4-2-2006 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:
குரங்கிற்கும் மனிதர்க்கும் உள்ள பந்தம் என்ன ?
அனைத்து விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஓர் ஏணிப்படியை மனதில் வைத்துக் கொண்டால் கீழ் உள்ள முதல் படியில் செடி கொடி என்கின்ற வகைகளும் மேல் உள்ள கடைசி படியில் ஜீவன் முக்தனும் இருப்பதை உணரலாம். இதில் விசித்திரம் என்னவென்றால் மண்ணில் இருக்கும் செடி கொடிகள் நீரில் கடலிலும் உண்டு. இது இடம் மாறுவதும் உண்டு. சிறு காலம் சென்றவுடன் கடலில் இருப்பது பூமியிலும் பூமியில் இருப்பது கடலிலும் வளரும் பின்பு விலங்குகள் நீரிலும் பூமியிலும் வாழும் ஜீவன்களும் உண்டு. உதாரணமாக ஆமை, நண்டு ஆகிய வகைகள் ஆகும். வானத்தில் வாழும் விலங்குகளும் உண்டு. இத்தகைய விலங்குகளுக்கும் மனிதனுக்கும் மத்தியில் இருப்பதே குரங்கு என அறிய வேண்டும். உடல் கூறு என எடுத்துக் கொண்டால் ஏறத்தாழ மனிதனை போல் உண்டென்றும் செயலாற்றும் திறனும் அவ்விதமே இருக்கின்றது. குரங்கிற்கு மற்றொரு பெயரும் உண்டு வானரன் என அழைக்கும் இதனை முழுமையாக எடுத்தால் வால் உள்ள நரன் என்கின்ற பொருளாகின்றது. இதிலிருந்தே அக்காலத்திலும் இத்தொடர்பினை நன்கு உணர்ந்தனர். குறிப்பாக விலங்குகளுக்கும் மனிதருக்கும் மத்தியில் உள்ள ஓர் ஜீவனே குரங்காகிறது. குரங்கின் சுபாவம் இக்காலத்தில் மனிதருக்கும் உண்டு என்பதையும் இங்கு சுட்டிக் காட்டுகின்றோம். குரங்கு சமயங்களில் தமக்கு தேவைக்கும் மேலானதை பிடுங்கி செல்வதுண்டு. இதனை மனிதனும் உறுதியாக பற்றிக் கொண்டுள்ளான் தொடர்கின்றான். குரங்கின் மனம் ஓர் இடத்தில் நிற்பதில்லை என்பது மற்றொரு குறை அங்கும் இங்கும் தாவிக்கொண்டே இருக்கும். இது போலவே மனிதனின் மனமும் உள்ளது. இவையாவையும் வென்று மேல் சென்று ஜீவன் முக்தனாக நீற்க வேண்டுமெனில் மனஉறுதி, தியானம், மனவலிமை என்பதெல்லாம் வேண்டும். அனைத்திற்கும் மேலாக தெய்வ அருளும் வேண்டும்.