பாடல் #1095

பாடல் #1095: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

பேசிய மந்திர மிகாரம் பிரித்துரை
கூச மிலாத சகாரத்தை முன்கொண்டு
வாசிப் பிராண னுபதேச மாகைக்குக்
கூசிய விந்து வுடன்கொண்டு கூவே.

விளக்கம்:

பாடல் #1092 இல் உள்ள சிதாகாய மந்திரத்தை எப்படி செபிப்பது என்பதை இந்தப் பாடலில் அறிந்து கொள்ளலாம். பாடல் #1094 இல் உள்ளபடி செபித்த சிதாகாய மந்திரத்தில் ‘இ’ என்ற எழுத்தை நீக்கிவிட்டு ‘ச’ எழுத்தை முன்னே வைத்து ‘சம்’ எனும் மந்திரத்தை இறைவனைத் தவிர வேறு எந்த எண்ணங்களும் இல்லாமல் உச்சரித்து மூச்சுக்காற்று உபதேசித்த (பாடல் #1092 இல் உள்ளபடி) வயிரவி மந்திரத்தை பிரகாசமான ஒளிக்கீற்றுக்களை உடைய குண்டலினி (பாடல் #860 இல் காண்க) அக்னியோடு சேர்த்து உரக்க (சத்தமாக) செபியுங்கள்.

பாடல் #1096

பாடல் #1096: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

கூவிய சீவன் பிராணன் முதலாகப்
பாவிய சவ்வுடன் பண்ணு மகாரத்தை
மேவிய மாயை விரிசங்கு முத்திரை
தேவி நடுவுள் திகழ்ந்துநின் றாளே.

விளக்கம்:

பாடல் #1095 இல் உள்ளபடி உரக்க (சத்தமாக) செபித்த சாதகர் தமது மூச்சுக்காற்றுடன் சேர்ந்து ‘சம்’ எனும் மந்திரத்தை உயிருடன் மாயை சேர்ந்து இருக்கும் பாவனையில் தாமாகவே விரிந்து அமைந்த சங்கு முத்திரையுடன் சமர்ப்பணம் செய்தால் வயிரவியானவள் பிரகாசமாக சாதகரின் உடலுக்குள் வந்து வீற்றிருப்பாள்.

குறிப்பு: மூச்சுக்காற்றுடன் ‘சம்’ மந்திரத்தை சத்தமாக சாதகர் செபிக்கும் போது அதன் உச்ச நிலையில் அவரது உடலோடு இருக்கும் மாயையால் தானாகவே அவரது விரல்கள் விரிந்த சங்கு முத்திரையை பிடிக்கும். இந்த மந்திரத்தை சங்கு முத்திரையுடன் இறைவிக்கு சமர்ப்பணம் செய்தால் இறைவியே சாதகருக்குள் வந்து வீற்றிருப்பாள்.

பாடல் #1097

பாடல் #1097: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

நின்ற வயிரவி நீலி நிசாசரி
ஒன்று மிரண்டு மொருங்கிய வுள்ளத்துச்
சென்றருள் நாயகி தேவர் பிரானுக்கே
நன்றருள் ஞாலத்து நாடிடுஞ் சாற்றியே.

விளக்கம்:

பாடல் #1096 இல் உள்ளபடி பிரகாசமாக சாதகரின் உடலுக்குள் வந்து வீற்றிருக்கும் வயிரவியானவள் நீல நிற திருமேனியுடன் அடியவர்களின் உள்ளத்தில் இருக்கும் இருளுக்குள் இருளாகவே வீற்றிருக்கின்றாள். எவரொருவரின் மனமும் வாக்கும் உடலும் ஒன்றாக இருக்கிறதோ அவரின் உள்ளத்திற்குள் இறைவனுடன் இறைவியும் சேர்ந்து புகுந்து அங்கேயே வீற்றிருந்து அருள் புரிகின்றாள். அவளுடைய நன்மை தரும் அருளை அடைய விரும்பும் உயர்ந்தோர் அவளை தேடி அடைந்து வயிரவியின் மந்திர செபத்தை சமர்ப்பணம் செய்வார்கள்.

கருத்து: மனம் வாக்கு உடல் ஒன்றாக இருப்பது என்பது மனதை ஒருநிலைப் படுத்தி சிதாகாய மந்திரத்தை செபித்து நேத்திர முத்திரையை செய்யும் போது பாடல் #1096 இல் உள்ளபடி தானாகவே விரிந்து அமைந்த சங்கு முத்திரையுடன் சமர்ப்பணம் செய்தால் இறைவனும் இறைவியும் அவர்களின் உள்ளத்திற்குள் ஒன்றாக வீற்றிருந்து மழை போல அருளை வழங்குவார்கள்.

குறிப்பு: நீல நிறத்தைக் கொண்ட திருமேனி என்பது மழை போல வரங்களை அள்ளித் தருகின்ற தன்மையைக் குறிக்கும். இருளுக்குள் இருளாகவே வீற்றிருக்கிறாள் என்பது அடியவர்களின் உள்ளத்தில் இருக்கும் இருளிலும் தன்னுடைய நீல நிறத் திருமேனியுடன் வீற்றிருந்து மழை போல அருளைத் தருகிறாள் என்பதைக் குறிக்கும். உயர்ந்தோர் என்பது இறையருளைப் பெற வேண்டும் என்று சாதகம் செய்து தம்மைப் பக்குவப் படுத்திக் கொண்டவர்கள் ஆகும்.

பாடல் #1098

பாடல் #1098: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

சாற்றிய வேதஞ் சராசர மைம்பூதம்
நாற்றிசை முக்கண்ணி நாடு மிருள்வெளி
தோற்று முயிர்ப்பன்மை சோதி பராபரை
ஆற்றலொ டாய்நிற்கு மாதி முதல்வியே.

விளக்கம்:

பாடல் #1097 இல் உள்ளபடி சாதகர்கள் சமர்ப்பணம் செய்த சிதாகாய மந்திரம் வேதமாகவும், அண்ட சராசரங்களாகவும், ஐந்து பூதங்களாகவும், நான்கு திசைகளிலும் தேடிப் பார்க்கும் மூன்று கண்களை உடைய இறைவியாகவும், இருண்ட அண்டமாகவும், ஒளி பொருந்திய பரவெளியாகவும், பலவிதமான உடல்களில் பிறவி எடுத்து வரும் உயிர்களாகவும், சோதி வடிவாகவும், அசையும் சக்தியான பராசக்தியாகவும், அனைத்தையும் உருவாக்குகின்ற ஆற்றலுடன் அனைத்துமாகவும் இருக்கின்ற ஆதி தலைவியாகவும் இருக்கின்றது.

கருத்து: சிதாகாய மந்திரத்தின் தன்மைகளை இந்தப் பாடலில் அறிந்து கொள்ளலாம்.

பாடல் #1099

பாடல் #1099: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

ஆதி வயிரவி கன்னித் துறைமன்னி
ஓதி யுணரி லுடலுயி ரீசனாம்
பேதை யுலகிற் பிறவிகள் நாசமாம்
ஓத வுலவாத கோலமொன் றாகுமே.

விளக்கம்:

பாடல் #1098 இல் உள்ளபடி ஆதி சக்தியான வயிரவியே எப்போதும் இளமையுடன் அண்ட சராசரங்களிலுள்ள அனைத்து இடத்திற்கும் அரசியாக வீற்றிருக்கின்றாள். அவளது மந்திரத்தை செபித்து தமக்குள் அவளை உணரும் சாதகர்களின் உடலும் உயிரும் இறைவனாகவே ஆகிவிடும். மாயையால் மயங்கி இருக்கும் இந்த உலகத்தில் மீண்டும் பிறவி எடுக்காமல் இருக்கும் படி எப்போதும் அழியாத உடலையும் அவர்கள் பெற்று விடுவார்கள்.

பாடல் #1100

பாடல் #1100: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

கோலக் குழலி குலாய புருவத்தள்
நீலக் குவளை மலர்கின்ற கண்ணினாள்
ஆலிக்கு மின்னமு தானந்த சுந்தரி
மேலைச் சிவத்தை வெளிப்படுத் தாளே.

விளக்கம்:

பாடல் #1099 இல் உள்ளபடி சாதகரின் உடலும் உயிரும் இறைவனாகவே ஆகிவிடுவதற்கு காரணமான மாபெரும் கருணையுடைய வயிரவியின் வடிவத்தை இப்பாடலில் அறிந்து கொள்ளலாம். அழகிய கூந்தலுடன் வளைந்த புருவங்களைக் கொண்டு நீல நிறத்தில் இருக்கும் குவளை மலர் மலர்ந்தது போன்ற கண்களோடு இனிமையான அமிழ்தத்தோடு சேர்ந்து பேரானந்தமாக இருக்கின்ற பேரழகு பொருந்திய வயிரவியே பாடல் #1099 இல் உள்ளபடி சாதகரின் உடலும் உயிரும் இறைவனாகவே ஆகிவிடுவதற்கு காரணமாக இருந்து அனைத்திற்கும் மேலான சதாசிவத்தை வெளிப்படுத்தி அருளுகின்றாள்.

பாடல் #1101

பாடல் #1101: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

வெளிப்படு வித்து விளைவறி வித்துத்
தெளிப்படு வித்தென சிந்தையி னுள்ளே
களிப்படு வித்துக் கதிர்ப்படு சோதி
ஒளிப்படு வித்தென்னை யுய்யக்கொண் டாளே.

விளக்கம்:

பாடல் #1100 இல் உள்ளபடி அனைத்திற்கும் மேலான சதாசிவத்தை வெளிப்படுத்தி அருளிய வயிரவி தேவி அதன் பயனாக பேரறிவு ஞானத்தைக் கொடுத்து அந்த ஞானத்தின் பயனாக தெளிவான சிந்தனையைக் கொடுத்து அதன் பயனாக பேரின்பத்தை அடைய வைத்து அதன் பயனாக பெருஞ்சோதி வடிவான இறைவனுடன் கதிர் வடிவான எம் ஆன்மாவை சேர வைத்து அதன் பயனாக எம்மையும் சோதி உருவம் பெற வைத்து எமது ஆன்மா முக்தியடையும்படி செய்து எம்மை முழுவதும் ஆட்கொண்டாள்.

பாடல் #1102

பாடல் #1102: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

கொண்டனள் கோலங் கோடியவ னேகங்கள்
கண்டன ளெண்ணென் கலையின் கணமாலை
விண்டனள் மேலை விரிகதிர் மூன்றையுந்
தண்டலை மேல்நின்ற தையல்நல் லாளே.

விளக்கம்:

பாடல் #1101 இல் உள்ளபடி எம்மை உய்யும் படி செய்து ஆட்கொண்ட சோதியான வயிரவி உயிர்களும் உய்வதற்காக அவரவர் மனப் பக்குவத்துக்கு ஏற்ப பல கோடித் தோற்றங்களுடன் உயிர்களின் உள்ளுக்குள்ளே இருக்கின்றாள். உயிர்களின் அறியாமையை நீக்குவதற்கு அறுபத்து நான்கு கலைகளையும் அருளி அவற்றின் உச்சமாகவும் இருக்கின்றாள். உயிர்களின் வெளிப்புற இருளை நீக்குவுதற்கு ஆகாயத்தில் சூரியன், சந்திரன், மூலாதார அக்னி ஆகிய மூன்று விதமான ஒளிகளை அருளினாள். சாதகர்களின் தலை உச்சிக்கு மேல் வீற்றிருந்து உலகத்தை அவரோடு பிணைத்து நன்மை புரிபவளாக இருக்கின்றாள்.

கருத்து: வயிரவியானவள் உயிர்களின் எண்ணங்களுக்கு ஏற்ற உருவத்துடன் அவர்களின் உள்ளுக்குள்ளே இருக்கின்றாள். சாதகர்களின் உள்ளே இருக்கும் அறியாமையாகிய இருளை அறுபத்து நான்கு கலைகளின் மூலம் நீக்கி வெளியே இருக்கும் இருளை சூரிய சந்திர அக்னி ஒளிகளின் மூலம் நீக்கி உலகத்தோடு அவரை பிணைத்து (ஒன்றோடு ஒன்று கலந்து) நன்மை புரிகின்றாள் வயிரவி.

பாடல் #1103

பாடல் #1103: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

தையல்நல் லாளைத் தவத்தின் தலைவியை
மையலை நூக்கு மனோன்மணி மங்கையைப்
பையநின் றேத்திப் பணிமின் பணிந்தபின்
வெய்ய பவம்இனி மேவகி லாவே.

விளக்கம்:

பாடல் #1102 இல் உள்ளபடி சாதகரை உலகத்தோடு பிணைத்து நன்மை புரிகின்ற வயிரவியானவள் உலகோர் செய்யும் அனைத்து விதமான தவத்தின் தலைவியாக இருக்கின்றாள். அந்த தவத்தின் பயனாக சாதகரின் மாயையை நீக்கி அருளுகின்ற மனோன்மணியாகவும் இருக்கின்றாள். அவளை அமைதியான மன நிலையில் வேறு எண்ணங்கள் இல்லாமல் புகழ்ந்து போற்றி வணங்குங்கள். அப்படி வணங்கினால் கொடுமையான இந்த உலக வாழ்க்கையை மறுபடியும் அனுபவிக்காத படி உங்களின் பிறவிகளை நீக்கி அருளுவாள்.

பாடல் #1104

பாடல் #1104: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

வேயன தோளி விரையுறு மென்மலர்
ஏய குழலி யிளம்பிறை யேந்திழை
தூய சடைமுடிச் சூலினி சுந்தரி
ஏயென துள்ளத் தினிதுஇருந் தாளே.

விளக்கம்:

பாடல் #1103 இல் உள்ளபடி சாதகர்களின் பிறவிகளை நீக்கி அருளுகின்ற வயிரவி தேவியானவளின் உருவத்தை இந்தப் பாடலில் தெரிந்து கொள்ளலாம். மூங்கில்களைப் போல் மெல்லிய அழகுடன் வலிமை பொருந்திய தோள்களை உடையவளும், நறுமணம் கமழுகின்ற மென்மையான மலர்களை சூடியிருப்பவளும், பேரழகு பொருந்திய கூந்தலை உடையவளும், இளம் பிறை நிலாவை தனது தலையில் ஆபரணமாக சூடியிருப்பவளும், தூய்மையான சடை முடியைக் கொண்டு இருப்பவளும், திரிசூலத்தை தனது கைகளின் ஏந்தியிருப்பவளும், பேரழகு பொருந்தியவளுமான வயிரவி தேவி எமது உள்ளத்தை அவளுக்கு விருப்பமான இடமாக ஏற்றுக் கொண்டு அதிலே இன்பத்துடன் வீற்றிருந்தாள்.