தந்திரம் – 1. அட்டாங்க யோகம் (இயமம், நியமம், ஆதனம், பிரணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி ஆகிய எட்டு பகுதிகள் சேர்ந்தது அட்டாங்க யோகம் ஆகும்)

அந்நெறி இந்நெறி என்னாதட் டாங்கந்
தன்நெறி சென்று சமாதியி லேநின்மின்
நன்னெறி செல்வார்க்கு ஞானத்தி லேகலாம்
புன்னெறி யாகத்திற் போக்கில்லை யாகுமே.

விளக்கம்:

இறைவனை அடைய நாம் செல்லும் வழி நன்றானதா இல்லை வேறு வழி நன்றானதா என்று சந்தேகப் படாமல் எந்த வழிக்கும் தேவைப்படுகின்ற அட்டாங்க யோகங்களின் வழியிலே சென்று சமாதி நிலையில் (இறைவனை நினைத்து தன்னை மறந்திருக்கும் நிலை) இருங்கள். இத்தகைய நல்ல வழியில் செல்பவர்களுக்கு ஞான யோகம் கைகூடிச் சிவப்பேறு அடைவது மட்டுமில்லாமல் அந்த ஞானத்தின் பயனாக இனிப் பிறவி என்பது இல்லை.

பாடல் #552

பாடல் #552: மூன்றாம் தந்திரம் – 1. அட்டாங்க யோகம் (இயமம், நியமம், ஆதனம், பிரணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி ஆகிய எட்டு பகுதிகள் சேர்ந்தது அட்டாங்க யோகம் ஆகும்)

இயம நியமமே எண்ணிலா ஆதனம்
நயமுறு பிராணாயா மம்பிரத்தி யாகாரஞ்
சயமிகு தாரணை தியானஞ் சமாதி
அயமுறும் அட்டாங்க மாவது மாமே.

விளக்கம்:

இமயம், நியமம், மற்றும் பலவகையான ஆசனங்களும், நன்மையைத் தரும் பிராணாயாமமும், பிரத்தியாகாரம், வெற்றி மிக்க தாரணையும், தியானமும், சமாதியும், ஆகிய எட்டுவகைப் பகுதிகளைக் கொண்ட அட்டாங்க யோக வழி முறைகள் நல்வினை உள்ளவர்களுக்குக் கிடைக்கும் நல்வழியாகும்.

எட்டுப் பகுதிகளைக் கொண்ட அட்டாங்க யோகத்தின் விளக்கம்:

முதலாவது இயமம்: தீமைகளைப் போக்குவது. இதில் ஐந்து பிரிவுகள் உள்ளன:

  1. மனதாலும், பேச்சாலும், செயலினாலும் எந்த உயிரையும் துன்புறுத்தாமை.
  2. மனதாலும், பேச்சாலும், செயலினாலும் பிறர் பொருளைக் களவாடாமை.
  3. மனதாலும், பேச்சாலும், செயலினாலும் முழு பிரம்மச்சரியம் கடைப்பிடித்தல்.
  4. மனதாலும், பேச்சாலும், செயலினாலும் உண்மையைப் பின்பற்றுதல்.
  5. பிறர் கொடுக்கும் பரிசுகளைப் பெற்றுக் கொள்ளாமை. (ஆசைப் படாமலிருத்தல்)
    இதனைக் கடைபிடித்தால் நம்மிடமுள்ள அனைத்து தீமைகளும் விலகும்.

இரண்டாவது நியமம்: நன்மைகளைப் பெறுவது. தவம், ஜபம், சந்தோஷம், தெய்வ நம்பிக்கை, தானம், சிவ விரதம், சித்தாந்தக் கேள்வி, சிவ பூசை, ஞான அறிவு, நாணம், ஆகிய பத்துக் காரியங்களையும் தவறாது மேற்கொள்ளுதல் நியமம் ஆகும். இவற்றை மேற்கொள்ளும்போது ஒளியாகிய சிவத்தையும் அந்த ஒளியின் ஆற்றலாகிய சத்தியை தியானித்தலும் நியமம் ஆகும்.

மூன்றாவது ஆசனம்: உடலை அமர்த்தும் நிலை. இடுப்பு, தோள்கள், தலை இவற்றை நேராக வைத்து, முதுகுத் தண்டுக்குத் தொந்தரவு கொடுக்காமல் அதற்கு விடுதலை அளித்தல்.

நான்காவது பிராணாயாமம்: மூச்சைச் சரிவர அடக்கியாளுதல் (பிராணன் என்னும் உயிர்ச் சக்தியை அடக்கியாள்வது)

ஐந்தாவது பிரத்தியாகாரம்: மனதை வெளியே புலன்கள் வழி செல்லாது தடுத்து (கண்கள் வழியே தவறானவற்றைப் பார்க்காமலும், காது வழியே தவறானவற்றைக் கேட்காமலும், வாய் வழியாகத் தவறான வார்த்தைகளைப் பேசாமலும், நாக்கின் மூலம் பாதகமான உணவுகளை ருசிக்காமலும், உடல் வழியே தவறானவற்றைச் செய்யாமலும்), மனதை உள்முகமாகத் திருப்பி மனதில் உள்ள அரும்பொருளை அறியச் சிந்தித்தல்.

ஆறாவது தாரணை: ஒரு பொருளின் மீது மனத்தைக் குவித்தல். தன்னைத்தானே உணர்வது.

ஏழாவது தியானம்: மனதை ஒருமுகப்படுத்தி இடைவிடாது சிந்தித்தல்.

எட்டாவது சமாதி: நமது முயற்சிகள் அனைத்திற்கும் குறிக்கோளான ஞான ஒளியைப் பெறுதல். கடவுளை அடைய விரும்புகின்றவன் உடலாலும், மனத்தாலும், அறத்தாலும் (நற்குணங்களாலும்), ஞானத்தாலும் வலிமை பெற்று இருக்க வேண்டுவது.