பாடல் #224

பாடல் #224: முதல் தந்திரம் – 12. அந்தணர் ஒழுக்கம் (அந்தணர் என்பது யார், அவர் எப்படி இருக்க வேண்டும்)

அந்தண ராவோர் அறுதொழில் பூண்டுளோர்
செந்தழல் ஓம்பிமுப் போதும் நியமஞ்செய்
தம்தவ நற்கரு மத்துநின் றாங்கிட்டுச்
சந்தியும் ஓதிச் சடங்கறுப் போர்களே.

விளக்கம் :

அந்தணர் என்பவர் வேதங்களை ஓதுதல். கற்ற வேதங்களை பிறருக்கு கற்றுக்கொடுத்தல். வேத முறைப்படி யாகம் வளர்த்தல். பிறருக்கு யாகம் செய்யும் முறையை கற்றுக்கொடுத்தல். தானம் கேட்டு வந்தவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் தானம் தருதல். பிறரிடமிருந்து தானம் பெறுதல் ஆகியவற்றை செய்பவர்களே அந்தணர்கள் ஆவார்கள். அதுமட்டுமின்றி 1.தூய்மையாக இருத்தல் 2. இறையருளோடு இருத்தல் 3. அளவான உணவு 4. பொறுமையோடு இருத்தல் 5. நேர்மையுடன் இருத்தல் 6. பொய் பேசாது சத்தியத்தைக் கடைபிடித்தல் 7. சத்தியத்திற்காக வைராக்கியத்தை வளர்த்தல் 8. காமத்தை எண்ணாதிருத்தல் 9. களவு (திருடு) எண்ணாமலிருத்தல் 10. கொலை எண்ணாமலிருத்தல் ஆகிய பத்து குணங்களையும் தானும் அறிந்து பிறர் அறித்துகொள்ளச் செய்து நியமத்தின் வழி நடக்க வேண்டும். தாம் கடைபிடிக்கும் தவத்திலும் நல்ல காரியங்களைச் செய்யும் கருமங்களிலிருந்தும் எப்போதும் தவறாமல் நின்று நல்லது தீயது ஆகிய அனைத்து சடங்குகளையும் பிறருக்காக செய்து கொடுப்பவர்களே அந்தணர்கள் அவர்கள்.

பாடல் #225

பாடல் #225: முதல் தந்திரம் – 12. அந்தணர் ஒழுக்கம் (அந்தணர் என்பது யார், அவர் எப்படி இருக்க வேண்டும்)

வேதாந்தங் கேட்க விருப்பொடு முப்பதப்
போதாந்த மான பிரணவத் துள்புக்கு
நாதாந்த வேதாந்த போதாந்த நாதனை
ஈதாம் எனாதுகண் டின்புறு வோர்களே.

விளக்கம்:

அந்தணர்கள் எப்போதும் வேதங்களின் முடிவாக இருக்கின்ற வேதாந்தங்களைக் கேட்பதில் விருப்பத்தோடு இருக்க வேண்டும். மூன்று பதங்களைக் கொண்ட படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்றின் முடிவாய் இருக்கின்ற ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் உட்பொருளாகிய தத்துவமஸி (பரம்பொருள் நீயாக இருக்கிறாய்) என்பதை உணர்ந்து ஒலி மற்றும் வேதத்தின் முடிவாகிய இறைவனை இவன் தான் என்று தனக்குள் உணர்ந்து பேரின்பத்திலேயே திளைத்து இருப்பவர்களே அந்தணர்கள் ஆவார்கள்.

பாடல் #226

பாடல் #226: முதல் தந்திரம் – 12. அந்தணர் ஒழுக்கம் (அந்தணர் என்பது யார், அவர் எப்படி இருக்க வேண்டும்)

காயத் திரியே கருதுசா வித்திரி
ஆய்தற் குவப்பர் மந்திரமாங்கு உன்னி
நேயுத் தேரேறி நினைவுற்று நேயத்தாய்
மாயத்துள் தோயாத மறையோர்கள் தாமே.

விளக்கம்:

காயத்ரி மந்திரத்தையும் சாவித்ரி மந்திரத்தையும் தமது கருத்தில் வைத்து விருப்பப்பட்டு ஆராய்ந்து அதன் பொருளை உணர்ந்து நாள் தோறும் அந்த மந்திரங்களையே மனதில் வைத்து தியானித்து இறையருளால் உணர்ந்த அன்பு எனும் தேரில் ஏறி அன்பையே தமது எண்ணத்தில் எப்போதும் வைத்து மாயையாகிய உலகப் பற்றுக்களின் மேல் ஆசை கொள்ளாமல் வேதங்களின் முறைப்படியே வாழ்ந்து வருபவர்களே அந்தணர்கள் ஆவார்கள்.

குறிப்பு: காயத்ரி மந்திரத்தின் ஒரு எழுத்து இல்லாத மந்திரமே சாவித்திரி மந்திரமாகும். ஞானிகள், முனிவர்கள், யோகிகளால் மட்டுமே காயத்ரி மந்திரத்தை சொல்ல முடியும். ஏனெனில் இந்த மந்திரத்தை உச்சரிக்கும் போது உருவாகும் சக்திகளை சாதாரண மனிதர்களால் தாங்க முடியாது. உடல் நிலை மனநிலை பாதிக்கும். தற்போது மனிதர்கள் சொல்லிக்கொண்டிருக்கும் காயத்ரி மந்திரமே சாவித்திரி மந்திரமாகும். தற்போது இருக்கும் கலியுகத்தில் மனிதர்களின் உடல்நிலை மனநிலை எந்த விதத்திலும் பாதிப்படையாமல் இறைவனை அடைய இறையருளால் ஓர் எழுத்து நீக்கப்பட்ட மந்திரமே சாவித்திரி மந்திரமாகும்.

பாடல் #227

பாடல் #227: முதல் தந்திரம் – 12. அந்தணர் ஒழுக்கம் (அந்தணர் என்பது யார், அவர் எப்படி இருக்க வேண்டும்)

பெருநெறி யான பிரணவம் ஓர்ந்து
குருநெறி யாலுரை கூடிநால் வேதத்
திருநெறி யான திருகை இருத்திச்
சொரூபம தானோர் துகளில்பார்ப் பாரே.

விளக்கம்:

முக்திக்கு வழிகாட்டும் பெரிய நெறியாகிய ஓம் என்னும் பிரணவ மந்திரத்தை பொருளுணர்ந்து ஜெபித்து குருவானவர் வழிகாட்டிய நெறிகளையே பின்பற்றி குருவானவர் கூறிய மந்திர உரைகளையே எப்போதும் ஜெபித்து இறைவனை அடைய நான்கு வேதங்களிலும் (1. ரிக் வேதம், 2. யஜுர் வேதம், 3. சாம வேதம், 4. அதர்வண வேதம்) சொல்லப்பட்டிருக்கும் நெறிகளின்படி வாழ்ந்து அந்த நான்கு வேதங்களின் உட்பொருளாக இருக்கும் இறைவனை தமக்குள் வைத்து தியானித்து தமது உருவத்தையே இறைவனது உருவமாக பாவித்து தமது உடலில் உள்ள ஒவ்வொரு துகளிலும் இறைவனை பார்ப்பவர்கள் அந்தணர்கள்.

பாடல் #228

பாடல் #228: முதல் தந்திரம் – 12. அந்தணர் ஒழுக்கம் (அந்தணர் என்பது யார், அவர் எப்படி இருக்க வேண்டும்)

சத்திய முந்தவம் தான்அவன் ஆதலும்
எய்த்தகும் இந்திய மீட்டியே வாட்டலும்
ஒத்த உயிருடல் உண்டாய் உணர்வுற்றுப்
பெத்தம் அறுத்தலும் ஆகும் பிரமமே.

விளக்கம்:

சத்தியத்தையும் தவத்தையும் இடைவிடாமல் காத்து பின்பற்றுவதும் தாமே இறைவன் என்று உணர்வதும், ஆசை வழியே செல்லும் ஐந்து விதமான இந்திரியங்களையும் (கண் – பார்த்தல், காது – கேட்டல், மூக்கு – நுகர்தல், வாய் – பேசுதல், உடல் – உணர்தல்) ஆசை வழியில் போகாமல் தடுத்து அவற்றை அடக்கித் தாம் நினைத்தபடி அவற்றை வேலை செய்ய வைப்பதும் உயிரும் உடலும் ஒன்றாக இருந்து உள்ளிருப்பவன் இறைவனே என்பதை உணர்ந்து உலகப் பற்றுக்களையெல்லாம் அறுத்துவிடுவதும் ஒருவரை பிரம்மம் ஆக்கிவிடும்.

பாடல் #229

பாடல் #229: முதல் தந்திரம் – 12. அந்தணர் ஒழுக்கம் (அந்தணர் என்பது யார், அவர் எப்படி இருக்க வேண்டும்)

வேதாந்தங் கேட்க விரும்பிய வேதியர்
வேதாந்தங் கேட்டும்தம் வேட்கை ஒழிந்திலர்
வேதாந்த மாவது வேட்கை ஒழிந்திடம்
வேதாந்தங் கேட்டுஅவர் வேட்கைவிட் டாரே.

விளக்கம்:

இறைவன் அருளிய வேதாந்தங்களைக் கேட்க விரும்பிய அந்தணர்கள் வேதாந்தங்களைக் கேட்ட பின்பும் தமக்கென்று இருக்கும் ஆசாபாசங்களை விட்டுவிடாமல் இருக்கின்றனர். உலக ஆசைகளையும் பாசங்களையும் விட்டு இறைவனை அடைவதுதான் வேதாந்தத்தின் முடிவாகும். ஆசையை விட்ட இடமே வேதாந்தத்தின் முடிவாகும். வேதாந்தத்தின் பொருளை உணர்ந்து கேட்டவர் ஆசையை விட்டவராவார்.

கருத்து : வேதத்தை படித்து உணர்ந்து ஆசையை விட்டவரே அந்தணர் ஆவார்.

பாடல் #230

பாடல் #230: முதல் தந்திரம் – 12. அந்தணர் ஒழுக்கம் (அந்தணர் என்பது யார், அவர் எப்படி இருக்க வேண்டும்)

நூலும் சிகையும் நுவலின் பிரமமோ
நூலது கார்ப்பாசம் நுண்சிகை கேசமாம்
நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்
நூலுடை அந்தணர் காண நுவலிலே.

விளக்கம்:

பூணூலும் குடுமியும் அணிந்து கொண்டுவிட்டால் இறைவனை உணர்ந்த அந்தணர் என்று கூறிவிடமுடியாது. பூணூல் பருத்தியால் செய்யப்பட்டது. குடுமி தலையிலிருக்கும் மயிரை சிரைத்துச் செய்யப்பட்டது. பூணூலுக்கும் குடுமிக்கும் ஒருவரை இறைவனை உணர்ந்த அந்தணராக மாற்றும் சக்தி இல்லை. பூணூல் என்பது வேதாந்தத்தைக் கற்றவரின் குறியீடு. குடுமி என்பது இறை ஞானத்தைப் பெற்றவரின் குறியீடு. இறைவன் அருளிய வேதாந்தங்களை முறைப்படி தமது குருவின் மூலம் கற்று அவற்றின் பொருளை உணர்ந்து இறைவனை உணர்ந்து பூணூலும் குடுமியும் அணிந்துகொண்டவர்களே அந்தணர் என்னும் சொல்லுக்கு தகுதியானவர்கள் ஆவார்கள்.

பாடல் #231

பாடல் #231: முதல் தந்திரம் – 12. அந்தணர் ஒழுக்கம் (அந்தணர் என்பது யார், அவர் எப்படி இருக்க வேண்டும்)

சத்தியம் இன்றித் தனிஞானந் தானின்றி
ஒத்த விடையம்விட் டோரும் உணர்வின்றிப்
பத்தியும் இன்றிப் பரனுண்மை இன்றிஊன்
பித்தேறும் மூடர் பிராமணர் தாமன்றே.

விளக்கம்:

சத்தியத்தின் வழி நடக்காமலும் தன்னை உணரும் ஞானமும் இல்லாமலும் உடலோடு வந்த இந்திரியங்களின் வழி வரும் ஆசைகளை விட்டு விலகி நடக்காமலும் உண்மையான மெய்ஞான உணர்வில்லாமலும் இறைவனின் மேல் பக்தியில்லாமலும் உண்மைப் பொருள் இறைவன் ஒருவனே என்பதை உணராமலும் நிலையில்லாத உடலின் மேல் கொண்ட ஆசையினால் இந்திரியங்கள் வழியே வாழுகின்ற முட்டாள்கள் பிராமணர் என்று தன்னை கூறிக்கொள்ள தகுதியில்லாதவர்கள் ஆவார்கள்.

பாடல் #232

பாடல் #232: முதல் தந்திரம் – 12. அந்தணர் ஒழுக்கம் (அந்தணர் என்பது யார், அவர் எப்படி இருக்க வேண்டும்)

திருநெறி யாகிய சித்தசித் தின்றிக்
குருநெறி யாலே குருபதஞ் சேர்ந்து
கரும நியமாதி கைவிட்டுக் காணும்
துரிய சமாதியாம் தூய்மறை யோர்க்கே.

விளக்கம்:

சித்தாந்தம் (அறிந்த கருத்துக்கள்) அசித்தாந்தம் (அறியாத கருத்துக்கள்) ஆகிய இரண்டும் இல்லாத குருவானவர் காட்டிய வழியில் குருவின் பாதங்களைச் சரணடைந்து தினமும் செய்யும் கர்மங்களையும் நியமங்களையும் விட்டுவிட்டு வெளி உலகத்தை காணாமல் தமக்குள் தியானித்து சமாதி நிலைகளில் நான்காவதான துரிய சமாதி நிலையை (அனைத்தையும் இறைவனாகவே காணும் நிலை) அடைந்து இருப்பவர்களே தூய்மையான வேதங்களின் வழி வாழும் அந்தணர்கள் ஆவார்கள்.

பாடல் #233

பாடல் #233: முதல் தந்திரம் – 12. அந்தணர் ஒழுக்கம் (அந்தணர் என்பது யார், அவர் எப்படி இருக்க வேண்டும்)

மறையோது வாரே மறையவ ரானால்
மறையோர்தம் வேதாந்தம் வாய்மையில் தூய்மை
குறையோர்தல் மற்றுள்ள கோலா கலமென்
றறிவோர் மறைதெரிந் தந்தண ராமே.

விளக்கம்:

வேதத்தின் பொருளான வேதாந்தங்களை குருவின் மூலம் கற்று உணர்ந்து வேதங்களை ஓதுகின்றவர்களே அவற்றின் பொருளை உணர்ந்து தனக்குள் இருக்கும் இறைவனை உணர்ந்து இறைவனாக மாறிவிட்டால் (இறைவன் அருளிய வேதமும் இறைவனும் வேறில்லை இறைவனும் வேதமும் ஒன்று தான்) தமது வாய்ச்சொல்லில் சொல்லுவது அனைத்தும் நடக்கும். மற்ற உயிர்கள் மாயையால் இறைவனை அடைய தடையாய் இருக்கும் குறைபாடுகள் என்னவென்று தெரியும். பூணூல், குடுமி, உருத்திராட்ச மாலை, விபூதிப் பட்டை, அங்கவஸ்திரம், போன்றவை அந்தணர் போலக் காட்டிக்கொள்வது வெறும் கோலாகலமான ஆடம்பரமே என்பதை அறிந்தவர்கள் உண்மையான வேதங்களைக் கற்று உணர்ந்த அந்தணர்கள்.